உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 4
நமது உட்கட்சிப் போராட்டம், கோட்பாடு பற்றிய போராட்டம்; இந்தக் கோட்பாட்டுக்கு அல்லது அந்த கோட்பாட்டுக்கு நிகழ்த்தும் போராட்டம்; இந்த போராட்டத்தின் அல்லது அந்த போராட்டத்தின் இலட்சியத்தை வரையறுத்துக் கூறும் போராட்டம். இலட்சியத்திற்கு இட்டுச் செல்ல இந்த அல்லது அந்த போராட்ட வடிவத்தை தேர்ந்தெடுப்பதற்கான போராட்டம் என்று நமது தோழர்கள் புரிந்து கொள்ளவில்லை.
அவ்வப்போதைய கொள்கை விசயத்தில், பூரணமாக நடைமுறைத் தன்மை கொண்ட பிரச்சினைகளில் கட்சிக்குள் இருக்கும், நம்முடன் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களுடன் நாம் ஒப்பந்தத்திற்கு வரமுடியும்; வரவும் வேண்டும் என்று இந்தத் தோழர்கள் புரிந்து கொள்ளவில்லை. கோட்பாடு சம்பந்தப்பட்ட – பிரச்சினைகளில், நமது போராட்டங்களின் இலட்சியத்தை வரையறுத்துக் கூறும் பிரச்சினைகளில், அத்தகைய இலட்சியத்தை அடைவதற்கு முடிவு கட்ட வேண்டிய போராட்ட வடிவ விசயத்தில், கட்சிக்குள் தங்களுடன் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களை எதிர்த்து வளைந்து கொடுக்காமல் போராட வேண்டும் என்றும், ஆனால் வழக்கிலிருந்து வருகின்ற கொள்கைப் பிரச்சினைகளிலும், பூரணமாக செயல்முறைத் தன்மை படைத்த பிரச்சினைகளிலும், அவை பொறுத்தமட்டில் கோட்பாடு சம்பந்தப்பட்ட மாறுபாடு எழாதமட்டிலும் கட்சிக்குள் அவ்விசயங்களில் தங்களுடன் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களுடன் விட்டுக் கொடுக்காமல் போராடுவதற்கு பதிலாக அவர்களுடன் ஒத்துப் போக வேண்டும் என்றும் அவர்களுக்கு தெரியவில்லை; புரியவுமில்லை.
லெனின், ஸ்டாலின் கட்சியில் குறிப்பாக இதுதான் பரம்பரையான வேலைமுறை; ஆயினும் நமது தோழர்கள் பலர் இதை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. ஒத்துப் போகவேண்டிய பிரச்சினைகளில் விடாப்பிடியாகப் போராட்டம் நடத்துகின்றனர்; இதன் விளைவாக அவர்கள் சண்டை போடாத பிரச்சினையே கிடையாது; அவர்கள் சண்டை போடாத நேரம் கிடையாது; அவர்கள் சண்டை போடாத ஆள் கிடையாது. அவர்களுடன் மாறுபட்டவர்கள் அனைவரையும் எதிர்த்துப் போராடினார்கள்; எல்லோரையும் ஒரேவிதமாக எதிர்த்தார்கள்; எதிலும் விட்டுக் கொடுப்பதில்லை; எப்பேர்ப்பட்ட நிலைமையானாலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்; எவ்வித மாறுபாடானாலும் அதை விரோதமானதாகவே பாவித்தார்கள்; எதிர்ப்பதுதான் எல்லாம் என்று நம்பினார்கள்; அவர்களுடைய வரையறையற்ற தன்மை இதில்தான் அடங்கியிருக்கிறது.
கோட்பாடு என்றால் என்ன? எந்த பிரச்சினைகள் கோட்பாடு சம்பந்தப்பட்டவை? கட்சியின் போர்த்தந்திர, செயல்தந்திரக் கொள்கைகள் என்ன என்பதை பல தோழர்கள் புரிந்து கொள்ளவில்லை. கோட்பாடு, போர்த்தந்திரத் திட்டம், செயல்தந்திரக் கொள்கை சம்பந்தப்பட்ட மாறுபாடுகளை உள்வாங்கிக் கொண்டு எப்படி போராட்டத்தை நடத்துவது என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை; தத்துவத்தில் அவர்களுடைய பயிற்சி மிகவும் குறைவாக இருந்தது; அரசியல் அனுபவமும் குறைவே. பெரிய அளவு முக்கியத்துவம் கொண்ட பிரச்சினைகளை அவர்களால் இன்னும் உள்வாங்கிக் கொண்டு, அந்த பிரச்சினைகள் மீது போராட்டம் நடத்த முடியவில்லை.
ஆயினும் உட்கட்சிப் போராட்டம் இருந்தாக வேண்டும். முக்கியமான பிரச்சினைகள் பற்றி போராட்டம், வாக்குவாதம் நடத்தாமலிருப்பதும் சம்பந்தப்பட்ட கோட்பாட்டின் அடிப்படையிலும்; கண்ணோட்டத்திலும் பிரச்சினைகளை கிளப்பாமலிருப்பதும் தவறு என்ற விசயத்தை மட்டும், ஒரே வறட்டுத்தனமாக மனப்பாடம் செய்து கொண்டு அதோடு அவர்கள் போராட விரும்பினார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட சம்பவங்கள், தனிப்பட்ட பிரச்சினைகள் மட்டுமே அவர்கள் கண்ணில் படுவதினாலும், மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களுடன் கட்சிக்குள் அர்த்தமற்ற, கோட்பாடற்ற போராட்டங்கள், வாக்கு வாதங்கள் நடத்துவதினாலும் தோழர்கள் மத்தியில் வேற்றுமை, பரஸ்பரப் பூசல், அமைப்பு பிளவுகள் முதலியன ஏற்பட நேருகிறது. இத்தகைய தீய போக்குகள் நமது உட்கட்சிப் போராட்டத்தில் இருந்தன.
மேலே குறிப்பிட்டது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சிப் போராட்டத்தில் உள்ள ஒருவகை திரிபு; சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் காணும் படு மோசமான திரிபு; (இத்தகைய திரிபு மற்ற நாட்டுக் கட்சிகளில் காணப்பட்ட போதிலும்) வரம்பின்றி, அளவுக்கு மிஞ்சி அதிதீவிரமாக நடத்தப்படும், மற்றொரு கோடிக்கு இழுத்தும் செல்லும் – அதாவது உட்கட்சிப் போராட்டத்திலும், கட்சி அமைப்பு விசயத்திலும் “இடதுசாரி” சந்தர்ப்பவாதத்திற்கு இட்டுச் செல்லும் – உட்கட்சிப் போராட்டமாக அமையும் (அது கட்சிக்குள் ஜனநாயகத்தை மறுக்கிறது. கோட்பாடு சம்பந்தமான விசயங்களில் ஒற்றுமையின் அடிப்படையில் உட்கட்சி சமாதானத்தை நிராகரிக்கிறது, தொழிற்சங்கங்களின், மற்ற பொதுமக்கள் அமைப்புகளின் ஓரளவு சுயேச்சையையும் மறுக்கிறது; கட்சி அங்கத்தினர்களின் தனிப்பட்ட குண சிறப்பு, முன்கை எடுக்கும் குணம், ஆக்கல் திறமை முதலியன மறுக்கப்படுகிறது.) இந்தத் திரிபு சீனக் கட்சியின் விசேஷ சுற்றுச் சார்பினாலும் நிலைமையினாலும் எழுந்துள்ளது.
பல சீனத்தோழர்கள் தோழர் லெனின், அக்டோபர் புரட்சிக்குப் பின் தோன்றிய “இடதுசாரி” சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து நிகழ்த்திய கோட்பாடுள்ள போராட்டத்தை கவனிக்கவில்லை என்ற விசயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து ரஷ்யக் கட்சியில் “இடதுசாரி ” கம்யூனிஸ்டு கோஷ்டி தோன்றிற்று. இந்த கோஷ்டி பிரெஸ்ட் – லிட்டோவ்ஸ்க் சமாதான உடன்படிக்கையை, எதிர்த்தது; பின்னர் தொழிற்சங்க விசயத்திலும் தகராறு இருந்தது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு “இடதுசாரி” தோற்றத்துடன் ஆட்ஸேவிஸ்டுகள் கோஷ்டி ஒன்று போல்ஷ்விக் கட்சிக்குள் இருந்து வந்தது. ஆனால் இந்த கோஷ்டி விரைவில் தோற்கடிக்கப்பட்டது; பிரெஸ்ட் – லிட்டோவ்ஸ்க் சமாதான உடன்படிக்கை ஏற்பட்ட சமயத்தில் “இடதுசாரி” கம்யூனிசத்தினால் சிருஷ்டிக்கப்பட்ட நிலைமையைப் போன்று அன்று நிலைமை அவ்வளவு மோசமாகப் போய்விடவில்லை; ஆனால் “இடதுசாரி” கம்யூனிசத்தையும் லெனின் கொஞ்ச காலத்தில் தோற்கடிக்கத்தான் செய்தார்.
ஆனால் “இடதுசாரி” கம்யூனிசம் மீண்டும் மேலைய ஐரோப்பிய நாடுகளில் தலைதூக்கிற்று. “சமரசமில்லை ” என்ற கோஷத்தைக் கிளப்பிற்று; பார்லிமெண்டுகளில் பங்கு எடுத்துக் கொள்வதை எதிர்த்தது; எல்லாவிதமான சட்டப்பூர்வமான போராட்டங்களையும் எதிர்த்தது; சமூக ஜனநாயகக் கட்சிகளின் “இடதுசாரி” பகுதிகளுடன் அவசியமான ஒப்பந்தங்கள் செய்து கொள்வதை எதிர்த்தது; இந்த சூழ்நிலையில்தான், 1920ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் இத்தகைய போக்குகளைத் திருத்துவதற்கு “இடதுசாரி கம்யூனிசம்; இளம்பிள்ளைக் கோளாறு“ என்ற புத்தகத்தை லெனின் எழுதினார்.
அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதில் இதற்கு முன்னர் நம்பிக்கை இல்லாதவர்கள் கண்முன் உண்மையான யதார்த்தம் நின்றது. இந்த விசயம் வலதுசாரி சந்தர்ப்பவாதத்திற்கு மரண அடி கொடுத்தது.
இந்த சூழ்நிலையில்தான் “இடதுசாரி” சந்தர்ப்பவாதம் பிறந்தது; இதன் வாதமென்னவெனில் புரட்சி சுற்றி வளைத்த பாதைகள் வழியே போக வேண்டியதில்லை; வெற்றி நினைத்த மாத்திரத்தில் கைகூடும் என்பதேயாகும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இத்தகைய கருத்துக்கள் நிலவின; சில கால கட்டங்களில் கட்சியில் மேலோங்கி நின்ற கருத்துக்களாகவும் விளங்கி வந்துள்ளன. அத்தகைய தவறுகள் செய்பவர்கள், “இடதுசாரி கம்யூனிசம்; இளம் பிள்ளைக் கோளாறு” எனும் லெனின் எழுதிய முக்கிய நூலை அறவே அலட்சியம் செய்தார்கள். அரசியல் ரீதியில் வளைந்து நெளிந்து போவதையும் காத்திருப்பதையும் எதிர்க்கிறார்கள். முன்னணியிலுள்ள ஒரு சிறுபான்மையினர், பரந்த பொதுமக்கள் இன்னும் இவர்கள் அடைந்த நிலைமையை எட்டிப் பிடிக்கவில்லை என்ற விஷயத்தை பொருட்படுத்தாமல் வீரச் செயல் வாதமுறையில் முன்னேறித் தாக்கும் தாக்குதலை தொடுக்கலாம் என்று அவர்கள் ஒரே சாதனையாக சாதித்தார்கள், இதை மற்றவர்கள் எதிர்த்ததால் அவர்களை “வலதுசாரி சந்தர்ப்பவாதத்தில் ” மூழ்கிக் கிடப்பதாக குற்றஞ்சாட்டினார்கள்.
அமைப்பு விசயங்களில் எழும் வலதுசாரி, “இடதுசாரி” திரிபுகள், அரசியல் பிரச்சினைகளிலுள்ள வலதுசாரி, “இடதுசாரி” திரிபுகளிலிருந்து தோன்றுகிறது; சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சில கால கட்டங்களில் வலதுசாரி, “இடதுசாரி” அரசியல் தவறுகள் செய்திருப்பதினால், அமைப்பு விசயத்திலும் கட்சி அதே தவறுகளைச் செய்திருக்கிறது. குறிப்பாக உள்நாட்டு யுத்த காலகட்டத்தில், நமது “இடதுசாரி வீரச்செயல்”வாதத் தவறுகளுக்குக் காரணமாயிருந்த அம்சம் அமைப்பு விசயத்தில் மிதமிஞ்சிய ஆவேசத்துடன் நிகழ்ந்த உட்கட்சிப் போராட்டமேயாகும்.
ஆதலின் சீனக் கம்யூனிஸ்ட் உட்கட்சி போராட்ட விசயத்தில் மூன்று விதமான திரிபுகள் உள்ளன. இந்த முறையில் அவர்களை தொகுப்பது தவறில்லையென்றும் சொல்லலாம். முதலாவது, கட்சிக்குள் தாராளவாதம் சமரசவாதமும்; இரண்டாவது இயந்திரகதியான மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டமும், அமைப்பு விசயத்திலும் உட்கட்சிப் போராட்டம் பற்றியும் “இடதுசாரி” சந்தர்ப்பவாதம்; மூன்றாவது, கட்சிக்குள் கோட்பாடற்ற தகராறுகளும் போராட்டங்களும்.
இந்த மூன்று திரிபுகளுக்கு இடையே உள்ளடக்கத்தில் ரொம்ப வித்தியாசம் ஒன்றுமில்லை; ஏனெனில் கட்சிக்குள் கோட்பாடற்ற தகராறுகள், போராட்டங்கள், மிதமிஞ்சிய போராட்டங்கள், தாராளவாதம் எதுவுமே மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் முறையாகாது. இவையெல்லாம் மார்க்சிய லெனினியத்திற்கு எதிர்ப்பை பிரதிபலிப்பனவேயாகும். அவற்றின் வெளித் தோற்றத்தை வைத்துத்தான் மேலே கூறிய மூன்றுவிதமாக அவை பிரிக்கப்படுகின்றன.
கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய விசேசச் சூழ்நிலையில்தான் உருவாக்கப்பட்டது; அதன் உட்கட்சிப் போராட்டத்தில் எழுந்துள்ள திரிபுகளும் இத்தகைய விசேச சூழ்நிலையில்தான் எழுந்துள்ளன.
(தொடரும்)