உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 8
IV. கட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டம்
தோழர்களே! இப்பொழுது உட்கட்சிப் போராட்டத்தில் மற்றொரு திரிபை – கட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டத்தை – விவாதிக்கப் போகிறேன். இத்தகைய போக்கு குறிப்பாகவும் மோசமான அளவிலும் சீனக் கட்சியில் நிலவுகிறது. அந்நிய நாட்டுக் கட்சிகளில் “வீண் வம்பளக்கும் போக்கு” இருந்து வந்த போதிலும், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருப்பது போன்று அங்குள்ள நிலைமை அவ்வளவு மோசமாக இருப்பதாக நான் எண்ணவில்லை. ஆதலால் இத்தகைய போக்கு பற்றி நமது தோழர்கள் பரிபூரணமாக உணரும்படியாகச் செய்ய வேண்டும்; அதை சமாளிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் கட்சியின் ஐக்கியத்திற்கும் வேலைக்கும் பெரும் இடைஞ்சல் ஏற்படும்.
கட்சிக்குள் கோட்பாடற்ற தகராறுகள், போராட்டங்கள் எவை?
கீழ்க்காணும் தகராறுகளும், போராட்டங்களும் கோட்பாடற்றவை என்ற கருத்தைக் கொண்டிருக்கிறேன். அதாவது அவை நமது கட்சி, தொழிலாளி வர்க்கம் ஆகியவற்றின் புரட்சிகரமான நலன்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பொதுவானநிலை கோட்பாடு முதலியவற்றிலிருந்து மாறுபடுவதாகும்.
முதலாவதாக, சில தோழர்கள் கட்சி நிலையிலிருந்தோ அல்லது கட்சி முழுமையின் நலனை அடிப்படையாகக் கொண்டோ பிரச்சினைகளைக் கிளப்புவதோ, மற்ற தோழர்களை எதிர்த்தல் அல்லது போராட்டங்களை நடத்துவதோ இல்லை; தனது தனிப்பட்ட நலனையோ அல்லது கோஷ்டியின் நலனையோ கண்ணோட்டத்தில் கொண்டே பிரச்சினைகளை கிளப்பவும், மற்ற தோழர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தவும் செய்கின்றனர். அதாவது உட்கட்சி போராட்டம் நடத்துவதில் அவர்கள் நிலை சரியானதில்லை. அதனால், பிரச்சினைப் பற்றி அவர்கள் கண்ணோட்டம், கொள்கை, வழிகளை, அவை தங்களுக்கும் ஒருசில நபர்களுக்கும் உபயோககரமாக இருக்கும் வரையில் ஆதரிப்பார்கள். அதற்காக வாதாடவும் செய்வார்கள். குறிப்பிட்ட நடவடிக்கைகள் தங்களுக்கோ அல்லது அந்த ஒருசில நபருக்கோ அனுகூலமாகவில்லை என்றால், அவற்றை எதிர்ப்பார்கள்; நிராகரித்து விடுவார்கள். அத்தகைய நடவடிக்கைகள் கட்சிக்கு, அல்லது புரட்சிக்கு பயன் தரத்தக்கவையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அப்படியில்லையென்றால் அத்தகைய நடவடிக்கைகளை இரண்டாந்தர முக்கியத்துவங் கொண்டவையாக ஒருபுறம் தள்ளிவிடுகின்றனர். ஆகவே இவர்கள் எதிர்ப்பதும் சரி, ஆதரிப்பதும் சரி, முற்றிலும் கோட்பாடற்றவையே; கட்சி, புரட்சி முதலியவற்றின் கோட்பாடுகளிலிருந்து விலகியதேயாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் கோட்பாடு கட்சியின், புரட்சியின் கோட்பாடு அல்ல; அவர்கள் சொந்த நலனுக்கான கோட்பாடுகள். ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த நலனையே தனது கோட்பாடாகக் கொண்டு விட்டால், பின் அவரது நலனும் கோட்பாடும் மற்றவர்களுடைய நலன் கோட்பாடு முதலியவற்றுடன் நிச்சயம் மோதத்தான் செய்யும்; ஒருவரோடு ஒருவர் சண்டையிடத்தான் செய்வார்கள்.
உதாரணமாக, நீங்கள் உங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் பணியாட்கள், குதிரைகள், உணவு, துணி, வைத்திய வசதி, பதவி உயர்வு முதலியவை சம்பந்தமாக சண்டையிட்டுக் கொண்டீர்கள் அல்லது போராடினீர்கள். இத்தகைய விசயங்கள் தனிப்பட்ட, கோட்பாடற்ற விசயப் பகுதியில் சேரும். பணியாட்கள், உணவு, துணி, வைத்திய வசதி முதலியனவற்றை கட்சி பயனடையும் வகையில் விநியோகிப்பதற்கு பொது விதிகள் பற்றி, தோழர்கள் ஆலோசனை கூறுவதில்லை; கட்சி அல்லது பள்ளிக்கூடம் இந்த கோட்பாடுகளை அமல் நடத்த வேண்டும் என்று கேட்பதில்லை; ஆனால் அவர்களது கேள்விகள் பின்வருமாறு அமைகின்றன:- “எனக்கு அவர்கள் ஏன் ஒரு பணியாள் அல்லது குதிரை கொடுக்கக்கூடாது? எனக்கு ஏன் அவர்கள் வைத்திய வசதி கொடுக்கக்கூடாது? என்னை ஏன் அவர்கள் உயர்த்தக்கூடாது? எனக்கு ஏன் அவர்கள் உணவும், உடையும் கொடுக்கக்கூடாது?” எல்லாம் “என்னை”ச் சுற்றித்தான் எழுகிறது; “நான்” என்ற நிலையிலிருந்துதான் எல்லாம் தோன்றுகின்றன; இந்த ரீதியில் தகராறுகள் கிளப்பப்பட்டு கட்சிக்குள் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதனால் தனிப்பட்ட முறையில் திருப்தியடைந்திருந்தால், மற்றபடி விசயங்கள் முறையற்ற முறையில் அமைந்திருந்தாலும் அதைப் பற்றி அவர்கள் சிறிதேனும் கவலைப்பட்டுக் கொள்வதில்லை. இது ஒரு வகையான கோட்பாடற்ற போராட்டமாகும்.
மற்றொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், சில தோழர்கள் ஊதாரித்தனத்தை எதிர்க்கின்றனர். சில தோழர்கள் கட்சியின் நலனை அடிப்படையாகக் கொண்டு, கட்சி நிலையில் நின்று ஊதாரித்தனத்தை எதிர்க்கின்றனர். அவர்கள் எளிய வாழ்க்கைக் கோட்பாட்டையும் ஊதாரித்தனத்திற்கு உள்ள பல திருஷ்டாந்தங்களையும் எடுத்துக்காட்டி, விமர்சித்து, அதை அவர்கள் எதிர்க்கிறார்கள்; சிக்கனத்திற்கு சில யோசனைகள் சமர்ப்பித்து அதை அமல் நடத்தும்படி கட்சியைக் கேட்கின்றனர். இது சரியானது.
ஆனால் இன்னும் சில தோழர்கள் கட்சியின் நலனை அடிப்படையாகக் கொண்டு, கட்சியின் நிலையில் நின்று ஊதாரித்தனத்தை எதிர்ப்பதில்லை. இவர்கள் கிளப்பும் கேள்விகள் பின் வருமாறு:
“சிலர் எவ்வளவு பணம் விரயம் செய்திருக்கின்றனர்; சிலருக்கு இவ்வளவு நல்ல உணவு கிடைத்துள்ளது ; சிலருக்கு இவ்வளவு நல்ல உடை இருக்கிறது; சிலருக்கு… அப்படியானால் அது மாதிரி நான் ஏன் சாப்பிடக்கூடாது? அம்மாதிரி பணம் செலவிடக்கூடாது? அம்மாதிரி உடை அணிந்து கொள்ளக்கூடாது? பழம் பெருச்சாளியாவதற்கு போதிய வருடங்கள் எனக்கு ஆகவில்லை என்பதினாலா? அல்லது நான் கட்சிக்கு ஒரு சேவையும் செய்யவில்லை என்பதினாலா?” ஆதலால் அவர் ஊதாரித்தன எதிர்ப்பு என்ற கோஷத்திற்காக நின்று போராடுகிறார். மற்றவர்களைப் போல் பணத்தை வீண் விரயம் செய்வதற்கு தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதுதான் இதற்கு காரணம். இதுவும் ஒருவகையான கோட்பாடற்ற போராட்டமாகும்.
இன்னுமொரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்களேன்! கிழக்கு ஏன்வேயில் அரசாங்க சிப்பந்திகளுக்கு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டது.* ஆகவே சில தோழர்கள் சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தைக் கொண்டு அரசாங்க அமைப்புகளில் வேலை செய்வதற்கு அனுப்பப்படும்படியாக கேட்டுக் கொண்டார்கள்; அவர்கள் போவதற்கு அனுமதிக்கப்படாத பொழுது, அரசாங்க சிப்பந்திகள் சம்பளம் பெறுவதை எதிர்க்கும் கோஷத்தின் பேரில் அவர்கள் போராட்டம் துவக்கினார்கள். மேலும் அரசாங்க சிப்பந்திகளின் வாழ்க்கை அலவன்ஸ்களை நிர்ணயிப்பது எங்ஙனம் என்பதற்கு கோட்பாடு சம்பந்தமான யோசனைகள் கொடுக்கவோ, அவற்றை விவாதிக்கவோ இல்லை. இதுவும் ஒருவகை கோட்பாடற்ற போராட்டமாகும்.
இரண்டாவதாக, சில தோழர்கள் கட்சிக்குள் தகராறுகளை கிளப்பிவிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்; ஆனால் அது கட்சி விவகாரங்களை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதில்லை. அதற்கு மாறாக அவற்றை இன்னும் படுமோசமாக்குவதற்குதான் செய்கின்றனர்; அல்லது அந்தரங்க நோக்கத்துடன் செய்கின்றனர். அத்தகைய நோக்கம் தவறானதாகும். இதுவும் கோட்பாடற்ற போராட்டமாகும். உதாரணமாக முக்கியமானவர் என்று எண்ணப்பட வேண்டுமென்பதற்கு, சொந்த அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, கௌரவத்தை விட்டுக் கொடுக்காமலிருப்பதற்கு, ஏன்? மற்றவர்களை பழி தீர்த்துக் கொள்வதற்குகூட, சில தோழர்கள் நிலைமை, அப்பொழுதுள்ள சுற்றுச்சார்பு முதலியவைகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கட்சிக்குள் மற்ற தோழர்களை எதிர்த்து அவர்கள் வேலைகளையும், திட்டங்களையும் கட்சிக்குள் ஒழுங்கு, ஒற்றுமை முதலியவற்றையும் சீர்குலைத்துக் கொண்டு, தகராறுகளை கிளப்பி விட்டு, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவும் இதே கோட்பாடற்ற பகுதியைத்தான் சேரும்.
மூன்றாவதாக, சில தோழர்கள் ஏதாவது ஒன்றை அமல் நடத்த வேண்டுமென்றோ அல்லது கைவிட வேண்டுமென்றோ கட்சியைக் கேட்டுக் கொண்டு, கோட்பாடுகள் அடிப்படையில் பிரச்சினைகளை கிளப்புவதில்லை; ஆனால் தனிப்பட்ட இதய சலனங்கள், விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைகளை எழுப்புகிறார்கள், போராட்டங்களை நடத்துகிறார்கள். அவர்கள் ஆட்களை ஏசுகிறார்கள்; அவர்கள் மீது வெறி கொள்கிறார்கள்; ஏனெனில் அவர்கள் ஒரு விநாடி மனதிருப்தியடையவும், மன வருத்தத்தையும், குரோதத்தையும் கொட்டிக்கொள்ளவும் விரும்புகின்றனர். இதுவும் ஒரு வகையான கோட்பாடற்ற போராட்டமாகும். இன்னும் சில தோழர்கள் உண்டு; இவர்களுக்கு தங்களுக்குள்ள குறைவான அனுபவத்தினாலும், குறைவான தத்துவ பயிற்சியினாலும் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரச்சினைகளை கிளப்பவும், விவாதிக்கவும் முடியாமற் போகிறது. இவர்கள் பொதுக் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பதிலாக தனித்து நிற்கும் துண்டு துக்காணியான, அறவே நடைமுறை சம்பந்தமற்ற பிரச்சினைகளிலும் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும், கோட்பாடு சம்பந்தமில்லாத நிகழ்காலக் கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் மற்ற தோழர்களுடன் ஒருக்காலமும் தீராத தகராறுகளில் ஈடுபடுகின்றனர். ஆதலால் இதுவும் ஒருவகை கோட்பாடற்ற போராட்டமாகும். அதை பிடிவாதம் பிடிக்கக்கூடாது.
உதாரணமாக, சில போராட்டங்கள், சில காரியங்கள் சில போராட்ட வடிவங்கள், சில அமைப்பு முறைகள் முதலியன பற்றி சில தோழர்கள் மாறுபாடான அபிப்பிராயங்கள் கொண்டுள்ளனர். இவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று நிலைநாட்டுகின்றனர். பொதுவான போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகளையும், பொதுவான நடைமுறைக் கொள்கையையும் போராட்டம், ஸ்தாபனம் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய பொதுவான கருத்துக்களையும் கொஞ்சம் கூட சம்பந்தப்படுத்திக் கொள்ளாமலே முடிவில்லாமல் வாதாடுவார்கள். அவர்களுடைய பிரச்சினைகள் தவறான முறையில் கிளப்பப்பட்டிருக்கிறது. ஆதலின் வழக்கமாகவே சரியான முடிவுக்கு வருவது சாத்தியமில்லை. இல்லையெனில் மாறுபட்ட அபிப்பிராயங்களுள் ஏதாவது ஒன்றாவது சரியாக இருக்க வேண்டும். பிரயோஜனமில்லாத வீண்பேச்சுத்தான் பெரும்பாலும் ஏற்படும் பலன்.
நான்காவதாக, உட்கட்சிப் போராட்டம் வகுத்தளிக்கப்பட்டுள்ள அமைப்பு முறைகளை அனுஷ்டிக்காமல், நியாய, அநியாய வழி எதுவானாலும் பரவாயில்லை என்று நடத்தப்படுகிறது. இதன் திருஷ்டாந்தங்கள் ஆவன :- கட்சிக்குள் கோட்பாடில்லா முறைகளில் தோழர்களை தன் பக்கத்திற்கு இழுத்துக் கொள்வது அல்லது எதிர்த்துத் தாக்குவது; தொல்லைகளைக் தூண்டிவிடுவது அதன் மூலம் தோழர்களுக்குள் பிளவுகள் உண்டாக்குவது; மற்ற தோழர்களுக்கு எதிராக சதி செய்து அவர்களுக்கு வலை விரித்து வைப்பது; ஒருவர் முன்னிலையில் ஒன்றும் சொல்லாமல் போன பிறகு அவர்களுக்கு பின்னாலிருந்து பேசுவது; கட்சியை பொறுப்பின்றி விமர்சனம் செய்வது; வம்பளப்பது; வதந்திகளைப் பரப்புவதில் ஈடுபடுவது; பொய் சொல்வது; பிற தோழர்களை அவதூறு செய்வது முதலியன.
மேலே கூறப்பட்டுள்ள போராட்டங்கள் கோட்பாடில்லாத போராட்டங்கள். இதுவன்றி கோட்பாடான போராட்டத்தில் சில கோட்பாடற்ற போராட்ட அம்சங்களைக் கலக்கவும், கோட்பாடான போராட்டக் கொடியின் கீழ் கோட்பாடற்ற போராட்டங்களை நடத்தவும் செய்கின்ற சில தோழர்கள் உண்டு. இன்னும் சிலருக்கு, குறிப்பிட்ட ஒரு நபருக்கும், மற்றவருக்குமிடையேயுள்ள தகராறு பற்றி இருவருக்குமிடையேயுள்ள அசாதாரண உறவு நிலையில்தான் விசேச அக்கறையே ஒழிய அச்சச்சரவின் சாராம்சம் என்ன என்பதில் அக்கறை கிடையாது.
படிக்க :
♦ உட்கட்சிப் போராட்டத்தின் 3 முக்கியத் திரிபுகள் || லியூ ஷோசி
♦ தனிநபர் மீதான தாக்குதல், உட்கட்சிப் போராட்டமாகாது || லியூ ஷோசி
கட்சிக்குள் நிகழும் இத்தகைய கோட்பாடில்லாத போராட்டங்கள் அனைத்தும் நல்லதன்று; கட்சிக்கு தீங்கிழைக்கக் கூடியவை.
தோழர்கள் கேட்கக்கூடும்; கோட்பாடு என்றால் என்ன என்று? கோட்பாடு சம்பந்தப்படாத, முற்றிலும் நடைமுறைத் தன்மை படைத்த பிரச்சினைகள் என்பவை எவை? நிகழ்கால கொள்கை சம்பந்தமான பிரச்சினை என்பது எது? எந்தப் பிரச்சினை சம்பந்தமாகவும் நான் ஏன் கொள்கையையே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொள்ளக் கூடாது? என்னுடன் மாறுபாடாக கருத்துக் கொண்டவர்களுடன் சாத்தியமான சகல வழிகளிலும் நான் ஏன் சமரசமாகப் போக வேண்டும்?
தோழர்களே! உண்மையிலேயே தெளிவுபடுத்தப்பட வேண்டிய விசயங்கள் இவை.
———-
* ஜப்பானிய எதிர்ப்பு யுத்தகாலத்தில் விடுதலைப் பிரதேசங்களிலிருந்து அரசாங்க சிப்பந்திகளுக்கு சகல அன்றாட தேவைகளும் கொடுக்கப்பட்டு வந்தன. சொந்த சில்லறை செலவுக்குக் கொடுக்கும் பணம்போக அவர்களுக்கு சம்பளம் என்று ஒன்றும் கிடையாது.
– ஆசிரியர் குறிப்பு