பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் 23,000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் தற்போது சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அக்கூட்டத்தொடரில், கடந்த ஜனவரி 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரை காணாமல் போன பெண்கள் மற்றும் சிறுமிகளின் மாவட்டவாரியான எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்குகளின் நிலை, கைது செய்யப்பட்ட அல்லது தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் விவரங்கள் மற்றும் கடமை தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. பாலா பச்சன் கேள்வியெழுப்பினார்.
அதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ், ஜனவரி 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரையிலான ஒன்றரை ஆண்டில் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தமாக 23,129 பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்கிற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, முதல்வர் மோகன் யாதவின் சொந்த மாவட்டமான உஜ்ஜையினி உள்பட ஒவ்வொரு மாவட்டத்திலும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக சாகர் மாவட்டத்தில் மட்டும் 1,069 பெண்கள் காணாமல் போயுள்ளனர். ஜபல்பூரில் 946, இந்தூரில் 788, போபால் கிராமப்புறத்தில் 688, சத்தர்பூரில் 669, ரேவாவில் 653, தார் 637,குவாலியர் 617 நூற்றுக்கணக்கான பெண்கள் காணமல் போனதையொட்டி புகார்கள் பதிவாகியுள்ளன. அதிலும், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
மறுபுறத்தில், அரசாங்கத் தரவுகளின்படி, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 292 குற்றவாளிகள், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 283 குற்றவாளிகள் என மொத்தமாக 575 பாலியல் பொறுக்கிகளை தற்போதுவரை பா.ஜ.க. அரசு கைது செய்யவில்லை. அதேபோல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 443 குற்றவாளிகள், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 167 குற்றவாளிகள் என 610 கொடூரர்கள் பாலியல் வன்கொடுமை வழக்குகளிலிருந்து தப்பியுள்ளனர்.
மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போனது தொடர்பான பிற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 320 பேரில் 76 பேர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் தொடர்புடையவர்கள்; 254 பேர் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையில் தொடர்புடையவர்கள். இவ்வாறு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட காமவெறி பிடித்த மிருகங்களை தற்போது வரை கைது செய்யாமல் அக்கொடூரர்கள் மாநிலம் முழுவதும் சுற்றித்திரிவதற்கு அனுமதித்துள்ளது பா.ஜ.க. அரசு.
படிக்க: ஒடிசா: தொடரும் பெண்களின் மீதான பாலியல் கொடூரங்கள்!
முன்னதாக 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, ஜூலை 1, 2021 முதல் மே 31, 2024 வரையிலான காலகட்டத்தில், 31,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலா பச்சன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலாக அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மொத்த எண்ணிக்கையில், 28,857 பெண்கள் மற்றும் 2,944 பேர் சிறுமிகள்.
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பீகார் மாநிலத்தில் ஊர்காவல் படைக்கான உடல்தகுதி தேர்வின் போது மயக்கமடைந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்சில் வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது; ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த ஓராண்டில் அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடத் தொடங்கியிருப்பது ஆகியவை இதற்கான சான்றுகளாகும். குறிப்பாக, பட்டியல் சாதி-பழங்குடியின பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் குறிவைத்து அதிக அளவில் நிகழ்த்தப்படுகின்றன.
அதிலும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுமிகளும் இளம்பெண்களும் காணாமல் போவது என்பது ஒவ்வொரு ஆண்டும் தீவிரமடைந்து வருகிறது. சான்றாக, பா.ஜ.க. ஆட்சி செய்துவரும் குஜராத் மாநிலத்தில் கடந்த 2016 முதல் 2020 வரை சுமார் 42,000 பெண்கள் காணாமல் போனது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தும் குற்றவாளிகள் கைது செய்து சிறையிலடைக்கப்படாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாலும் பிணையில் வெளியில் வந்து தன் மீது புகாரளித்த பெண்ணை மீண்டும் பாலியல் வல்லுறவு செய்து கொல்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது, பிற மாநிலங்களைக் காட்டிலும் உத்தரப்பிரதேசம், டெல்லி போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலேயே அதிகமாக நடக்கின்றது.
போலீசுதுறை, நீதிமன்றம் என ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக பா.ஜ.க. கட்சி உள்ளது.
பெண்கள் விரோத பார்ப்பனிய சித்தாந்தத்தைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் நிறுவத் துடிக்கும் இந்துராஷ்டிரத்தில் இதுவே பெண்களின் நிலையாகும். இந்த பாசிச கும்பலை விரட்டியடிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











