Monday, January 13, 2025
முகப்புசெய்திஇந்தியாCAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !

CAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !

அரசின் அடக்குமுறைகளைக் கடந்து பல்வேறு அமைப்பினர் போராட ஒன்றிணைந்திருக்கிறார்கள். மக்களும் தன்னுணர்வுடன் பங்கேற்றால் மட்டுமே பாசிச கும்பலை விரட்ட முடியும்.

-

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !

’நாங்கள் இந்திய மக்கள்’ என்ற பதாகையின் கீழ் நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 100 அமைப்புகள் குடியுரிமை (திருத்த) சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவு மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேடு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஒன்றிணைந்துள்ளன.

“CAA, NPR மற்றும் நாடு தழுவிய NRC-க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் அனைத்து மக்களுக்கும் ‘நாங்கள் இந்திய மக்கள்’ என்ற ஒரே பதாகையின் கீழ் இணையுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் . இது நமது அரசியலமைப்பின் முதல் சொற்றொடர், அதை விட பெரியது எதுவும் இருக்க முடியாது” என்று ஸ்வராஜ் அபியான் கட்சியின் நிறுவனர் யோகேந்திர யாதவ் கூறினார்.

குறிப்பிடத்தக்க ஆளுமைகளின் பிறப்பு அல்லது இறப்பு நாட்களில் இந்த குழுக்கள் நாடு தழுவிய போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை வரும் ஜனவரி முதல் நடத்த இருக்கின்றன. சாவித்ரிபாய் பூலேவின் பிறந்த நாளான ஜனவரி 3 முதல் தொடர் போராட்டம் தொடங்குகிறது.

விவசாயிகள் அமைப்புகள் மற்றும் இடது ஆதரவு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஜனவரி 8-ம் தேதி அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்தக் குழுவும் போராட்டத்தில் ஈடுபட உள்ளது.

தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படும் விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதி மற்றொரு போராட்டம் நடைபெறும்.   “இந்த நிர்வாகத்தால் ரோஹித் வெமுலா கொல்லப்பட்ட நாளான ஜனவரி 17 அன்று, நாங்கள் சமூக நீதி தினத்தை கொண்டாடுவோம் என்றும் ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சங்கராந்தி, அனைத்து கலாச்சாரங்களையும் சேர்ந்த அனைவரையும் ஒன்றாக இணைப்போம். ஜனவரி 26 அன்று, நள்ளிரவில் எங்கள் கொடியை உயர்த்துவோம். மகாத்மா காந்தியின் நினைவு நாளான  ஜனவரி 30 அன்று நாடு முழுவதும் ஒரு மனித சங்கிலியை உருவாக்குவோம்” என்றும் யாதவ் கூறினார்.

படிக்க :
மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா
“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !

பிரபல ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், அசாமில், என்.ஆர்.சி செயல்முறை வகுப்புவாதமானது அல்ல, எல்லோரும் இந்த செயல்பாட்டில் பங்கேற்க வேண்டியிருந்தது, மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு காரணமாக தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு ஆபத்தானது என்றும், ‘சந்தேகத்திற்குரிய’ குடிமக்களை அரசாங்க அதிகாரிகள் தேர்வு செய்ய வாய்ப்பளிக்கும் எனவும் அவர் கூறினார்.

“இந்தத் திட்டம் மிகப் பெரியது, செயல்படுத்த முடியாதது.  CAA, NPR மற்றும் NRC இன் இறுதி நோக்கம் நமது முசுலீம் சகோதர சகோதரிகளை பல ஆண்டுகளாக நிச்சயமற்ற ஒரு சுழலுக்குள் தள்ளுவதாகும். உங்கள் வாழ்க்கை நிறுத்தப்பட்டு, அந்த ஆவணத்தை நான் எங்கே பெற முடியும் என்பது பற்றி நீங்கள் சிந்திக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.

பிரபல மனித உரிமை ஆர்வலர் தீஸ்டா செதல்வாட், மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை தீர்மானிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை நாடு நிராகரித்துள்ளதாகக் கூறினார்.

“இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். அவசர நிலை காலத்திலிருந்து இதுபோன்ற குடிமக்களின் பங்களிப்பை நான் பார்த்ததில்லை” என்றும் அவர் கூறினார்.

NRC-இன் கீழ் மட்டுமே NPR செயல்படுத்த முடியும் என்று மூத்த மனித உரிமை வழக்கறிஞர் மிஹிர் தேசாய் கூறினார்.  “இல்லையெனில் நீங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ், மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யுங்கள்” என்றும் அவர் கூறினார்.

மாணவ செயல்பாட்டாளர் உமர் காலித்,  NPR மற்றும் NRC க்கு எதிராக ஒருவித முறையான மற்றும் சட்டரீதியான தீர்மானத்தை கொண்டு வர மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும், செயல்முறை தொடங்கும் போது NPR ஐ புறக்கணிக்க அவர்களுக்கு அழைப்பு விடுக்கப் போவதாகவும் கூறினார்.

“நாட்டில் ஆவணப்படுத்தப்படாதவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் எதிர்கொள்ளப் போகும் துன்பங்களின் தீவிரத்தை  அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்” என்று பிரபல மொழியியலாளரும் செயல்பாட்டாளருமான கணேஷ் டெவி பேசினார்.

அரசின் அடக்குமுறைகளைக் கடந்து பல்வேறு அமைப்பினர் போராட ஒன்றிணைந்திருக்கிறார்கள். மக்களும் தன்னுணர்வுடன் பங்கேற்றால் மட்டுமே பாசிச கும்பலை விரட்ட முடியும்.


அனிதா
நன்றி : தி இந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க