உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 9
கோட்பாடு என்றால் என்ன ?
தத்துவத்தின் கோணத்திலிருந்து மட்டுமே அதை அணுகுவதென்றால், விசயங்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பொது விதியே, கோட்பாடு என பொருள்படும். குறிப்பிட்ட விசயங்களை குறிப்பிட்ட வளர்ச்சி விதிகள் நிர்ணயிக்கின்றன. ஒரே மாதிரியான விசயங்கள் ஒட்டு மொத்தத்தில் ஒரே விதமான வளர்ச்சி விதிகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன;
கோட்பாடு என்னும் விசயத்தை நாங்கள் எப்படி பொருள்படுத்துகிறோம் என்றால், விசயங்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பொதுவான விதிகளின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகவும் ஆராயவும் நாம் கையாளும் முறையென்று அணுகுகிறோம். பிரச்சினைகளின் பரிசீலனை, ஆராய்ச்சி ஆகியவற்றை நிர்ணயிக்கும் பொது விதி தவறாக இருக்குமேயானால், நமது நிலை, கண்ணோட்டம், முறை முதலியன தவறாக இருக்குமேயானால், பிரச்சினையை பரிசீலிப்பதிலும், ஆராய்வதிலும் பிழை நிச்சயம் ஏற்படத்தான் செய்யும். சில பிரச்சினைகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் விதிகளை நாம் தவறாகப் புரிந்து கொண்டோமேயானால், பின் அந்தப் பிரச்சினையை ஆராய்வதற்கு நாம் கையாளும் முறையும் நிச்சயம் தவறாகத்தானிருக்கும். அதனால் நாம் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினையை லேசாக மதிப்பிடக்கூடாது. கோட்பாட்டில் பிழை ஏற்படுமானால், பின் தனிப்பட்ட தவறுகள் மட்டுமின்றி, முறைப்படி, தீராத தன்மை கொண்ட, தொடர்ச்சியாகப் பல நடைமுறை பிரச்சினைகளை பாதிக்கும் தவறுகள் நேரும்.
கோட்பாடு சம்பந்தப்படாத நிகழ்கால கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்ன? முற்றிலும் நடைமுறை தன்மைபடைத்த பிரச்சினைகள் என்ன?
இந்த பிரச்சினைகள் பெரும்பாலும் தனிப்பட்ட பிரச்சினைகளாக, தினசரி அலுவல் அன்றாட வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகும். உதாரணமாக, மக்களைத் திரட்டுவது, அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்துவது என்பது கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை; இதில் நமக்குள் யாருக்கும் வேறுபாடில்லை; மக்களைத் திரட்டுவது, அமைப்பு ரீதியாகச் ஒன்றுபடுத்துவது என்னும் பணியில் விசேச கவனம் செலுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் அமைப்புகள் அதற்கு தலைமை கொடுக்க வேண்டும். இத்தகைய பணியில் இராணுவமும் உதவிபுரிய வேண்டும்; தனது பங்கை செலுத்த வேண்டும்; இவை எல்லாம் கோட்பாடு சம்பந்தமான பிரச்சினைகள்; இதில் நமக்குள் யாருக்கும் அபிப்பிராய பேதமில்லை; அதாவது கோட்பாடு சம்பந்தமாக நமக்குள் மாறுபாடான அபிப்பிராயபேதமில்லை.
ஆனால் சில தோழர்கள் மக்கள் போக்குவரத்து படையும், இராணுவத்தின் மக்கள் போக்குவரத்து இலாகாவும் தற்காலிகமாக கலைக்கப்பட வேண்டுமென்றும், அவர்கள் பொதுமக்கள் அமைப்புகளில் வேலை செய்வதற்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் அபிப்பிராயங் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில தோழர்கள் மக்கள் போக்குவரத்து கோஷ்டி கலைக்கப்படக் கூடாது என்று கருத்துக் கொண்டிருக்கிறார்கள்; சில தோழர்கள் ஒரு பொதுமக்கள் அமைப்பு நான்கு இலாக்காக்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென்று யோசனை கூறுகிறார்கள்; மற்றவர்கள் அதை ஐந்தாகப் பிரிக்க வேண்டுமென்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் முற்றிலும் நடைமுறைத் தன்மை படைத்த பிரச்சினைகளேயாகும். அவை ஒன்றும் கோட்பாடு சம்பந்தமான பிரச்சினையன்று.
இன்னுமொரு உதாரணம்: இன்று எதிரியின் பின்னணியில், நமது எதிர்ப்பு யுத்தத்தின் போர்த்தந்திரக் கோட்பாடு, பிரிந்த கொரில்லா யுத்த போர்த்தந்திரமாகும். இந்த விசயத்தில் நமக்குள் அபிப்பிராய வேறுபாடு இல்லையென்றால், அதன் பொருள் போர்த்தந்திரம் பற்றிய கோட்பாட்டில் நமக்குள் அபிப்பிராய பேதமில்லை என்பதேயாகும். ஒரு குறிப்பிட்ட தளபதி, நிலைமையின் நிர்ப்பந்தத்தினால் உந்தப்பட்டு, அல்லது சாதகமான விசேஷ வாய்ப்புகள் காரணமாக அணிவகுத்த யுத்தபோர் நடத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம்; அது வெற்றி அடையலாம் அல்லது தோல்வியிலும் முடியலாம். இது தனிப்பட்ட நடைமுறை பிரச்சினை; இதற்கும் கோட்பாடு பிரச்சினைக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லை; இம்மாதிரி நடத்தப்படும் போர்கள் ஓரிரண்டு தவறாகவே இருந்தபோதிலும்; இத்தவறுகள் அப்பொழுதும் தனிப்பட்ட தவறுகளேயாகும்;
தளபதி, எதிரியின் அணிகளுக்குப் பின்னால் அணி வகுத்த யுத்தம் நடத்த வேண்டுமென்பதை ஒரு கோட்பாடாகக் கொள்ளாத வரையில் அது தனிப்பட்ட தவறுதானாகும். ஒருவேளை குறிப்பான ஒரு நிலையின் காரணமாக, நன்றாக போராடவும் கூடும். அதனால் இம்மாதிரியான தனிப்பட்ட, முற்றிலும் நடைமுறைத் தன்மை கொண்ட பிரச்சினைகளில் நாம், நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அடம்பிடித்துக் கொண்டும் ஒரு முடிவில்லாத முறையில் வாதித்துக் கொண்டும் இருக்கக் கூடாது.
மற்றொரு உதாரணம் : நமது ராணுவம், இன்றுள்ள தயாரிப்புடன் விரோதியின் பலமான ஸ்தானங்களையும், பிரதான நகரங்களையும் கோட்பாட்டின்படியே தாக்கக்கூடாது. இந்த கோட்பாடு பற்றி நமக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் இல்லையென்றால் விசேஷ நிலைமையை உத்தேசித்து அல்லது விசேஷ அவசியத்தினால் ஒரு முன்னேறிய தாக்குதல் தொடுத்தாலும், எதிரியின் ஒரு ஸ்தானத்தையோ அல்லது நகரத்தையோ கைப்பற்றினாலும், அது கோட்பாடு சம்பந்தப்படாத தனிப்பட்ட நடைமுறை பிரச்சினையேயாகும்.
ஆயினும் இந்த பலமான ஸ்தானத்தை, அந்த நகரத்தை பிடித்து விட்டோம், ஆதலின் விரோதியின் எல்லா பலம் பொருந்திய ஸ்தானங்களையும், நகரங்களையும் உடனே தாக்கத் தொடங்குவோம் என்றால், இங்கு கோட்பாட்டு பிரச்சினை எழுகிறது. உள்நாட்டு யுத்தகால கட்டத்தில் பெரிய நகரங்களின் மீது தாக்குதல்கள் தொடுக்க வேண்டுமென்று நமது தோழர்கள் சிலர் வாதித்தார்கள்; சில பெரிய நகரங்களை தாக்கும்படி செஞ்சேனையை கட்டளையிட்டார்கள்; இத்தகைய நடைமுறைப் பிரச்சினைகள் கோட்பாடு சம்பந்தப்பட்டதாகும்; ஏனெனில் பெரிய நகரங்களை செஞ்சேனை தாக்க வேண்டு மென்னும் கோட்பாட்டில் உள்ள பிடிப்பினால் உந்தப்பட்டுத்தான் பெரிய நகரங்களைத் தாக்கியுள்ளனர். கோட்பாடு சம்பந்தப்பட்ட இத்தகைய நடைமுறைப் பிரச்சினையில், கோட்பாடு சம்பந்தமாக நாம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. கோட்பாட்டில் இன்னும் பெரிய நகரங்கள் மீது முன்னேறி தாக்குதல்கள் தொடுக்க கூடாது என்றுதான் நிற்க வேண்டும்.
ஸ்தூலமான நடைமுறைப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் பல்வேறு பரிகாரங்கள் இருக்கும். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போவதற்கு பெரும்பாலும் யதார்த்தத்தில் சாத்தியமான பல்வேறு பாதைகளிருக்கும். இந்தப் பரிகாரங்களும், பாதைகளும், அந்த சமயத்தில் நம்மை எதிர்நோக்கும் நிலைமைக்குத் தக்கவாறு ஒவ்வொன்றும் அதனதன் சாதகபாதக அம்சங்களைக் கொண்டிருக்கும். சில வழிகளும், பாதைகளும் நமக்கு மிகவும் சாதகமாக இருக்கக் கூடும்; ஆனால் அதே சமயத்தில் அபாயம் நிறைந்ததாயிருக்கும். அதனால் பாதுகாப்பை உத்தேசித்து அதைக் காட்டிலும் குறைந்த அளவுக்கே சாதகமாகவுள்ள வழியையோ, அல்லது பாதையையோ நாம் பின்பற்றுவது உசிதமாக இருக்கும்.
அதனால் இத்தகைய ஸ்தூலமான, முற்றிலும் நடைமுறைத் தன்மை கொண்ட பிரச்சினைகளில், மாறுபட்ட அபிப்பிராயங்கள் எழுந்தால், அவ்வபிப்பிராயங்கள் கோட்பாடு சம்பந்தப்பட்டவையல்லாத வரையில், சமரசம் செய்து கொள்வதற்கும், விட்டுக் கொடுப்பதற்கும், மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்வதற்கும் நம்மாலியன்றளவுக்கு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். “சமரசம் செய்து கொள்வதில் உன் ஆற்றலைக் காட்டு ” அப்பொழுது பிரச்சினைகள் சுமுகமாக முடியும்; பிரச்சினைகள் உடனுக்குடன் தீரும். நாம் எப்பொழுதுமே நமது அபிப்பிராயத்தையே வலியுறுத்திக் கொண்டிருக்கக் கூடாது; மற்றவர்களையே விட்டுக் கொடுக்கும்படியும். இணங்கும் படியும் நமது அபிப்பிராயப்படியே காரியங்களைச் செய்யும்படியும் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் பிரச்சினைகள் தீருவதை காலதாமதப்படுத்தியவர்களாவோம்; வேலையின் முன்னேற்றத்தை தடை செய்தவர்களாவோம்; சச்சரவுகளை வலுக்கச் செய்வோம்; கட்சிக்குள் வீண் வம்பளக்கும் போக்கை பலப்படுத்தியவர்களாவோம்; தோழர்களுக்குள் ஒற்றுமைக்கு இடைஞ்சல் செய்தவர்களாவோம். அதனால்தான் முற்றிலும் நடைமுறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மாறுபட்ட அபிப்பிராயங் கொண்ட கட்சி அங்கத்தினர்களுடன் சாத்தியமான எல்லா வகையிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது, கோட்பாடு சம்பந்தமில்லாத நிகழ்கால கொள்கை சம்பந்தப்பட்ட கொள்கைப் பிரச்சினைகள் என்ன என்பதும், முற்றிலும் நடைமுறை சம்பந்தமான பிரச்சினைகள் என்ன என்பதும் நமக்குத் தெரியும்; அவை போராட்டத்தின் குறிக்கோள், அக்குறிக்கோளை எய்துவதற்கு உகந்த போராட்ட வடிவம், போர்த்தந்திரம், செயல்தந்திரம், நமது பொதுவான நிலை, குறிப்பான பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட நிலை முதலியவற்றுடன் சம்பந்தப்படாதவை. மேலே கூறியுள்ள உதாரணங்கள் இவ்வகைப்பட்ட பிரச்சினைகளாகும்.
இனி இதுவரை சொன்னதைத் தொகுத்துக் கூறுவோம். கட்சி, தொழிலாளி வர்க்கம் ஆகியவற்றிற்கான போராட்ட நலனை மனதிற்கொண்டே சகல பிரச்சினைகளிலும் ஈடுபட வேண்டுமென்பது நமக்கு வழிகாட்டும் பொதுக் கோட்பாடு. இந்தப் பொதுக் கோட்பாட்டிற்கு எல்லாம் உட்படுத்த வேண்டும். இந்தப் பொதுக் கோட்பாட்டிற்கு முரணான எந்தக் கண்ணோட்டமும், அபிப்பிராயமும், செயலும் எதிர்க்கப்பட வேண்டும். பல்வேறு கோட்பாடுகளும், பெரிய கோட்பாடுகள் எனவும், சிறிய கோட்பாடுகள் எனவும் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. பகுதி முழுமைக்குட்பட்டது;
உடனடி அவசியம், நீண்டகால அவசியத்திற்கு உட்பட்டது சிறிய கோட்பாடுகள், பெரிய கோட்பாடுகளுக்கு உட்பட்டவை என்பதே விதி. கோட்பாடு சம்பந்தமான விசயங்களில் எழும் வேற்றுமை விசயத்தில் ஒத்துப் போவது, சமரசம் செய்து கொள்வது என்பதற்கு இடமேயில்லை; ஒருமைப்பாடு ஏற்படுவதற்கு அப்பிரச்சினைகளை பரிபூரணமாக விவாதிக்க வேண்டும். ஆயினும் கோட்பாடு சம்பந்தப்படாத எல்லா பிரச்சினைகளிலும் விடாப்பிடியாக விட்டுக் கொடுக்காமலும் ஒத்துப் போகாமலும் இருக்கக் கூடாது; ரொம்பவும் வன்மையாகப் போராடவும் வாதிக்கவும் கூடாது; இல்லாவிடில் நமது வேலை தடைபடும். ஐக்கியம் சீர்குலையும்.
உட்கட்சிப் போராட்டத்தில் தன்னுடைய அரசியல் கொள்கை “சரியானதாக” இருக்கும் வரையில், சில அமைப்பு தவறுகளை அவர் செய்தால் அதனால் ஒன்றுமில்லை. அல்லது அது இரண்டாந்தர முக்கியத்துவம் கொண்டது தான் என்று ஒரு தோழர் சொல்வதை நான் ஒருமுறை கேள்விப்பட்டேன். அதனால் உட்கட்சிப் போராட்டத்தில் அமைப்புக் கட்டுப்பாட்டிற்கு ஒவ்வாத பல்வேறு வழிகளிலும் தனது எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கு அனுமதியுண்டு என்று அவர் அபிப்பிராயப்படுகிறார். இத்தகைய வாதமும், கண்ணோட்டமும் தவறானது என்று சொல்லத் தேவையில்லை. ஏனெனில் சரியான அரசியல் கொள்கையும், சரியான அமைப்புக் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரணானது என்று அவர் கருதுகிறார். கட்சிக்குள் ஒழுங்கையும் அமைப்பையும் சீர்குலைப்பது, கோட்பாடு விசயத்தில் பெருந்தவறு இழைப்பதாகும் என்று அவருக்குத் தெரியவில்லை. விசேஷமாக இன்று அது பெருந்தவறாகும். கட்சிக்குள் உள்ள ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துவதென்பது எதிரிக்குச் செய்யும் சிறந்த சேவையாகும்; கட்சியின், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு மிகப்பெருந் தீங்கிழைப்பதாகும்; கோட்பாடு சம்பந்தப்பட்ட வேறு எத்தவறைக் காட்டிலும் கடுமையான தவறு செய்ததாகும்.
கோட்பாடு சம்பந்தப்பட்ட இந்த விசயத்திலும் சரி வேறு பல பிரச்சினைகளிலும் சரி, குறிப்பிட்ட காலத்தில் பல்வேறு கோட்பாடு பிரச்சினைகள் கட்சியின் நலனை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்கிற அடிப்படையில் ஒப்பிட்டும், பாகுபாடு படுத்தியும் பார்ப்பதற்கும் தோழர்கள் கூடுமான வரையில் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய கோட்பாட்டிற்கு சிறிய கோட்பாடு உட்பட வேண்டும், முழுமைக்கு பகுதி உட்பட வேண்டும். என்னும் விதிப்படி எந்த கோட்பாடுகள் சம்பந்தமாக அடம் பிடிக்கக் கூடாது; தற்காலிகமாக விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், எந்தக் கோட்பாடு பிரச்சினைகளில் உறுதிகாட்ட வேண்டுமென்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் நாம் முடிவு செய்வோம்.
உட்கட்சி ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும் நிலை நிறுத்துவதற்காக, இந்த அளவுக்கு முக்கியத்துவமோ அல்லது அவசரமோ இல்லாத கோட்பாட்டுப் பிரச்சினைகள் சம்பந்தமாக மாறுபட்ட அபிப்பிராயங் கொண்ட, கட்சியில் உள்ள மற்றவர்களுடன் சில சமயங்களில் தற்காலிகமான சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். அம்மாதிரியான கோட்பாட்டுப் பிரச்சினைகளை தற்காலிகமாக நாம் கிளப்பக்கூடாது. அதன் மீது ஓயாமல் விவாதம் நடத்திக் கொண்டிருக்கக் கூடாது. அதற்குப்பதிலாக அந்தச் சமயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரச்சினைகளை நாம் வலியுறுத்த வேண்டும். இது கோட்பாட்டில் சமரசம் செய்து கொண்டதாகாது; நடுவாந்திரப் பாதையாகாது; யதார்த்த செயலில் செய்து கொண்ட சமரசமாகும். மெஜாரிட்டி முடிவுக்கு பணிவதேயாகும்.
மேலே கூறியுள்ளவை கட்சிக்குள் உள்ள கோட்பாடற்ற போராட்ட பிரச்சினைகளாகும். உட்கட்சி கோட்பாடற்ற போராட்டமும், யாந்திரீகமான, மிதமிஞ்சிய போராட்டமும் எதிலிருந்து வருகிறது? அதன் தோற்றுவாய்கள் என்ன? பின்வருவனவற்றிலிருந்து அவை உதிக்கின்றன:
முதலாவதாக, கட்சிக்குள் நமது தோழர்களின் தத்துவப் பயிற்சி பொதுவாக மிகக்குறைவாக இருக்கிறது; பலவிதங்களில் அவர்களது அனுபவம் போதுமானதாக இல்லை. நீண்ட காலத்திற்கு பூரா கட்சியின் மத்தியமும், தலைமையும் யதார்த்தத்தில் உருப்பெற வேயில்லை; இன்று வரை பல்வேறு ஸ்தலங்களில் வெகு சில தலைமைகளும், மத்தியங்களும்தான் உருப்பெற்று இருக்கின்றன.
இரண்டாவதாக, கட்சிக்குள் நிறைய குட்டி பூர்ஷ்வா நபர்கள் இருக்கிறார்கள். குட்டி பூர்ஷ்வாவின் வெறி, ஆவேசம், விவசாய குட்டி பூர்ஷ்வாவின் பழிதீர்க்கும் மனோபாவம் முதலியன உட்கட்சிப் போராட்டத்தை பாதித்துக் கொண்டேதானிருக்கின்றன.
மூன்றாவதாக, கட்சிக்குள் நிலவும் ஜனநாயக வாழ்வு அசாதரணமாயிருக்கிறது. பிரச்சினைகளை ஒருவரோடு ஒருவர் யதார்த்த நோக்குடன் விவாதிக்கும் முறை இன்னும் நிலைநாட்டப்படவில்லை; முரட்டுத்தனமாகவும், தன்மனப் பார்வையுடனும் பிரச்சினைகளை ஆராயும், முடிவுகட்டும் முறை பெருமளவுக்கு இன்னும் இருந்து வருகிறது.
நான்காவதாக, சந்தர்ப்பவாதிகள் கட்சிக்குள் ஊடுருவி விட்டார்கள்; நம் தோழர்களில் ஒரு பகுதியினர் உள்ளத்தில் ஒரு சந்தர்ப்பவாத மனோபாவப் போக்கு இருந்து வருகிறது; தாங்கள் எவ்வளவு நல்ல முறையில் “போல்ஷ்விக் ஆகியுள்ளார்” என்பதைக் காட்டுவதற்காக, வலதுசாரியைக் காட்டிலும் “இடதுசாரி” மேலானது என்று எண்ணிக்கொண்டு அவர்கள் பெரும்பாலும் வேண்டுமென்றே “இடதுசாரி”யாக இருப்பதற்கு முயலுகின்றனர். தங்கள் சொந்த கௌரவத்தை உயர்த்தும் பொருட்டுமற்றவர்களைத் தாக்குகிறார்கள்.
ஐந்தாவது ட்ராட்ஸ்கிய துரோகிகளும் எதிர்புரட்சிக்காரர்களும் கட்சிக்குள் ரகசியமாக நுழைந்து விட்டார்கள்; உட்கட்சிப் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டு கட்சியை சீர்குலைக்கப் பார்க்கின்றனர். பெரும்பாலும் இந்த ட்ராட்ஸ்கிய துரோகிகள், கட்சிக்கொடியின் மறைவில் சில தோழர்களை வேண்டுமென்றே தாக்குகின்றனர். அதன் பிறகு ஒரு ட்ராட்ஸ்கிய துரோகி தாக்கப்பட்ட தோழரைத் தொடர்பு கொள்வதற்கும், தங்கள் கோஷ்டியில் ஒரு ஒற்றனாக அவரை இழுப்பதற்கும், அனுப்பப்படுவான்.
உட்கட்சிப் போராட்டத்தில் காணப்படும் திரிபுகளின் தோற்றுவாய்கள் இத்தகையவை.
ஆரம்பத்திலிருந்தே நமது கட்சியில் தீவிர சுய விமர்சனமும் , உட்கட்சிப் போராட்டமும் இருந்து வந்திருக்கிறது இது முற்றிலும் அவசியமானது; ரொம்ப நல்லதும் கூட. நமது உட்கட்சிப் போராட்டத்தில் ரொம்ப விசயங்கள் சரியாகவும் பொருத்தமாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதனால் நமது கட்சி, உட்கட்சிப் போராட்டத்தில் பலதும் சாதித்திருக்கிறது; கட்சியின் தத்துவப் பயிற்சி நிலையையும் ஓரளவுக்கு உயர்த்தியிருக்கிறோம். இந்த சுயவிமர்சனங்களும், உட்கட்சிப் போராட்டங்களும்தான் நமது கட்சியை முன்னேற்றப் பாதையில் உந்திச் செல்லும் சக்தியாக விளங்குகின்றன என்பதை மறுக்க முடியாது. கட்சிக்கு அவை இன்றியமையாதவை.
ஆயினும் நமது கட்சியின் நீண்ட சரித்திரப் பூர்வமான வளர்ச்சியில் கடந்தகால உட்கட்சிப் போராட்டம் முறையாக நடத்தப்படவில்லை என்பதையும் மறுக்க முடியாது. அதன் விளைவாக உட்கட்சிப் போராட்டம் பெருஞ்சேதம் உண்டாக்கிற்று. அதனால் இன்று நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், கடந்த கால தவறிலிருந்து நாம் பலன் பெற வேண்டும்; வீணாக நாம் பெரும்நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால உட்கட்சிப் போராட்டத்தின் சரித்திரப் பூர்வமான படிப்பினைகளை கற்றறிவதன் மூலம் கட்சியின் மகத்தான முன்னேற்றத்தை நாடவேண்டும்.
உட்கட்சிப் போராட்டத்தில் கூடுதலான சாதனைகளைப் பெறுவதற்கும், குறைந்த நஷ்டத்தில் கட்சியின் அதிகபட்ச முன்னேற்றத்தை சாதிப்பதற்கும் நிற்பதே நிகழ்காலத்திலும் எதிர் காலத்திற்கும் உட்கட்சிப் போராட்டக் கொள்கையாகும். சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சரித்திரப் பூர்வமான உட்கட்சிப் போராட்டப் படிப்பினைகளை கற்றறிவதன் மூலம் நாம் அதை வகுத்து வைக்கவேண்டும். இதற்கு கடந்தகால உட்கட்சிப் போராட்டத்தில் காணும் பல்வேறு திரிபுகளையும் தவறுகளையும் அறவே சரிப்படுத்தியாக வேண்டும்; உட்கட்சிப் போராட்டத்தை முறையாகவும் பலன் தரும் முறையிலும் நடத்தவேண்டும்.
(தொடரும்)