எட்டாவது மத்தியக் குழுவின் பதினொன்றாவது பிளீனக் கூட்டத்தின் நிறைவு விழாவில் ஆற்றிய உரை(ஆகஸ்டு 12, 1966)

முந்தைய பகுதிக்கு

பாகம் – 2

4. மாபெரும் பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சியில் மக்களுக்கு உள்ள ஒரே வழி தம்மைத் தாமே விடுதலை செய்து கொள்வதுதான்; இதைத் தவிர வேறு ஏதாவது சொந்த வழிகளைக் கண்டுபிடித்து இயங்கலாம் என்ற அணுகுமுறை கூடவே கூடாது.

மக்களை நம்புங்கள், அவர்களைச் சார்ந்திருங்கள், அவர்களது முயற்சிகளுக்கு மதிப்புக் கொடுங்கள். அச்சத்தை தூக்கி எறியுங்கள். குழப்பம் கண்டு அஞ்சாதீர்கள். தலைவர் மாவோ அடிக்கடி கூறுவார், “புரட்சி என்பது ரொம்பவும் பக்குவப்பட்டதாகவோ, அன்புடனோ, கருணையுடனோ, கட்டுப்படுத்தப்பட்டதாகவோ, பெருந்தன்மையுடையதாகவோ இருக்க முடியாது”. இந்த மகத்தான புரட்சிகர இயக்கத்தில் மக்கள் தமக்குத்தாமே கற்பித்துக் கொள்வார்களாக, சரியானது எது, தவறானது எது என்பதைப் பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொள்வார்களாக, சரியான வழியில் செயல்படுவதற்கும் தவறான வழியில் செயல்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வார்களாக.

விசயங்களை விவாதிக்க கொட்டை எழுத்து சுவரொட்டிகளையும் மகத்தான விவாதங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இவ்வழியில்தான் மக்கள் சரியான பார்வையைப் புரிந்துகொள்ள முடியும், தவறான பார்வைகளை விமர்சனம் செய்ய முடியும், பேய்களையும், பூதங்களையும் அம்பலப்படுத்த முடியும். இந்த வழியில்தான் போராட்டத்தின் போக்கில் மக்கள் தமது அரசியல் உணர்வை மேலும் உயர்த்திக் கொள்ள முடியும், தமது தகுதி திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும், சரி எது தவறு எது என்பதைப் புரிந்து கொள்ளவும் நமக்கும் எதிரிக்கும் இடையேயான கோட்டை வரையறுக்கவும் முடியும்.

5. நமது எதிரிகள் யார்? நமது நண்பர்கள் யார்? புரட்சிக்கு முதலும் முக்கியமும் ஆன கேள்வி இது. மாபெரும் கலாச்சாரப் புரட்சிக்கும் இதுவே முதலும் முக்கியமும் ஆன கேள்வி ஆகும்.

இடதுசாரிகளைக் கண்டுபிடிப்பதிலும் அவர்களை வளர்த்து வலுப்படுத்துவதிலும் கட்சித் தலைமை திறம்பட செயல்பட வேண்டும், புரட்சிகர இடதுசாரிகளை உறுதியுடன் சார்ந்திருக்க வேண்டும். கலாச்சாரப் புரட்சி இயக்கத்தின்போது மிக மோசமான பிற்போக்கு வலதுசாரிகளை முற்றிலுமாகத் தனிமைப்படுத்தவும், நடுநிலையாளர்களை வென்றெடுக்கவும், ஆகப் பெரும்பான்மையினரோடு ஒன்றுபட்டிருக்கவும் இதுவே ஒரே வழி,  இந்த வழியில் செல்வதன் மூலமே இந்த இயக்கத்தின் முடிவில் மக்கள் திரளின் 95 விழுக்காட்டினருக்கும் அதிகமானோரை நாம் ஒன்றுபடுத்த முடியும்.

கையளவே இருக்கின்ற அதிதீவிர பிற்போக்கு முதலாளித்துவ வலதுசாரிகளையும் எதிர்ப்புரட்சி தீவிரவாதிகளையும் தாக்கும் பொருட்டு அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டுங்கள், கட்சிக்கும் சோசலிசத்துக்கும் மாசேதுங் சிந்தனைகளுக்கும் எதிரான அவர்களது குற்றங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அம்பலப்படுத்தி விமர்சனம் செய்து இயன்ற வரையில் அவர்களைத் தனிமைப்படுத்துங்கள். இன்றைய இயக்கத்தின் முக்கிய இலக்கே கட்சிக்குள் இருந்து கொண்டு அதிகாரத்தையும் கைப்பற்றி முதலாளித்துவப் பாதையைக் கையிலெடுத்த சக்திகள்தான்.

கட்சி விரோத, சோசலிச விரோத வலதுசாரிகளுக்கும், கட்சியையும் சோசலிசத்தையும் ஆதரிக்கின்ற ஆனால் சில தவறான செயல்களைச் செய்தவர்கள் அல்லது தவறான விசயங்களைப் பேசியவர்கள், தவறான கட்டுரைகளை எழுதியவர்களுக்கும் இடையேயான வேறுபாட்டைப் பிரித்தறிவதில் மிகுந்த கவனம் தேவை. பிற்போக்கு முதலாளித்துவ அறிவுஜீவி சர்வாதிகாரிகளுக்கும் வெறும் முதலாளித்துவ சிந்தனைகளை மட்டுமே கொண்டிருக்கின்ற சாமானிய மக்களுக்கும் இடையேயான வேறுபாட்டைப் பிரித்தறிவதில் மிகுந்த கவனம் தேவை.

படிக்க :
♦ நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் ! திரிபுவாதம் வீழ்த்தப்படட்டும் !
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

6. இரண்டு வெவ்வேறான முரண்பாடுகளுக்கிடையேயான சரியான வேறுபாட்டைப் பிரித்தறிவதில் கவனம் தேவை: மக்களுக்கிடையே நிலவும் முரண்பாடு, நமக்கும் எதிரிக்கும் இடையே நிலவும் முரண்பாடு. மக்களுக்கிடையே நிலவும் முரண்பாட்டை நமக்கும் எதிரிக்கும் இடையே ஆன முரண்பாடாக மாற்றி விடக்கூடாது; அதுபோலவே நமக்கும் எதிரிக்கும் இடையே நிலவும் முரண்பாட்டை மக்களுக்கிடையே நிலவும் முரண்பாடாகவும் அடையாளம் கண்டுவிடக் கூடாது. மக்களுக்கிடையே பல்வேறுவிதமான கருத்துகள் நிலவுவது சாதாரணமான ஒன்றே. வெவ்வேறு கருத்துகளுக்கிடையேயான மோதல்கள் தவிர்க்க முடியாதவை மட்டுமின்றி தேவையும்கூட, அதனால் நன்மைதான்.

வழக்கமான முழு அளவிலான விவாதங்களின் விளைவாக நல்லது எது, சரியானது எது, தவறானது எது என்பதைப் புரிந்து கொள்வார்கள், காலப்போக்கில் ஒருமித்த முடிவுக்கு வருவார்கள். விவாதங்களை எவ்வாறு செய்ய வேண்டும்? இருக்கின்ற சூழ்நிலையைப் புரிந்து கொள்வது, நிலைமைக்கான காரணங்களை விளக்குவது, சரியான தீர்வுகளை முன்வைத்து நியாயப்படுத்துவது, கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளவர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் அவர்கள் மீது கருத்துகளைத் திணிக்கின்ற எந்த முயற்சியையும் அனுமதிக்க முடியாது. சிறுபான்மையோரைப் பாதுகாக்க வேண்டும், ஏனெனில் சில நேரங்களில் சிறுபான்மையோர் கூறுவதிலும் உண்மை இருக்கின்றது. சிறுபான்மையோர் தவறான கருத்துகளை உடையவர்கள் என்றாலும்கூட அவர்களுக்குத் தமது கருத்துகளைப் பதிவு செய்யவும் விவாதிக்கவும் உரிமை உள்ளது.

ஒரு விவாதம் நடக்கின்றதெனில் அது சரியான காரணங்கள் சான்றுகளுடன் நடக்க வேண்டும், பலவந்தமாகவோ கூட்டுச்சதியாலோ நடக்கக் கூடாது.

விவாதங்களின்போது ஒரு புரட்சியாளன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? சரியான முறையில் சிந்தித்து அதை வெளிப்படுத்த வேண்டும், சிந்திப்பதில் துணிவு, பேசுவதில் துணிவு, செயலாற்றுவதில் துணிவு என்ற கம்யூனிஸ்ட் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். புரட்சியாளர்களின் மையமான சிந்தனை எப்போதுமே ஒன்றுபோலத்தான் இருக்கின்றது என்பதால் அவர்கள் மையப்பொருளிலிருந்து விலகி இதரப் பிரச்சினைகளை முடிவின்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும், ஒற்றுமையைக் கட்டுவதே முக்கியம் என்பதால் இந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

7. சில பள்ளிகள், கிளைகள், கலாச்சாரப் புரட்சிப் பணிக் குழுக்களில் உள்ள சில பொறுப்பாளர்கள், தமக்கு எதிராகக் கொட்டை எழுத்துச் சுவரொட்டிகளை வைத்த சாமான்ய மக்களை எதிர்த்துத் தாக்கும் வேலையில் இறங்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் முழக்கங்களை பரப்பும் அளவுக்குச் சென்றுள்ளார்கள்: ‘கிளையின் அல்லது பணிக்குழுவின் தலைவர்களுக்கு எதிராகச் செல்வது என்பது கட்சியின் மத்தியக்குழுவை எதிர்ப்பது, கட்சியையும் சோசலிசத்தையும் எதிர்ப்பது, அது ஒரு எதிர்ப்புரட்சி நடவடிக்கை’. அவர்களது இந்த அணுகுமுறையானது உண்மையான புரட்சியாளர்களின் மீது அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்பதைத்தான் தெளிவாக்குகின்றது. இது சார்புத்தன்மையில் நிகழ்ந்த தவறு, திட்டத்தில் நிகழ்ந்த தவறு, ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மோசமான அளவுக்கு தவறான தத்துவார்த்த சிந்தனை கொண்டவர்கள் பலரும், குறிப்பாக கட்சி விரோத, சோசலிச விரோத வலதுசாரி சக்திகள் மக்கள் இயக்கத்தில் நிகழ்ந்துவிட்ட சில குறைபாடுகளையும் தவறுகளையும் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு வதந்திகளையும் பொய்யையும் பரப்புகின்றார்கள், கலவரத்தில் ஈடுபடுகின்றார்கள், மக்களில் சிலரைத் திட்டமிட்டே ‘எதிர்ப்புரட்சியாளர்’கள் என முத்திரைக் குத்துகின்றார்கள். இத்தகைய ‘பிக் பாக்கெட்’டுகள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருப்பதும், அவர்களது தந்திரங்களை விரைவிலேயே அம்பலப்படுத்துவதும் அவசியம்.

இயக்கத்தை நடத்திக்கொண்டு செல்லும்போது, கொலை, கலகம், விசம் கொடுத்துக் கொன்றது, அரசு இரகசியங்களை சேதப்படுத்தியது, திருடியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட எதிர்ப்புரட்சியாளர்கள் மீது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இயக்கத்தின் போக்கில் எழுகின்ற பிரச்சனைகளின் காரணத்தால் பல்கலைக்கழகம், கல்லூரி, நடுநிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது. இப்போராட்டத்தின் லட்சியத்தை திசை திருப்பும் முயற்சியாக மக்களே மக்களுக்கு எதிராக, மாணவர்களே மாணவர்களுக்கு எதிராகப் போராடுமாறு தூண்டுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. வெளிப்படையாகத் தெரிந்த வலதுசாரிகள் மீதும்கூட அவரவர் செய்த குற்றங்களின் அடிப்படையில்தான் இயக்கத்தின் பிற்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

8. ஊழியர்களைப் பொதுவாக நான்கு விதமாகப் பிரிக்கலாம்.

1) நல்லவர்கள்.
2) ஒப்பீட்டளவில் நல்லவர்கள்
3) மோசமான தவறுகளைச் செய்திருந்தாலும் கட்சிக்கு எதிராகவோ சோசலிச விரோத வலதுசாரிகளாகவோ மாறாதவர்கள்.
4) குறைந்த எண்ணிக்கையிலான கட்சிக்கு எதிரான, சோசலிச விரோத வலதுசாரிகள்.

சாதாரண சூழ்நிலைகளில் முதலிரண்டு வகையினர்தான் (நல்லவர்களும் ஒப்பீட்டளவில் நல்லவர்களும்) மிகப் பெரும்பான்மையினராக இருப்பார்கள்.

கட்சி விரோதிகளையும் சோசலிச விரோத வலதுசாரிகளையும் முற்றாக அம்பலப்படுத்த வேண்டும், வலுவாகத் தாக்க வேண்டும், அவர்களது மரியாதையைக் குலைக்க வேண்டும், ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்வதற்கான வழியையும் செய்ய வேண்டும்.

9. மகத்தான பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சியின் போக்கில் பல புதிய விசயங்கள் பிறக்கத் தொடங்கியுள்ளன. பல பள்ளிகளிலும் கிளைகளிலும் மக்களால் தொடங்கப்பட்டுள்ள கலாச்சாரப் புரட்சிக் குழுக்களும் பிற அமைப்புகளும் புதிதாகப் பிறந்தவை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

இக்கலாச்சாரப் புரட்சிக் குழுக்கள், பேராயம் ஆகியவை அனைத்தும் அமைப்பின் மிக அற்புதமான புதிய வடிவங்களாகும், இதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின்கீழ் மக்கள் தமக்குத் தாமே கற்றுக் கொள்கின்றார்கள். இவ்வடிவங்கள் கட்சியை மக்களுடன் மேலும் நெருக்கமாக்கும் சிறந்த பாலங்களாகும். அவை பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியின் அதிகாரத்தின் அங்கங்கள்.

அனைத்து சுரண்டல் வர்க்கங்களும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக விட்டுச் சென்றுள்ள பழைய சிந்தனைகள், கலாச்சாரம், பழக்க வழக்கங்களுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் இயற்கையிலேயே மிகமிக நீண்ட காலத்துக்கு நீடிக்கும் ஒரு போராட்டமாகும்.

எனவே கலாச்சாரப் புரட்சிக் குழுக்களும், பேராயங்களும் வெறும் தற்காலிக அமைப்புகளாக இருக்க முடியாது, அவை நிலையான மக்கள் அமைப்புகளாகவே இருக்க வேண்டும். அவை கல்லூரிகள், பள்ளிகள், அரசு மற்றும் பிற அமைப்புகளுக்கு மட்டுமின்றி பொதுவாகவே தொழிற்சாலைகள், சுரங்கங்கள், பிற வணிக நிறுவனங்கள், நகர்ப்புற மாவட்டங்கள், கிராமங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

பாரிஸ் கம்யூனைப் போன்றதொரு பொதுத்தேர்தல் முறையை நிறுவ வேண்டியது அவசியமாக உள்ளது, இதன்மூலம் கலாச்சாரப் புரட்சிக் குழுக்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வுசெய்ய முடியும், புரட்சிகர மக்கள் திரளால் முழுமையாக விவாதிக்கப்பட்டபின் வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்பட வேண்டும், பொது மக்கள் இப்பட்டியல்களை மீண்டும் மீண்டும் விவாதித்த பின்னர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

படிக்க :
♦ பிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா ?
♦ மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !

கலாச்சாரப் புரட்சிகரக் குழுக்களின் உறுப்பினர்களையும் கலாச்சாரப் புரட்சிகரப் பேராயங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் எந்நேரத்திலும் விமர்சிக்கும் உரிமை பொது மக்களுக்கு உண்டு. இந்த உறுப்பினர்களும், பிரதிநிதிகளும் திறமையற்றவர்கள் என்று கண்டறியப்பட்டால் அவர்களது இடத்தில் தேர்தல் மூலம் புதியவர்களை நியமிக்கலாம், அல்லது மக்களின் விவாதத்துக்குப் பின்னர் அவர்களைத் திரும்பப் பெறலாம்.

கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் உள்ள கலாச்சாரப் புரட்சிக் குழுக்களிலும் பேராயங்களிலும் புரட்சிகர மாணவர்களின் பிரதிநிதிகள் பிரதானமாக இடம் பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில் புரட்சிகர ஆசிரியர் – தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் இடம் பெறவேண்டும்.

10. மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியில் செய்ய வேண்டிய முக்கியமான வேலை எதுவெனில் பழைய கல்வித் திட்டங்களையும் பழைய கோட்பாடுகளையும் கற்பிப்பு முறைகளையும் சீர் செய்வதாகும்.

நமது பள்ளிக்கூடங்கள் முதலாளித்துவ அறிவு ஜீவிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, மாபெரும் கலாச்சாரப் புரட்சி இந்த நிலையை மாற்ற வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் தோழர் மாசேதுங் முன்வைத்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். பாட்டாளி வர்க்க அரசியலைக் கற்பிக்கின்ற, உற்பத்தியைத் தருகின்ற உழைப்புடன் இணைந்த கல்வி – இவையே அக்கல்விக் கொள்கையாகும். அறவொழுக்கமும் அறிவும் உடல் நலமும் வளர்ச்சி பெறும் வகையில் அமையும் இக்கல்வித் திட்டத்தால் அவர்கள் பின்னாளில் சோசலிசச் சிந்தனையும் கலாச்சாரமும் அமைந்த உழைப்பாளர்களாக மிளிர்வார்கள்.

பள்ளிக் கல்வியின் கால அளவு குறைக்கப்பட வேண்டும். பாடப் பிரிவுகள் குறைக்கப்பட வேண்டும், மேன்மையாக்கப்பட வேண்டும். பாடப் புத்தகங்கள் முற்றாக சீரமைக்கப்பட வேண்டும், சில பாடங்கள் சிக்கலாக இருக்கின்றன. இவற்றை எளிமையாக்க வேண்டும். மாணவர்களின் தலையாய வேலை என்பது கற்பதுதான், ஆனாலும் அவர்கள் மற்ற விசயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, அவர்கள் கல்வி கற்றுக் கொண்டே தொழிற்சாலைகளிலும் வேலை செய்யலாம், விவசாயத்தையும், இராணுவ சேவையையும் கற்றுக் கொள்ளலாம், கலாச்சாரப் புரட்சியின் போராட்டங்களில் பங்குபெற்று முதலாளி வர்க்கத்தை விமர்சனம் செய்யும் பணியையும் செய்யலாம்.

11. கலாச்சாரப் புரட்சி என்னும் மக்கள் இயக்கத்தின் போக்கில் முதலாளித்துவ நிலப் பிரபுத்துவக் கோட்பாட்டின் மீதான விமர்சனமானது பாட்டாளி வர்க்க உலகப் பார்வை, மார்க்சிய – லெனினியத் தத்துவம், மாசேதுங்கின் சிந்தனைகள் ஆகியவற்றைப் பரப்புவதோடு ஒன்றிணைந்து செல்ல வேண்டும்.

கட்சிக்குள் ஊடுருவிவிட்ட அப்பட்டமான முதலாளி வர்க்கப் பிரதிநிதிகளையும், அப்பட்டமான பிற்போக்கு முதலாளித்துவ கல்விசார் ‘அதிகார மட்டங்’களையும் விமர்சிக்கும் வகையில் விமர்சனங்களை ஒருங்கிணைக்க வேண்டும்; தத்துவம், வரலாறு, அரசியல் பொருளாதாரம், கல்வி ஆகிய தளங்களிலும், கலை இலக்கியப் படைப்புக்களிலும், கோட்பாடுகளிலும், இயற்கை விஞ்ஞானம் மற்றும் பிற துறைகளின் கோட்பாடுகளிலும் இருக்கின்ற பிற்போக்குவாதச் சிந்தனைகளை விமர்சிப்பதும் இதில் அடங்கும்.

குறிப்பிட்ட ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு பத்திரிக்கைகளில் விமர்சிப்பது என்பது தொடர்புடைய கட்சிக் குழுவின் விவாதத்திற்குப் பிறகே முடிவு செய்யப்பட வேண்டும். தேவைப்படும் நேரங்களில் மேல்மட்டத்தின் ஒப்புதலுக்குப் பிறகே செய்யப்பட வேண்டும்.

12. விஞ்ஞானிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சாதாரணத் தொழிலாளர்கள் ஆகியோர் தேசபக்த உணர்வுடன், கடும் உழைப்பாளிகளாக இருக்கும் வரையிலும், கட்சிக்கும் சோசலிசத்துக்கும் எதிராகச் செல்லாத வரையிலும், அந்நிய நாடுகளுடன் தகாத வகையில் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளாத வரையிலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் இயக்கத்தில் ‘ஒற்றுமை, விமர்சனம், ஒற்றுமை’ என்ற கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம். தமது துறைகளில் பயன்தரு பங்களிப்பைச் செலுத்திய விஞ்ஞானிகள், அறிவியல் – தொழில்நுட்பாளர்களைப் பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களது உலகப் பார்வையையும், பணிக் கலாச்சாரத்தையும் படிப்படியாக மாற்றிக்கொள்ளும் வண்ணம் அவர்களுக்கு உதவ வேண்டும்.

13. பெரிய, நடுத்தர நகரங்களில் உள்ள கட்சி மற்றும் அரசின் கலாச்சார – கல்விக் கிளைகள், முன்னணி அரங்கங்கள் ஆகியவை தற்போதைய பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன.

மாபெரும் கலாச்சாரப் புரட்சியானது நகரங்களிலும், கிராமப்புறங்களிலும், சோசலிசக் கல்வி இயக்கத்தை மேலும் செழுமையுறச் செய்துள்ளது. அதனை மேலும் ஒருபடி உயர்த்தியுள்ளது. இவ்விரண்டு இயக்கங்களும் நெருக்கமாக ஒருங்கிணைந்து இயங்குவதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். பல்வேறு பிரதேசங்களும் துறைகளும் தத்தம் பகுதியிலுள்ள தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கேற்ப இத்தகைய முயற்சிகளில் இறங்கலாம்.

கிராமப்புறங்களிலும் நகரங்களிலுள்ள வணிகத் தலங்களிலும் இப்போது நடந்து கொண்டிருக்கின்ற சோசலிசக் கல்வி இயக்கமானது ஏற்கெனவே இத்தகைய வேலைகள் எங்கெல்லாம் செம்மையாக நடந்து கொண்டிருக்கின்றனவோ அவற்றை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், ஆனால் அத்தகைய வேலைகளோடு சேர்ந்து இயங்க வேண்டும். எனினும் இன்றைய மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியின் போக்கில் எழுகின்ற கேள்விகள் அனைத்தையும் தகுந்த நேரத்தில் மக்கள்முன் வைத்து விவாதிக்க வேண்டும், அதன் மூலம் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தை மேலும் தீர்மானகரமாக முன்னெடுத்துச் செல்லவும் முதலாளித்துவத் தத்துவத்தை ஒழித்துக் கட்டவும் முடியும்.

சில இடங்களில் இம்மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சியானது அங்கங்கே நடந்து கொண்டிருக்கின்ற சோசலிசக் கல்வி இயக்கத்துக்கு மேலும் வலுச் சேர்க்கவும், அரசியல், தத்துவம், அமைப்பு, பொருளாதாரம் ஆகிய தளங்களில் தூய்மைப்படுத்தவும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்படுகின்றது. உள்ளூர்கட்சிக் கிளைகள் இது தேவை எனக் கருதும் இடங்களில் இவ்வாறு செய்து கொள்ளலாம்.

14. மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியின் இலட்சியம் என்ன மக்களின் தத்துவத்தை புரட்சிகரமாக்குவதும் அதன் மூலம் உழைப்பின் அனைத்து தளங்களிலும் மகத்தான, விரைவான, மேலான, அதிகமான பொருளாதாரப் பலன்களை அடைவதுமே ஆகும். பொதுமக்கள் திரளை முழுமையாகக் கிளர்ச்சியுறச் செய்து தகுந்த ஏற்பாடுகளையும் செய்து விட்டால் கலாச்சாரப் புரட்சியையும் உற்பத்தியையும் ஒரு சேரவும் ஒன்று மற்றதைப் பாதிக்காமலும் நடத்தி விட முடியும், கூடவே நமது எல்லா வேலைகளிலும் உச்சக்கட்டத் தரத்தையும் உறுதி செய்ய முடியும்.

மாபெரும் கலாச்சாரப் புரட்சியானது நமது நாட்டின் சமூக உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான மாபெரும் உந்து சக்தியாகும். அப்படியிருக்க, உற்பத்தி வளர்ச்சிக்கு எதிராக மாபெரும் கலாச்சாரப் புரட்சியை முன்னிறுத்துவது தவறு.

15. மத்தியக் குழுவின் இராணுவக் கமிசன், மக்கள் விடுதலை இராணுவத்தின் பொது அரசியல்துறை ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில்தான் இராணுவத்தில் கலாச்சாரப் புரட்சி, சோசலிசக் கல்வி இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

16. மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியில் மாசேதுங் சிந்தனை எனும் மகத்தான செம்பதாகையை உயர்த்திப் பிடிப்பதும் பாட்டாளிவர்க்க அரசியலின் பாதையில் செல்வதும் தவிர்க்க முடியாதது, அவசியமானது. பாட்டாளிகள், விவசாயிகள், படைவீரர்கள், ஊழியர்கள், அறிவுஜீவிகள் மத்தியில் ஆக்கப்பூர்வக் கல்வி இயக்கத்தையும் தலைவர் மாசேதுங்கின் படைப்புகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும், கலாச்சாரப் புரட்சியைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டியாக மாசேதுங்கின் சிந்தனைகளையே எடுத்துச் செல்ல வேண்டும்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ

சிக்கலான இம்மாபெரும் கலாச்சாரப் புரட்சியில் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள குழுக்கள் யாவும் தலைவர் மாவோவின் படைப்புகளையும், சிந்தனைகளையும் அதிகமான நேர்மையுடனும் ஆக்கப்பூர்வமான வழியிலும் பயில வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக கலாச்சாரப் புரட்சி குறித்தும் கட்சியின் தலைமைப் பாத்திர முறைகள் குறித்தும் தலைவர் மாவோ எழுதிய படைப்புகளை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். உதாரணமாக, புதிய ஜனநாயகம் குறித்து”, ”யெனான் கலை – இலக்கியக் கழகத்தில் ஆற்றிய உரை”, “மக்களிடையே உள்ள முரண்பாடுகளைச் சரியாக கையாளுதல் குறித்து”, “பிரச்சாரப் பணிகள் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் ஆற்றிய உரை’, “தலைமைப் பாத்திர முறைகள் குறித்த சில கேள்விகள்”, “ஆட்சிக் குழுக்களின் வேலை முறைகள்” ஆகியவற்றைக் கூறலாம்.

கடந்த காலங்களில் தலைவர் மாவோ கட்சியினருக்கு வலியுறுத்திய ‘மக்களிடமிருந்து மக்களுக்கு’ என்ற திட்டத்தையும், ஆசிரியராக ஆகும்முன் மாணவராக இருங்கள்’ என்ற கோட்பாட்டையும் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள குழுக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கட்சிக் குழுக்கள் பாரபட்சமாகவும் குறுகிய பார்வையுடன் இருப்பதையும் தவிர்க்க முயல வேண்டும். அவர்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை வளர்க்க வேண்டும், நுண்புலப் பொருளியல்வாதத்தையும், புலமையியல் வாதத்தையும் எதிர்க்க வேண்டும்.

தோழர் மாசேதுங்கின் தலைமையில் அமைந்த மத்தியக் குழுவின் தலைமையின் கீழ் மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சி மிகச் சிறப்பான வெற்றி அடைவது உறுதி.

(முற்றும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க