“கைலை மலையில் இருந்தபோது, பார்வதி ஆசையாக சிவபெருமானின் கண்ணை விளையாட்டாக மூடினாள். அதனால் உலகமே இருண்டது. கோபமடைந்த சிவன், பார்வதியை சபித்து தவம் செய்து மீண்டு வருமாறு கூறினார். அன்னை பார்வதி மாங்காடு வந்து நெருப்பில் தவமிருந்து காமாட்சி ஆனார். மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மனின் மகிமை நிகரற்றது. வேண்டும் வரங்களைத் தரும் தாயாகவும், திருமணம் வரம் அருளும் தெய்வமாகவும் அன்னை காமாட்சி அருள்பாலித்து வருகிறார்.” இப்படிப் போகிறது மாங்காடு ஸ்தல புராணம். நாட்டார் தெய்வங்களாக இருந்த அம்மன்கள் இப்படி பார்ப்பனிய கடவுளர்களால் கடத்தப்பட்ட கதைகளைத்தான் ஸ்தல புராணங்கள் என்று கதை விடுகிறார்கள்.
ஆலயத்தில் நுழைந்தவுடனே பக்தர்கள் அங்கிருந்த திருநீறு குங்குமத்தை எடுத்துப் பூசிக்கொள்கிறார்கள். மாங்காடு அம்மனிடம் நிலைகொண்டிருக்கும் பாசிடிவ் வைபரேஷன் குங்குமம் வழியே பக்தர்களுக்குக் கடத்தப்படுகிறது என்றார் அருகிலிருந்த பழம் பக்தர். வாழ்க்கைப் பிரச்சினைகள் பூதாகரமாக அச்சுறுத்தும் போது இத்தகைய வைபரேஷன்கள் கதைகளுக்கு மட்டும் குறைச்சலா என்ன?
மாங்காடு புறநகர்ப்பகுதி என்பதால் பக்தர்கள் பெரும்பாலும் கிராமச் சாயலிலேயே இருந்தார்கள். உயர்ரக கார்களில் வந்திறங்கிய பணக்கார பக்தர்களும் புதிதாக மணம்முடித்த உயர்குடி ஐடி பக்தர்களும் அந்தச் சூழலுக்கு ஒட்டாமல் இருந்தார்கள்.
டிவி சீரியலின் இடைவேளை விளம்பரங்கள் போல் பக்தர்கள், கோயில் பிரகாரத்தின் குறுக்கும் நெடுக்குமாகப் போய்கொண்டிருந்தனர். சரசரக்கும் பட்டுப்புடவையில் பூ, பழத்தட்டு ஏந்திய குடும்பப் பெண்களும் ஆபீஸ் வேலைக்கு இடையில் அவசர அவசரமாக வந்து செல்லும் ஆண்களுமாக கோயிலைச் சுற்றி ஒரே பக்தி மணம். அங்கிருப்பது என்ன வகையான பக்தி என்று கணிப்பது சிரமம். பலரும் ஏதோ கடமை போலவும், சிலர் அந்தக் கடமையை ஒரு அச்சத்தோடும் அல்லது பக்தியோடும் வலம் வந்தார்கள்.
கூட்டத்தில் நமக்கு எதிரே வந்த இயல்பான கிராமத்தின் பக்த குடும்பத்திற்கு வணக்கம் வைத்து, நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அம்மனிடம் மனம் உருகி என்ன வேண்டிக் கொண்டீர்கள்? என்ன வரம் கேட்டீர்கள்?, கொஞ்சம் சொல்லுங்கள் என்றோம்.
படிக்க:
♦ CAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !
♦ அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை
இதை எதிர்பார்க்காத அவர்கள் நம்மை மிரட்சியாகப் பார்த்தார்கள். பிறகு சிரித்தார்கள். நீண்ட நேரம் தயங்கித் தயங்கி ஒருவருக்கொருவர் நீ சொல்லு, நீ சொல்லு என்று போக்கு காட்டினார்கள்.
வெளியில் சொல்ல முடியாத மோசமான வேண்டுதலையா ஆண்டவனிடம் கேட்டீர்கள்? என்றோம்.
அப்படியெல்லாம் ஏதுமில்லை, எனக்கும் என்னைச் சுற்றியிருக்கிற எல்லோருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாம பார்த்துக்கோ ஆண்டவா என்று வேண்டினேன் என்றார் ராஜகணபதி என்ற இளைஞர்.
அப்படி என்னதான் பிரச்சினையை ஆண்டவனிடம் சொன்னீர்கள்? என்றோம்.
கடன் பிரச்சினைதான்! என்றார்.
“எங்க அப்பா ஊரச்சுத்தி கடன் வாங்கிட்டு காணாமல் போய்விட்டார். எங்களுக்கு அசிங்கமா போச்சு. அத எப்படி தீர்க்குறதுன்னே தெரியல. கடனை அடைக்க ரெண்டு இடத்துல வேல செய்யிறேன். பகல்ல கார்பென்டர், நைட்ல பெட்ரோல் பங்க். பங்குல நைட் 10-லிருந்து காலை 6 மணி வரைன்னு சொல்லிட்டு 10 மணி வரைக்கும் வேலை வாங்குறாங்க. அதனால பகல்ல கார்பென்டர் வேலைக்குப் போக முடியல. காலையில 6 மணிக்கு முடியிற மாதிரி நைட் வேலை இருந்தா நல்லா இருக்கும். அதான் ஆண்டவன்கிட்டே வேண்டிக்கிறேன். 3 லட்சம் கடன் எப்ப முடியுமுன்னு ஒரே கவலையா இருக்கு” என்றார் வயதுக்கு மீறிய சோகத்துடன்.
பக்கத்திலிருந்த அவரது நண்பர் திலீப். நான் மலைக்குப் போறதுக்காக இப்பதான் மாலை போட்டேன். அதனால அம்மாவோட கோயிலுக்கு வந்தேன். +2 படிக்கிறேன். 11-ல ஜஸ்ட் பாசாயிட்டேன். இப்ப நல்ல மார்க் எடுத்து பாசாகணுமுன்னு அம்மன் கிட்டே வேண்டிகிட்டேன் என்றார்.
அம்மன்கிட்டே வந்தா அதிகம் மார்க் எடுக்க முடியுமா? என்றோம்.
அவர் சிரித்துகொண்டே, இல்ல டியூசனுக்கும் போகிறேன் என்றார்.
அருகில் இருந்த அவரது அம்மா, பையன் கருத்தா பேசுகிறான் என்றபடி பார்த்து கொண்டிருந்தார். அவரிடம் நீங்கள் என்ன வேண்டிக் கொண்டீர்கள்? என்றோம்.
பையன் செல்ஃபோனே கதியா இருக்கான். அத மறக்கணுமுன்னு சாமிகிட்டே வேண்டிகிட்டேன் என்றார். வேண்டுதலின் நம்பிக்கையற்று அவரே தொடர்ந்தார். வீட்டுல சொல்றது, வாத்தியார் சொல்றது எதுவும் அவன் காதுல நுழைய மாட்டேங்குது. ஃபோன எடுத்து காதுல வச்சான்னா, இந்த உலகத்தையே மறந்துடுறான். மனுசாளுங்க சொல்றது எதுவும் அவனுக்கு புரிய மாட்டேங்குது.
ரெண்டு மூணு தடவ ஃபோன வாங்கி ஒடச்சியும் போட்டுட்டேன். ஒரே கவலையா இருக்குது. கொஞ்சமாவது திருந்தட்டுமேன்னு மாலையும் போட்டு விட்டேன். திருந்துறானா பார்ப்போம் என்றார்.
***
சந்துரி, ஈழம், முல்லைத்தீவு.
பாப்பாவுக்கு 6 மாதம். அம்மன் சந்நிதிக்கு குழந்தையை கொண்டு வந்தோம். இனிப்பு படைச்சி அத பிரசாதமா பக்தர்களுக்குக் கொடுக்குறோம். வேறெதுவும் வேண்டுதல் இல்ல. எல்லோரும் நல்லா இருக்கணும், அதுதான் எங்க வேண்டுதல் என்று சிரித்தார்.
படிக்க:
♦ தொப்புள் கொடி தாயத்து : ஸ்டெம் செல்லின் முன்னோடியா ? | ஃபரூக் அப்துல்லா
♦ பேராசிரியர் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 50
***
ராஜேந்திரன், ரியல் எஸ்டேட்.
ரியல் எஸ்டேட் தொழில் படுத்துவிட்டதாகச் சொல்கிறார்களே, உங்களுக்கு எப்படிப் போகிறது? என்றோம்.
மோசமுன்னு யாரு சொன்னது? தொழில் நல்லாவே போகுது. இப்பத்தான் கும்மிடிப்பூண்டிக்கு பக்கத்துல ரெண்டு இடம் சேல்ஸ் பண்ணியிருக்கேன் என்றார்.
சரி, உங்களோட வேண்டுதல் என்ன? என்றோம்.
“வேண்டுதல வெளியே சொல்லக்கூடாது, சொன்னா பலிக்காது, அது ஐதீகம். எதுக்கு இந்தக் கோயிலுக்கு வருவாங்கன்னு ஒங்களுக்கே தெரிஞ்சிருக்கணும். இப்படி கேட்கக்கூடாது. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வேண்டுதலுக்கு ஸ்பெஷல். இங்கே தொட்டில் கட்டி குழந்தை வரம் கேட்கிறது, எலுமிச்சை கொடுத்து கல்யாணம் வரம் கேட்கிறது, மாலை சாத்தி தொழில் விருத்தி வேண்டுறது. இப்படி, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேண்டுதலுக்காக வருவாங்க” என்றார்.
தடித்த மாலையை கையில் அணைத்தபடி பக்தியின் சொரூபமாக நின்ற அவரது வேண்டுதல் என்னவாக இருக்கும்? என்று முனகிக்கொண்டே, நிற்க பொறுமையிழந்து மெல்ல நழுவினோம்.
***
பாக்யலட்சுமி
எந்தக் குறையும் இல்லாம அம்மன் எங்கள நல்லபடியா வச்சிருக்கு. ஏதோ மன நிம்மதிக்காக கோயிலுக்கு வருகிறோம் என்றவரிடம், குடும்பத்தைப் பற்றி விசாரித்தோம்.
எங்க வீட்டுக்காரரு வயசான பிறகும் வேலைக்குப் போறாரு. ஆம்பள பசங்க 2, எதுவும் எங்கள ஏறெடுத்தும் பார்க்குறதில்ல. பேசுனாகூட ஃபோன் எடுக்குறதில்ல. பிள்ளைகளே வேண்டாமுன்னு அவர் தலைமுழுகிட்டாரு. மனசு கேக்கல, வேதனையா இருக்கு. மனச ஆத்திக்கத்தான் அம்மன்கிட்டே வந்தேன். 8 வருசமா தனியாத்தான் வாழுறோம். இந்த வயசான காலத்தில எங்கள பாத்துக்க நாதியில்ல.
காலு கையி நல்லா இருக்கும்போதே போயிறணும். வேற வேண்டுதல் என்ன இருக்கு? என்றவர் நம்மை விட்டுப் போக மனமில்லாமல் சுற்றிச் சுற்றி வந்தார். கொஞ்சம் துன்பத்தை இறக்கி வைத்த நிம்மதியை அவரிடம் பார்க்க முடிந்தது.
***
சிவசங்கரன், இன்டீரியர்
“3 வருசமா தொழில் இல்லே. விழுந்த வியாபாரம் எழுந்திருக்கவே இல்ல. எல்லாம் இந்த மோடி பண்ணின வேல. கருப்புப் பணத்த ஒழிக்கிறேனுன்னு மொத்தமா பணத்தையே ஒழிச்சிட்டாரு. தொழிலுக்கு யாராவது பணத்த வெளிய எடுத்தா ஐ.டி கட்டுன்னு புடுங்கிகிட்டுப் போயிடுறான். எவன் பணத்த வெளியில எடுப்பான்? தொழிலும் வேணாம் தொந்தரவும் வேணாமுன்னு பணத்து மேலே உட்கார்ந்திருக்காங்க. இல்லாத நாங்கதான் சாகுறோம். ஏதோ இங்கே வந்தா கொஞ்சம் நிம்மதி. இதுவும் ஒரு ஏமாத்துதான், வேற வழி?” என்றார் விரக்தியாக..
***
தாங்கல் சுப்பன், பூந்தமல்லி எம்ஜிஆர் மன்ற ஒன்றியச் செயலர்.
“அடுத்த எலெக்சன் எங்களுக்குத்தான். பஞ்சாயத்து எலெக்சன்ல மீண்டும் எடப்பாடி ஆட்சிதான். எடப்பாடி ஆட்சி சீரும் சிறப்புமா இருக்கு. அவர் நோய் நொடி இல்லாம இருக்கணுமுன்னு அம்மன்கிட்டே வேண்டிகிட்டேன்.”
“இது எடப்பாடி ஆட்சி இல்ல, பிஜேபி ஆட்சி… ‘ஆமாம் சாமி’ ஆட்சின்னு சொல்றாங்களே” என்றோம்.
“யாரு ஸ்டாலினா, அவரெல்லாம் வேலைக்கு ஆகமாட்டாரு. நான் வர்றேன், தொகுதி எம்.எல்.ஏ வர்றாரு” என்று ஓடினார்.
***
அர்ச்சகர் ஸ்ரீமுரளி.
“பக்தாளெல்லாம் பொறுமை இல்லாம வர்றா. சாமிய ரெண்டு கையால கும்பிடுறதுக்கு பதிலா, ஒத்த விரலால ஒத்தி எடுக்குறா. செத்த ஓரமா நின்னு பாருங்கோ. தீபத்தாண்ட என்னா கூத்து பண்றாள்”னு, என்று விபூதியை வீசிக்கொண்ட நம்மிடம் பேசினார்.
“சிதம்பரம் கோயில் அர்ச்சகருக்கு என்னாச்சு பார்த்தேளா” என்றோம்.
“நாம நேரா பாக்கல. அப்பிடி இப்பிடின்னு சொல்றா. காதாலதான் கேக்குறோம். யாரும் கண்ணால பாக்கல. அது தப்பு. பக்தாள கைநீட்டி அடிக்கப்படாது. இப்ப கேஸ் ஆயிடுச்சு. சந்நிதியில தப்பு பண்ணவாள ஆண்டவன் பாத்துப்பான். எல்லாத்துக்கும் பெரிய ஜட்ஜ் ஆண்டவன் இருக்கான். நாம யாரு? என்று இழுத்தவர், ஆமா… பேப்பர்ல எப்போ போடுவேள். ஃபோட்டோ போட்டா கொஞ்சம் சொல்லுங்கோ” என்றார்.
“எங்களுக்கு எந்தக் குறையுமில்லே. ரொம்ப நல்லா இருக்கோம். வெற டீட்டெய்ல் ஏதும் கேக்காதீங்கோ. ஏன்னா, கோயில்ல வேலை செய்யற அர்ச்சகரின் குடும்பம்.”
மேலும் படங்களுக்கு :
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
வினவு புகைப்படச் செய்தியாளர்கள்