ஒரு ஆணும் பெண்ணும் கூடி அதனால் பெண்ணிற்கு கரு உருவாகி அது ஈறைந்து திங்கள் தாயின் வயிற்றினுள் வளர்ந்து கர்ப்ப கால இறுதியில் பிறப்பதே இயற்கையான பிரசவம்.
இந்த இயற்கையான பிரசவம் இரண்டு வகைப்படும். ஒன்று பெண்ணின் ஜனனக்குழாய் எனும் வெஜைனா வழி குழந்தை பிறப்பது மற்றொன்று சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை செய்து அடிவயிற்றுப் பகுதியில் இருந்து மேலாக குழந்தையை எடுப்பது.
முதலாவது பிரசவத்தை சுகப்பிரசவம் என்றும் இரண்டாவது வகை பிரசவத்தை ஆபரேசன் செய்து எடுத்தது என்றும் கூறுவார்கள்.
இந்த சிசேரியன் எனும் சிகிச்சை நம்மிடையே பரவலாகி முப்பது வருடங்கள் தான் இருக்கும் அதற்கு முன்பு முழுக்க முழுக்க இயற்கை வழி டைப் ஒன்று பிரசவம் தான். அதாவது சுகப்பிரசவம் அவ்வாறு சுகப்பிரசவம் பார்ப்பதையே தொழிலாக மருத்துவச்சிகள் செய்து வந்தார்கள். பரம்பரை பரம்பரையாக அவர்களின் வேலை இதுதான்.
இப்படி சிசேரியன் கண்டறியப்படாத காலத்திலும் பெண்களுக்கு சிசேரியன் தேவைப்படக்கூடிய பல பிரச்சனைகள் இருந்தன பொதுவாக நமது நாட்டு பெண்கள் உயரம் குறைவானவர்கள். குறுகலான இடுப்பெலும்பு கொண்டவர்கள்.
குழந்தை தலை கீழே இருக்காமல் குதம் கீழே இருக்கும் தன்மை (breech), கால்கள் கீழே இருக்கும் தன்மை (footling), இரண்டு குழந்தைகள்(twins), குழந்தையின் தலையும் தாயின் இடுப்பெலும்பும் ஒத்துப்போகாத தன்மை (cephalo pelvic disproportion), நஞ்சுக்கொடி கீழிறங்கி இருக்கும் தன்மை (placenta previa), நஞ்சுக்கொடி கழன்று கீழிறங்கி தொங்குதல்(abruptio placentae) இப்படி கர்ப்ப காலத்தில் குழந்தை மற்றும் நஞ்சுக்கொடி எப்படி இருக்கிறது என்பதெல்லாம் மருத்துவச்சிக்கு தெரியாது.
ஏன் மருத்துவருக்கு கூட அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. காரணம் – ஸ்கேன் வசதி அப்போது கிடையாது. அது போக நாம் எந்த பிரச்சனையை கண்டுபிடித்தாலும் அதற்கு சிகிச்சை ஒன்று தான் இருந்தது சுகப்பிரசவம் மட்டுமே ஒரு வழி.
ஆகவே குதம் கீழே இறங்கிய நிலையில் உள்ள குழந்தையாக இருந்தாலும் சரி,
இரட்டையர்களாக இருந்தாலும் சரி, தலையும் இடுப்பெலும்பும் ஒத்துப்போகாத தன்மை இருந்தாலும் சரி, தாய்க்கு வலி வந்தவுடன் மருத்துவச்சி பிரசவம் பார்க்க ஆரம்பிப்பார்.
குழந்தை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளி வராமல் போனால், பெரிய உசுர காப்பாத்தியாகணும் என்று கையை உள்ளே விட்டு குழந்தையின் கையையோ காலையோ பிடித்து இழுத்து வெளியே போடுவார். இதில் குழந்தை சாகும். சில நேரங்களில் பிரசவம் நடக்க தாமதமானால் குழந்தை உள்ளேயே காட்டுப்பீ (meconium) போய் அதை தின்று செத்துவிடும்.
தாய்க்கு அதிர்ஷ்டம் இருந்தால் ரத்த போக்கு பெரிதாக இல்லாமல் பிழைக்கலாம். இல்லாவிட்டால் அந்த இருவருக்கும் ஈமச்சடங்குகள் முடித்து விட்டு அடுத்த கல்யாணத்துக்கு மாப்பிள்ளை ரெடியாகிவிடுவார்.
சில கேஸ்களில் குழந்தை பிழைத்து, தாய் இறக்கும் சூழ்நிலையில், காலம்பூராவும் சித்தி கொடுமையில் குழந்தை வாழும்.
சரி, நான் மேற்சொன்ன எந்த பிரச்சனைகளும் இல்லாத ஒரு பெண் பிரசவம் ஆகிறாள். குழந்தையும் சரியாக பிறக்கிறது.
ஆனால் நஞ்சுக்கொடி வெளியேறாமல் போகும். கன நேரத்தில் ஒரு லிட்டருக்கும் மேல் உதிரப்போக்கு ஆகும். கண்ணுக்கு முன்னே தாய் மரணமடைவதை அந்த மருத்துவச்சிகள் வேடிக்கை தான் பார்க்க முடியும்.
இது post partum hemorrhage. இதன் தாக்கத்தை நேரில் பார்த்தவர்களால் தான் கூற முடியும். பதினைந்து நிமிடங்கள் போதும். பிரசவ வீட்டை இழவு வீடாக மாற்ற.
இப்படி பல பேரை காவு கொடுத்தார்கள் நம் முன்னோர்கள். அவர்களை குறை கூற முடியாது. காரணம் அதை எப்படி தடுப்பது என்று அவர்களுக்கு தெரியாது.
சரி, குழந்தையும் நன்றாக பிறந்து விட்டது. தாயின் நஞ்சுக்கொடியும் பிரச்சனையின்றி வெளியே எடுக்கப்பட்டு விட்டது. ரத்த போக்கு இல்லை.
இப்போது நமது மருத்துவச்சிகள் தங்கள் கையில் வைத்திருக்கும் பழைய பிளேடு, அருவாமணை இவற்றைக் கொண்டு நஞ்சுக்கொடியை நறுக்குவர். பின்பு அந்த நஞ்சுக்கொடியில் சாணியை பூசுவர்.
ஆக, நன்றாக பிறந்த குழந்தைக்கு ரண ஜன்னி எனும் neonatal tetanus வந்து சாகும். தாய்க்கு பிறப்புறுப்பில் சீல் பிடித்து கிருமித்தொற்று பரவி sepsis வந்து மரணம் வரும். இப்படி கர்ப்ப காலத்தில் நடக்கும் மாற்றங்கள், பிரசவத்தின் போது நடக்கும் பிரச்சனைகள் , பிரசவம் முடிந்ததும் வரும் கிருமித்தொற்று போன்ற எதற்கு விடை தெரியாமல் தான் நம் முன்னோர்கள் இருந்தார்கள்.
இதன் பயனாய் ஒவ்வொரு ஆயிரம் பிரசவத்திற்கும் 300 முதல் 400 குழந்தைகள் இறந்து வந்தன. அதாவது இரண்டு பிறப்பு என்றால் ஒரு இறப்பு. ஒரு லட்சம் பிறப்பிற்கு 500 க்கும் மேல் தாய்மார்கள் இறந்து வந்தனர்.
நவீன மருத்துவத்தின் பரவலாக்கத்தால் விளைந்த நன்மைய பாருங்கள் ஸ்கேன் கண்டுபிடிக்கப்பட்டது. கர்ப்ப காலத்தின் போது வரும் பிரச்சனைகள், நீர் சத்து குறைபாடு, குழந்தை குதம் கீழே இருத்தல், குழந்தை தலைகீழாக இல்லாமை, நஞ்சுக்கொடி கீழே இறங்கி இருத்தல் போன்ற பல விபரீதங்கள் முன்னரே காண முடிந்தது.
சிசுவின் இதய துடிப்புகளை அளக்கும் டோகோகிராப் பயன்பாடு, டாப்லர் கருவி கண்டுபிடிப்பு போன்றவற்றால் சிசுவுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல் கண்டறியபப்டுகிறது.
சிசேரியன் கண்டுபிடிப்பால் இந்த பிரச்சனைகள் இருக்கும் தாய்மார்கள் சிசேரியன் எனும் உயிர் காக்கும் சிகிச்சை மூலம் பிரசவம் புரிந்து உயிருடன் வாழ்கின்றனர்.
நிச்சயம் இது இல்லை என்றால் பிரசவத்தின் போது செத்திருக்க வேண்டிய பலரை காத்த பெருமை சிசேரியனுக்கு உண்டு. இறைவனுக்கே புகழனைத்தும். மேலும் பிரசவத்தின் போது ஆகும் உதிரப்போக்கை தடுக்க உடனடியாக ஆக்சிடோசின் போன்ற மருந்துகள் போடப்படுகின்றன.
உதிரப்போக்கை ஈடு செய்ய உதிரம் ஏற்றப்படுகிறது. சுத்தமான உபகரணங்கள். ஒரு முறை உபயோகித்த பொருளை மீண்டும் உபயோகிக்காமல் இருப்பதால் தொற்று கிருமிகள் வருவதில்லை.
கர்ப்ப காலத்தில் தாய்க்கு இரண்டு முறை ரணஜன்னி தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தைக்கு டெடானஸ் வருவதில்லை. இந்தியாவில் இந்த குழந்தைகளுக்கு வரும் டெடானஸ் நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது.
இப்படி நவீன மருத்துவ அறிவியலின் பயனாலும் சிசேரியன், ஸ்கேன், ரத்த ஏற்றுதல், போன்ற கண்டுபிடிப்புகளாலும் நமது சமுதாயம் பயனடைந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தான் மரபு வழி பிரசவம் என்று முற்றிலும் தவறான கருத்துகளை மக்களிடம் பரப்பி அதன் மூலம் மீண்டும் நம்மை ஒரு நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுக்கிறார்கள்.
மக்கள் இவர்களிடம் தெளிவாக இருந்து விலகிக்கொள்ளுங்கள்.
நன்றி: ஃபேஸ்புக்கில் – Dr.ஃபரூக் அப்துல்லா, MBBS.,MD., சிவகங்கை.
மீண்டும் மீண்டும் மரபு வழி மருத்துவத்தை மட்டுமே குறிவைத்து
தாக்கும் வினவு தளம் ஆங்கில மருத்துவம் மாசு மருவற்றது என்ற
பிம்பத்தை கட்டி அமைக்க முயல்கிறது.
தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளை மற்றும் அனைத்து
ஏழைமக்களுக்கும் போதிய அளவு அரசாங்க இலவச மருத்துவமனைகள் இல்லாமல் இருப்பது இதை பற்றி ஏன் வினவு வாய் திறக்க மறுக்கிறது?
ஹீலர் பாஸ்கர் அறிவியல் அடிப்டையிலேயே பேசுகிறார்.
அவரின் காணொளிகளை கண்டாலே இது விளங்கும்.
அய்யா தமிழ் மைந்தரே, வினவு தளத்தில் ஆங்கில மருத்துவம் கார்ப்பரேட் பிடியில் சிக்கி எப்படி சீரழிந்து போயுள்ளது என்பதை பல கட்டுரைகள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளனர். அவற்றில் சில உங்கள் கவனத்துக்கு.
ஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் !
இந்தியக் குழந்தைகளைக் கொல்லும் தனியார்மயக் கிருமி !
இப்படி ஒரு மருத்துவரை சந்தித்திருக்கிறீர்களா ?
இங்கிலாந்து கிளாக்ஸோ மருந்து கம்பெனியின் சீன ஊழல் !
ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா ? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா ?
மருத்துவர் – தயாரிப்புச் செலவு ஒரு கோடி ரூபாய் !
பில்கேட்சின் கருணைக்கு இந்திய பெண்கள் பலி !
ஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி PRPC சாதனை
சிப்ரோபிளாக்சசின்
அப்பல்லோ என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன ?
SICKO மைக்கேல் மூரின் ஆவணப்படம் !
இந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள்
உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு !
இவற்றை தேடி படிக்க சிரமமாக இருப்பின், மருத்துவ எமன் மின்னூல் வாங்கி படிக்கவும். அதற்கான லிங் : https://www.vinavu.com/2017/07/26/puthiya-kalacharam-may-2017-e-book/
காணொளி பாருங்கள். மரு.எழிலன் மிக அருமையாக விளக்குகிறார்.