Thursday, August 11, 2022
முகப்பு செய்தி குற்றவாளிகளே நீதிபதிகளாக! உளுத்துப் போன நீதித்துறை !

குற்றவாளிகளே நீதிபதிகளாக! உளுத்துப் போன நீதித்துறை !

-

ழல் கறைபடிந்த அரசியல்வாதிகளாலும், சமூகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துத் திண்ணும் அதிகார வர்க்கத்தாலும் இருமுனைத் தாக்குதலை எதிர்கொண்டு, நிர்க்கதியாய் நிற்கும் மக்களின் இறுதிப் புகலிடம் நீதிமன்றங்கள் தான் என பொதுவாக நம்பப்படுகின்றது.

சாதாரண மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றம் வரை நீதித்துறையின் ஒவ்வொரு படிநிலைகளிலும் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மக்களின் இந்த நம்பிக்கையின் மேல் அமிலத்தைக் கொட்டியிருக்கின்றன. எனினும், நீதித்துறையின் மேல் மக்களுக்கு இருக்கும் மூடநம்பிக்கை என்னவோ குறைந்ததே இல்லை. கடந்த சில தினங்களாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் நிகழ்வுகள்,  இதுவரையிலான நீதித்துறையின் அநீதிகளின் நீண்ட வரிசையில் இணைந்துள்ளன.

தற்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் ’போங்காட்ட’ நிகழ்வுகளுக்கு ஒரு பின்னணி உள்ளது. கடந்த செப்டெம்பர் 20 -ம் தேதி ஓய்வுபெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஐ.எம். குதூஸி என்பவர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்படுகிறார்.

இவர் ஒதிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பிலும் இருந்துள்ளார். இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) போதுமான கட்டுமான வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தினாலும், விதிமுறைகள் பின்பற்றப்படாத காரணத்தினாலும் சுமார் 46 மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்திருந்தது. இதை எதிர்த்து அனுமதி ரத்து செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரிகளால் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தான் ஐ.எம். குதூஸி கைது செய்யப்பட்டார்.

இதே வழக்கில் மற்றொரு ஓய்வுபெற்ற நீதிபதியான பி.பி யாதவ் (BP Yadhav) என்பவரின் உதவியாளர் பாவனாத் பாண்டே என்பவரும், பிஷ்வநாத் அகர்வாலா உள்ளிட்ட ஹவாலா புரோக்கர்களும், மீரட்டில் உள்ள (அனுமதி ரத்து செய்யப்பட்ட) வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரியின் நிர்வாகியான பலாஷ் யாதவ் என்பவரும் கைது செய்யப்படுகின்றனர்.

இது தொடர்பாக மத்திய புலணாய்வுத் துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் லக்னோ நகரைச் சேர்ந்த பிரசாத் மருத்துவக் கல்லூரி அனுமதி ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளில் ஒன்று எனவும், இக்கல்லூரியின் முதலாளிகள் ஹவாலா தரகர்களின் மூலமும், நீதித்துறையைச் சேர்ந்த இடைத்தரகர்களின் மூலமும் அனுமதி ரத்தை எதிர்த்து நடக்கும் வழக்கின் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய புலனாய்வுத் துறை நடத்திய சோதனைகளில் இரண்டு கோடி ரூபாய் லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி ரத்தை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது – அவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் அமர்வில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவும் ஒருவர்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்

இந்நிலையில், நீதித்துறையின் கருவறை வரைக்கும் லஞ்ச ஊழல் நுழைந்து விட்டதையும் அதுவும் விசாரிக்கத்தக்க இடத்தில் தலைமை நீதிபதியே இருப்பதையும் சுட்டிக்காட்டி, நீதித்துறை சீர்திருத்தம் மற்றும் பொறுப்புக்கான பிரச்சார இயக்கத்தின் (CJAR – Campaign for Judicial Accountability and Reforms) சார்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனும் புகழ்பெற்ற இன்னொரு வழக்கறிஞரான காமினி ஜெய்ஸ்வாலும் தனித்தனியே இரண்டு ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

மத்திய புலனாய்வுத் துறை ஆளும் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால், அந்த அமைப்பு நீதித்துறையின் மாண்பையே கேள்விக்கு உட்படுத்தும் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையிலும், உச்சநீதிமன்றத்தால் நேரடியாக வழிநடத்தப்படும் விதத்திலும் சுயேச்சையான சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்பதுதான் ரிட் மனுக்களின் கோரிக்கை. பிரஷாந்த் பூஷனின் மனு கடந்த 8 -ம் தேதி நீதிபதிகள் சலமேஷ்வர் மற்றும் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இதை மேற்கொண்டு விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒன்றை அமைக்க வேண்டுமென விசாரணையின் முடிவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வாலின் ரிட் மனுவும் 9 -ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அதன் மேல் தீர்ப்பளித்த நீதிபதிகள், விசயம் தீவிரமானது என்பதால் ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன் இவ்வழக்கு நவம்பர் 13 -ம் தேதியன்று விசாரிக்கப்பட வேண்டுமென உத்தரவிடுகின்றனர்.

இதற்கிடையே இவ்விரண்டு வழக்குகளிலும் தலையிடும் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, மேற்கண்ட ரிட் மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் அமிதவாராய் மற்றும் கன்வில்கர் உள்ளிட்டோர் அடங்கிய அரசியல் சாசண அமர்வு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே பிரசாத் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவுடன் நீதிபதிகள் அமிதவராய் மற்றும் கன்வில்கர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வழக்கில் லஞ்சம் கொடுக்க முற்பட்டனர் என்பதே பிரதான குற்றச்சாட்டு.

லஞ்சம் கொடுக்கும் முயற்சியில் இடைத்தரகர்கள் வெற்றி பெற்றனரா?, தலைமை நீதிபதி உள்ளிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் லஞ்சம் வாங்கினார்களா? என்பதை விசாரிக்கவுள்ள அரசியல் சாசன அமர்வை, குற்ற விசாரணைக்கு உட்பட வேண்டிய அதே தலைமை நீதிபதியே அமைக்கிறார் – அந்த அமர்வில் விசாரிக்கப்பட வேண்டியர்களே நீதிபதிகளாக அமர்ந்துள்ளனர்.

சுருக்கமாகச் சொன்னால் விசாரணைக் கூண்டில் நிற்க வேண்டியவர்களே தீர்ப்பளிக்கும் இடத்திலும் இருக்கிறார்கள். நீதித்துறையில் “தனது வழக்கிற்கு தானே நீதிபதியாக இருக்க கூடாது” ( லத்தீன் மொழியில் – nemo judex in sua causa) என்பதே பொதுவாக பின்பற்றப்படும் மரபாகும். அப்படியான மரபை மீறுவது இயற்கையான நீதிக்கு முரணானது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை. இதை பட்டவர்த்தனமாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே மீறியுள்ளார்.

இப்படியான ஒரு அமைப்பு தங்களுக்கான நீதியை வழங்கும் என மக்கள் நம்புவதற்கு ஏதேனும் அடிப்படை உண்டா என்ன? சொல்லப் போனால் கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் வழங்கிய நியாயமான தீர்ப்புகளும் கூட புறநிலையாக சமூகத்தில் நிலவிய போராட்ட சூழலுக்கு அஞ்சி வழங்கப்பட்டவைதாம்.

அரசு கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு அங்கமும் தனக்கேயானதாக, தானே விதித்துக் கொண்ட கடமைகளில் இருந்து வழுவியுள்ளதோடு மக்களுக்கும் சிவில் சமூகத்துக்கும் எதிரான கான்சர் கட்டிகளாக மாறி வருகின்றன என்பதையே இந்நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க