ரு பெண் தனது கர்ப்ப காலத்தில் சந்திக்கும் இயற்கையான நோய் இது. இயற்கையான கர்ப்பம் சார்ந்த உடல் இயங்குவியல் மாற்றங்களால் நீரிழிவு போன்ற தன்மை கர்ப்பிணித் தாய்களுக்கு ஏற்படுகிறது.

பெண்ணின் உடலில் உள்ள கணையம் சுரக்கும் இன்சுலின் எனும் ஹார்மோன், வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்காக நஞ்சுப்பை (Placenta) சுரக்கும் சில ஹார்மோன்களின் எதிர்வேலையால் சரியாக வேலை செய்யாமல் போவதால் தற்காலிகமாக நீரிழிவு போன்ற நிலை கர்ப்பிணிகளுக்கு வருகிறது.

இதை கர்ப்பிணிகளுக்கு வரும் நீரிழிவு நோய் என்கிறோம் (GDM என்று செல்லமாக அழைக்கப்படுகிறது) Gestational Diabetes Mellitus நூறு தாய்மார்களில் ஏழு முதல் பத்து பேருக்கு இந்த நோய் வருகிறது.

உடல் பருமன் உள்ள பெண்கள், ஏற்கனவே PCOD இருந்து கருவுற்ற பெண்கள், 30 வயதுக்கு மேல் கர்ப்பம் அடைபவர்கள் என பல காரணங்களால் இந்த நோய் அதிகமாகி வருகிறது.

இந்த நோயால் என்ன பிரச்சனை ? 

தாயின் உடலில் உள்ள இன்சுலின் சரியாக வேலை செய்யாததால், இன்சுலின் கட்டுக்குள் வைக்க வேண்டிய ரத்த க்ளூகோஸ் அளவுகள், தாயின் ரத்தத்தில் அதிகமாகும் (Hyperglycemia in mother ). இந்த அதிகப்படியான க்ளூகோஸ் நஞ்சுக்கொடி (placenta) வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்லும் இந்த க்ளூகோசை கட்டுக்குள் கொண்டு வர குழந்தையின் கணையம் (Baby’s pancreas) அதிக அளவில் இன்சுலினை சுரக்கும்.

குழந்தையின் ரத்தத்தில் அதிக க்ளூகோஸ் இருப்பதால், சுரக்கப்பட்ட இன்சுலின், அந்த க்ளூகோசை கொழுப்பாக மாற்றி குழந்தையின் உடலில் சேமித்துவிடும். இப்படி குழந்தையின் உடலில் கொழுப்பு சேர்ந்து சேர்ந்து குழந்தை நன்றாக கொழுத்துவிடும். இதை Fetal Macrosomia என்கிறோம்.

குழந்தையின் வளர்ச்சி தேவைக்கு மீறி அதிகமாக இருக்கும். ஐந்து கிலோ வரை கூட பிறப்பு எடை செல்லும். இதனால் குழந்தை இயற்கையான முறையில் பிறக்க வாய்ப்பு குறைந்து விடுகிறது. சிசேரியன் செய்து குழந்தையை எடுக்க வேண்டிய சூழல் அதிகமாகிறது.

இது போக, குழந்தைக்கு மஞ்சள் காமாலை, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு பிறந்த குழந்தை இறக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தாய்க்கு நீரிழிவு இருந்தால், குழந்தை பிறக்கும் சூழலில் அது பிறந்தவுடன் அதன் ரத்த சர்க்கரை அளவுகள் மிகவும் குறைந்து (Fetal hypoglycemia) அதனால் மரணம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

படிக்க:
♦ மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !
♦ பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

இந்த நீரிழிவு பொதுவாக ஆறு மாதத்திலிருந்து இறுதி மாதம் வரையே அதிகமாக வருகிறது. இதை அறிவது மிக எளிது. மருத்துவரிடம் சரியான பராமரிப்பில் இருக்கும் கர்ப்பிணித் தாய்க்கு அந்தத் தாய் கர்ப்பிணியாக பதிவு செய்யும் முதல் முறையே நீரிழிவு இருக்கிறதா என்று ரத்தப்பரிசோதனை செய்யப்படுகிறது.

பிறகு ஒவ்வொரு மூன்று மாதம் முடிவடைகையில் ரத்த சர்க்கரை அளவுகள் Oral glucose tolerance test எனும் பரிசோதனை செய்து கண்டறியப்படுகிறது. நீரிழிவு இருப்பது கண்டறியப்பட்டால் உடனே அதற்குரிய பிரத்யேக மாவுச்சத்து குறைக்கப்பட்ட உணவு முறையை மருத்துவர் பரிந்துரைப்பார்.

உணவு முறையில் கட்டுக்குள் வராத நீரிழிவுக்கு இன்சுலின் ஊசி பரிந்துரைக்கப்படும். அதன் மூலம் ரத்த சர்க்கரை அளவுகளை சரிவர கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

பொதுவாக இந்த நீரிழிவு நோய் வராமல் இருக்க கர்ப்பிணி பெண்கள் பின்வரும்
வழிமுறைகளை பின்பற்றலாம்

1. சீனி /சர்க்கரை / கருப்பட்டி போன்ற இனிப்புகளை தவிர்க்கலாம்.
2. பழங்களை பழச்சாறுகளாக பருகாமல் அப்படியே உண்ணலாம்.
3. குளிர்பானங்களை தவிர்க்கலாம்.
4. ஃபாஸ்ட் புட் உணவுகள், பிஸ்கட், வடை, பஜ்ஜி , சமோசா, கேக் போன்றவற்றை தவிர்க்கலாம்.
5. தினமும் அரை மணி நேரமாவது நடைபயிற்சி நல்லது.
6. தினமும் 10 மணிநேரம் உறக்கம் தேவை.
7. முடிந்தவரை மன அழுத்தம் இன்றி இருக்க வேண்டும்.
8. மனம் அமைதி தரும் விசயங்களை செய்யலாம்.

முறையாக மகப்பேறு மருத்துவரிடம் சரியான கால அளவில் பரிசோதனைகள் செய்ய வேண்டும். அவரது அறிவுரைகளை செவ்வனே கடைபிடிக்க வேண்டும்.

கர்ப்ப கால நீரிழிவை காலத்தே அறிந்தால் சிகிச்சை செய்ய இயலும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க