கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் (FATTY LIVER)  என்றால் என்ன ? – அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் !

பெரும்பாலும் நாற்பதுகளை நெருங்கும்/தாண்டிய ஆணோ, பெண்ணோ
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது தற்செயலாக தென்படும் “ஃபேட்டி லிவர்” என்ற கண்டுபிடிப்பு.

இப்போது இந்த நோய் இருபது முதல் முப்பது வயது மக்களுக்கும் தென்பட ஆரம்பித்திருக்கிறது.

உங்களது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரிப்போர்ட்டில் Fatty liver ( grade 1 /2) என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது Hepatomegaly with fatty changes என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

கல்லீரலில் அதிகமான கொழுப்பு தேங்குவதால் ஏற்படும் நிலை தான் இந்த “கல்லீரலில் கொழுப்பு ஏறிய நிலை” நிறைய பேருக்கு தற்செயல் கண்டுபிடிப்பாக தென்படுவதால் இது நார்மல் என்று ஆகிவிடாது.

நம் உடலுக்குள் நேரும் வளர் சிதை மாற்றக்குளறுபடியால் (metabolic syndrome) கல்லீரல் அடிவாங்குகிறது என்பதும். அது எழுப்பும் கூக்குரலாகவே இந்த நோயை கருத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக கல்லீரல் ஒரு கல்லுளி மங்கன் போன்ற உறுப்பு. எதற்கும் அசையாத ஒரு உறுப்பு. தான் உண்டு. தன் வேலையுண்டு என்று வேலை பார்க்கும்.

அமிலத்தன்மை கொண்ட மதுவைக்கூட செரிமானம் செய்யும் தன்மை கொண்டது.
கல்லைக்கூட செரிமானம் செய்யக்கூடியது. ஆனால் அப்படிப்பட்ட ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பையே அசைத்துப்பார்க்கக் கூடியது இந்த கல்லீரல் கொழுப்பு படியும் நோய்.

இரண்டு நிலைகளில் நம் கல்லீரலில் கொழுப்பு படியும்.

முதல் நிலை – மது அருந்துபவர்களுக்கு நேருவது.

இதை Alcoholic Fatty liver என்போம். தமிழகத்தின் முன் டாஸ்மாக் காலத்தில் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் என்று மருத்துவர் கண்டறிந்தால் அவர் நிச்சயம் அவ்வப்போது மது அருந்துபவராகவே இருப்பார். மதுவால் கல்லீரலின் செல்கள் பழுதாகி அதில் குளறுபடி ஏற்பட்டு கொழுப்பு படியும் நிலை.

ஆனால் இதன் இரண்டாவது நிலை – மது அருந்தாதவர்களுக்கும் வர ஆரம்பித்து விட்டது.

இதை Non Alcoholic Fatty liver disease என்று தனிப்பெயரிட்டு அழைக்கிறோம். சமீபத்தில் என்னை உடல் பருமன் என்று சந்தித்த 10 வயது பாலகனுக்கு ஃபேட்டி லிவர் இருந்தது. மிரண்டுதான் போனேன்.

படிக்க :
ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை
♦ ஃபோன்கிட்டேயிருந்து என் மவன காப்பாத்தும்மா… மாங்காட்டு அம்மனிடம் ஒரு தாயின் வேண்டுதல் !

கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானதா? நல்லதா?

கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானது அன்று. நல்லதன்று, நிச்சயம் கெட்டது. இதை மட்டும் மனதில் நன்றாக இருத்திக்கொள்வோம்.

எதனால் கல்லீரலில் கொழுப்பு சேர வேண்டும்?

கல்லீரலின் பிரதான வேலைகளில் சில:

  • க்ளூகோசை கொழுப்பாக( triglyceride ) மாற்றி உடலில் சேமிப்பது.
  • லைபோ புரதங்களை உருவாக்குவது.

கல்லீரலை சமையல் கூடத்துடன் ஒப்பீடு செய்யுங்கள். ஒரு கிலோ மாவு கொடுத்தால் நமது அம்மா அதில் நமக்கு இட்லி சுட்டுத்தருவார். மீதமான மாவை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பார். ஒரு கிலோ மாவு மூன்று நாளைக்கு வரும் என்பது அம்மாவுக்கு தெரியும்.

அடுத்த மூன்று நாட்களுக்கு மாவு புதிதாக வாங்க தேவையில்லை. ஏனெனில் ஃபிரிட்ஜில் தான் மாவு இருக்கிறதே..!

ஆனால் அடுத்தநாள் அப்பா தெரியாமல் ஒரு கிலோ மாவு வாங்கி வந்துவிட்டால் அம்மா என்ன செய்வார்??

இந்த ஒரு கிலோ புது மாவை ஃபிரிட்ஜில் வைப்பார். ஆக அடுத்த ஆறு நாட்களுக்கு மாவு கைவசம் இருக்கும்.

இப்படி தேவைக்கு மீறி மாவு இருந்தும் தினமும் யாரோ ஒருவர் மாவு/ பரோட்டா என வாங்கி வந்துவிட்டால்.. நம் அம்மா என்ன தான் செய்வார் பாவம்..!!

ஃப்ரிட்ஜும் ஒரு அளவுக்கு மேல் இடம் கொள்ளாது. ஒரு கட்டத்துக்கு மேல் கிச்சனே அலங்கோலமாகி விடும். இந்த சினாரியோவை நமது கல்லீரலுக்கும் சிந்தித்து பாருங்கள்.

மாவுச்சத்து ஒரு வரைமுறைக்குள் இருந்தால் உடல் அதை சக்திக்கு உட்கொண்டுவிடும். அது வரம்பு மீறி சென்றால் நம் கல்லீரல் அதை கொழுப்பாக மாற்றி தொப்பையில், தொடை, இடுப்பு , மார்பு பகுதிகளில் சேமிக்கும்.

மீண்டும் மீண்டும் அதிக மாவுச்சத்து சாப்பிட்டால் , உண்ட வீட்டையே ரெண்டாக்கிய கதையாய் தன்னை உற்பத்தி செய்த கல்லீரலிலேயே கொழுப்பு படிந்து சேர ஆரம்பித்துவிடும். ஆக, ஃபேட்டி லிவருக்கு காரணம் மாவுச்சத்து தான். கொழுப்பு அல்ல.

உங்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதைப்பார்த்தவுடன் நீங்கள் உண்ணும் மாமிசம் / முட்டை / பால் போன்றவற்றை நிறுத்தி விட்டு அதற்குப்பதிலாக அதிகமதிகம் சோறு / கோதுமை / மைதா என்று உண்பீர்களானால் நிச்சயம் உங்களது ஃபேட்டி லிவர் பிரச்சனை முற்றும்.

இதன் படிநிலைகள் (grades) பின்வருமாறு:

அல்ட்ரா சவுண்ட ஸ்கேன் என்பது நுண் ஒலி அலைகளை பீய்ச்சி அந்த அலைகள் நம் உள்ளுறுப்புகள் மேல் பட்டு பிரதிபலிக்கும் பிம்பத்தைக்கொண்டு உருவாக்கப்படும் வெள்ளை-சாம்பல் (white-grey) நிற படங்களை வைத்து உருவாக்குவது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில், கல்லீரல் தான் நடுநிலை நாயகம். அதாவது கல்லீரலின் பிம்பம் தான் நடுநிலை.

கல்லீரலை விட குறைவாக ஒலியை பிரதிபலிக்கும் பாகங்கள் hypoechogenic என்று அழைக்கப்படும். இவை கல்லீரலை விட அதிக பழுப்பு (more greyer than liver) நிறத்தில் இருக்கும்.

கல்லீரலை விட அதிகமாக ஒலியை பிரதிபலிக்கும் பாகங்கள் hyper echogenic என்று அழைக்கப்படும். இவை கல்லீரலை விட குறைந்த பழுப்பு நிறத்தில் (less greyer) இருக்கும்.

ஃபேட்டி லிவர் பிரச்சனையில் கொழுப்பு கல்லீரலில் படிவதால், இந்த கொழுப்பு படிந்துள்ள இடங்கள், நார்மல் கல்லீரலை விட அதிக ஒலி அலையை பிரதிபலிக்கும். அதனால் அந்த இடங்கள் நார்மல் கல்லீரலை விட பழுப்பாகவோ கருப்பாகவோ இருக்கும்.

இதில் Grade I என்பது கல்லீரலில் ஆங்காங்கே கொழுப்பு படிந்து காணப்படுவது. நார்மல் கல்லீரலில் கொழுப்பு படியாது. இது ஆரம்ப நிலை.

Grade II என்பது கல்லீரலில் கொழுப்பு அதிகமாக படிவதால், போர்டல் சிறை சரியாக புலப்படாமல் போகும் (portal vein) இது அடுத்த கட்டம்.

Grade III என்பது கொழுப்பு அதிகமாக கல்லீரலில் படிவதால் உதரவிதானம் (diaphragm) சரியாக புலப்படாது. இது முற்றிய நிலை.

படிக்க :
பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !
♦ 60 வகையான விசப் பாம்புக் கடி – ஒரே வகை நச்சுமுறிவு மருந்து !

இந்த கல்லீரிலில் படியும் கொழுப்பானது பின்னாளில் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி, மது அருந்தாதவர்களுக்கு வரும் கல்லீரல் கொழுப்பு படியும் நோயாக மாறலாம். (NON ALCOHOLIC STEATO HEPATOSIS) இதன் செல்லப் பெயர் NASH.

மேலும் கல்லீரலில் ஒரு அளவுக்கு மேல் கொழுப்பு சேர்ந்தால் , கல்லீரல் விரிந்து விரிந்து ஒரு நிலைக்கு மேல் சுருங்க ஆரம்பித்து விடும். இது கல்லீரல் அழற்சி நோய் (cirrhosis) எனப்படும். இந்த அளவுக்கு முற்றிய நோயை ரிவர்ஸ் செய்ய இயலாது.

இது பின்னாளில் கல்லீரல் புற்றுநோய் (HEPATO CELLULAR CARCINOMA) அல்லது கல்லீரல் செயலிழப்பு (LIVER FAILURE) வரை இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது.

நம்மை பயமுறுத்தும் செய்தி யாதெனில் மேலை நாடுகளில் இருபது வயதைக்கூட எட்டாத பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் செய்த ஆய்வுகளில் அவர்களில் பெரும்பாலானோருக்கு ஃபேட்டி லிவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் நம் நாட்டிலும் அதே அளவு பிரச்சனை இருக்கக்கூடும். ஆனால் யாரும் இங்கு பரிசோதனைக்கான முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என்பதால் இருக்கும் பிரச்சனை வெளியே தெரிவதில்லை.

நாமும் தற்போது ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், சாக்லேட், கேக் என்று ரீபைன்டு கார்போஹைட்ரேட்டுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். இதன் கேடுகளை அறிந்தால் நாம் அப்படி செய்யமாட்டோம் என்றே நினைக்கிறேன்…

குழந்தைகள் எதை உண்ண வேண்டும். எதை உண்ணக்கூடாது என்பதில் பெற்றோரின் கவனம் என்றும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஃபேட்டி லிவரை ரிவர்ஸ்/ சரி செய்ய இயலும்.. எப்படி??

ஃபேட்டி லிவர் எப்படி வந்தது என்பதை அறிந்தோம் அல்லவா. பிரச்சினை மாவுச்சத்து அடங்கிய குப்பை உணவுகளை அளவின்றி தின்றதால் வந்தது. அதை உடனே நிறுத்த வேண்டும். இனிப்பு சுவை தரும் அனைத்து பொருட்களையும் நிறுத்த வேண்டும்.

குறை மாவு நிறை கொழுப்பு உணவுக்கு மாறுவது உங்களுக்கு நன்மை பயக்கும்.

எப்படி????

1. மாவுச்சத்து குறைத்து உண்பதால் மேற்கொண்டு க்ளூகோஸ் கொழுப்பாக மாற்றம் அடைவது நின்று விடும்.

2. இந்த உணவு முறையில் உடல் கொழுப்பை எரிப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுறுப்புகளில் மண்டிக்கிடக்கும் கொழுப்பும் கரைய ஆரம்பித்து காணாமல் போய் விடும்.

3. நாம் உணவிலேயே தேவையான அளவு கொலஸ்ட்ராலை கொடுத்து விடவதால் கல்லீரல் தினமும் கஷ்டப்பட்டு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. இது அதன் பணிச்சுமையை வெகுவாக குறைத்து விரைவில் நலம் பெற உந்து சக்தியாக அமையும்.

முடிவாக :

உங்களின் உறவினர்களில் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் இருப்பின் அவருக்கு இந்த டயட்டை பரிந்துரை செய்யுங்கள்.

அவரது கல்லீரலை பிரச்சனை தீவரமாவதற்குள் காக்க ஒரு வாய்ப்பு வழங்குங்கள்.

ஃபேட்டி லிவர் பிரச்சனையை கொலஸ்ட்ரால் மாத்திரைகளாலோ வேறு எந்த குறுக்கு வழியிலோ சரி செய்ய இயலாது.

எதைத்தின்றதால் அது வந்ததோ அதை நிறுத்த வேண்டும்.

முடிவுரை :

முதல் இரண்டு நிலைகளில் இருக்கும் ஃபேட்டி லிவர் “குறை மாவு நிறை கொழுப்பு (பேலியோ)” உணவுமுறையால் கட்டுப்படும். இந்த முடிவுரையை தங்களுக்கு நல்அறிவுரையாக ஏற்பது அவரவர் தம் சுயவிருப்பம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க