ரு மதத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ள அதன் தோற்றம், வரலாறு, அதன் போதனைகள், வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றை மட்டும் வைத்துப் புரிந்து கொள்ள முடியாது.

மதம் தோன்றிய வரலாற்று சூழ்நிலை அக்காலகட்டத்தில் நிலவிய அரசியல் பொருளாதார சமூக நிலைமைகள், நிலவிய உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள், இவற்றின் மீது கட்டப்பட்ட மேல் கட்டுமானம், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலை, ஆளும் வர்க்கத்தின் செயல்பாடு, அன்றைய பண்பாடு, நாகரிகம் வளர்ச்சி நிலை இவற்றின் அடிப்படையில்தான் முழுமையான புரிதல் உருவாகும்.

இஸ்லாம் பிற மதங்களிலிருந்து அதன் பெயரிலேயே வேறுபடுகிறது. மனிதப் பிறவியை கடவுளாக கொள்ளாத மதம். இஸ்லாம் என்றால் அரபு மொழியில் அடிபணிதல் என்று பொருள். அல்லாஹ்வுக்கு அடிபணிதல்-Obedience , கீழ்ப்படிதல்-Submission, சரணடைதல்-Surrender. மனிதகுல வரலாற்றில் சமூக முன்னேற்றத்தில் ஒரு மதம் தோன்றி என்னென்ன பங்களிப்பை செய்தது, சமூக அமைப்பில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்
♦ நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்

அரேபிய பாலைவனத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக வாழ்ந்து வந்த பெது இன் இனக்குழுக்களின் வாழ்க்கை முறையை மனித மதிப்புகளை மாற்ற முகமது நபி விரும்பினார். நாடோடிகளாக வாழ்ந்து வந்த  இனக்குழுவினர் இடம் விட்டு இடம் மாறிக் கொண்டே வாழ்ந்து கொண்டிருந்தனர். கால்நடை மேய்ப்பதும் கொள்ளையடிப்பதும் இவர்களின் வாழ்க்கைத் தொழிலாக இருந்தது. பிற இனக் குழுக்களின் மீது திடீர் திடீரென படையெடுத்து சூறையாடுவது இவர்களின் பொருளாதார அடிப்படையாக இருந்தது.

உயர்ந்த பண்புகளை கொண்ட மதம், ஓர் ஆட்சி முறை, நீதிமுறை, சட்டம் ஒழுங்கை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு சித்தாந்தம், கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாட்டில்  பெது இன் நாடோடி இன குழுக்களையும், நகரவாசிகள், தெற்கத்தி குடியேறிகளையும் ஒருங்கிணைக்கும் வழிபாட்டுமுறை ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு மத அமைப்பு, மெக்காவின் அரேபியாவின் உடனடித் தேவையாக இருந்தது இந்தப் பின்புலத்தில்தான் இஸ்லாம் தோன்றியது. “அரசியலும் மதமும்; இஸ்லாமின் தோற்றம்” என்ற கட்டுரை எண்ணற்ற வரலாற்று விவரங்களோடு ஏராளமான  சான்றாதாரங்களை முன்வைத்து இஸ்லாம் மதத்தின் தோற்றுவாய் பற்றி தெளிவாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாம் தோன்றி வளர்ந்த விதம்; முகலாயர் சாம்ராஜ்யங்கள் எவ்வாறு உருவாகின, என்ற வரலாற்று விவரங்கள் “உலகளாவிய இஸ்லாம்” என்ற கட்டுரையில் சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய அரசியல் அதன் தோற்ற காலத்திலிருந்து இன்றுவரை சமத்துவ சமநிலை கொண்ட சமூக  அமைப்பை உருவாக்க இயலவில்லை. இதர மத நாகரிகங்களைப் போலவே வர்க்க வேறுபாடுகள், இருப்பவன்-இல்லாதவன்; ஏழை-பணக்காரன்; தொழிலாளி-முதலாளி; உழைப்பை சுரண்டுபவன்-சுரண்டப்படுபவன் என்ற ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை உருவாக்கிக் கொள்ள இஸ்லாம் அனுமதித்தது. உம்மா (இஸ்லாமிய சமுதாயம்) மற்றும் (Islamic Brother hood) இஸ்லாமிய சகோதரத்துவம்;  உலகு தழுவிய இஸ்லாம் அரசு Global islamic State என்ற கருதுகோள்கள் எல்லாம் கற்பனை இலட்சியத்தில் பிறந்தவை என்பதை இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

50-க்கும் அதிகமான இஸ்லாமிய நாடுகள் உள்ளன. நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவற்றில் இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம் மக்கள் கடும் ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இஸ்லாமிய நாடுகளுக்குள் மோதல்கள்; போர்கள்; ஈரான்-ஈராக் போர்; அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் ஆதிக்கத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. முஸ்லீம்  நாடுகளுக்கு உள்ளேயே பிரிவினைப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இஸ்லாமிய நாட்டு முதலாளிகள் உலக முதலாளித்துவ சக்திகளுடன் இணைந்து உலகளாவிய முதலாளித்துவ சந்தை முறையில் முக்கிய பங்காளிகள் ஆகிவிட்டனர். புதிய உலகமய சூழ்நிலையில், இஸ்லாமியர்கள் தங்களை புதிய சிந்தனைகளுக்கு உள்ளாக்கி கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுடன் மத வேறுபாடுகளை களைந்து கொண்டு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற வரலாற்றுக் கடமையை இந்நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.

கிறிஸ்தவர்களால் குருசேடர், முஸ்லிம்களால் புனித போர் ஜிஹாத் (Crusade Vs Jihad)என்ற சிலுவைப்போர்கள், எதனால் துவக்கப்பட்டது? அதன் அடிப்படை என்ன? ஐரோப்பா முழுவதும் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியம் என்ற மதவெறி அலை வீசியது. “ஐரோப்பாவில் இஸ்லாம்” என்ற கட்டுரையில் மதவெறி அடிப்படையிலான பயங்கரவாத போர்க்களத்தை (infinite war) வரலாற்றுப் பின்புலத்தோடு இந்நூல் விவரிக்கிறது. அமெரிக்க பயங்கரவாதம் அதற்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதம் தோன்றி வளர்ந்த பின்னணியையும்; அரபுகளின் ஜீவ மரண போராட்டத்தையும் பற்றி இந்நூலின் மூலமாக நாம் புரிந்து கொள்ள முடியும். 2001 செப்டம்பர் 11-ல் நடைபெற்ற நியூயார்க் மீதான விமானத் தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல்தான். ஆனால் இது சிலுவை போர்-புனித போரின் ஒரு அம்சம்தான்.

இந்தியாவில் இஸ்லாம் (கிபி 712- 1858) என்ற கட்டுரை முகலாயர்கள் நடத்திய படையெடுப்புகள்; முகலாய சாம்ராஜ்யம் உருவாகிய விதம் பற்றிய ஒரு தெளிவான புரிதலை நமக்கு தருகிறது. இந்தியா என்ற ஒற்றை நாடு வரலாற்றில் என்றுமே இருந்ததில்லை; மன்னர்களிடையே முரண்பாடுகளும், மோதல்களும், மத சண்டைகளும், சாதி சண்டைகளும் நிரம்பியிருந்தன. இந்தப் பின்னணியில் முஸ்லிம் படையெடுப்பாளர்கள் விரைவில் முன்னேறி தக்காணம் வங்காளம் என்று ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்ட முடிந்தது.

மாமேதை மார்க்ஸ் அவர்கள் இந்தியாவைப் பற்றி 1853 ஜூலை 22-ஆம் தேதி  வெளியிட்ட கட்டுரையில் (இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்) பின்வருமாறு  எழுதினார்.

“அரபுகள், துருக்கியர்கள், முகலாயர்கள் என ஒருவர் பின் ஒருவராக இந்தியாவை படையெடுத்து வந்து கைப்பற்றிய அனைவரும் வெகு விரைவில் இந்தியமயமாக்கப்பட்டனர். இப்படி படையெடுத்து வெற்றி கண்ட இந்த காட்டுமிராண்டிகள் அடிமைப்படுத்தப்பட்ட இந்தியர்களின் உயர்வான நாகரிகத்தால் வரலாற்றின் புற விதிகளால் அடிமையாக்கப்பட்டனர்”.
{“Arabs,Turks,Tartars,Mogals who had successively overrun India, soon became hinuized,barbarian conquerers being, by an external law of history conquered themselves by the superior civilization of their subject”  ( The future result of British Rule in India)Marx-Notes on Indian history.}

கிபி 1526-ல் இருந்து 1858 வரை சுமார் 332 ஆண்டுகள் முகலாயர்களின் ஆட்சி இந்தியாவில் நீடித்தது. கிபி 712-ல் முகமது பின் காசிம் சிந்து பிரதேசத்தை கைப்பற்றி, அதில் இருந்து ஏறத்தாழ ஆயிரத்து 145 ஆண்டுகள் இந்தியாவிற்கு இஸ்லாமிய தொடர்புகள் ஏற்பட்டு நிலைநாட்டப்பட்டன எனலாம்; முஸ்லிம் இந்தியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள்.

முகலாய மன்னர் பாபர் எந்த கோயிலையும் வழிபாட்டுத் தலங்களையும் இடித்து தள்ளியவர் கிடையாது. பாபர் மிகமிக நாகரீகமானவர், மதவெறி அற்றவர். பாபரின் விஜயத்தின் நினைவாக மிர்பாக்கி என்ற பாபரின் அதிகாரி அயோத்தியில் 1528-ஆம் ஆண்டு பாபர் மசூதியை கட்டினார். 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் முன்னிலையில் இந்துத்துவ வானரப் படைகள் வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினர்.

தென்னிந்தியாவில் படையெடுப்புகள் மூலமாக  இஸ்லாம் பரவவில்லை திப்பு சுல்தானுக்கு முன் முகலாயர் ஆட்சி தெற்கே கோலோச்சவில்லை. பிறகு எப்படி கேரளம் தமிழகம் கர்நாடகத்தில் கூட இஸ்லாம் பரவியது என்ற வரலாற்று விவரங்களை “தமிழகத்தில் இஸ்லாம்” என்ற கட்டுரை தெளிவுபட கூறுகிறது. கொடூரமான ஒடுக்குமுறைக்கு ஆளான சமணர்கள், பௌத்தர்கள், தீண்டாமை கொடுங்கோன்மைக்கு இலக்கான தலித் மக்கள், நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இருந்த நாடார் சாதியினர், கள்ளர் சாதியினர் தமிழகத்தில் இஸ்லாம் மதத்தை தழுவினர்.

மாப்பிள்ளை, லப்பைகள், ராவுத்தர்கள், மரைக்காயர்கள் என்றெல்லாம் அறியப்பட்ட மண்ணின் மைந்தர்கள் தான் தமிழக முஸ்லிம்கள். இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவர் காயிதேமில்லத் அவர்கள் அரசியல் நிர்ணய சபையில் தேசிய மொழி பற்றிய பிரச்சனையில் விவாதத்தின்போது இந்த நாட்டு மண்ணில் பேசப்படும் மொழிகளில் மிகவும் பழமையானதும் தொன்மையான மொழியாக இருப்பதும் தமிழ்தான் என்று எடுத்துரைத்தார் “இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழ் எங்கள் மொழி. இதுவே தமிழ் முஸ்லிம்களின் முழக்கம்” என்றார்.

“விடுதலை இயக்கமும் முஸ்லிம்களும்'” என்ற கட்டுரையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை பற்றி; மறுக்கமுடியாத ஆதாரங்களோடு இந்த நூலில்  பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு என்ன காரணம்? பிரிவினைக்கு வித்திட்டது யார்? தனிநாடு கேட்பதற்கான அடிப்படை உருவாக்கப்பட்டது எதனால்? என்ற விவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் மூலமாக இந்நூலாசிரியர் ஒரு தெளிவான ஆய்வை முன்வைத்துள்ளார்.

1925-ல் விஜய தசமி அன்று மகாராஷ்டிர பிராமணர்களின் தலைமையில் ராஷ்டிரிய சுயம் சேவக் சங் ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.  “ஒத்துழையாமை இயக்கம் வார்த்த பாலில் வளர்க்கப்பட்ட முஸ்லிம் பாம்புகள் விஷம் கக்கி கொண்டிருக்கின்றன,  நாடுமுழுவதும் கலவரங்களை தூண்டி விடுகின்றனர்’’ என்று ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர் ஹெட்கேவார் துவக்கத்திலேயே கூறினார்; முஸ்லிம்  மக்கள் முதல் பிரதான எதிரிகளாகவும்; முஸ்லிம்களிடம் இருந்து விடுதலை பெறுவதே முழு விடுதலை என்ற கொள்கையை அடிப்படையாகவும் கொண்டு இந்த மதவெறி கும்பல் தங்களை வரித்துக் கொண்டது.

இந்துத்துவ பாசிச கும்பல், முஸ்லிம் வருகையால் இந்தியா இருளடைந்ததுவிட்டது  என்ற பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறது. இந்து புரோகித வர்க்கம் திணித்த ஒழுங்குமுறைகள்; வர்ணாசிரம கோட்பாடுகள்; அறிவியல் ஆய்வுக்கும் பகுத்தறிவுக்கும் மனுதர்ம கும்பல் காட்டிய அலட்சியம், இந்தியாவில் விஞ்ஞான கண்டுபிடிப்பு அறிவியல் வளர்ச்சி ஏற்பட மிகப் பெரும் தடையாக இருந்தது. இவர்களது மனுதர்ம கோட்பாடு மக்களின் சுதந்திர சிந்தனைக்கு பெரும் தடைக்கல்லாக இருந்தது.

படிக்க :
♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

இந்திய நாகரீக வளர்ச்சிக்கு இஸ்லாமியர்கள் மிகப்பெரும் பங்களிப்பை செய்துள்ளனர். சீனர்களின் கண்டுபிடிப்பான வெடிமருந்து, காகிதம் ஆகியவை செய்யும் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். வெளிநாட்டு துப்பாக்கியை முதன் முதலில் கொண்டு வந்தவர் பாபர். கட்டிடக்கலை சிற்பக்கலை, ஓவியம், இசை போன்ற நுண்கலைகளை இந்தியாவிற்கு வழங்கியவர்கள் இஸ்லாமியர்களே. முஸ்லிம்கள் இந்தியாவை இருளுக்குள் தள்ளினார்கள் என்று சங்பரிவார் கும்பல் சொல்லும் குற்றச்சாட்டு எள்ளளவும் உண்மை இல்லை.

இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால் சங்பரிவார் கும்பலின் இந்து ராஷ்டிர கனவு பலிக்காது. அதன் அடிப்படை தகர்ந்துவிடும் என்பதால் முஸ்லிம் மக்கள் மீது பொய்யையும், புனை சுருட்டும், கட்டுக்கதைகளையும் ஆர்எஸ்எஸ் கும்பல் அவிழ்த்து விடுகிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இஸ்லாமியரை குறிவைத்து தாக்குதல் தொடுக்கும் அரசியல் வகுப்புவாத பாசிச அமைப்புகள் இந்தியாவில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. தேசிய வாழ்வின் பல துறைகளிலும் முஸ்லிம்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் தொழில் துறைகளிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் போதுமான அளவில் இல்லை. கல்வித்துறையில் அவர்களுக்குள்ள கல்வி வாய்ப்புகள் மிகக் குறைவு. அனைத்துத் துறைகளிலும் ஒதுக்கப்பட்ட இஸ்லாமியர்கள் இந்திய சிறைச்சாலைகளில் நிரம்பி வழிகிறார்கள். நாடெங்கும் மிகப்பெரிய வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டுள்ள இந்துத்துவ பாசிசத்தின் இருண்ட நிழல்கள் அவர்கள் மீது விழுந்து கொண்டிருக்கின்றன.

அதிகார வர்க்கத்தின் உச்சியிலும், காவல்துறையிலும் இந்துத்துவ வெறியர்கள் கோலோச்சிக் கொண்டு இருக்கின்றனர். இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலை கண்டுகொள்ளாமல் பாராமுகமாக இருந்து விடுகின்றனர். இத்தகைய உண்மையான காரணங்களால் இஸ்லாமிய சமூகம் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆகப்பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் மிகவும் வறிய நிலையில் ஏழ்மையில் உழன்று வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, இராணுவம் காவல்துறை, நீதித்துறை, ஆகியவற்றில் இஸ்லாமியர்களுடைய விகிதாச்சாரம் மிக மிகக் குறைவு என்பதை நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்கள் அளித்த அறிக்கை தெளிவாக விளக்குகிறது.

இஸ்லாமியர்கள் அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் அனைவருடனும் கைகோர்த்து ஒன்றிணைந்து நிற்க வேண்டியது அவசியம். முஸ்லிம்களின் தனித்தனியான முயற்சிகள் வெற்றி பெற இயலாது, மாறாக எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்து களத்தில் நிற்கும் உண்மையான அமைப்புகளில் பெருவாரியாக பங்கேற்க வேண்டும். இந்துத்துவ பாசிச சக்திகளை தனிமைப்படுத்த மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

தோழர் ஞானையா

இந்துத்துவ பாசிச கும்பல் தங்களது  திருவிளையாடல்களை, தமிழகத்தில் அரங்கேற்றி விடலாமென்று தீவிரமான முயற்சி மேற்கொண்டு வருகின்ற இந்த காலத்தில், அதைத்தடுத்து நிறுத்த வேண்டிய மகத்தான வரலாற்று கடமை அனைத்து ஜனநாயக சக்திகள்முன் உள்ளது. காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான கருத்து ஆயுதம்  தோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலை இஸ்லாமிய சகோதரர்களும் சமத்துவ போராளிகளும் ஜனநாயக சக்திகளும் படித்து பயன்பெற வேண்டும்.

வரலாற்றில் வெற்றிபெறும் சக்திகளையும் தோல்வியுறும் சக்திகளையும் மிக எளிதாக இனம் கண்டு கொள்ள முடியும். தன்னைச் சுற்றிலுமுள்ள தனக்கு அனுசரணையாக இருக்கக்கூடிய சக்திகளை சாதுரியமாக தன்னுடனே சேர்த்துக் கொண்டு யார் வலுபெறுகிறார்களோ அவர்களே வளர்கிறார்கள். இந்துத்துவ பாசிச பயங்கரவாதத்தை வீழ்த்த போர்வாள் ஆகவும் கேடயமாகவும் இந்த நூல் பயன்படும்.

{இந்நூல் ஆசிரியர்  ஞானையா அவர்கள் தபால் தந்தி ஊழியர்  இயக்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றியவர். மாஸ்கோவில் உள்ள லெனின் அக்கடமி ஸ்கூல் ஆஃப் சயின்ஸ் (Lenin Academy of  school of sciences) என்ற கலாசாலையில் சமூகவியல் பயிற்சி பெற்றவர். பல இஸ்லாமிய நாடுகளுக்கும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்த நீண்ட அனுபவம் கொண்டவர். சுமார் 20 அரசியல் தத்துவார்த்த நூல்களை எழுதி உள்ளார்.}

நூல் : இஸ்லாமும் இந்தியாவும்
நுல் ஆசிரியர் : ஞானையா
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்
பக்கங்கள் : 336
விலை : ரூ.160.00
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்,
சென்னை – 600024.
தொடர்புக்கு : 98417 75112

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

5 மறுமொழிகள்

 1. புத்தக அறிமுக கட்டுரையில் சில விமர்சனங்கள்
  எழுந்தபோதும் ,
  வெட்டியான விமர்சனங்கள் மிகைத்தெழும்காலத்தில், ஆக்கப்பூர்வமான ஓர் கருத்துமோதலுக்கும், வரலாற்றுபூர்வமான விமர்சன மீளாய்வுக்க்கும் புதியதோர் கருத்துபிறப்பதற்கும் இந்த புத்தகம் வழிவகுக்கும் என நம்புகின்றோம்,
  அந்த நம்பிக்கையயை இந்த கட்டூரையின் முடிவுரை உணர்த்துகிறது மேலும் ஆசிரியரின் நோக்கம் மேன்மை பொருந்தியதாக உள்ளது என்பதை கட்டூரையின் முடிவுரை தெளிவு படுத்துகிறது,
  வாசிக்க ஆவல்

 2. நுலை படிக்க ஆர்வத்தை தூண்டும் மிகவும் செரிவு மிகுந்த நூல் அறிமுகம்

 3. இஸ்லாமும் இந்தியாவும என்ற நூலை படிக்க தூண்டுகிறது நூல் விமர்சனம்.ஆய்வு நூல் என்பது எடுத்துக்கொண்ட பொருளில் யதார்த்ததை படம் பிடிப்பதாக இருக்கவேண்டும்.ஆசிரியர் கருத்தை விட அந்த காலகட்டத்தில் நிலவிய சூழல் வரலாற்று விவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வாசகர்களின் அறிவை விரிவாக்குமாறு இருக்கவேண்டும்.இஸ்லாத்திற்கு எதிரான கொலைவெறித்தாக்குதலை பாஜக -ஆர்எஸ்எஸ் தொடுத்துவரும் நிலையில் அவர்களது கடமையை சுட்டிகாட்டுவதன் மூலம் ‘ஞானையா அவர்களின்’ நூலை முழுமையாக்க முயற்சித்திருக்கும் விமர்சனம் எழுதிய தோழரின் கடமையுணர்வு பாராட்டுக்குரியது.தோழர் காமராஜின் எழுத்துநடை வாசகர்களை கிளர்ச்சியுட்டுவதாக இருக்கும்.நூலின் முக்கிய அம்சங்களை வரிசைகட்டி வாசகரின் மனதில் பதியவைத்து . குறிப்பிட்ட நூலின் பால் படிக்க ஆர்வத்தை தூண்டும் வண்ணம் இருக்கிறது.விமர்சனம் எழுதுபவரின் வெற்றி அதில்தான் அடங்குகிறது.வாழ்த்துகள் தோழரே!

 4. நம் காலத்திற்கு தேவையான, மிகவும் அவசியமான நூலாக தோழர். ஞானையா எழுதிய இந்த நூலை நான் பார்க்கின்றேன். தோழர். காமராஜ் அவர்கள் எழுதிய அறிமுக கட்டுரை இந்த பொக்கிஷமான புத்தகத்தை உடனே வாசித்திட தூண்டுகிறது. இந்த புத்தகத்தை வெளியிட்ட அலைகள் பதிப்பகத்திற்கு எமது நன்றிகளும், பாராட்டுக்களும்.

 5. இதுபோன்ற சிறந்த நூல்களை தேர்வு செய்து நூல் அறிமுகம் செய்தல் உண்மையிலேயே நூல்களை வாசிப்பவர்களை நெறிப்படுத்தும் உதவி புரியும்.

  மேலும் *சமீபமாக* வந்துகொண்டிருக்கும் நூல்களைப் (முக்கியத்துவம் இருக்குமானால்) பற்றி உடனுக்குடன் அறிமுகக் கட்டுரை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். – இது எனது ஆலோசனை மட்டுமே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க