சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை
(1957, மார்ச் 12)
பாகம் – 5 ( இறுதிப் பாகம்)

முந்தைய பாகங்கள் >> 1 2 3 4

ழாவதாக, “அகலத் திறப்பதா?” அல்லது “கட்டுப்படுத்துவதா?” என்பதாகும்.

இது கொள்கை பற்றிய ஒரு பிரச்சினை. ”நூறு மலர்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்” என்பது ஒரு அடிப்படைக் கொள்கை மாத்திரமல்ல, ஒரு நீண்டகாலக் கொள்கையும் ஆகும். இது வெறும் தற்காலிகக் கொள்கை அல்ல. இந்த விவாதத்தின் போது தோழர்கள் ”கட்டுப்படுத்துவ”தற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இந்தக் கருத்து ஒரு சரியான கருத்து என நான் கருதுகின்றேன். கட்சி மத்தியக் கமிட்டியும் நாம் “அகலத் திறக்க” வேண்டும், “கட்டுப்படுத்த”க் கூடாது என்று கருதுகின்றது.

நமது நாட்டை வழிநடத்துவதில் இரண்டு மாற்றுமுறைகளை, வேறு வார்த்தைகளில் சொன்னால் இரண்டு மாற்றுக் கொள்கைகளை, அதாவது “அகலத் திறப்பது” அல்லது “கட்டுப்படுத்துவது” என்ற கொள்கைகளைக் கடைப்பிடிக்க முடியும். ”அகலத் திறப்பது” என்பது அனைவரும் பேசவும் விமர்சனம் செய்யவும் விவாதிக்கவும் துணிவு பெறுவதற்காக, அவர்களைச் சுதந்திரமாகத் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்க விடுவது என்று அர்த்தம்; தவறான கருத்துக்களுக்கும் எந்தவிதமான நச்சுக் களைகளுக்கும் அஞ்சாமல் இருப்பது என்று அர்த்தம்; விமர்சனம் எதிர் விமர்சனம் இரண்டுக்கும் சுதந்திரம் கொடுத்து, பல்வேறு கருத்துக்களையுடைய மக்கள் மத்தியில் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஊக்கப்படுத்துவது என்று அர்த்தம். தவறான கருத்துக்களை அடக்குவது அல்ல, மாறாக அவர்களுக்கு நியாயங்காட்டி விளக்குவதன் மூலம் நம்பிக்கை ஊட்டுவது என்று அர்த்தம்.

”கட்டுப்படுத்துவது” என்றால், வேறுபட்ட அபிப்பிராயங்களைத் தெரிவிக்காமல், தவறான கருத்துக்களைக் கூறவிடாமல் மக்களைத் தடுப்பது, அப்படிச் செய்தால் அவர்களை ‘ ‘ஒரே அடியில் முடித்துவிடுவது” என்று அர்த்தம்.  இது முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குப் பதில் அவற்றை உக்கிரமாக்கும். ”அகலத் திறப்பது’ ‘, ‘ ‘கட்டுப்படுத்துவது” என்ற இரண்டு கொள்கைகளில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் முன்னதைத் தேர்ந்தெடுக்கின்றோம். காரணம், நமது நாட்டை ஸ்திரப்படுத்தி நமது கலாச்சாரத்தை விருத்தி செய்வதற்குத் துணை செய்யும் கொள்கை அது.

படிக்க :
♦ ஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

நாம் “அகலத் திறப்பது” என்ற கொள்கையை உபயோகித்து லட்சோப லட்சம் அறிவுஜீவிகளையும் ஐக்கியப்படுத்தி, அவர்களுடைய இன்றைய நோக்கை மாற்றத் தயாராக இருக்கின்றோம். நான் மேலே குறிப்பிட்டது போல, நமது நாட்டிலுள்ள அறிவுஜீவிகளில் ஏகப்பெரும்பான்மையோர் முன்னேற்றம் அடைய, தம்மைத் தாமே புனருருவாக்க விரும்புகின்றனர்; அவர்கள் தம்மைத் தாமே புனருருவாக்கும் ஆற்றலும் உடையவர்கள். இது சம்பந்தமாக நாம் கடைப்பிடிக்கும் கொள்கை பெரியதொரு பாத்திரத்தை வகிக்கும்.

அறிவுஜீவிகளின் பிரச்சினை என்பது, எல்லாவற்றுக்கும் மேலாக சித்தாந்தம் தழுவிய ஒரு பிரச்சினையாகும். சித்தாந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முரட்டுத்தனமான அதிகார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தீங்கு விளைவிக்குமேயன்றித் துணை செய்யாது. அறிவுஜீவிகளைப் புனருருவாக்குவது, சிறப்பாக அவர்களுடைய உலக நோக்கை மாற்றுவது என்பது நீண்ட காலம் நடைபெற வேண்டியதோர் போக்காகும். சித்தாந்தப் புனருருவாக்கம் நீடித்த, பொறுமையான, பிரயாசையான வேலையை உள்ளடக்கியது என்பதை நமது தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்வில் பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்டு வந்த மக்களின் சித்தாந்தத்தை ஒருசில விரிவுரைகள் ஆற்றுவதன் மூலம் அல்லது ஒருசில கூட்டங்கள் கூட்டுவதன் மூலம் மாற்ற முயற்சிக்கக் கூடாது. அவர்களை நம்பச் செய்யும் ஒரே ஒரு வழி இணங்கச் செய்வதன்றிப் பலவந்தப்படுத்துவதல்ல. பலவந்தப்படுத்துவதன் மூலம் ஒருபோதும் நம்பச் செய்ய முடியாது. பலாத்காரத்தின் மூலம் அவர்களை நம்பச் செய்ய முயல்வது ஒருபோதும் வேலை செய்யாது.

எதிரியைச் சமாளிக்கும் பொழுது இத்தகைய முறை அனுமதிக்கக் கூடியது; ஆனால் தோழர்களுடன் அல்லது நண்பர்களுடன் பழகும் பொழுது இது முற் றிலும் அனுமதிக்கப்படக் கூடாது. பிறருக்கு நம்பிக்கை ஊட்டுவது எப்படி என்று நமக்குத் தெரியாவிட்டால், யாது செய்வது? அப்படியென்றால் நாம் படிக்க வேண்டும். விவாதத்தின் மூலமும் நியாயங்காட்டி விளக்குவதன் மூலமும் நாம் தவறான கருத்துக்களை வெற்றி கொள்ளப் படிக்க வேண்டும்.

”நூறு மலர்கள் மலரட்டும்” என்பது கலைகளை விருத்தி செய்யும் ஒரு வழி; ‘‘நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்” என்பது விஞ்ஞானத்தை விருத்தி செய்யும் ஒரு வழி. இக்கொள்கை விஞ்ஞானத்தையும் கலைகளையும் விருத்தி செய்யும் ஒரு சிறந்த முறை மாத்திரமல்ல, இதன் பிரயோகத்தை விரிவாக்கினால் , அது நமது வேலை முழுவதையும் செய்வதற்குரிய ஒரு சிறந்த முறையுமாகும்.

அது நமது பிழைகளைக் குறைப்பதற்குத் துணை செய்யும். நமக்குப் புரியாத விசயங்கள் பல இருக்கின்றன. எனவே நாம் அவற்றைச் சமாளிக்க முடியாமல் இருக்கின்றோம். ஆனால் விவாதம், போராட்டம் ஆகியவற்றின் மூலம் நாம் அவற்றைப் புரிந்து அவற்றைச் சமாளிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்வோம். உண்மை என்பது பல்வேறு கருத்துக்களுக்கிடையில் நடைபெறும் விவாதத்தின் மூலம் வளர்கின்றது. நச்சுக் களைகள், மார்க்சிய – எதிர்ப்புக் கருத்துக்கள் எல்லாவற்றையும் பொறுத்தவரையில் கூட, இந்த முறை கைக்கொள்ளப்படக் கூடியது. ஏனென்றால் மார்க்சியம் அவற்றுக்கு எதிரான போராட்டத்தில் வளர்ச்சியடையும். இது எதிரானவற்றின் போராட்டத்தின் மூலம் காணும் , வளர்ச்சி, இயங்கியலுக்கு இசைவான வளர்ச்சி.

உண்மை, நன்மை, அழகு ஆகியவை பற்றி மக்கள் காலாதிகாலமாக விவாதித்து வரவில்லையா? பொய்மை, தீமை, அசிங்கம் ஆகியவை அவற்றிற்கு எதிரானவை ஆகும். முன்னவையால் பின்னவை இல்லாமல் இருக்க முடியாது. உண்மை பொய்மைக்கு எதிராக இருக்கின்றது. இயற்கையில் போல சமுதாயத்திலும் முழுமையானவை ஒவ்வொன்றும் தவிர்க்கமுடியாதபடி பல்வேறு பகுதிகளாகப் பிரிகின்றன; ஸ்தூலமான வெவ்வேறு சூழ்நிலைகளில் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் மாத்திரம் அவை வேறுபட்டு விளங்குகின்றன.

தவறும் அசிங்கமும் என்றென்றும் உள்ள தோற்றப்பாடுகள். சரி – பிழை, நன்மை – தீமை, அழகு – அசிங்கம் போன்ற எதிரானவையும் என்றென்றும் இருக்கவே செய்யும். நறுமலர்கள் நச்சுக் களைகளைப் பொறுத்தவரையிலும் இது உண்மையாகும். அவற்றுக்கிடையிலுள்ள உறவு என்பது எதிரானவற்றின் ஐக்கியமும் போராட்டமும் தழுவிய ஒன்று. ஒப்பிட்டுப் பார்க்கும் பண்பு இல்லாவிட்டால் வேறுபாடு என்பது இருக்க முடியாது. வேறுபாடும் போராட்டமும் இல்லாவிட்டால் வளர்ச்சி என்பதும் இருக்காது.

உண்மை பொய்மைக்கு எதிரான அதன் போராட்டத்தில் வளர்கின்றது. இவ்வாறுதான் மார்க்சியம் வளர்கின்றது. மார்க்சியம் பூர்ஷுவா, குட்டி பூர்ஷுவா வர்க்க சித்தாந்தத்துக்கு எதிரான போராட்டத்தில் வளர்கிறது; இத்தகைய போராட்டத்தின்மூலம்தான் அது வளரமுடியும்.

நாம் “அகலத் திறப்பது” என்ற கொள்கைக்காக நிற்கிறோம். இன்றுவரையில் இது குறைவாகக் காணப்படுகிறதேயன்றி, கூடுதலாகக் காணப்படவில்லை. நாம் அகலத் திறப்பதற்கு அஞ்சக் கூடாது; அன்றி, விமர்சனத்துக்கோ நச்சுக் களைகளுக்கோ கூட அஞ்சக்கூடாது. மார்க்சியம் என்பது விஞ்ஞானரீதியான உண்மை. அது விமர்சனத்துக்கு அஞ்சாது; அதை விமர்சனத்தால் தோற்கடிக்க முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அரசாங்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரையிலும் இது உண்மையாகும். அவை விமர்சனத்துக்கு அஞ்சமாட்டா; அவற்றை விமர்சனத்தால் தோற்கடிக்க முடியாது.

பிழையான சில விசயங்கள் எப்பொழுதும் இருக்கவே செய்யும். அதுபற்றி அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. சமீபத்தில் சில பூதங்களும் பிசாசுகளும் அரங்கில் காட்சியளித்தன. இதைக் கண்டு சில தோழர்கள் பெரிதும் கவலைப்பட்டார்கள். எனது கருத்தில் இவை சில இருப்பதால் ஒன்றும் நேர்ந்துவிடாது. ஒருசில தசாப்தங்களில் இத்தகைய பூதங்களும் பிசாசுகளும் அரங்கிலிருந்து முற்றாக மறைந்துவிடும். அப்பொழுது அவற்றைப் பார்க்க விரும்பினாலும்கூட நீங்கள் பார்க்க முடியாது.

படிக்க :
♦ நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!

நாம் சரியானவற்றை வளர்த்துப் பிழையானவற்றை எதிர்க்க வேண்டும். ஆனால் தவறான விசயங்களுடன் மக்கள் தொடர்பு கொண்டால் நாம் அதற்கு அஞ்சக்கூடாது. விபரீதமான தீய விசயங்கள், தவறான கருத்துகள் ஆகியவற்றுடன் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது என்று மக்களைத் தடைசெய்கின்ற அல்லது அரங்கிலுள்ள பூதங்கள் பிசாசுகளைப் பார்க்கக் கூடாது என்று அவர்களைத் தடுக்கின்ற நிர்வாக உத்தரவுகளைச் சும்மா பிறப்பித்தால் எவ்விதப் பிரச்சினையும் தீர்ந்துவிடாது. உண்மையில் அத்தகைய விசயங்களைப் பரப்ப வேண்டும் என்று நான் வாதாடவில்லை.

“அவற்றில் சில இருப்பதால் ஒன்றும் நேர்ந்து விடாது” என்று மாத்திரமே நான் கூறுகின்றேன். குறிப்பிட்ட சில தவறான விசயங்கள் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை; இதை ஒட்டி அஞ்சுவதற்கும் எவ்வித காரணமும் இல்லை. அது உண்மையில் மக்கள் அவற்றை எதிர்த்து மேலும் நன்றாகப் போராடக் கற்றுக்கொள்வதற்குத் துணை செய்யும். பெரும் புயல்களுக்குக்கூட அஞ்ச வேண்டியதில்லை. பெரும் புயல்களுக்கு ஊடாகத்தான் மனித சமுதாயம் முன்னேறுகின்றது.

நமது நாட்டில் பூர்ஷுவா வர்க்க, குட்டி பூர்ஷுவா வர்க்க சித்தாந்தமும், மார்க்சிய – எதிர்ப்புச் சித்தாந்தமும் இன்னும் நீண்டகாலம் நிலைத்திருக்கும். நமது நாட்டில் சோசலிச அமைப்பு அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. உற்பத்தி சாதனங்களின் உடைமைமுறை மாற்றத்திலும் நாம் அடிப்படை வெற்றி ஈட்டியுள்ளோம். ஆனால், அரசியல், சித்தாந்த முன்னணிகளில் நாம் இன்னும் பூரண வெற்றி பெறவில்லை. சித்தாந்தத் துறையில், பாட்டாளி வர்க்கத்துக்கும் பூர்ஷுவா வர்க்கத்துக்கும் இடையில் நடைபெறும் போராட்டத்தில் ‘எது வெல்லும்’ என்ற பிரச்சினை உண்மையில் இன்னும் தீர்க்கப்படவில்லை.

பூர்ஷுவா வர்க்க, குட்டி பூர்ஷுவா வர்க்க சித்தாந்தத்துக்கு எதிராக நாம் இன்னும் ஒரு நீடித்த போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கின்றது. இதைப் புரிந்து கொள்ளாமல், சித்தாந்தப் போராட்டத்தைக் கைவிடுவது தவறு. தவறான கருத்துகள் எல்லாம், நச்சுக் களைகள் எல்லாம், பூதங்கள் பிசாசுகள் எல்லாம் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டும். அவை தம்மிஷ்டப்படி தலைவிரித்தாடுவதை அனுமதிக்கக் கூடாது. இருந்தும், விமர்சனம் என்பது நியாயம் நிறைந்ததாக, ஆராய்ந்து விளக்குவதாக, நம்பிக்கை ஊட்டுவதாக இருக்க வேண்டும்; கரடுமுரடானதாக, அதிகாரத்துவமுடையதாக, நிலையியலானதாக, அல்லது வரட்டுவாதமாக இருக்கக் கூடாது.

நீண்டகாலமாக மக்கள் வரட்டுவாதத்தை எதிர்த்துக் கூடுதலான விமர்சனத்தை நடத்தி வருகின்றார்கள். இது செய்ய வேண்டியதே. ஆனால் திரிபுவாதத்தை விமர்சனம் செய்ய அவர்கள் அடிக்கடி தவறி விடுகின்றனர். வரட்டு வாதம், திரிபுவாதம் இரண்டும் மார்க்சியத்துக்கு விரோதமானவை. மார்க்சியம் நிச்சயம் முன்னேறி வளரும். அனுஷ்டானத்தின் (நடைமுறையின்) வளர்ச்சியுடன் அதுவும் நிச்சயம் வளரும். அது முன்னேறாமல் தேங்கி நிற்க முடியாது. அது ஸ்தம்பித்து, மாறாத நிலையில் நின்றால், அது உயிரற்றதாகிவிடும்.

இருந்தும், மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அத்துமீறக் கூடாது. அத்துமீறினால், தவறுகள் இழைக்கப்படும். ஒரு நிலையியல் கண்ணோட்டத்திலிருந்து மார்க்சியத்தை அணுகுவதும், அதை ஏதும் விறைப்பான ஒன்றாகக் கருதுவதும் வரட்டுவாதம் ஆகும்.

மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரித்தால், அதன் சர்வவியாபக உண்மையை நிராகரித்தால், அது திரிபுவாதம் ஆகும். திரிபுவாதம் என்பது பூர்ஷுவா வர்க்க சித்தாந்தத்தின் ஒரு வடிவம்.

சோசலிசத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும் பூர்ஷுவா வர்க்க சர்வாதிகாரத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளை, திரிபுவாதிகள் மறுக்கின்றனர். அவர்கள் வக்காலத்து வாங்குவது உண்மையில் முதலாளித்துவ மார்க்கமன்றி, சோசலிச மார்க்கமல்ல. இன்றைய நிலைமைகளில் திரிபுவாதம் என்பது வரட்டுவாதத்திலும் பார்க்க ஆபத்தானது. இன்று சித்தாந்தத் துறையில் நமது முக்கியமான கடமைகளில் ஒன்று திரிபுவாதத்துக்கு எதிரான விமர்சனத்தை மலரச் செய்வதாகும்.

திருத்தல்வாதத்திற்கு எதிராக லெனின் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு

எட்டாவதாகவும், கடைசியாகவும், மாகாணங்கள், மாநகரங்கள், சுயாட்சிப் பிரதேசங்கள் ஆகியவற்றின் கட்சிக் கமிட்டிகள் சித்தாந்தம் பற்றிய இப்பிரச்சினையை இறுகப்பற்ற வேண்டும்.

இங்கு சமூகமாயுள்ள தோழர்கள் சிலர் நான் தொட வேண்டும் என்று விரும்பிய பிரச்சினை இது. பல இடங்களில் கட்சிக் கமிட்டிகள் சித்தாந்தம் பற்றிய பிரச்சினையை இன்னும் இறுகப் பற்றவில்லை, அல்லது இவ்விசயத்தில் மிகக் குறைவாகவே செய்துள்ளன. இதற்குரிய பிரதான காரணம் அவை பரபரப்பாக வேலையில் ஈடுபட்டுள்ளன என்பதாகும். ஆனால் அவை இப்பிரச்சினையை இறுகப்பற்ற வேண்டும். “இறுகப் பற்றுவது” என்றால் அதை நிகழ்ச்சிநிரலில் வைத்து ஆராய வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

முன்னைய புரட்சிக் காலங்களுக்கு இயல்பான பெருமளவில் நிகழ்ந்த கொந்தளிக்கும் வெகுஜன வர்க்கப் போராட்டங்கள் அடிப்படையில் முடிவடைந்துவிட்டாலும் வர்க்கப் போராட்டம், பிரதானமாக அரசியல் சித்தாந்த முன்னணிகளில் நடைபெறும் வர்க்கப் போராட்டம் இன்னும் இருக்கின்றது. இது மிகக் கூர்மையாகவும் நடைபெறுகின்றது. சித்தாந்தம் பற்றிய பிரச்சினை இன்று மிக முக்கியமான பிரச்சினையாகிவிட்டது.

எல்லாப் பாகங்களிலுமுள்ள கட்சிக் கமிட்டிகளின் முதற் காரியதரிசிகள் தாமே இந்தப் பிரச்சினையை இறுகப்பற்ற வேண் டும். இப்பிரச்சினையில் அவர்கள் பாரதூரமான கவனம் செலுத்தி, இதை நன்கு ஆராய்ந்தால்தான் இதைச் சரியான முறையில் தீர்க்க முடியும். நாம் இன்று கூட்டிய மாநாடு போல எல்லாப் பிரதேசங்களும் பிரச்சார வேலை பற்றிய மாநாடுகளைக் கூட்டி ஸ்தலச் சித்தாந்த வேலை பற்றியும் சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்க வேண்டும். இத்தகைய கூட்டங்களில் கட்சித் தோழர்கள் மாத்திரமல்ல கட்சிக்கு வெளியிலுள்ள மக்களும் இன்னும் வேறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்ட மக்களும்கூடக் கலந்துகொள்ள வேண்டும். இன்றைய மாநாட்டின் அனுபவம் நிரூபித்துள்ளது போல இவை அனைத்தும் நன்மை செய்யுமே அன்றித் தீமை செய்ய மாட்டா .

(முற்றும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க