“கேன்சர் (புற்றுநோயை) 100% குணப்படுத்தலாம். யாராவது தேவையானவர்களுக்கு உதவும் அதிகம் ஷேர் செய்யவும்”.

வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் ஆய்வு முடிவுகள் (வதந்திகளை) பலரும் நம்புவதோடு பரப்பியும் வருகின்றனர்.

“கேன்சர் என்பது நோயே இல்லை”

“சர்க்கரை வியாதி என்பது நோயே இல்லை”

“ரத்த அழுத்தம் என்பது நோயே இல்லை”

“பிராய்லர் கறி கோழி கறி சாப்பிட கூடாது. ஏனெனில் அவற்றுக்கு ஹார்மோன் ஊசிகள் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஹார்மோன் ஊசிகள் பெண் குழந்தைகளை சிறு வயதிலேயே பூப்படைய வைக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகள் அண்டிபயாடிக் ரேசிஸ்டன்ஸ் தீர்க்க முடியாத தொற்று நோய்கள் வர வாய்ப்பு ஏற்படுகிறது.”

– என உடல் நலப் பிரச்சினைகள் அனைத்திற்குமான ஆய்வு முடிவுகளும் ஆலோசனைகளும் தினம்தினம் நம்மை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக வந்து சேர்கின்றன.

இன்றைய முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் உருவாக்கியிருக்கும் பணியிட நெருக்கடிகள், வாழ்வியல் நெருக்கடிகள், சூழலியல் நெருக்கடிகள் மற்றும் உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக உடல்நல பிரச்சினைகளும் குறைபாடுகளும் (தொற்றா நோய்கள்) அதிகரித்து வருகின்றன.

அதே முதலாளித்துவ சமூகத்தின் இலாப வெறியின் காரணமாக உடல்நலமும் ஆரோக்கியமான நல்வாழ்வும் பரந்துபட்ட மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. அதில் குறிப்பாக நடுத்தர வர்க்கம் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் மேற்சொன்ன வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் ஆய்வு முடிவுகள் (வதந்திகளை) பலரும் நம்புவதோடு பரப்பியும் வருகின்றனர்.

இது ஒருபுறமென்றால் அறிவியல் ஆய்விதழ்களில் தினம்தினம் உடல்நலம் சார்ந்த அறிவியல் ஆய்வுகளும், ஆலோசனைகளும் வெளியாகி வருகின்றன.

நடுத்தர வர்க்கம் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறது.

”முழு தானியங்களை உட்கொண்டு வந்தால் புற்று நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன.”

”காபி குடிப்பது மாரடைப்பு வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும்.” – என  வெளியாகும் அறிவியல் ஆய்வு முடிவுகளை நம்பலாமா?

அரைக்காணி (1/160) அளவு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்படும், அறிவியல் அடிப்படையற்ற வாட்ஸ்அப் வதந்திகளை நம்ப முடியாது; சரிதான்.  அறிவியல் ஆய்வு இதழ்களில் வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகளை முழுமையாக நம்பலாமா?

நம்பமுடியாது, அவையும் அரைக்கால் (1/8) அளவு உண்மைகளை கொண்டே எழுதப்படுகின்றன என்று சொன்னால் அதிர்ச்சியாக இருக்கிறதா?

எல்லா அறிவியல் ஆய்வுகளும் சமமானவையோ சம நம்பகத்தன்மையை கொண்டவையோ அல்ல. ஒவ்வொரு ஆய்வையும் நூற்றுக்கணக்கான முறைகளில் வடிவமைக்க முடியும். ஒவ்வொரு ஆய்வு முறையும் தன்னளவிலான வெவ்வேறு வகையான வரம்புகளைக் கொண்டுள்ளன.

ஆய்வுமுறைகளின் முதன்மையான வகைகள் :

உடல்நல ஆய்வுகளை முதன்மையாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் முதலாவது அவதானிப்பு முறை ஆய்வு (Observational Studies), இரண்டாவது பரிசோதனை முறையிலான ஆய்வு (Experimental Studies).

அவதானிப்பு முறை ஆய்வில் அறிவியலாளர்கள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வை கண்காணித்து அதன் தரவுகளை சேகரிப்பார்கள்.

உதாரணமாக,

”சென்னை மக்களிடம் சுத்தரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்யின் (Refined oil) நுகர்வுப் படிவம் / பாங்கு”

”யாரெல்லாம் வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள விழைகின்றனர்”

ஆனால் இந்த அவதானிப்பு முறை ஆய்வில் ஆய்வாளர்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிப் போக்கில் எந்த இடையூறும் குறுக்கீடும் செய்வதில்லை.

அவதானிப்பு முறை ஆய்வு வகையை மேலும் நான்கு அடிப்படை வகைகளாக பிரிக்கலாம்.

1 குறுக்குவெட்டு கணக்கீடுகள் (Cross sectional survey)

ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பான பகுதியில் உள்ள மக்களில் இருந்து சீரற்ற முறையில் மாதிரிகளை தேர்ந்தெடுத்து தரவுகளை தொகுப்பது. வெவ்வேறு சமூகப் பின்னணி (வர்க்கப் பின்னணி) வெவ்வேறு உடல் பாங்கு (ஒல்லி-குண்டு) வெவ்வேறு சுகாதாரம் பற்றிய உணர்வு மட்டம் போன்ற பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கி ஆய்வுக்கு மாதிரிகளை தெரிவு செய்வது சீரற்ற மாதிரிகள் (Randomised samples) எனப்படுகிறது.

உதாரணமாக தமிழகத்தில் எத்தனை சதவீதத்தினருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதில் ஆண்கள் பெண்கள் விகிதாச்சாரம் என்ன, வயது வாரியாக விகிதம் எவ்வளவு என்று புள்ளியியல் முறையில் முடிவுக்கு வருவது.

2 மக்கட்தொகுதி ஆய்வு (Cohort studies)

இதுவும் குறுக்குவெட்டு கணக்கீடு போன்றதுதான். ஆனால் குறிப்பிட்ட பகுதி மக்களை குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து கண்காணிப்பது.

உதாரணமாக சென்னையில் உள்ள மக்களிலிருந்து சீரற்ற முறையில் தெரிவுசெய்யப்பட்ட மாதிரிகளை தொடர்ந்து 10 ஆண்டுகள் கண்காணித்து அவர்களது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பதிவு செய்வது. அதில் எத்தனை பேருக்கு சர்க்கரை வியாதி உருவாகியுள்ளது என்று கண்டறிவது.

நிகழ்விளைவு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு அல்லது பின்னோக்கிய ஆய்வு (Case control studies OR Retrospective studies)

இந்த ஆய்வுமுறையை முடிவை முன்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு ஆய்வு செய்வது என்று புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, இது ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வின் குறிப்பான விளைவில் இருந்து அதன் காரணத்தை பின்னோக்கி ஆய்வு செய்யும் முறையாகும்.

உதாரணமாக சென்னையில் உள்ள சீரற்ற முறையில் தெரிவு செய்யப்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள் குழு, சர்க்கரை நோய் இல்லாதவர்கள் குழு ஆகிய இரண்டு குழுவினரிடையே  கடந்த பத்தாண்டுகளாக அவர்களுடைய வாழ்வியல் முறை, உணவு பழக்க வழக்கம், மன அழுத்தம் இன்னபிற தரவுகளை பெற்று ஆவணப்படுத்துவது. அதிலிருந்து ஏன் ஒரு பிரிவினருக்கு மட்டும் சர்க்கரை நோய் வந்தது என்ற முடிவுக்கு வருவது.

இதில் குறிப்பான உணவு (அ) வாழ்வியல் முறை சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறை அதிகரிக்கும் என்றோ அல்லது குறைக்கும் என்றோ, சர்க்கரை நோய் வராமலிருக்க உதவிபுரியும் என்றோ முடிவுகளை முன்வைப்பர்.

4 மருத்துவ அறிக்கைகள் உடல்நல அறிக்கைகள் (Case reports)

ஒரு குறிப்பிட்ட நோயாளி அல்லது ஒரு குறிப்பிட்ட மருத்துவருடைய நோயாளி தொகுப்பின் அல்லது ஒரு குறிப்பிட்ட நோயுடைய நோயாளி தொகுப்பின் மருத்துவ அறிக்கைகள் இதில் சேரும். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட மருந்தை எடுத்துக்கொள்ளும் அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளை தொடர்ந்து உட்கொள்ளும் அல்லது ஒரு குறிப்பிட்ட உணவு முறையை (diet) தொடர்ந்து பின்பற்றும் ஒருவருடைய உடல்நல அறிக்கை.

அவதானிப்பு முறை ஆய்வுகளின் வரம்புகள் :

ஒரு அவதானிப்பு ஆய்வு முறையிலான ஆய்வு குறிப்பான வாழ்வியல் (அ) உணவு முறை, குறிப்பான நோய் (அ) உடல்நலக் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறது என்று மட்டுமே சொல்லும். காரணம் விளைவு என்ற முறையில் அது ஆய்வு முடிவை முன்வைப்பதில்லை. அதாவது அந்த குறிப்பான நோய் அல்லது உடல்நல குறைபாடு என்ற விளைவிற்கு குறிப்பான உணவு அல்லது வாழ்வியல் முறைதான் காரணி என்று திட்டவட்டமாக முன்வைக்காது.

அந்த குறிப்பான விளைவுகள் ஏற்படுவதற்கு மரபுத்தொடர்பு, சமூக பொருளாதார பண்பாடு கலாச்சாரம் சூழலியல் சார்ந்த பிற காரணிகளும் இருக்கக்கூடும். வறுமை, சுகாதாரம் பற்றிய அக்கறையின்மை, கலாச்சார நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சமூக பொருளாதார மற்றும் சமூக கலாச்சார அழுத்தங்கள் போன்ற இன்ன பிற காரணிகளை அவதானிப்பு ஆய்வுகள் கணக்கில் கொள்வதில்லை. இவை குழப்பமான காரணிகள் (confounding factors) அல்லது  காரணம் விளைவு  இரண்டுடனும் தொடர்புடைய கணிப்பதற்கு கடினமான மாறிகள் (difficult to predict variables) எனப்படுகின்றன.

உதாரணமாக, 1991-ம் ஆண்டு புதிய இங்கிலாந்து மருத்துவ ஆய்விதழில் (New England journal of medicine) ஒரு ஆய்வு முடிவு வெளியானது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இரண்டு மாவட்டங்களில் இறப்பு சான்றிதழ்களை கொண்டும் உறவினர்களிடம் பெறப்பட்ட தகவல்களில் இருந்தும் ஆய்வு செய்யப்பட்டது. வலது கை பழக்கமுடையவர்களை விட இடது கை பழக்கம் உடையவர்களின் இறப்பு விகிதம் அதிகமென அந்த ஆய்வு முடிவு தெரிவித்தது. வலது கை பழக்கம் உடையோரின் சராசரி ஆயுள் 75 ஆண்டுகளாகவும், இடது கை பழக்கமுடையோரின் சராசரி ஆயுள் 66 ஆண்டுகளாகவும் இருந்ததுள்ளது. ஆனால் குறிப்பான சமூக கலாச்சார பின்னணியை இந்த ஆய்வு கணக்கில் கொள்ளத் தவறி விட்டது.

அமெரிக்காவில் இடது கை பழக்கமுடைய குழந்தைகளை வலுக்கட்டாயமாக வலதுகை பழக்கத்திற்கு மாற்றிய வழக்கம் இருந்துள்ளது (நமது நாட்டிலும் இப்பழக்கம் உள்ளது). அதனால் சிறு வயதில் இயற்கையாக இடது கை பழக்கமுடைய பலரும் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின் வலதுகை பழக்கம் உடையவர்களாக இந்த ஆய்வின்போது ஆகிவிட்டிருந்தனர். அவர்களை வலது கை வழக்குடையோராக ஆய்வு கணக்கில் எடுத்து தவறிழைத்திருந்தது.

பரிசோதனை முறை ஆய்வுகள் :

பரிசோதனை முறையிலான ஆய்வில் ஆய்வாளர்கள் நிகழ்ச்சிப் போக்கில் இடையீடும் குறுக்கீடும் செய்வதன் மூலம் அதன் விளைவுகளை தொகுத்துப் பரிசீலித்து முடிவுக்கு வருகின்றனர். இதற்கு அவர்கள் புள்ளியியல் முறையை பின்பற்றுகின்றனர்.

பரிசோதனை முறை ஆய்வுகள் இரண்டு அடிப்படை வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

1 சீரற்ற (தொடர்பின்றி எடுக்கப்பட்ட) கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் (Randomized controlled trials)

சீரற்ற மாதிரிகளைக் கொண்டு இரண்டு குழுக்களை உருவாக்குவது. இரண்டு குழுக்களிலும் கிட்டத்தட்ட எல்லா விதத்திலும் சமமட்டத்திலுள்ள மாதிரிகள் (மனிதர்கள்) குழுக்கள் அமைக்கப்படும். அதில் ஒரு குழுவினருக்கு ஆய்விற்கு உட்பட்ட மருந்தை அல்லது உணவுப் பொருளை கொடுப்பது. மற்றொரு குழுவிற்கு கொடுக்காமல் வைப்பது. இரு குழுவிலும் ஏற்படும் விளைவுகளை கண்காணித்து தரவுகளை சேகரிப்பது. இந்த முறை சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை எனப்படுகிறது (Randomised controlled trials). இதற்கு புள்ளியியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன.

இதே சோதனையை யாருக்கு ஆய்வுக்கு உட்பட்ட மருந்து அல்லது உணவுப்பொருள் கொடுக்கப்பட்டது யாருக்கு கொடுக்கப்படவில்லை என்பதை அவர்களுக்கே தெரியாமல் வைப்பது மறைக்கப்பட்ட சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை (Blinded randomised controlled trials) எனப்படுகிறது.

இந்த முறை வேறெந்த புறக்காரணிகளின் தாக்கமும் இன்றி குறிப்பான ஆய்வுக்குரிய மருந்து அல்லது உணவுப் பொருளின் விளைவாக தான் குறிப்பான உடல்நலக் குறைபாடு அல்லது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுவது. அதாவது காரணம் – விளைவுக்கிடையிலான தொடர்பை  சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுவது. இதன் காரணமாக அவதானிப்பு முறை ஆய்வுகளை விட பரிசோதனை முறையான ஆய்வுகள் அதிக நம்பகத்தன்மை கொண்டதாகும்.

இந்த மறைக்கப்பட்ட சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளே (Blinded randomised controlled trials) நவீன மருத்துவத்தில் மருந்துகளை சோதிப்பதற்கு (Clinical Trails) பயன்படுத்தப்படுகின்றன.

2 குறையளவான சோதனைகள் (Quasi-experiment)

இந்த ஆய்வு முறை அவதானிப்பு மற்றும் பரிசோதனை ஆகிய இரண்டிற்கும் நடுவில் இருக்கக்கூடிய ஒருவகையான ஆய்வுமுறை குறையளவிலான சோதனை முறை என்று பெயர்.

ஒரு குறிப்பிட்ட மருந்தையோ உணவையோ, எடுத்துக் கொள்ளும் முன் எடுத்துக்கொண்ட பின் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்து ஆய்வு செய்வது.

ஒரு குறிப்பிட்ட நகரம் அல்லது மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட முன்னும் பின்னும் குடிப்பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள். அதன் அருகாமையில் இருக்கக்கூடிய மதுவிலக்கு அமல்படுத்தப்படாத ஊர் அல்லது மாநிலத்துடன் ஒப்பீடு செய்வது. இவை குறையளவான ஆய்வுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இவற்றிலிருந்து சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற முடிவுக்கு வர முடியும். ஆனால் சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் கூட அறுதியான இறுதியான முடிவுகள் அல்ல.

முறைப்படுத்தபட்ட மதிப்பாய்வுகள் அல்லது பகுப்பாய்வுகள் (systematic reviews)

ஒரு குறிப்பிட்ட மனிதர் அல்லது சமூக குழுவின் அனுபவம்,

ஒரு குறிப்பான சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை முடிவு என்பதை தாண்டி ஒரு குறிப்பான கேள்விக்கு வெவ்வேறு சூழல்களில் அமைப்புகள், சோதனைகளில் இருந்து வரக்கூடிய தரவுகளை தொகுத்து ஆய்வு செய்யக் கூடிய முறை முறைப்படுத்தப்பட்ட மதிப்பாய்வு எனப்படுகிறது.

பல்வேறு வகையான ஆய்வுகளில் இருந்தும், அவதானிப்பு ஆய்வுகளிலிருந்து பரிசோதனை ஆய்வுகள் வரை தரவுகளை எடுத்து மதிப்பாய்வு செய்து அதிலிருந்து முடிவை எட்டுகிறது இந்த பகுப்பாய்வுமுறை. அதனால்ஆய்வுக்கட்டுரை முடிவுகளில் உயர்ந்த நம்பகத் தன்மை உடையதும் மதிப்புடையதும் முறைப்படுத்தப்பட்ட பகுப்பாய்வு முடிவுகளே ஆகும். மேற்சொன்ன ஆய்வு முறைகளில் ஆய்வுத் தரவுகள், சான்றாதாரங்கள் அனைத்திற்கும் தலையாயது முறைப்படுத்தபட்ட மதிப்பாய்வுகள் (The king of all evidence: systematic reviews) என்றால் அது மிகையல்ல.

எந்த ஆய்வாளருக்கும் பக்கச் சார்புகள், முன்முடிவுகள் இருக்கக்கூடும்.  மதிப்பாய்வுகள் செய்வோர் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதற்கு ஒரே பிரச்சினைக்குரிய கேள்வி – ஆய்வுத் தலைப்பு – வெவ்வேறு நபர்களால் மதிப்பாய்வுகள் செய்யப்பட்டு பரஸ்பர மற்றும் வெளிப்படையான குறுக்கு சரிபார்ப்புகள் செய்வதன் மூலம் தீர்வு காணப்படுகிறது. இதன் மூலம் மதிப்பாய்வு செய்பவர்களுக்கு உள்ள பக்கச் சார்புகள், முன்முடிவுகள் விலக்கம் செய்யப்படுகின்றன. இவ்வகையான மதிப்பாய்விற்குப் பின் வெளியாகும் முடிவுகளே மிகத் துல்லியமானவை.

எல்லா முறைப்படுத்தபட்ட மதிப்பாய்வுகளும் சமமானவையல்ல. அவற்றுக்கும் வெவ்வேறு முறையியல்கள் உள்ளன. (Not all the systematic reviews are created equally either). மேலும் மதிப்பாய்வுகள் என்பது துவக்கப் புள்ளி மட்டுமே. கிடைக்கப் பெறும் தரவுகள் நமது சூழலுக்கு பொருந்தலாம் அல்லது பொருந்தாமலும் போகலாம். அதனால் அவற்றை நமது சொந்த சூழலுக்கு பொருத்திப் பகுப்பாய்வு செய்தே இறுதி முடிவுக்கு வரமுடியும்.

அதனால் இனி “……என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது” – என்ற செய்திப்பதத்தைக் கண்டால், பின்பற்றப்பட்ட குறிப்பான ஆய்வுமுறை என்ன, அதன் வரம்புகள் என்னென்ன என்பதையும் ஆய்வு முடிவுரையில் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளையும் அதிக கவனம் கொடுத்து படிக்க வேண்டும், எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.

படிக்க :
சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !
இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் – ஆய்வுக் கட்டுரை – அவசியம் படிக்க !

மேலும், ஆய்வுகளுக்கு நிதி அளிப்பதன் மூலமும், லாபியின் மூலமும் ஆய்வு முறையும், ஆய்வு முடிவுகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒரு ஆய்வோ அல்லது மதிப்பாய்வோ யாரால் எதற்காக செய்யப்படுகிறது அதன் பொருளாதாரப் புரவலர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். இல்லையெனில் அரைக்கால் அளவு உண்மை கொண்ட குறையளவான அறிவியல் (Quasi-Science) நம்மை ஏமாற்றி மயக்கத்தில் ஆழ்த்தி வீழ்த்தி விடலாம்.

மார்ட்டின்

மேலும் படிக்க : The one chart you need to understand any health study

1 மறுமொழி

  1. அப்பா இதுதாங்க நம்ம சொல்றீங்க ??
    கட்டுரை எதையுமே நம்பாதன்னு சொல்ற மாதிரி இருக்கு…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க