பார்ட்னர்ஷிப் !

மீபத்தில் கிளினிக்கில் என்னை இருபதின் இறுதிகளில் இருக்கும் ஒரு பெண்மணி சந்தித்தார். PCOD எனும் கருமுட்டையில் நீர்க்குமிழ் போன்ற கட்டிகள் உருவாகும் நோய் இருப்பதாகவும், அதனால் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் மகப்பேறு இயற்கையாக உண்டாகவில்லை என்பது அவர்புறத்துப் பிரச்சனை.

PCOD -ஐ சரி செய்வதற்கு பேலியோ உணவு முறை உள்ளங்கையில் நெல்லிக்கனி. ஆதலால் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை குறித்து அவரிடம் விவரித்தேன். அவரும் ஆர்வம் தெரிவித்தார்.

PCOD – மாதிரிப் படம்

அவரது கணவருக்கும் உடல் பருமன் இருப்பதாக தெரிவித்தார். அடுத்த முறை அவருக்கும் அவரது கணவருக்கும் ரத்த பரிசோதனை செய்து வருமாறு கூறி அனுப்பி வைத்தேன்.

ரத்த பரிசோதனை முடிவுகளோடு பெண்மணி மட்டும் என்னை சந்தித்தார்.

ஏன்.. கணவர் வரவில்லை? என்று கேட்டதற்கு

கணவருக்கு கடையை பார்த்துக்கொள்ளும் வேலை இருப்பதாகவும், அதனால் கடையை விட்டுவிட்டு வர முடியாது என்று அவர் கூறிவிட்டதாகவும் எனக்கு தெரிவித்தார்.

“சரி.. ரத்த பரிசோதனையாவது செய்திருக்கலாமே? உடல் குண்டாக இருப்பது.. ஆண்மைத்தன்மையை குறைக்கும். அதற்காகவாவது இருவரும் சேர்ந்து பேலியோ கடைபிடித்து பார்க்கலாமே?” என்றேன்

அந்த பெண்மணி “இல்ல சார். எங்க வீட்டுக்காரருக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுனு மாமியார் சொல்லிட்டாங்க. அவரு ரத்த டெஸ்ட் கொடுக்க ரெடியாதான் இருந்தாரு. ஆனா மாமியார் விட மாட்றாங்க சார். அவுக மகனுக்கு பிரச்சனை இருக்காதாம்.. என்னை மட்டும் தான் சார் கொற சொல்றாக…”

படிக்க:
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
இன்னும் எத்தனை அனிதாக்கள் இருக்கிறார்களோ | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

“இது உலகம் பூரா இருக்கிறதுதான் மா.. எந்த அம்மாவாவது தன் புள்ளையை குத்தம்னு சொல்லுமா.. ஆனா குழந்தையின்மைல உங்கள மட்டும் டெஸ்ட் பண்ணி ப்ரயோஜனம் இல்ல. அடுத்த தடவ வரும் போது அவருக்கும் டெஸ்ட் எடுத்துட்டு வாங்க…”

அவருக்கு ஒரு முழு ரத்த பரிசோதனை மற்றும் விந்தணுக்கள் பரிசோதனை எழுதி அனுப்பினேன். மீண்டும் சில நாட்கள் கழித்து அந்த பெண்மணி மட்டும் வந்தார்.

“சார்..இந்தாங்க அவரோட ரிப்போர்ட்.. பெரும்பாடு பட்டு இந்த டெஸ்ட்ட எடுக்க வச்சேன் சார். பாத்து நல்ல வார்த்தை சொல்லுங்க…”

நினைத்ததை போலவே அந்த கணவனுக்கு விந்தணுக்கள் தேவைக்கும் குறைவாக இருந்தது. இன்னும் பெரும்பான்மை விந்தணுக்கள் நல்ல நிலையில் இல்லை.
டெஸ்டோஸ்டிரோன் எனும் ஆண்மைக்கான ஹார்மோன் குறைவாக இருந்தது..

நான் கூறினேன் “அவரு நேர்ல வரணும் மா.. வந்தா தான் டயட் தர முடியும். பிரச்சனை இருக்கு. நேர்ல வந்தே ஆகணும்னு டாக்டர் சொன்னாருனு கூட்டிட்டு வாங்க”

இன்னும் சில நாட்களுக்குப் பிறகு தம்பதி சமேதாராக வந்தனர். இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையும் உணவுப்பரிந்துரையும் வழங்கப்பட்டது.

இப்போது இருவரும் நல்ல முறையில் எடை குறைந்து வருகின்றனர். விரைவில் மகப்பேறு அடைய இறைவன் அருள் புரிய வேண்டும்..

நிற்க ; மலட்டுத்தன்மைக்கு காரணம் பெண்கள் மட்டுமே என்ற எண்ணம் நமது குடும்பங்களில் வேரூன்றி நிற்கிறது. அக்காவிற்கு குழந்தை பிறக்காவிட்டால் தங்கையை கட்டுவது போன்ற கொடூர அக்கிரமங்கள் நிகழ்ந்த வரலாறுகள் நமது சமுதாயத்தில் உண்டு.

பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம்.

சரி.. இப்போது விசயத்துக்கு வருவோம்; குழந்தையின்மை என்பது ஆண் பெண் இருவருக்கும் பொது. ஆகவே சிகிச்சை என்று வந்துவிட்டால் இருவரும் சேர்ந்து தான் எடுக்கவேண்டும். பெண்களை மட்டும் பலிகடா ஆக்குவது தவறு. அது வன்கொடுமை.

ஆண்களுக்கு இப்போதெல்லாம் விந்தணுக்கள் குறைபாடு மிக அதிகமாக காணப்படுகிறது.

எப்படி கிரிக்கெட்டில் இரண்டு பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் வைத்து ரன் எடுக்கிறார்களோ?

ஆம்.. அடுத்தவர் எடுக்கும் ரன்னுக்கும் எதிர் நிற்பவர் சேர்ந்து ஓடினால் தான் ரன் பதிவாகும். அவர் எடுக்கும் ரன்னுக்கு நான் ஓட மாட்டேன் என்று நிற்க முடியாது.

அதுபோலவே வாழ்க்கையை சேர்ந்து வாழ முடிவெடுத்த இரண்டு உயிர்கள் இணையும் பார்ட்னர்ஷிப்பே திருமணம். இதில் குழந்தையின்மைக்கு ஒருவரை மட்டும் பலிகடா ஆக்கி மற்றவர் பொறுப்பின்றி இருப்பது தவறு..

நல்லதோ கெட்டதோ, லாபமோ நட்டமோ, வெற்றியோ தோல்வியோ, ஏன் உயிரே போனாலும் சரி…. பார்ட்னர்களை எப்போதும் பிரியக்கூடாது

டாட்👆

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

2 மறுமொழிகள்

  1. நீங்கள் சொல்வது சரிதான் இது ஒரு FAD டயட் தான் அவனடி. ஆனால் இதற்கு முன்னர் கூட மருத்துவர் கண்ணன் அவர்களும் ஒரு காணொளியில் பேலியோ உணவு முறையை ஒரு 6 மாத காலம் பின்பற்றினால் தவறில்லை. அதன் பின்னர் சரிவிகித உணவிற்கு வர வேண்டும் என்றார். மருத்துவர் பரூக்கும் கூட பேலியோவை நிரந்தர தீர்வாக சொல்லவில்லை உடல் பருமனை குறைக்க தற்காலிக தீர்வாக பேலியோவை பின்பற்ற சொல்லியிருக்கிறார் என்றே நினைக்கிறன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க