பாம்புகளைப் போலவே, பாம்புக்கடிக்கான நச்சுமுறிவு பற்றிய ஆய்விலும் கூட கொள்கை வகுப்பாளர்களையும் விஞ்ஞான அமைப்புகளையும் உருவாக்குவதில் இந்தியாவின் கவனம் சறுக்கிவிட்டது போல தெரிகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பாம்புக்கடியால் குறைந்தது 46,000 பேர் இறக்கின்றனர் என்று தனியார் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் பாம்பு கடியால் ஏற்படும் மரணங்களில் இது பாதியாகும். தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் பேர் பாம்புக்கடியால் மரணிப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த  பல்கலைக்கழகமான University of Reading-ன் ஆய்வு தெரிவிக்கிறது. இது நாட்டின் மிகப் பெரிய மனித – விலங்கு முரண்பாடாக இருந்தாலும் இதற்கான ஆராய்ச்சி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவம் அதிர்ச்சியூட்டும் விதத்தில் காலங்கடந்து பொருத்தமற்றதாகி உள்ளது.

“பாம்பு கடித்தவர்களுக்கான மருத்துவ தொழில்நுட்பத்தின் சாராம்சம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மாறவில்லை” என்று இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) உள்ள சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் (Centre for Ecological Sciences) ஒரு பகுதியாக இருக்கும் பரிணாமவியல் நஞ்சியல் ஆய்வகத்தின் (Evolutionary Venomics Lab) உதவி பேராசிரியர் கார்த்திக் சுனகர் கூறினார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்ணிய பள்ளப்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் மது கண்ணன் என்ற 7 வயது சிறுவன் பாம்பு கடித்து பலியான சோகம். (உள்படம்: மதுராந்தகத்தை அடுத்துள்ள கருங்குழியில் நள்ளிரவில் பாம்பு கடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் பலியாகினர்.

பாம்புக்கடி நச்சு முறிவுக்கான ( snake antivenoms – ASVs ) ஆராய்ச்சியிலுள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தும் புதிய ஆய்வொன்றை  தற்போது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.  பாம்புக்கடி மருந்தை வட்டார அளவில் மிகுந்த பயனுள்ளதாக மாற்ற அவற்றை விஞ்ஞான ரீதியாக கண்டுபிடிக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றனர்.

காலாவதியான  தொழில்நுட்பம்:

இந்தியாவைப் போலவே மாறுபட்ட புவியியல் மற்றும் பல்லுயிர் அமைப்பு கொண்ட ஒரு நாட்டில் பாம்புக்கடி சிகிச்சைக்கு ஒரே ஒரு வகை நச்சு முறிவான பல்லிணைத்திறன் (polyvalent) பாம்புக்கடி நச்சு முறிவு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.  இந்த நச்சு முறிவு  என்பது இந்திய நாகம் (the spectacled cobra), கட்டு விரியன் (the common krait), கண்ணாடி விரியன் (Russell’s viper) மற்றும் சுருட்டை விரியன் (the saw-scaled viper) என்ற ”நான்கு பெரிய” பாம்புகளின் நஞ்சிலிருந்து தயாரிக்கப்படும் கலவையாகும். ஆனால் இந்தியாவில் சுமார் 270 வகையான பாம்புகளில், 60 வகையான பாம்புகள் பல்வேறு வகையான நச்சுத்தன்மை கொண்டவை என்று கருத்தப்படுவதால் அதற்கு தகுந்தாற்போல வேறுப்பட்ட மருத்துவம் தேவைப்படுகிறது.

நச்சுமுறிவு தயாரிப்பதற்காக சேகரிக்கப்பட்ட நஞ்சின் பெரும்பகுதி சென்னை மற்றும் அதன் புறநகரிலிருந்து வருகிறது.

இந்த நான்கு நச்சுப்பாம்புகள் தவிர வேறு பாம்புகள் கடித்த நோயாளிகளுக்கு தற்போதைய நச்சுமுறிவு பயனற்றது மட்டுமல்லாமல் 4 நச்சுப்பாம்புகள் இனத்தின் இரண்டு வெவ்வேறு கூட்டத்துடன் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகள் அளவிலும் அந்த மருந்தின் செயல்திறன்  கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாடு முழுவதும் ”நான்கு பெரிய” நச்சுப்பாம்புகள் இல்லாத மாநிலங்களில் கூட இந்த பல்லிணைத்திறன் நச்சு முறிவுதான் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. சான்றாக, அருணாச்சல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்லாமல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கூட இந்த நான்கு பாம்புகளில் எதுவும் இல்லை. எனினும் அதே பல்லிணைத்திறன் நச்சு முறிவுதான் இங்கு பயன்படுத்தப்படுகிறது” என்று பொது அறிவியல் நூலகத்தால் (Public Library of Science) தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான சுனகர் கூறினார்.

ஈரிடவாழ்வியல் (herpetology) – ஊர்வன (reptiles) மற்றும் நில நீர் வாழ்வன (amphibians) பற்றிய ஆய்வுக்காக 2018-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதை பெற்ற ரோமுலஸ் விட்டேக்கருடன் – ஐ.ஐ.எஸ்.சி (IISc) மற்றும் ஜெர்ரி மார்ட்டின் திட்டத்தின் (Gerry Martin Project) விஞ்ஞானிகள் சேர்ந்து இந்த கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவில் சுமார் 60 வகையான நச்சுப்பாம்புகள் உள்ளன. ஆனால் ”பெரிய நான்கு” பாம்புகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நஞ்சிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை நச்சுமுறிவு மட்டுமே அதற்கு உள்ளது.

இந்த புதிய ஆய்வுக்கட்டுரையானது சோச்சுரேக்கின் விரியன் (Sochurek’s viper) – இந்த பாம்பினத்தை ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஈரிடவாழ்வியலாளர் எரிச் சோச்சுரேக் கண்டறிந்ததால் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது, சிந்து கட்டுவிரியன் (Sind krait), மஞ்சள் வளைய கட்டுவிரியன் (banded krait), ஒற்றைக் கண்ணாடி நாகத்தின் (monocled cobras) இரண்டு கூட்டங்கள் மற்றும் அவற்றின் நெருங்கிய ‘நான்கு பெரிய’ உறவினர்களான இந்திய நாகம், கட்டு விரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகியவற்றின் நச்சுத்தொகுதிகளை ஆய்வு செய்திருக்கிறது.

படிக்க:
CAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !
மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

இந்த பாம்புகளின் நச்சுக்கலவை ஒரே இனத்தைச் சேர்ந்த வெவ்வேறு பாம்பு கூட்டத்தினிடையே மட்டுமல்லாமல் மாறுபட்ட நிலப்பரப்புகளிலும் கூட மிகவும் வேறுபாடாக இருக்கிறது என்பதை அந்த ஆய்வறிக்கை கண்டறிந்தது. “சான்றாக, மேற்கு வங்கம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஒரே ஒற்றைக் கண்ணாடி நாகப்பாம்பு இனத்தின் இரண்டு வெவ்வேறு கூட்டத்திடையே நச்சின் தன்மையில் ஒரு தெளிவான மாறுபாடு காணப்பட்டது. ஒன்று மிகவும் நரம்பு நச்சுத்தன்மை (neurotoxic) கொண்டது மற்றொன்று மிகவும் செல் நச்சுத்தன்மை (cytotoxins) நிறைந்ததாக இருந்தது என்று கண்டறியப்பட்டதாக” சுனகர் கூறினார்.

நச்சுமுறிவுகளை பரவலாக்குதல்:

பாம்புக்கடி நச்சுமுறிவு உற்பத்தியை பரவலாக்க வேண்டும் மற்றும் அதே பகுதியியைச் சேர்ந்த பாம்பின் நஞ்சைப் பயன்படுத்தியே சிகிச்சைக்கு வேண்டிய  நச்சு முறிவை உருவாக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ‘பெரிய நான்கு’ பாம்புகளிலிருந்து பாதுகாப்பான அளவிலாக எடுக்கப்பட்ட நஞ்சை குதிரைகளுக்குள் செலுத்துவதன் மூலம் நச்சுமுறிவுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த விலங்குகள் மனிதர்களை விடவும் பாம்புக்கடி நச்சு எதிர்ப்புத்தன்மையைக் கொண்டுள்ளதுடன் அதற்கான நச்சுமுறிவையும் உடலிலேயே உருவாக்குகின்றன. பின்னர் அவை பிரித்தெடுக்கப்பட்டு நச்சுமுறிவாக மாறுகின்றன.

பாம்பின் நச்சிலிருந்து நச்சு எதிர்ப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது.

நச்சுமுறிவு தயாரிப்பதற்காக சேகரிக்கப்பட்ட நஞ்சின் பெரும்பகுதி சென்னை மற்றும் அதன் புறநகரிலிருந்து வருகிறது. பாம்புகளைப் பிடிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த இருளர் பழங்குடியின (Irula tribe) மக்கள், பாம்பு கடித்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினாலும் தற்போதைய சிக்கலைத் தீர்க்க அவர்களின் பணி மட்டுமே போதுமானதாக இல்லை.

பாம்புகளின் நச்சுத்தன்மை அவற்றின் புவியியல், உணவு, பருவம் மற்றும் பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது. உள்ளூர் மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான தேவையான நச்சுமுறிவை உருவாக்க, அதே பகுதியிலிருந்து நஞ்சினை பிரித்தெடுக்க வேண்டும். சென்னையில் காணப்படும் பாம்புகளின் நஞ்சினிலிருந்து தயாரிக்கப்படும் நச்சுமுறிவு தெற்கு பகுதியில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் மேலும் தூரம் அதிகரிக்க அதிகரிக்க அதன் செயல்திறனும் குறைகிறது.

எதிர்கால நம்பிக்கை:

இந்த ஆராய்ச்சியானது, சிறந்த நச்சுமுறிவை உருவாக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று சுனகர் நம்புகிறார். “சிறந்த நச்சுமுறிவுகளை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் இரண்டு தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த ஆராய்ச்சி அடித்தளத்தில் சிறந்த சிகிச்சையாக மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் அரசாங்கத்தை அணுகிக்கொண்டிருக்கிறோம்”என்று அவர் மேலும் கூறினார்.

நச்சு எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை ஒரு இருளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் காட்டுகிறார்.

மும்பையிலுள்ள உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான ஹாஃப்கைன் நிறுவனமும் (The Haffkine Institute) ஒரு ஆய்வைத் தொடங்கியுள்ளது. “நச்சுமுறிவுகளின் செயல்திறனை நன்கு புரிந்துகொள்ள நாடு தழுவிய நச்சு பட்டியலாக்கம் (nation-wide venom mapping)  குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, எட்டு வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 22 பாம்புகளை ஆய்வு செய்ய எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.” என்கிறார் நிறுவனத்தின் இயக்குநர் நிஷிகந்த நாயக். ஆய்வின் பரப்பெல்லை விரிவானது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் பல மாநிலங்களின் வனத்துறையிடம் அனுமதி பெற்று வருகிறோம்.” என்று மேலும் கூறினார்.


தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : scroll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க