கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள்

– தோழர் ஸ்டாலின்

கட்சியின் பொது திசைவழியை மடைமாற்றி கட்சிக்குள்ளேயே கட்சிக்கு எதிரான குழு அமைத்து செயல்படும் வலது சந்தர்ப்பவாதத்தை தோழர் ஸ்டாலின் அம்பலப்படுத்துகிறார்.

கட்சியின் பொதுத் திசைவழிக்கு எதிரான போக்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் புகாரின் தலைமையிலான வலதுசாரிக் கும்பல் மறைமுகமாக கொண்டுவருகிறது. புகாரின் குழுவின் இத்தகையப் போக்கு குறித்து விவாதிப்பதற்கு மத்தியக் குழு மற்றும் மத்தியக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முழு அமர்வு கூடுகிறது. அதில் தோழர் ஸ்டாலின், புகாரின் கும்பலின் வலதுசாரி போக்கை கீழ்கண்ட மூன்று தலைப்புகளில் அம்பலப்படுத்துகிறார். 

அ) புகாரின் குழுவின் குழுவாதம்
ஆ) விசுவாசமும் கூட்டுத் தலைமையும்
இ) வலது விலகலுக்கு எதிரான போராட்டம்

கட்சியின் நன்மைக்காக என்ற பெயரிலும், ஜனநாயகம் என்ற பெயரிலும் கமுக்கமாக கட்சிக்குள் கொண்டுவரப்படும் வலதுசாரிப் போக்கின் தன்மை குறித்து இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

– வினவு

0o0o0

கோட்பாட்டு அரங்கிலும், கம்யூனிஸ்டு அகிலத்தின் கொள்கை அரங்கிலும், நமது கட்சியின் உட்கட்சிக் கொள்கை அரங்கிலும் நமது கருத்து வேறுபாடுகள் தொடர்பான முதன்மையான பிரச்சினைகள் அனைத்தையும் இவ்விதமாக நாம் மதிப்பீடு செய்துள்ளோம். இதுவரை சொல்லப்பட்டதிலிருந்து ஒரே திசைவழி இருப்பது பற்றிய ரைகோவின் அறிக்கை உண்மையான நிலைமைகளுக்குப் பொருந்திப் போகாது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுவரை சொல்லப்பட்டதிலிருந்து உண்மையில் நமக்கு இரண்டு திசைவழிகள் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு வழி கட்சியின் பொது திசை வழி. அதாவது, நமது கட்சியின் புரட்சிகர லெனினிய வழியாகும். இன்னொரு வழி புகாரின் குழுவின் வழியாகும்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
♦ தன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்

பகுதியளவுக்குப் புகாரின் குழுவின் அணிகளில் நம்பமுடியாத குழப்பமான கருத்துகள் இருப்பதாலும், பகுதியளவுக்கு இந்த இரண்டாவது வழி கட்சியில் சிறிதும் முக்கியத்துவமற்றதாக இருப்பதாலும் இந்த இரண்டாவது வழி இன்னும் முழுமையாகக் கெட்டிப்படவில்லை, அது தன்னை ஏதாவதொரு வழியில் மறைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது. இருந்தபோதிலும், நீங்கள் பார்த்தபடி, இந்த வழி நிலவுகிறது. மேலும் அது கட்சி வழியிலிருந்து தனித்த ஒரு வழியாக நிலவுகிறது. நமது கொள்கையின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் கட்சியின் பொதுவழிக்கு எதிரான ஒரு வழியாக நிலவுகிறது. இந்த இரண்டாவது வழி வலது விலகல் வழியாகும்.

இப்போது நாம் கட்சித் தலைமை குறித்த பிரச்சினைக்குச் செல்வோம்.

அ) புகாரின் குழுவின் குழுவாதம்

நமது கட்சிக்குள் எந்த எதிர்ப்பும் இல்லை என்றும், புகாரின் குழு ஓர் எதிர்ப்புக் குழு அல்ல என்றும் புகாரின் கூறினார். அது உண்மையல்ல, தோழர்களே. புகாரின் குழுவில் ஒரு புதிய எதிர்ப்பு அடங்கியுள்ளது என்பதை முழு அமர்வுக் கூட்டத்தில் நடந்த விவாதம் மிகவும் தெளிவாகக் காட்டியது. இந்தக் குழுவின் எதிர்ப்பு வேலையில் கட்சி வழியைத் திருத்தும் முயற்சிகள் இருக்கின்றன; அது கட்சி வழியைத் திருத்தி, கட்சி வழிக்குப் பதிலாக வேறொரு வழியைக் கொண்டு வருவதற்கான அடித்தளத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது, அது வலது விலகல் வழியைத் தவிர வேறு எந்த வழியாகவும் இருக்க முடியாது.

மூவர் குழு ஓர் உட்கட்சிக் குழுவாக அமையாது என்று கூறினார். அது உண்மையல்ல, தோழர்களே. புகாரின் குழுவுக்கு ஓர் உட்கட்சிக் குழுவுக்கான அனைத்துப் பண்புகளும் இருக்கின்றன. அதற்குக் கொள்கை இருக்கிறது, உட்கட்சிக் குழுவுக்கான இரகசியம் இருக்கிறது, விலகிச் செல்லும் கொள்கை இருக்கிறது, மத்தியக் குழுவுக்கு எதிராக அமைப்பாக்கப்பட்ட போராட்டம் இருக்கிறது. வேறு என்ன தேவை? புகாரின் குழுவின் உட்கட்சிக் குழுவியத்தைப் பற்றிய உண்மையை, அது தானாகத் தெரியும் நிலையில் ஏன் மறைக்க வேண்டும்? மத்தியக் குழு மற்றும் மத்தியக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முழு அமர்வுக் கூட்டம் கூடியதற்கான காரணமே கருத்துவேறுபாடுகள் பற்றிய அனைத்து உண்மையையும் இங்கு சொல்வதற்குத்தான். புகாரின் குழு ஓர் உட்கட்சிக் குழு என்பதுதான் உண்மை. மேலும் அது வெறுமனே ஓர் உட்கட்சிக் குழு மட்டுமல்ல, மாறாக, நமது கட்சியில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு அனைத்து உட்கட்சிக் குழுக்களிலும் மிகுந்த வெறுப்புணர்வு கொண்டதும் அற்பமானதும் ஆகும் என்று  நான் கூறுவேன்.

அது இப்போது அதன் உட்கட்சிக் குழு குறிக்கோள்களுக்கு, அட்ஜாரியா இடையூறுகளைப் போன்ற ஒரு முக்கியத்துவமற்றதும் அற்பமானதுமான விவகாரத்தைப் பயன்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்ற உண்மையிலிருந்து அது சான்றாகத் தெரிகிறது. உண்மையில், அட்ஜாரியாவில் ”கலகம்” என்று அழைக்கப்பட்டதை கிரான்ஸ்டாட் கலகத்துடன் ஒப்பிடக் கூடிய அளவுக்கு இருக்குமா? அட்ஜாரியாவில் ”கலகம்” என்று அழைக்கப்பட்டதுடன் இதை ஒப்பிடுகையில் அது கடலில் ஒரு துளி கூட இல்லை என்று நான் நம்புகிறேன்.

கிரான்ஸ்டாட்டில் நிகழ்ந்த தீவிரமான கலகத்தை டிராட்ஸ்கியர்கள் அல்லது ஜினோவியேவியர்கள் மத்தியக் குழுவை, கட்சியை, எதிர்த்துப் போராடுவதற்குப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட நிகழ்வுகள் ஏதாவது இருந்தனவா? அத்தகைய நிகழ்வுகள் எவையும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் தோழர்களே. அதற்கு மாறாக, அந்தத் தீவிரமான கலகத்தின்போது, நமது கட்சியில் இருந்த எதிர்ப்புக் குழுக்கள் அதை நசுக்குவதில் கட்சிக்கு உதவின. மேலும் அதைக் கட்சிக்கு எதிராகப் பயன்படுத்துவதற்குத் துணியவில்லை .

நல்லது, புகாரின் குழு இப்போது எப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது? அது அட்ஜாரியாவில் நடந்த மிகமிகச் சிறிய “கலகத்தை” கட்சிக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்வதற்கு மிகவும் அற்பமானதும் மிகவும் தாக்குதல்தன்மை கொண்டதுமான முறையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு உங்களிடம் ஏற்கெனவே சான்று இருந்தது. இது உட்கட்சிக் குழு குருட்டுத்தனத்தின் மற்றும் உட்கட்சிச் சிதைவின் மோசமான அளவி இல்லையென்றால் வேறு என்ன?

முதலாளித்துவ நாடுகளுடன் பொது எல்லைகளைக் கொண்ட நமது எல்லைப் பகுதிகளில் எந்தத் தொல்லைகளும் ஏற்படக் கூடாது என்று நம்மிடம் கோரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்ததாகும். நமது சமுதாயத்தின் அனைத்து வர்க்கங்களையும், ஏழைகளையும் பணக்காரர்களையும், தொழிலாளர்களையும் முதலாளிகளையும் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என்று நம்மிடம் கோரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிந்ததாகும். அதிருப்தியுற்ற சக்திகள் எவையும் இருக்கக் கூடாது என்று நம்மிடம் கோரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் தெளிவாகும். புகாரின் குழுவில் உள்ள இந்தத் தோழர்களுக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டதா?

நமது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் முதலாளித்துவ உலகிற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்களாகிய நம்மிடம், நமது நாட்டில் அதிருப்தியுற்ற சக்திகள் எவையும் இருக்கக் கூடாது என்றும், நம்முடன் பகைமைகளில் நிகழும் எந்தத் தொல்லைகளும் இருக்கக் கூடாது என்றும் எவராவது கோர முடியுமா?

சர்வதேச மூலதனம் நமது எல்லைப் பகுதிகளில் அதிருப்தியுற்ற சக்திகளை சோவியத் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்கும் அதன் முயற்சிகள் அனைத்தையும் பயன்படுத்தவில்லை எனில், வேறு என்ன நோக்கத்திற்காக முதலாளித்துவச் சுற்றி வளைப்பு அங்கு இருக்கிறது? மூளையற்ற தாராளவாதிகள் தவிர அத்தகைய சில நேரங்களில் மனிதர்களிடம் வகைமாதிரியான தாராளவாதக் குருட்டுத்தனத்தையும் குறுகியமனம் கொண்ட தன்மையையும் உருவாக்கிட முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லையா?

(தொடரும்)

நூல் : ஸ்டாலின் தொகுப்பு நூல் 12
கிடைக்குமிடம் :
அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
தொடர்ப்புக்கு : 98417 75112

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க