பாட்டாளி வர்க்கக் கட்சியை பற்றியும், அதன் அமைப்பு கோட்பாடுகளை பற்றியும் தெளிவான சித்திரத்தை இந்நூல் நமக்கு வழங்குகிறது.

அரசியல் கட்சி என்றால் என்ன?  என்ற முதல் கட்டுரையிலிருந்து, உட்கட்சி செயல்பாடுகளின் வழிகாட்டுதல்கள் வரை 7 தலைப்புகளில்,  கட்சி அமைப்பைப் பற்றி ஒரு சிறந்த பார்வை கொண்ட வழிகாட்டுதல்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

புராதன பொதுவுடமை சமூகம் சிதறுண்டு போன காலம் முதல் மனிதகுல வரலாற்றில் வர்க்கங்களின் போராட்டம் என்பது நிரந்தர நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகிறது. வர்க்கங்களாக பிளவுபட்டுள்ள,  சமூக அமைப்பில் ஒன்றுக்கொன்று எதிரான வர்க்கங்கள் மோதிக்கொள்வது, வர்க்கப் போராட்டம்  அரசியல்  போராட்டமாக மாறுவது தவிர்க்க இயலாதது. இத்தகைய வர்க்கப் போராட்டங்கள் கூர்மை அடைந்து புரட்சிகரமான சமுதாய மாற்றத்தில் முடிந்துள்ளது.

புரட்சிகரமான கட்சியானது தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு எல்லா வகைகளிலும் தயார் செய்வதாகும்,  பாட்டாளி வர்க்க கட்சி புரட்சியை நடத்த போதுமான வீரம்,  திடம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும். மக்களுடன் இணைந்து அவர்களுக்கு முன்னால் நிற்கும் முன்னணிப் படையாக செயல்படும். அது சர்வதேச கட்சியாக செயல்படும்.

வர்க்கப் போராட்டத்தின் விளைவும் வெளிப்பாடும்தான் அரசியல் கட்சிகளின் தோற்றம். ஒரு வர்க்கத்தில் உள்ள செயல்திறன் உள்ள பிரதிநிதிகள் உணர்வுபூர்வமாக கூடி, கோட்பாட்டின் அடிப்படையில் கொள்கைகளையும் இலட்சியங்களை வென்று, சமூக மாற்றத்தை புரட்சியின் மூலம் சாதிப்பதற்காக கட்சி உருவாக்கப்படுகிறது. வர்க்கங்களின் விரிவான லட்சிய ரீதியான போராட்டங்கள் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்றன.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஆகியோரின் தத்துவ வெளிச்சத்தில் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து  சர்வதேச, ரஷிய தொழிலாளர் இயக்கங்களின் அனுபவங்களை கணக்கில் கொண்டு புரட்சிகரமான தொழிலாளர் கட்சிக்கு மாபெரும் தலைவர் லெனின் ஆக்கபூர்வமான வடிவத்தைக் கொடுத்தார்.

புரட்சிகரமான கட்சியானது தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு எல்லா வகைகளிலும் தயார் செய்வதாகும்,  பாட்டாளி வர்க்க கட்சி புரட்சியை நடத்த போதுமான செயல்திட்டமும் அதற்கான நடைமுறையும் கொண்டதாக இருக்கும். மக்களுடன் இணைந்து அவர்களுக்கு முன்னால் நிற்கும் முன்னணிப் படையாக செயல்படும். அது சர்வதேச கட்சியாக செயல்படும்.

அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கு, அமைப்பு என்பதைத் தவிர பாட்டாளி வர்க்கத்துக்கு வேறு எந்த ஆயுதமும் இல்லை என்றார் லெனின்.

கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் அரசியல் ரீதியான உணர்வு பெற்ற வளர்ச்சியடைந்த பிரிவாகும், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை ஆகும். முன்னணி படையின் வலிமை, அதில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமானதாகும் என்று திட்டவட்டமாக வரையறுத்தார் லெனின்.

சந்தர்ப்பவாத சக்திகளால் மாசுபட்டு விடுவதைவிட புரட்சிகர கட்சிக்கு ஆபத்தானது வேறு எதுவும் இல்லை.

“உழைக்கும் மக்களுக்கு அவர்களுக்கென ஒரு கட்சி தேவையா?” என்ற  கட்டுரை ஸ்தாபன கோட்பாடு பற்றி தெளிவான  புரிதலை உருவாக்குகிறது. மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கத்திற்கு சுதந்திரமான கட்சி தேவை என்பதை வலியுறுத்தி வந்துள்ளனர். பாட்டாளி வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற வேண்டுமானால் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு கட்சி தேவை  என்பதை புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

தேவையான அரசியல் தலைமை வானிலிருந்து விழுவதில்லை, அல்லது எவரும் தானமாக அளிப்பது இல்லை,  முதலாளித்துவ வர்க்கத்தை சமாளிக்க வேண்டுமானால் பாட்டாளி வர்க்கம் அரசியல் தலைவர்களை உருவாக்கிக் கொண்டு தேவையான பயிற்சியை அளிக்க வேண்டும். அத்தகைய தலைமை எந்த விதத்திலும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு குறைந்ததாக இருந்துவிடக்கூடாது என்று லெனின் கூறுகிறார்.

கட்சியின் ஒற்றுமை நிலவுவதற்கு திட்டம் மற்றும் தந்திரோபாயங்கள் ஆகியவற்றில் உடன்பாடு அவசியமாகும், தத்துவார்த்த ஒற்றுமை மட்டும் கட்சி போர்க்குணத்துடன் செயல்பட போதாது. அமைப்புரீதியான ஒற்றுமை அவசியமானது.

புதிய கட்சி எவரை உறுப்பினராக சேர்க்கும்? என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை,  ஊழியர்களின் கட்டமைப்பு வாழ்க்கையைப் பற்றி தெளிவான பார்வையை நமக்கு வழங்குகிறது. நம்மை நாமே முன்னணிப் படை என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது, மற்றவர்கள் நம்மை முன்னணிப் படை என சொல்லும் வகையில் நமது நடவடிக்கை அமைய வேண்டும். நாம் முன்னே செல்வதை மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவாத சக்திகளால் மாசுபட்டு விடுவதைவிட புரட்சிகர கட்சிக்கு ஆபத்தானது வேறு எதுவும் இல்லை. தோல்விகள், பின்னடைவுகள், தவறுகள், உழைக்கும் மக்கள் கட்சியின் குறைபாடுகள் ஆகிய தீங்குகள்  எதனால் ஏற்படுகின்றன? கட்சி கட்டுக்கோப்பு இல்லாமல் இருப்பதும், மார்க்சிய லெனினிய சிந்தனையின் மீது உறுதியான நம்பிக்கையற்றவர்கள், புரட்சிகர கருத்துக்கள் இல்லாதவர்கள், கட்டுப்பாடு இல்லாதவர்கள் கட்சியில் அங்கம் வகிப்பதும், அத்தகைய நபர்கள் சில சமயங்களில் கட்சிக்கு எதிராக இருப்பதும் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட காரணமாக இருக்கிறது.

கட்சி தனது உறுப்பினர்களின் தரம்,  தூய்மை ஆகியவற்றின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு கண்காணிப்பை செய்து வருகிறது  என்பதைப் பொருத்து, அமைப்பின் தரம் உயரும். போராடும் சக்தி பெருகும், அப்போதுதான் கட்சி மக்களின் தலைவனாக செல்வாக்கை செலுத்த முடியும்.

உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால்தான், கட்சி சிறப்பாக இருக்கும் என்றும், கட்சிக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியவர் அனைவரும் உறுப்பினர் ஆகலாம் என்றும் சந்தர்ப்பவாதிகள் கூறினர். ஆனால், கொள்கை கோட்பாடுகளின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள், தன்னல மறுப்பாளர்கள், சுய லாபத்தை மறுப்பவர்கள் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று லெனின் கூறினார்.

கட்சி நடத்தும் போராட்டத்தின் வெற்றி கட்சி உறுப்பினர்களின் தூய்மையை பொறுத்தே அமைகிறது. புதிதாக கட்சி அமைப்பில் சேருபவர்கள் உடைய கல்வியறிவு பற்றி கட்சி மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

மத்தியத்துவம் இல்லாத ஜனநாயகம் கட்சி அமைப்பை ஒரு ஒழுங்கற்ற, இணைந்து செயல்படாத, உட்கட்சி ஒற்றுமை இல்லாத அமைப்பாக மாற்றிவிடும். மாறாக  மத்தியத்துவம் மட்டுமே பின்பற்றபடுமானால்  கட்சி மக்களிடம் இருந்து விலகிப் போய்விடும். குறிப்பிட்ட குழுவின் ஆதிக்க சக்தியாக மாறிவிடும். தங்களது அனுபவத்தையும்,  அறிவையும் கட்சி அணிகள் அளிக்க முடியாது.

பொதுவுடமைக் கட்சி புரட்சிகர மாற்றத்திற்காக போராடும் கட்சி, மாற்றத்தை வேகமாக கொண்டுவர இளைஞர்கள் தேவை. இளைஞர்களை வென்றெடுப்பது கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். “நாம் எதிர்காலத்தின் கட்சி, வருங்காலம் இளைஞர்கள் உடையது, நாம் புதுமையைப் புகுத்தும் கட்சியினர். இளைஞர்கள் புதுமையைப் பெரும் ஆர்வத்துடன் பின்பற்றுவார்கள்,” என்றார் மாமேதை லெனின்.

மார்க்சிய லெனினிய கட்சியின் வழிகாட்டியாக இருப்பது ஜனநாயக மத்தியத்துவம். ஜனநாயக மத்தியத்துவம் என்பது அமைப்பு ரீதியான கொள்கை ஆகும். கட்சியின் உயிர்மூச்சு என்பது இரண்டு அமைப்பியல் கொள்கைகளைக் கொண்டது; உட்கட்சி ஜனநாயகம், மத்தியபடுத்தப்பட்ட தலைமை.

முழுமையான சுதந்திரமான  விவாதத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட கூட்டு முடிவுகளின் அடிப்படையில் கட்சி உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். செயலில் ஒற்றுமை, விமர்சன சுதந்திரம் ஆகியவற்றை இணைக்கும் கோட்பாடு ஜனநாயக மத்தியத்துவம். இதன் முறையில் விவாத சுதந்திரம்- விமர்சன சுதந்திரம்- செயல் ஒற்றுமை உடன் இணைக்கப்படுகின்றன.

படிக்க :
♦ மூவர் கும்பலின் வலது விலகலை எதிர்ப்போம் || தோழர் ஸ்டாலின்
♦ கட்சி நிறுவனக் கோட்பாடுகள்

கீழ்அமைப்புகள் மேல் அமைப்புகளை தேர்வு செய்கின்றன, மேல் அமைப்புகளுக்கு கட்டுப்படுகின்றன, பெரும்பான்மையோர் முடிவுக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும். விவாதிப்பதற்கும் விமர்சனம் செய்வதற்கும் சுதந்திரம் இல்லாத செயல் ஒற்றுமை சாத்தியமில்லை.

மத்தியத்துவம் இல்லாத ஜனநாயகம் கட்சி அமைப்பை ஒரு ஒழுங்கற்ற, இணைந்து செயல்படாத, உட்கட்சி ஒற்றுமை இல்லாத அமைப்பாக மாற்றிவிடும். மாறாக  மத்தியத்துவம் மட்டுமே பின்பற்றபடுமானால்  கட்சி மக்களிடம் இருந்து விலகிப் போய்விடும். குறிப்பிட்ட குழுவின் ஆதிக்க சக்தியாக மாறிவிடும். தங்களது அனுபவத்தையும்,  அறிவையும் கட்சி அணிகள் அளிக்க முடியாது.

சோவியத் யூனியன், மற்றும் உலக நாடுகளின் பொதுவுடமை இயக்கத்தின் அனுபவங்கள் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே மார்க்சிய லெனினிய கட்சியை கட்டமுடியும் என்று நிரூபணமாகியுள்ளது.

உலகின் பல நாடுகளில் இயங்கும் பொதுவுடமை கட்சிகளின் ஸ்தாபன அமைப்பு பற்றி இந்த நூலில் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. மனிதகுல விடுதலைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமே மார்க்சிய லெனினிய தத்துவ ஞானம். இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிகளின் தலைமையில் சமத்துவ விடியலை காண்பதற்கு வலிமையான போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்க கட்சி அமைப்பு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.

சோர்வை அகற்றி,  புத்துணர்வு பெற்று சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் ஊக்கமுடன் களமாட, கட்சி ஸ்தாபன கோட்பாடுகள் பற்றி தெளிவான புரிதல், முன் எப்போதையும்விட இப்போது தேவையாக இருக்கிறது. அறிந்த விஷயங்களாக இருந்தபோதும் மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு அவசியமாகிறது.  கட்சியைப் பற்றிய புரிதலை உருவாக்க இந்த நூல் பெரிதும் பயன்படும்.

நூல் : உழைக்கும் மக்களின் முன்னணிப் படை
பதிப்பகம் : அலைகள் வெளியீட்டகம்
ஆசிரியர் : ஏ. ஷாஜின்
தமிழில்: வி. என். ராகவன்
விலை : ரூ. 30
இணையதளத்தில் வாங்க இங்கே அழுத்தவும்

நூல் அறிமுகம் : எஸ் காமராஜ்
மாநிலத் துணைச் செயலாளர் – அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம், ஆலோசகர் – தேசிய தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க