அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 50

பேராசிரியர் ஸ்மித் 

அ.அனிக்கின்

டம் ஸ்மித் 1723-ம் வருடத்தில் எடின்பரோவுக்கு அருகிலுள்ள கெர்கால்டி என்ற சிற்றூரில் பிறந்தார். சுங்க இலாகாவில் அதிகாரியாக இருந்த அவருடைய தகப்பனார் அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ஒரே குழந்தை என்பதால் இளம் விதவையான அவருடைய தாயார் தன்னுடைய முழு கவனத்தையும் அந்தக் குழந்தையை வளர்ப்பதில் ஈடுபடுத்தினார்.

குழந்தை மெலிந்தும் அடிக்கடி நோய்வாய்ப்படுவதாகவும் இருந்தது; தன் வயதுக் குழந்தைகளின் உற்சாகமான விளையாட்டுக்களில் ஈடுபடவில்லை. அவர்கள் ஏழைகளைப் போல கஷ்டமான வாழ்க்கை நடத்தவில்லை, ஆனால் அடக்கமான வாழ்க்கை நடத்தினார்கள். நல்ல வேளையாக அந்த ஊரில் ஒரு சிறப்பான பள்ளிக்கூடம் இருந்தது. அதன் ஆசிரியர் மற்றவர்களைப் போல, குழந்தைகளின் தலைகளில் பைபிள் வாசகங்களையும் இலத்தீன் மொழியின் இலக்கணக் குறிப்புகளையும் திணிப்பது அவசியம் என்று நினைக்கவில்லை. அந்தக் குழந்தையைச் சுற்றிலும் எப்போதும் புத்தகங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிற்காலத்தில் அறிவுக் களஞ்சியம் என்ற சிறப்பைப் பெற்ற ஸ்மித்தின் கல்வி இவ்வாறுதான் தொடங்கியது .

பிரபுக்கள் குடும்பத்திலே பிறந்த டியுர்கோவைப் போல மிகச் சிறப்பான கல்வி வசதி ஸ்மித்துக்குக் கிடைக்கவில்லை. அதன் காரணங்கள் தெரிந்தவையே. உதாரணமாக, பிரெஞ்சு மொழியை நன்கு கற்பிக்கக் கூடிய ஆசிரியர் அவருக்குக் கிடைக்கவில்லை; அதன் விளைவாக அவர் பிரெஞ்சு மொழியை வேகமாகப் படித்த போதிலும் சரியான உச்சரிப்போடு பேசத் தெரியாமலிருந்தார். 18-ம் நூற்றாண்டில் கல்விச் சிறப்புடைய ஒருவர் மூலச் சிறப்புடைய தொன்மையான மொழிகளை நன்கு கற்றிருக்க வேண்டும். ஆனால் ஸ்மித் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பிறகு தான் அந்த மொழிகளை (குறிப்பாக கிரேக்க மொழியைக்) கற்கத் தொடங்கினார்.

ஸ்மித் தனது பதினான்காம் வயதிலேயே கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் (அது அந்தக் கால வழக்கம்). தர்க்கவியலை (முதல் வருடத்தில்) கட்டாய பாடமாகப் படித்த பிறகு, கலைப்பாடங்களை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார், அறநெறித் தத்துவஞானம் பயின்றார். ஆனால் அந்தப் பாடத்தோடு கணிதமும் வானவியலும் படித்தார், எப்போதும் அந்தத் துறைகளில் குறிப்பிடத் தக்க பேரறிவு கொண்டு விளங்கினார்.

பதினேழு வயதிலேயே மாணவர்களுக்கு மத்தியில் சிறந்த அறிவாளி என்றும் விசித்திரமான மாணவர் என்றும் பெயரெடுத்தார். ஆரவாரமான மாணவர் கூட்டத்திலிருக்கும் பொழுது அவர் திடீரென்று சிந்தனை வயப்பட்டு விடுவார் அல்லது தன்னைச் சுற்றிலும் இருப்பவற்றை அடியோடு மறந்து தனக்குத்தானே பேசிக் கொள்ள ஆரம்பிப்பார். இத்தகைய விசித்திரமான போக்குகள் வாழ்நாள் முழுவதும் அவரிடம் நிலைத்து நின்றன. 1740-ல் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்ததும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்வதற்கு ஒரு செல்வந்தருடைய அறக்கட்டளையிலிருந்து அவருக்கு உபகாரச் சம்பளம் கிடைத்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்மித் ஆறு வருடங்கள் தொடர்ச்சியாக இருந்தார்.

கிளாஸ்கோ பல்கலைக் கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆடம் ஸ்மித்தின் சிலை.

அங்கே பணியாற்றிய ஆசிரியர்களும் பேராசிரியர்களும் மாணவர்கள் படிக்கக்கூடிய புத்தகங்களைத் தணிக்கை செய்வதுண்டு; குறிப்பாக சுதந்திரமான சிந்தனையை வற்புறுத்துகின்ற புத்தகங்களைத் தடை செய்தார்கள். அங்கே ஸ்மித்தின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக இருந்தது, பிற்காலத்தில் அவர் தான் பயின்ற இரண்டாவது பல்கலைக்கழகத்தைப் பற்றிப் பேசும் பொழுது ஆத்திரப்படுவார். மேலும் அங்கே அவர் தனிமையான வாழ்க்கை நடத்தினார்; அடிக்கடி நோய் வாய்ப்பட்டார். புத்தகங்கள் மட்டுமே அவருக்குத் துணையாக இருந்தன. அவர் மிக விரிவான அளவுக்கு எல்லாத் துறைகளையும் பற்றிப் படித்தார், எனினும் பொருளாதார விஞ்ஞானத்தில் அவர் இப்பொழுது விசேஷமான அக்கறை எதுவும் காட்டவில்லை.

1746-ம் வருடத்தில் அவர் கெர்கால்டிக்குச் சென்று அங்கே இரண்டு வருடங்களைக் கழித்தார். அங்கே அவருடைய சுயவளர்ச்சி தொடர்ந்தது. அங்கேயிருந்து கொண்டு எடின்பரோவுக்கு எப்பொழுதாவது போய் வருவார். அவ்வாறு சென்றிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் செல்வந்தரும் நிலஉடைமையாளரும் புரவலருமான ஹென்ரி ஹியூமை (பிற்காலத்தில் கைம்ஸ் பிரபு) சந்தித்தார். அதன் விளைவாக ஸ்மித்தின் திறமைகளைப் பற்றி மிகவும் உயர்வான அபிப்பிராயம் அவருக்கு ஏற்பட்டது. அந்த இளம் புலமையாளர் பங்கெடுத்துக் கொள்கின்ற வகையில் ஆங்கில இலக்கியம் பற்றிய தொடர் சொற்பொழிவுக்கு அவர் ஏற்பாடு செய்தார். ஸ்மித் நிகழ்த்திய சொற்பொழிவுகள் சிறப்பான வகையில் வெற்றியடைந்தன. பின்னர் அந்த சொற்பொழிவுத் தலைப்புக்களில் மாற்றம் ஏற்பட்டது. அவை பிரதானமாக இயற்கைச் சட்டத்தைப் பற்றி இருந்தன. 18ம் நூற்றாண்டில் இந்தத் தலைப்பில் நீதி இயல் மட்டுமின்றி அரசியல் தத்துவங்கள், சமூகவியல், பொருளாதாரம் ஆகியவையும் அடங்கியிருந்தன. அரசியல் பொருளாதாரத்தில் அவர் விசேஷமான அக்கறை காட்டத் தொடங்கியதன் முதல் அறிகுறிகளை இந்தக் காலகட்டத்தில் பார்க்கலாம்.

1750-51-ம் வருடங்களில் அவர் பொருளாதார மிதவாதத்தின் பிரதான கருத்துக்களைச் சொல்லிவந்தார் எனத் தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கள் தம்முடைய எடின்பரோ சொற்பொழிவுகளைச் சேர்ந்தவை என்று 1755-ம் வருடத்தில் அவர் எழுதிய விசேஷக் குறிப்பில் தெரிவித் தார்.

“இராஜியவாதிகளும் திட்டங்களைத் தயாரிப்பவர்களும் பொதுவாக மனிதனை ஒரு வகையான அரசியல் செயல் முறைக்கு உரிய பொருளாகவே கருதுகிறார்கள். திட்டங்களைத் தயாரிப்பவர்கள் மனித விவகாரங்களில், நடவடிக்கைகளின் இயற்கையான போக்கில் இடையிட்டுத் தடுக்கிறார்கள்; இயற்கை தன்னுடைய நோக்கங்களை அடைவதற்காகப் பாடுபடும் பொழுது தன்னுடைய சொந்த செயல் திட்டத்தை நிறுவுவதில் நடுநிலை கோடாமல் அது இயங்குமாறு நாம் அனுமதிப்பது மட்டும் போதும்…. மிகவும் கீழ் நிலையிலுள்ள காட்டுமிராண்டித்தனத்திலிருந்து மிகவும் அதிகமான வளப்பெருக்க நிலைக்கு ஒரு அரசைக் கொண்டு போவதற்கு சமாதானம், குறைவான வரிகள், சகித்துக் கொள்ளக் கூடிய நிர்வாக முறை ஆகியவற்றைத் தவிர அதிகமாக வேறு எதுவும் தேவை இல்லை; மற்றவை அனைத்தும் இயற்கையான போக்கில் தானாகவே ஏற்படக் கூடியவை. இந்த இயல்பான போக்கில் தலையிட்டு வளர்ச்சியை வேறு திசையில் மாற்றுவதற்கு அல்லது சமூகத்தின் வளர்ச்சியை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிறுத்துவதற்கு முயற்சி செய்கின்ற எல்லா அரசாங்கங்களும் இயற்கைக்கு மாறுபட்டவையே; தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவை கொடுங்கோன்மையையும் ஒடுக்குதலையும் பின்பற்றத் தொடங்குகின்றன”(1)  என்று அவர் எழுதினார்.

படிக்க :
இந்தியாவில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு ! | ஃபரூக் அப்துல்லா
♦ ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !

18-ம் நூற்றாண்டிலிருந்த முற்போக்கான முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ உடைகளை இன்னும் மாற்றாமலிருந்த அரசின்பால் கறாரான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. அவர்களுடைய மொழியைத்தான் ஸ்மித் கையாளுகிறார். மேலே தரப்பட்டிருக்கும் பகுதியில் ஸ்மித்துக்கே உரிய துணிச்சலான, வேகமான நடையைக் காணலாம். நாடுகளின் செல்வம் புத்தகத்தில் ஆத்திரமும் கிண்டலும் கலந்து எழுதியிருக்கும் பின்வரும் பகுதியில் அதே ஸ்மித்தைக் காணலாம். ”நயவஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த பிராணியைக் கொச்சையாக ராஜியவாதி அல்லது அரசியல்வாதி என்று நாம் குறிப்பிடுகிறோம்; பொது விவகாரங்களில் அவ்வப் பொழுது ஏற்படுகின்ற ஏற்ற இறக்கங்கள் அவர்களுடைய முடிவுகளை நிர்ணயிக்கின்றன.”(2)  ஒரு முதலாளித்துவ சித்தாந்தி தன் காலத்திய அரசின் பால் கொண்டிருக்கும் எதிர்மறையான அணுகுமுறையாக மட்டுமே இது தோன்றிய போதிலும், ஜனநாயகத் தன்மை கொண்ட ஒரு அறிவுஜீவி அதிகார வர்க்கம், அரசியல் சூழ்ச்சிகளின் பால் கொண்டிருக்கும் மிகவும் ஆழமான வெறுப்பு இது என்றும் கருதலாம்.

1751-ம் வருடத்தில் ஸ்மித் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவியை வகிப்பதற்காக கிளாஸ்கோவுக்குச் சென்றார். முதலில் தர்க்கவியல் துறையின் தலைவர் பதவியையும் பிறகு அறநெறித் தத்துவஞானத்தின், அதாவது சமூக விஞ்ஞானத்துறையின் தலைவர் பதவியையும் வகித்தார். அவர் கிளாஸ்கோ நகரத்தில் பதிமூன்று வருடங்கள் வாழ்ந்தார்; வருடந்தோறும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு எடின்பரோவுக்குத் தவறாமல் போய்வருவார். இது தான் தன்னுடைய வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியான காலம் என்று அவர் தன்னுடைய வயோதிகப் பருவத்தில் எழுதினார். அவர் தனக்கு மிக அறிமுகமான, தன் மனதுக்கு மிகவும் உகந்த சூழ்நிலையில் வாழ்ந்தார்; பேராசிரியர்களும் மாணவர்களும் நகரப் பெருமக்களும் அவரை மதித்துப் போற்றினார்கள். அவருடைய பணியில் யாரும் குறுக்கிடவில்லை. கல்வித் துறையில் அவர் அரிய சாதனைகளைச் செய்வாரென்று எதிர்பார்க்கப்பட்டது. சில நண்பர்களோடு மட்டும் நெருங்கிப் பழகினார், அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இங்கிலாந்தில் பொழுதுபோக்கு மன்றத்தின் உறுப்பினருக்கென்று குறியடையாளமாகச் சில கூறுகள் உண்டு; இந்தக் காலத்தில் அவர் அந்தப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டு வாழ்நாள் முழுவதும் அவற்றைப் பின்பற்றினார்.

நியூட்டனையும் லீப்னிசையும் போல ஸ்மித்தின் வாழ்க்கையிலும் எந்தப் பெண்ணும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கவில்லை. அந்தக் காலத்தில் -எடின்பரோ, கிளா ஸ்கோ வருடங்களில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் கட்டத்துக்கு இரண்டு தடவை வந்தார் என்று தெளிவற்ற, ஆதாரமில்லாத வதந்திகள் இருப்பது உண்மையே. ஆனால் என்ன காரணத்தாலோ ஒவ்வொரு தடவையும் அந்த பாக்கியம் அவருக்குக் கிட்டவில்லை. எனினும் இது அவருடைய மனஅமைதியைக் குலைக்கவில்லை. அதனால் அவருடைய மன அமைதி குலைந்ததாக அவருடைய கடிதங்களில் (இவை மிகக் குறைவு தான்) அல்லது அவருடைய சமகாலத்தவர்களின் நினைவுக் குறிப்புகளில் எத்தகைய குறிப்புக்களும் இல்லை.

ஆடம் ஸ்மித்

அவருடைய வாழ்க்கை பூராவும் அவருடைய தாயாரும் வயோதிகப் பெண்மணியான மாமன் மகளும் அவருடைய வீட்டை நிர்வாகம் செய்து வந்தார்கள். ஸ்மித் தன்னுடைய தாயார் காலமான பிறகு ஆறு வருடங்களும், மாமன் மகள் காலமான பிறகு இரண்டு வருடங்களும் உயிரோடிருந்தார். அந்த வீடு ”முற்றிலும் ஸ்காட்லாந்துத் தன்மையைக் கொண்டிருந்தது என்று அவர் வீட்டுக்கு வருகை புரிந்தவர்களில் ஒருவர் எழுதியிருக்கிறார். ஸ்காட்லாந்தின் தேசிய உணவு வகைகள் அங்கே பரிமாறப்பட்டன, ஸ்காட்லாந்துப் பழக்க வழக்கங்களும் மரபுகளும் அங்கே பின்பற்றப்பட்டன. இந்த வழக்கமான வாழ்க்கைமுறை அவருக்கு மிகவும் அவசியமாக இருந்தது. அவர் அதிக காலத்துக்கு வேறு ஊர்களுக்குப் போவதில்லை. எங்கே சென்றாலும் எப்பொழுதும் அவசரமாக வீட்டுக்குத் திரும்பி விடுவார்.

1759-ம் வருடத்தில் ஸ்மித் அறவியல் உணர்ச்சிகளின் தத்துவம் என்ற தமது முதல் பெரிய விஞ்ஞானப் புத்தகத்தை வெளியிட்டார். அது அந்தக் காலத்துக்கு முற்போக்கான புத்தகம், அந்த அறிவுயுகத்துக்கும் அதன் இலட்சியங்களுக்கும் பொருத்தமானதாக இருந்தது. எனினும் ஸ்மித்தின் தத்துவஞான, பொருளாதாரக் கருத்துக்களின் உருவாக்கத்தில் ஒரு கட்டத்தை எடுத்துக் கூறுகின்றது என்ற வகையிலேயே அது இன்றைக்குப் பிரதானமாக சிறப்புப் பெறுகிறது. மறு உலகத்தில் வஞ்சத் தீர்வு ஏற்படும் என்ற அச்சத்தையும் சொர்க்கத்தில் ஆனந்தமயமான வாழ்க்கை கிடைக்கும் என்ற உறுதியையும் அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ சமய அறவியலை அவர் தாக்கி எழுதினார். அவருடைய அறவியலில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கொள்கையான சமத்துவம் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. எல்லா மனிதர்களும் இயற்கையில் சமமானவர்கள், எனவே அறவியல் கோட்பாடுகளும் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும்.

எனினும் ஸ்மித் மனித நடத்தை பற்றிய தனி முதலான, “இயற்கையான” விதிகளிலிருந்து முன்னேறினார், அறவியல் என்பது அடிப்படையில் சம்பந்தப்பட்ட சமூகத்தின் சமூகபொருளாதார அமைப்பினால் நிர்ணயிக்கப்படுவது என்ற கருத்து அவரிடம் மிகவும் தெளிவற்ற வடிவத்தில் இருந்தது. எனவே மத அறவியலையும் “உள்ளார்ந்த அற உணர்ச்சியையும்” நிராகரித்து விட்டபடியால், அவற்றுக்குப் பதிலாக “அனுதாபக் கொள்கை” என்ற சூக்குமமான கோட்பாட்டை ஏற்படுத்தினார். மற்ற மனிதர்களோடு சம்பந்தப்பட்ட வகையில் மனிதனுடைய உணர்ச்சிகளையும் நடவடிக்கைகளையும், அவர்களுடைய நிலையில் தன்னைக் கற்பனையில் வைத்துப் பார்த்து அவர்களுக்காக அனுதாபப்படுவது, “அடுத்தவர்களுடைய உள்ளங்களுக்குள் நுழைவதற்கு” உள்ள திறமையைக் கொண்டு விளக்குவதற்கு முயற்சி செய்தார். இந்தக் கருத்தை அவர் எவ்வளவு சாமர்த்தியமாகவும் நகைச்சுவையாகவும் வளர்த்துச் சென்ற போதிலும் அது விஞ்ஞான ரீதியான பொருள்முதல்வாத அறவியலின் அடிப்படையாக முடியாது.

படிக்க :
தெவிட்டத் தெவிட்ட நகலெழுதித் தீர்க்கும் எழுத்தன் !
♦ பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் !

ஸ்மித்தின் அறவியல் உணர்ச்சிகளின் தத்துவம் 18-ம் நூற்றாண்டுக்குப் பிறகு நிலைத்திருக்கவில்லை. அந்த நூலின் மூலமாக ஆசிரியருக்கு அமரத்துவம் கிடைக்கவில்லை. இதற்கு மாறாக, நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தின் ஆசிரியருடைய புகழ் அந்தப் புத்தகத்தைப் புறக்கணிப்பிலிருந்து காப்பாற்றியது.

இந்தத் தத்துவ நூலை எழுதிக் கொண்டிருந்த காலத்திலேயே ஸ்மித்தின் விஞ்ஞானக் கருத்தார்வங்களின் திசை கணிசமாக மாறிவிட்டது. அவர் அரசியல் பொருளாதாரத்தை மென்மேலும் ஆழமாக ஆராய்ந்தார். அவருடைய தனிப்பட்ட ஈடுபாடுகள் மட்டுமல்லாமல் அந்தக் காலத்தின் தேவைகளும் இவ்வாறு ஆராயுமாறு அவரை ஊக்குவித்தன. தொழில் துறை, வர்த்தக நகரமான கிளா ஸ்கோவில் பொருளாதாரப் பிரச்சினைகள் விசேஷமான வேகத்தோடு வெளிப்பட்டன. அங்கே ஒரு அரசியல் பொருளாதாரக் கழகம் இருந்தது; வர்த்தகமும் சுங்க வரியும், கூலியும் வங்கித் தொழிலும், நிலக் குத்தகை நிலைமைகளும் குடியேற்றங்களும் அங்கே விவாதிக்கப்பட்டன. அந்தக் கழகத்தின் மிக முக்கியமான உறுப்பினர்களில் ஒருவராக ஸ்மித் இருந்தார். அவருக்கும் ஹியூமுக்கும் ஏற்பட்ட சந்திப்பும் அவர்களுக்கிடையே வளர்ந்த நட்பும் அரசியல் பொருளாதாரத்தின் மீது ஸ்மித் கொண்டிருந்த அக்கறையை ஊக்குவித்தன.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலப் பொருளியலாளரான எட்வின் கான்னான் சில முக்கியமான கட்டுரைகளைக் கண்டுபிடித்து வெளியிட்டார். அவை ஸ்மித்தின் கருத்துக்களின் வளர்ச்சியைப் பற்றி புதிய செய்திகளைக் கூறுகின்றன. கிளா ஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஸ்மித் ஆற்றிய விரிவுரைகளை ஒரு மாணவர் குறிப்பெடுத்து பின்னர் அவற்றை ஓரளவுக்குத் திருத்தங்கள் செய்து மறுபடியும் எழுதித் தயாரித்த கட்டுரைகள் இவை. இவற்றின் உள்ளடக்கத்தை ஆராய்கின்ற பொழுது இந்த விரிவுரைகள் 1762 – 1763-ம் வருடங்களில் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. அறவியல் தத்துவஞானத்தைப் பற்றி அவர் மாணவர்களுக்கு விரிவுரையாற்றத் தொடங்கினார். ஆனால் அந்தக் காலத்திலேயே அது சமூகவியல், அரசியல் பொருளா தாரத்தைப் பற்றிய விரிவுரைகளடங்கிய தொடராக மாறிவிட்டது என்பது இவற்றிலிருந்து தெளிவாகிறது. அவர் குறிப்பிடத்தக்க வகையில் சில பொருள் முதல்வாதக் கருத்துக்களை வெளியிட்டார். உதாரணமாக ஒரு கருத்தை மேற்கோள் காட்டுகிறோம்; “உடைமை இல்லாதிருக்கும் வரை அரசு ஏற்படவில்லை; ஏனென்றால் செல்வத்தைக் காப்பதும் ஏழைகளிடமிருந்து பணக்காரர்களைக் காப்பதுமே அரசினுடைய முடிவான நோக்கம்”  (3) இந்த விரிவுரைகளின் பொருளாதாரத்தைப் பற்றிய பகுதிகளில் அவர் பிற்காலத்தில் நாடுகளின் செல்வம் நூலில் வெளியிட்ட கருத்துக்களைக் கருவடிவத்தில் காணலாம்.

இருபதாம் நூற்றாண்டின் முப்பதுக்களில் மற்றொரு சுவாரசியமான ஆதாரம் கண்டு பிடிக்கப்பட்டது. இது நாடுகளின் செல்வத்தின் முதல் அத்தியாயங்கள் சிலவற்றின் பூர்வாங்க நகலாகும். இது 1763-ம் வருடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அறிஞர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். பிற்காலத்தில் எழுதிய புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ள முக்கியமான கருத்துக்களில் சில உழைப்புப் பிரிவினையின் பாத்திரம், பயனுள்ள மற்றும் பயனற்ற உழைப்பு என்னும் கருதுகோள்கள் முதலியவை இந்தப் பூர்வாங்க நகலில் காணப்படுகின்றன. மேலும் வாணிப ஊக்கக் கொள்கை பற்றி மிக ஆணித்தரமான விமர்சனத்தையும் சுதந்திரமான உற்பத்திக்கு ஆதரவான வாதத்தையும் இவற்றில் காண்கிறோம்.

ஆகவே, கிளாஸ்கோ கால கட்டத்தின் முடிவில் ஸ்மித் ஏற்கெனவே தற்சிந்தனையும் அறிவாழமும் நிறைந்த பொருளாதாரச் சிந்தனையாளராகிவிட்டார். ஆனால் அவர் தன்னுடைய மாபெரும் புத்தகத்தை எழுதுவதற்கு இன்னும் தயாராகவில்லை. அவர் மூன்று வருடங்கள் பிரான்சில் கழித்தார் (இளம் பக்லூ கோமகனுக்கு ஆசிரியராக); அங்கே பிஸியோகிராட்டுகளைச் சந்தித்தார். அவருடைய தயாரிப்புகள் இப்போது முழுமையடைந்தன.

 

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  W. Scott, Adam Smith as Student and Professor (Glasgow, 1937, Pp. 53-54) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்.

 (2) A. Smith, The Wealth of Nations, Vol. I, London, 1924, p. 412.

 (3) A. Smith, Lectures on Justice, Police, Revenue and Arms, Oxford, 1896, p. 15.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க