2019, நாடாளுமன்றத் தேர்தலில் மோடி – அமித்ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தோல்வியடைந்துவிட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஏழை நடுத்தரவர்க்க மக்களின் மீது அந்த அளவு கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது பாஜக. காஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தக் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இந்த அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவியிருக்கும் இந்த நச்சுப் பாம்பை வீதிப் போராட்டங்களின் மூலம்தான் வீழ்த்தமுடியும். அதற்கான ஆயுதம்தான் இந்நூல்.

அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய இந்த நூலை தரமாக தயாரித்து மலிவு விலையில் தருகிறது புதிய ஜனநாயகம் பத்திரிகை. இந்த அச்சு நூலை வினவு அங்காடி மூலம் ஆன்லைனில் விற்பனை செய்கிறோம்.

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! நூலின் முன்னுரையிலிருந்து ….

2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், “ஸப் கா ஸாத், ஸப் கா விகாஸ்” (அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி) என முழங்கினார், மோடி. ஆனால், அவரது இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, அஸிம் பிரேம்ஜி, ஷிவ் நாடார், குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்ட 84 பெரும் தரகு முதலாளித்துவக் குடும்பங்களின் சொத்து மதிப்புதான் கூடியிருக்கிறதேயொழிய, பெருவாரியாக உள்ள அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியைத்தான் கண்டிருக்கிறது.

… முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் மீது வரி பயங்கரவாதத்தை ஏவிவிடுவதாக கண்ணீர் வடித்தது, பா.ஜ.க. தனது ஆட்சியில் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, இன்னொருபுறத்தில் பெட்ரோல் – டீசல் மீது கலால் வரி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, வங்கி சேவைக் கட்டணம், ரயில் கட்டண உயர்வு, டோல்கேட் கட்டணக் கொள்ளை என்றபடியான பொருளாதாரத் தாக்குதல்களை நடுத்தர வர்க்கத்தினர் மீதும், உழைக்கும் மக்களின் மீதும் ஏவிவிட்டது.

”நானும் தின்ன மாட்டேன், மற்றவர்களையும் தின்னவிட மாட்டேன்” என சவுண்டுவிட்ட மோடியின் ஆட்சியில்தான் ஊழலும் கமிசனும் புதிய அவதாரமெடுத்திருக்கின்றன. இராணுவத்திற்கான ஆயுதத் தளவாடக் கொள்முதலில் இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது எனச் சட்டம் உள்ள நிலையில், ரஃபேல் விமானக் கொள்முதலில் அனில் அம்பானிக்காக பிரதமர் மோடியே, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைத்தரகராகச் செயல்பட்டார்.

பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம், கொள்ளைக்காக மோடி அரசு சமூகத்தின் அனைத்துப் பிரிவின் மீதும் ஏவிவிட்ட பொருளாதார பயங்கரவாதத் தாக்குதல்கள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் குண்டர் படைகள் முசுலீம்கள், தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமின்றி, முற்போக்கு அறிவுத்துறையினர் மீதும் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

மோடியின் ஆட்சியில் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தப்படும் பசுவதைத் தடைச் சட்டமும், மாட்டுச் சந்தையை முறைப்படுத்த கொண்டுவரப்பட்ட சட்டமும் இந்து விவசாயிகளையும் சேர்த்தே பதம் பார்த்தது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பும், பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரி உயர்வும் இதுவொரு கொள்ளைக்கார அரசு என்பதை பா.ஜ.க.-வின் சமூக அடித்தளமாக விளங்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கும் புரிய வைத்தது.

தூத்துக்குடியில் 14 பேரைச் சுட்டுப் பொசுக்கிக் கொன்றதை ஆதரித்துப் பேசி வரும் பா.ஜ.க.தான், தொழிற்சங்க உரிமைகள் கேட்டுப் போராடிய 13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கில் போடச் சொல்லுகிறது. தூத்துக்குடி படுகொலையைத் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஆதரித்துப் பேசிவரும் பா.ஜ.க. தான், உரிமை கேட்டுப் போராடிய தொழிலாளர்களைத் தூக்கு மேடைக்கு அனுப்பினால்தான், மூலதனத்தை ஈர்க்க முடியும் என வாதிடுகிறது.

… இந்தியா ஓர் இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவதை – பார்ப்பன பாசிசம் என்ற காவி பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் இரண்டறக் கலந்த இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவதை இக்குறுக்குவெட்டுத் தோற்றம் எடுத்துக்காட்டுகிறது.

… கடந்த ஐந்தாண்டுகளில் நடந்தது என்ன என்பதை நினைவுபடுத்துவதற்கு மட்டுமல்ல; கார்ப்பரேட் – காவி பாசிசம் என்ற இரட்டை அபாயத்தை வீழ்த்துவதற்குத் தேர்தலுக்கு அப்பாலும் போராட வேண்டிய அவசியமிருக்கிறது என்பதை உணர்த்தவும் இந்த மீள்பார்வை அவசியப்படுகிறது.

பொதுமக்களை அச்சுறுத்துவதன் மூலம், அவர்களைப் பார்ப்பனிய, கார்ப்பரேட் மேலாதிக்கத்திற்கு அடிபணிய வைத்துவிடலாம் எனக் கனவு காண்கிறது, ஆர்.எஸ்.எஸ்.

எதிர்த்து நிற்பதன் வழியாகவும் திருப்பி அடிப்பதன் வழியாகவும்தான் அவர்களை வீழ்த்த முடியும், பணிய வைக்க முடியும் என்பதை மெரினா எழுச்சியும் தூத்துக்குடி – ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் கற்பிக்கின்றன.

இத்தகைய மக்கள்திரள் போராட்டங்கள் மட்டும்தான் பார்ப்பனிய மேலாதிக்கம் என்ற காவி பாசிசத்தையும், தனியார்மயம் – தாராளமயம் என்ற கார்ப்பரேட் பாசிசத்தையும் வீழ்த்தவல்ல, மக்கள் கைகளில் உள்ள உண்மையான, நம்பத்தக்க ஆயுதங்களாகும்.

ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.

வெளியீடு :
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600024.

பக்கம்: 208
விலை :
100
முதல் பதிப்பு : மார்ச் 2019

Payumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)

100.00Add to cart

Paypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)Paypal மூலம்-வெளிநாடு: 6$ (தபால் கட்டணம் சேர்த்து)
தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.

வெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.

1 மறுமொழி

  1. மோடி போன்ற ஒரு சர்வாதிகாரியை விட்டு வைத்தால் நாடு நாடாக இருக்காது நாட்டில் மதமும் சாதியும் தலைவிரித்து ஆடும் ஒரு கட்டத்திலும் நாடு சோமாலியா போன்ற மிக அருமை உள்ள நாடாக மாறிடும் பணக்காரன் மேலும் பணக்காரனாகவும் இல்லாதவன் மேலும் இல்லாதவனாகவும் சூழ்நிலை உருவாகி பாசிசத்தை மக்களிடம் பரப்பி அடிமைத்தனத்தை உருவாக்கி விடுவார் மோடி அதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் எதிர்த்து ஒவ்வொரு நாளும் போராடுவோம் 2024 தேர்தலில் மாபெரும் தோல்வி அவருக்கு புகட்டுவோம் என்று உறுதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க