கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள்

– தோழர் ஸ்டாலின்

முந்தைய பாகங்கள் : 1  2

பாகம் – 3 

இ) வலது விலகலுக்கு எதிரான போராட்டம்

அரசியல் தலைமைக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் “குடிமை அழிப்புக்கு” உள்ளாக்கப்பட்டுள்ளது குறித்து இங்கு புகாரின் பேசினார். அவர் கூறுகிறார்: ”அவர்கள் நமது கட்சியின் அமைப்புகளால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார்கள்”. அரசியல் தலைமைக் குழுவின் மூன்று உறுப்பினர்களை – புகாரின், ரைகோவ் மற்றும் டாம்ஸ்கி ஆகியோரை – கட்சியானது அவர்களுடைய தவறுகளுக்காக ஊடகங்களிலும் கூட்டங்களிலும் விமர்சித்து “குடிமை அழிப்புக்கு” உள்ளாக்கியிருந்தது, அதேவேளையில் அரசியல் தலைமைக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் அமைதியாக இருக்க “நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்” என்று அவர் கூறினார்.

இதெல்லாம் முட்டாள்தனம், தோழர்களே. அவை தாராளவாதியாகிவிட்ட கம்யூனிஸ்டின் தவறான சொற்கள் ஆகும். அவர் வலது விலகலை எதிர்த்த கட்சியின் போராட்டத்தில் கட்சியைப் பலவீனப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறார். புகாரினின் கருத்துப்படி, அவரும் அவரது நண்பர்களும் வலது விலகல் தவறுகளால் சூழப்பட்டிருக்கிறார்கள் என்றால், கட்சிக்கு அவர்களை அம்பலப்படுத்த உரிமை இல்லை, கட்சி வலது விலகலை எதிர்த்துப் போராடுவதை நிறுத்த வேண்டும், புகாரினும் அவரது நண்பர்களும் தங்கள் தவறுகளைக் கைவிடும்வரை காத்திருக்க வேண்டும். புகாரின் நம்மிடம் அளவுக்கு மிகுதியாகக் கோரவில்லையா? கட்சி அவருக்காகத்தான் இருக்கிறது, அவர் கட்சிக்காக இல்லை என்ற எண்ணத்தில் அவர் இல்லையா?

அவரை அமைதியாக இருக்கச் சொல்லி யார் நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறார்கள், கட்சி முழுவதும் வலது விலகலுக்கு எதிராக அணி திரட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இடர்ப்பாடுகளை எதிர்த்துத் தீர்மானகரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் போது, செயலற்ற நிலையில் இருக்குமாறு யார் நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்? புகாரினும் அவரது நெருங்கிய நண்பர்களும் வலது விலகலுக்கு எதிரான தீர்மானகரமான போராட்டத்தில் ஈடுபட முன்வராமல் அதனுடன் சமரசம் செய்து கொள்வது ஏன்? புகாரினும் அவரது நண்பர்களும் இந்த மிகவும் கடினமான பணியை மேற்கொள்ள முடிவு செய்தால் கட்சி வரவேற்கும் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்க முடியுமா? இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு அவர்கள் ஏன் முடிவு செய்யவில்லை, அது அவர்களுடைய கடமையல்லவா?

அவர்கள் கட்சியின் நலன்களை விடவும் அதன் பொது திசைவழியை விடவும் மேலாகத் தங்களுடைய குழுவின் நலன்களை முன்வைக்கிறார்கள் என்பதுதான் காரணம், இல்லையா? வலது விலகலை எதிர்த்த போராட்டத்தில் புகாரின், ரைகோவ், டாம்ஸ்கி ஆகியோர் இல்லை என்பது யாருடைய தவறு? அரசியல் தலைமைக் குழுவின் மூன்று உறுப்பினர்களின் ”குடிமை அழிப்பு” பற்றிய பேச்சு, அரசியல் தலைமைக் குழுவின் அந்த மூன்று உறுப்பினர்கள் தரப்பில், அமைதிகாக்கவும், வலது விலகலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தவும் கட்சி நிர்ப்பந்திக்கப்படுவதை மோசமான முறையில் மறைக்கும் முயற்சி என்பது தெளிவாகத் தெரியவில்லையா?

வலது விலகலுக்கு எதிரான போராட்டம் நமது கட்சியின் இரண்டாம்பட்சமான பணியாகக் கருதப்படக் கூடாது. வலது விலகலுக்கு எதிரான போராட்டம் நமது மிகவும் தீர்மானகரமான பணிகளில் ஒன்றாகும். இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும், பாட்டாளி வர்க்கத்தை முன்னோக்கி வழிநடத்திக் கொண்டிருக்கும் நமது அணிகளிடையே, நமது சொந்தக் கட்சியில், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் முன்னணிப் படையில் – இந்த முன்னணிப் படையில், கட்சியைச் சீர்குலைக்கவும், தொழிலாளர் வர்க்கத்தின் உள உறுதியைச் சிதைக்கவும், ”சோவியத்” முதலாளி வர்க்கத்துக்கு ஏற்ப நமது கொள்கையைத் தகவமைக்கவும், அதன் மூலம் நமது சோசலிசக் கட்டுமானத்தின் இடையூறுகளுக்கு அடிபணியவும் முயற்சி செய்து கொண்டிருக்கும் வலது விலகல்காரர்களின் சுதந்திரமான இருத்தலையும் சுதந்திரமான செயல்பாட்டையும் அனுமதிக்க வேண்டுமானால், – இது அனைத்தையும் அனுமதிக்க வேண்டுமானால் அதன் பொருள் என்ன?

புரட்சிக்கு முட்டுக்கட்டை போடத் தயாராக இருக்கிறோம், நமது சோசலிசக் கட்டுமானத்தை ஊடறுக்கவும், இடர்ப்பாடுகளைக் கண்டு ஓடிவிடவும், முதலாளித்துவ சக்திகளிடம் நமது நிலைகளைச் சரணாகதியடையச் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்று இதற்குப் பொருளாகாதா?

வலது விலகலை எதிர்த்துப் போராட மறுப்பது தொழிலாளர் வர்க்கத்திற்கு, புரட்சிக்குத் துரோகமிழைப்பதாகும் என்பதைப் புகாரினின் குழு புரிந்து கொள்கிறதா?

வலது விலகலையும் அதன்பாலான சமரசப் போக்கையும் எதிர்த்து நாம் வெற்றி பெறவில்லை என்றால், நம்மை எதிர்கொண்டுள்ள இடர்ப்பாடுகளை அகற்றுவது என்பது சாத்தியமாகாது என்பதையும், இந்த இடர்ப்பாடுகளை அகற்றாமல் சோசலிசக் கட்டுமானத்தில் தீர்மானகரமான வெற்றியை அடைவது சாத்தியமில்லை என்பதையும் புகாரின் குழு புரிந்து கொள்கிறதா?

இதன் காரணமாக, அரசியல் தலைமைக் குழுவின் மூன்று உறுப்பினர்களின் “குடிமை அழிப்பு” பற்றிய பரிதாபகரமான பேச்சுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?

இல்லை, தோழர்களே, புகாரினியர்கள் “குடிமை அழிப்பு” பற்றிய தாராளவாதப் பேச்சின் மூலம் கட்சியை அச்சுறுத்த மாட்டார்கள்.

அவர்கள் வலது விலகலுக்கு எதிராகவும் அதனுடனான சமரசத்திற்கு எதிராகவும் நமது கட்சியின் மத்தியக் குழுவின் உறுப்பினர்கள் அனைவருடனும் தோளோடு தோள் சேர்ந்து ஒரு தீர்மானகரமான போராட்டத்தை நடத்த வேண்டும் என்று கட்சி கோருகிறது. தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டவும், வர்க்க எதிரிகளின் எதிர்ப்பை முறியடிக்கவும், நமது சோசலிசக் கட்டுமானத்தின் இடர்ப்பாடுகளின் மீது தீர்மானகரமான வெற்றியை ஒருங்கிணைக்கவும் உதவுமாறு புகாரின் குழுவிடம் கட்சி கோருகிறது.

புகாரினியர்கள் கட்சியின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், அந்த நேர்வில் கட்சி அவர்களை வரவேற்கும், அல்லது அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்றால், அந்த நேர்வில் அவர்கள் தங்களைத்தான் குற்றம் சாட்டிக்கொள்ள வேண்டும்.

முடிவுகள்:

நான் முடிவுகளுக்கு வருகிறேன். நான் பின்வரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கிறேன்.

1) நாம் முதலில் புகாரின் குழுவின் கருத்துகளைக் கண்டிக்க வேண்டும். அந்தக் குழுவின் அறிவிப்புகளிலும் அதன் பிரதிநிதிகளின் பேச்சுகளிலும் வெளிப்படுத்தப்படுகிற அவர்களுடைய கருத்துகளைக் கண்டிக்க வேண்டும். மேலும் இந்தக் கருத்துகள் கட்சியின் திசைவழிக்குப் பொருத்தமற்றவையாகவும் வலது விலகலின் நிலையுடன் முழுமையாகப் பொருந்திப் போவதாகவும் இருக்கின்றன என்று தெரிவிக்க வேண்டும்.

2) புகாரின் குழுவின் விசுவாசமின்மை மற்றும் குழுவாதம் ஆகியவற்றின் மிகவும் அப்பட்டமான வெளிப்பாடாக புகாரின் குழுவின் காமனேவின் குழுவுடனான இரகசியப் பேச்சு வார்த்தைகளை நாம் கண்டிக்க வேண்டும்.

3) புகாரின் மற்றும் டாம்ஸ்கியால் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சரணடைவுக் கொள்கையை கட்சிக் கட்டுப்பாட்டின் தொடக்கநிலை தேவைகளை முழுமையாக மீறுவதாகும் என்று கண்டிக்க வேண்டும்.

4) புகாரினும் டாம்ஸ்கியும் அவர்களுடைய பதவிகளிலிருந்து அகற்றப்பட வேண்டும், மேலும் மத்தியக் குழுவின் முடிவுகளுக்குச் சிறிய அளவிலான கீழ்ப்படியாமை நேர்விலும் கூட எச்சரிக்கப்பட வேண்டும், மத்தியக் குழு அவர்கள் இருவரையும் அரசியல் தலைமைக் குழுவிலிருந்து விலக்கிவைக்க நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.

5) அரசியல் தலைமைக் குழுவின் உறுப்பினர்களும் தேர்வுநிலை உறுப்பினர்களும் பொதுவெளியில் பேசும்போது, கட்சியின் திசை வழியிலிருந்தும் மத்தியக் குழுவின் அல்லது அதன் அமைப்புகளின் முடிவுகளிலிருந்தும் எந்த வகையிலும் விலகிச் செல்வதையும் தடை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.

6) கட்சி மற்றும் சோவியத்தின் ஊடக அமைப்பு இதழ்கள், செய்தித்தாள்கள், மற்றும் சஞ்சிகைகள் ஆகிய கட்சியின் திசை வழியையும் அதன் முன்னணி அமைப்புகளின் முடிவுகளையும் முழுமையாக உறுதிப்படுத்தும் வகையிலும் நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

7) கட்சி மற்றும் அதன் மத்தியக் குழு மற்றும் அரசியல் தலைமைக் குழுவின் முடிவுகளின் இரகசியத் தன்மையை மீறுவதற்கு முயற்சி செய்யும் நபர்களுக்கான சிறப்பு விதிகளை, அவர்களை மத்தியக் குழுவிலிருந்தும் கட்சியிலிருந்தும் கூட வெளியேற்றுவது உள்ளிட்ட சிறப்பு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

8) உட்கட்சி பிரச்சினைகள் தொடர்பான, மத்தியக் குழு மற்றும் மத்தியக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கூட்டு முழு அமர்வுக் கூட்டத்தின் தீர்மானத்தின் பிரதியை, தற்போதைக்கு ஊடகத்தில் வெளியிடாமல், கட்சியின் அனைத்து வட்டார அமைப்புகளுக்கும், பதினாறாவது  கட்சி மாநாட்டின் பிரதிநிதிகளுக்கும் நாம் விநியோகிக்க வேண்டும்.

படிக்க :
♦ பு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி
♦ கட்சியிலிருக்கும் வலதுசாரி ‘பிக்பாக்கெட்’டுகளிடம் எச்சரிக்கை தேவை !

எனது கருத்துப்படி, இதுதான் இந்தச் சூழ்நிலையிலிருந்து வெளிவருவதற்கான வழியாகும்.

புகாரினும் டாம்ஸ்கியும் மத்தியக் குழுவின் அரசியல் தலைமைக் குழுவிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று சில தோழர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்தத் தோழர்களுடன் நான் உடன்படவில்லை. எனது கருத்துப்படி, தற்போதைக்கு அத்தகைய தீவிரமான நடவடிக்கைக்குப் போகாமல் இருக்கலாம்.

(முற்றும்)

நூல் : ஸ்டாலின் தொகுப்பு நூல் 12
கிடைக்குமிடம் :
அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
தொடர்புக்கு : 98417 75112

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க