பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் காலக்கட்டத்தில், அவற்றை கண்டித்து குற்றவாளிகளுக்கு எதிராக குரலெழுப்புவதை விடுத்து பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிறது இந்த சமூகம். அப்பெண்ணின் நடவடிக்கைகளைக் கேள்வியெழுப்புவதன் மூலம் இதுபோன்ற குற்றங்களை நியாயப்படுத்துகிறது.
- அவள் ஏன் இரவுநேரத்தில் வெளியே சென்றாள்?
2017: ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த 43 வயதான பெண்ணை குடிபோதையில் இருந்த 21 வயதான இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் இணையதளத்தில் பரவலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் நடைபெற்ற நேரம் பகல் 2.30 மணி! இதனை பொதுமக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டும் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தனரே தவிர ஒருவர்கூட தடுக்க முன்வரவில்லை.
- அவள் என்ன உடை அணிந்திருந்தாள்?
2018: கேரளாவில் கன்னிமாடத்தில் வைத்து அருட்சகோதரி ஒருவரை 2014 முதல் 2016 வரை சுமார் இரண்டு வருடங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் கிறித்தவ பாதிரியார் ஒருவன்.
அதே ஆண்டு ஜம்மு – காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயதேயான ஆசிபா பானோ என்ற சிறுமி 7 கொடூரர்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
- கிளப்பிற்கு பெண்கள் செல்வதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க இயலவில்லை
2024 மார்ச் 9: தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்மீக பயணம் சென்ற 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாள்.
- யார் அறிவார், அவளே இதற்கு சம்மதித்து இருக்கக்கூடும்
2024 ஆகஸ்ட் 11: ஜார்கண்டில் பள்ளி வாகனத்தில் வைத்து 3.5 வயதேயான குழந்தையை வாகன ஓட்டுநர் பலாத்காரம் செய்துள்ளான்.
2024 ஜூலை 30: 85 வயதான மூதாட்டி தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்
- அவள் பிரச்சனைக்குரிய தொழிலில் ஈடுபட்டிருக்கலாம்
2024 ஆகஸ்ட் 9 மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி கர் என்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணிநேரத்தில் (NIGHT SHIFT) ஓய்வெடுக்க சென்ற முதுகலை மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
- முன்பின் தெரியாதவர்களிடம் அவள் ஏன் பழகினாள்?
சென்னை வேளச்சேரியில் 11 வயதேயான தனது சொந்த மகளை 5 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளான் ஒருவன்.
படிக்க: தொடக்கக் கல்வி ஆசிரியர்களை போராடவிடாமல் கைது செய்யும் திமுக அரசு
பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கான காரணங்களாக மேலே குறிப்பிட்ட கருத்துகளையே இந்த சமூகம் முன்வைக்கிறது. எனினும் அதன்பின் கொடுக்கப்பட்ட செய்திகள் என்பது அக்கருத்துக்களை எல்லாம் தகர்த்தெறிவதாகவே உள்ளன.
8 வயது சிறுமியின் உடையில் என்ன ஆபாசத்தை கண்டுவிட்டனர் அந்த காமவெறியர்கள். மூன்றரை வயதான சிறுமிதான் உடலுறவு வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டாரா? இல்லை தன் தந்தையிடம் அன்பாக பழகியதுதான் 11 வயது சிறுமியின் குற்றமா?
இவற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்றுதான். அவள் அணிந்திருக்கும் உடை, அவளது தொழில், அவள் செல்லும் இடம் எதுவாக இருப்பினும் நேரபேதமின்றி “அவள்” பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்பதைத் தான்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
வேதனை விண்ணை எட்டுகிறது! பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றதே, இதற் கெல்லாம் காரணம் மக்களே! நல்லவனை நடுவீட்டில் வைக்காமல் கேடு கெட்ட நாய்களை நடு வீட்டில் வைத்தால் இதுதான் நடக்கும். மாற்றம் என்பது மக்களிடம் உருவாக வேண்டும். பணத்திற்காகவும்,பிரியாணி சாப்பாட்டிற் காகவும் ஓட்டு போட்டு உரிமையை விற்கும் மக்கள் இருக்கும் வரை இந்நாடு குட்டி சுவர்தான். காம வெறியர்களுக்கு கடுமையான தண்டனை என்பது மரண தண்டனையாக இருக்க வேண்டும்.இதற் கு நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்க வேண்டும். அனைத்துபெண்களும் சுதந்திர தின விழாவை புறக்கணிக்க வேண்டும்……