🍌 தினமும் ஆரோக்கியம் என்று கருதி ஃப்ரெஷ் ஜூஸ் பருகுபவரா நீங்கள்?

🍋 ஜிம்முக்கு அல்லது வாக்கிங் சென்று விட்டு வரும் போது தினமும் ஜூஸ் பருகுபவரா நீங்கள்?

🍎 ஹோட்டல்களுக்கு சென்றால் கட்டாயம் கடைசியாக ஃப்ரெஷ் ஜூஸ் பருகும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?

🍇🍈🍉🍊🍋🍌🍍🥭🍎🍏🍐🍑🍒🍓🥝🍅

நம்மில் பலரும் தினமும் ஃப்ரெஷ் ஜூஸ் என்ற பெயரில் தினமும் தங்களுக்குப் பிடித்த பழத்தை சாறாக்கி பருகுவார்கள்.

மாதிரிப் படம்

குளிர்பானங்களை தவிர்த்து விட்டு தினமும் பழச்சாறு அருந்துவதை ஹாஸ்டலில் வசிக்கும் மாணவ மாணவிகள் செய்து வருவதை எனது கல்லூரி காலம் தொட்டுக் கண்டு வருகிறேன்.

நான் கல்லூரி காலங்களில் தினமும் பழச்சாறு அருந்தும் பழக்கத்தை ஆரோக்கியமானது என்று எண்ணி தினமும் கடைபிடித்து வந்தேன்.

பெற்றோர்கள் கூட குளிர்பானங்கள் எனும் sweetened sugar beverages குடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பழச்சாறு பருகுவது ஆரோக்கியமானது என்று எண்ணியே அதை ஊக்குவிப்பதைக் காண முடிகிறது.

நீரிழிவு நோயாளிகள் முதல் மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படும் நோயாளிகளுக்கு கூட பழச்சாறு தரப்படுவதைக் கண்டு வருகிறோம்.

சரி உண்மையில் மருத்துவ ஆராய்ச்சிகளின்படி பழச்சாறு அருந்துவது நல்லதா?
கெட்டதா? தொடர்ந்து பார்ப்போம்

மனிதன் பழங்களை வளர்க்க ஆரம்பித்த கடந்த ஏழாயிரம் வருடங்களில்
பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது.

மனிதன் கைப்பட்ட அனைத்தையும் தனக்கு பிடித்த மாதிரி மாற்றிக்கொள்வான் அல்லவா..

அதே போல பழங்களையும் இன்னும் அதிகம் இனிப்புள்ளதாக மாற்றி அமைத்தான்.

பழங்களின் மரபணுக்களில் மாற்றங்களைச் செய்து அதை இன்னும்
இனிப்புள்ளதாக மாற்றிக்கொண்டான்.

இதனால் பழங்களில் முன்பு எப்போதும் இல்லாத அளவு ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் எனும் மாவுச்சத்தை அதிகமாக்கினான்.

பழத்தில் ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் இரண்டையும் அதிகமாக்கினால் அதன் இனிப்பு சுவை கூடும்.

இன்றும் கூட மனிதன் பழங்களை விரும்பவதற்கு காரணம், அதில் இருக்கும் சத்துகள் அன்று. மாறாக பழங்களில் இருக்கும் இனிப்பு சுவையே ஆகும்.

இன்று ஒரே நாளில் அனைத்து பழங்களையும் கசப்பு சுவை உள்ளதாக மாற்றிவிட்டு அதில் இருக்கும் ஊட்டசத்துகளை அதிகப்படுத்தினால், பழங்கள் கொள்முதல் அதளபாதாளத்துக்கு சென்று விடும் என்பது கண்கூடு.

இன்று சந்தையில் அதிகமாக விரும்பி உண்ணப்படும் பழங்கள் : – வாழைப்பழம், ஆப்பிள்,மாதுளை, பலாப்பழம் ஆகியவை. மேற்சொன்ன அனைத்து பழங்களும் இனிப்பு சுவை நிரம்பியவை என்பது தெரிந்ததே!

சமீபத்தில் பதின்மூன்றே வயதான ஒரு பையனுக்கு ஸ்கேன் ரிப்போர்ட்டில் கல்லீரல் வீக்க நோய் (Fatty liver) இருந்தது. என்ன காரணம்?

அவன் மது / புகை வாசனையை நுகர்ந்தது இல்லை. அவனுக்கு என்ன பழக்கம் இருந்தது தெரியுமா? தினமும் அவனது தாய் அவன் பள்ளி முடித்து மாலை வீடு அடைந்ததும், பழச்சாறு கொடுப்பாராம். இதே போன்று சில வருடங்களாக பழச்சாறு அருந்தி வந்திருக்கின்றான் அச்சிறுவன்.

இன்னொரு 19 வயது பாலகனுக்கு கல்லீரல் ரத்தப் பரிசோதனை (Liver function test) செய்ததில் அவனது கல்லீரல் நொதிகள் அனைத்தும் அதிகமாக இருந்தன. அவன் சில வருடங்களாக ஹாஸ்டலில் இருக்கிறான். தினமும் பழச்சாறு அருந்தும் பழக்கம் கொண்டவன்.

பழங்களில் இருக்கும் ஃப்ரக்டோஸ் கல்லீரலால் மட்டுமே செரிமானம் ஆகும் மாவுச்சத்தாகும். ஃப்ரக்டோஸை அளவுக்கு மீறி எடுக்கும் போது நமது கல்லீரல் தடுமாறுவது திண்ணம். மேலும், ஃப்ரக்டோஸ் அளவுகள் அதிகமாக இருக்கும் போது கல்லீரல் அவற்றை கொழுப்புச்சத்தாக மாற்றி கல்லீரலில் சேமிக்கும். (De Novo Lipogenesis)

இதனால் கல்லீரல் ஸ்தம்பித்து கல்லீரல் வீக்க நோய் (Fatty Liver Disease) ஏற்படும். இந்த வீக்க நோய் முற்றி கல்லீரல் செயலிழக்கும் நிலை ஏற்படலாம். பதின்மூன்று வயதில் கல்லீரல் வீக்க நோய் இருந்தால் அது எந்த வயதில் கல்லீரல் சுருக்க நோயாக (cirrhosis) மாறும் என்று கற்பனை கூட செய்யமுடியவில்லை.

பழச்சாறுகளில் உள்ள அடுத்த பிரச்சனை அதில் கலக்கப்படும் “சீனி” பழங்களின் இனிப்பு போதாதென்று அதில் மூன்று முதல் நான்கு ஸ்பூன் சீனி கலந்து தான் அனைத்து பழச்சாறுகளும் போடப்படுகின்றன.

படிக்க:
சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !
ஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் ?

மாம்பழ ஜூஸில் கூட சீனி கலந்து போடுவதை காண்கிறேன்.
சீனி = சுக்ரோஸ் (sucrose); பழங்கள் = ஃப்ரக்டோஸ் + சுக்ரோஸ் (fructose + sucrose); பழச்சாறு = சீனி + பழங்கள்; பழச்சாறு = சுக்ரோஸ்(sucrose) + ஃப்ரக்டோஸ் (fructose); ஒரே நேரத்தில் சுக்ரோஸும் ஃப்ரக்டோசும் ரத்தத்தில் ஏறினால், இன்சுலின் வேலை செய்யாமல் (Insulin Resistance) கொழுப்பு அதிகம் உடலில் சேர்ந்து உடல் பருமன்(Obesity) வருகிறது.

சீக்கிரம் டைப் டூ டயாபடிஸ்(Type II diabetes) வருகிறது. பெண்களுக்கு PCOD நோய் வருகிறது. சில ஆய்வு முடிவுகள் தினமும் சீனி கலந்த பழச்சாறு அருந்தினால் இதய நோய் மற்றும் மரணம் சீக்கிரம் நிகழ்கிறது என்று பயமுறுத்துகின்றன. இது அனைத்தையும் ஆரோக்கியமானது என்று பருகப்படும் பழச்சாறுகள் தான் செய்கின்றன.

மேலும் பழச்சாறாக அருந்தும் போது பழங்களில் உள்ள நார்ச்சத்து(Fibre) இல்லாமல் போகிறது.

பழச்சாறுகளை பெரியவர்கள்/ நோயாளிகள் பருகித்தான் ஆக வேண்டுமென்றால்
சீனி போடாமல் பருக வேண்டும். பழங்களை சாறாக்கி பருகாமல் உண்பதே சிறந்தது. அளவாக பழங்கள் உண்பது நல்லது. மூன்று வேளை உணவாக பழங்களை மட்டும் உண்டு வாழ்வது நல்லதல்ல.

பழச்சாறு / இனிப்பு சுவை நிரம்பிய பழங்கள் இவற்றை “ஆரோக்கியம்” என்று அதிகமாக உண்பது கல்லீரலுக்கு கேடு தரக்கூடியது என்பதை உணர வேண்டும். உடல் பருமன்/ டைப் டூ டயாபடிசை வரவழைக்கும்.

குழந்தைகளுக்கு பழங்கள் தர வேண்டுமென்றால் அவற்றை சீனி கலக்காத சாறாக்கி கொடுக்கலாம் அல்லது பழங்களை உண்ணக்கொடுக்கலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

எனவே ஆரோக்கியம் தரும் பழங்களாகவே இருப்பினும் அவற்றை மிகக் குறைவான அளவில் உண்பதே உடல் நலனுக்கு நல்லது.

REFERENCES
1. Fruit and veg are getting SWEETER – but are now ‘less nutritious and have fewer health benefits’, scientists claim
2. Amazing Graphics Show How Much Peaches Have Changed Since Humans Started Growing Them
3. Association of Sugary Beverage Consumption With Mortality Risk in US Adults
4. Added Sugar Intake and Cardiovascular Diseases Mortality Among US Adults
5. An Integrated Understanding of the Rapid Metabolic Benefits of a Carbohydrate-Restricted Diet on Hepatic Steatosis in Humans
6. No difference between high-fructose and high-glucose diets on liver triacylglycerol or biochemistry in healthy overweight men.
7. Carbohydrate intake and nonalcoholic fatty liver disease: fructose as a weapon of mass destruction

🍎🍐🍊🍋🍌🍉🍇🍓🍏

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க