ரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த கட்சிகள் ஸ்தாபனம் சம்பந்தமாகக் கொண்டிருந்த வலதுசாரி சந்தர்ப்பவாதத்தையும், தொழிலாளி வர்க்க அரசியல் கட்சிகள் அவசியமில்லையெனும் எக்னாமிஸ்டுகள், சிண்டிகலிஸ்டுகளின் தத்துவத்தையும் எதிர்த்து நிகழ்த்திய போராட்டத்தில்தான் கட்சி கட்டுவது பற்றி லெனினுடைய போல்ஷ்விக் கொள்கை வகுக்கப்பட்டது. ஆதலால் கட்சி கட்டுவது பற்றி லெனின் வகுத்துள்ள கொள்கை, ஸ்தாபனம் பற்றி வலதுசாரி சந்தர்ப்பவாத கருத்துக்களையும், லிபரலிசத்தையும், கன்சிலியேஷனிசத்தையும், தொழிலாளி வர்க்க கட்சியை சாதாரண தொழிலாளர் ஸ்தாபனமாக சிறுமைப்படுத்துவதையும், கட்சிக்குள் கோட்பாடற்ற சமாதானம் நிலவுவதையும் கட்சிக்குள் கோஷ்டிகள் அமைக்கும் போக்கையும், கோஷ்டி நடவடிக்கைகளையும், இத்யாதி இத்யாதி போக்குகளையும், கண்டிக்கும் விமர்சனங்கள் அடங்கிய விவாதமாக அமைந்திருக்கிறது.

ஸ்தாபனப் பிரச்சனையில் உள்ள வலதுசாரி சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து நிகழ்த்திய போராட்டத்தில், கட்சி என்பது எல்லாவற்றிற்கும் முன்னணியானது, தலைசிறந்த ஸ்தாபன அமைப்பு கொண்டது என்றும் தொழிலாளி வர்க்கத்தின், மிக மிக உணர்வு மிக்க தீரமான முற்போக்கான நபர்களைக் கொண்ட மிகக் கட்டுப்பாடான படையாக அமைந்தது என்றும் தொழிலாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த ஸ்தாபன ரூபம் என்றும் லெனின் திட்டவட்டமாக வரையறுத்துள்ளார். தொழிலாளி வர்க்கத்திற்கு கட்சி அல்லாமல் தொழிற்சங்கங்கள், கூட்டுறவு சொசைட்டிகள், கலா நிலையங்கள், கல்வி ஸ்தாபனங்கள், அல்லது அரசாங்கம், இராணுவம் முதுலிய ஸ்தாபனங்களைக் கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் இந்த தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களுக்குள் கட்சிதான் எல்லாவற்றிற்கும் உயர்ந்த ரூபம் மற்ற ஸ்தாபனங்கள் அரசியல் ரீதியில் வழிகாட்டிச் செல்லும் திறமை படைத்தது.

படிக்க :
♦ தொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் !
♦ கட்சியிலிருக்கும் வலதுசாரி ‘பிக்பாக்கெட்’டுகளிடம் எச்சரிக்கை தேவை !

இவ்வாறாக லெனின் கட்சிக்கும் இதர தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களுக்கும் இடையே திட்டவட்டமான வரையறுப்பு செய்தார். மேலும், கட்சி ஸ்தாபன கோட்பாடு ஜனநாயக மத்தியத்துவமாக இருக்க வேண்டுமென்றும், கட்சிக்கு ஐக்கியப்பட்ட உருக்கு போன்ற கட்டுப்பாடு அவசியம் என்றும் வகுத்து வைத்தார். கட்சி ஸ்தாபனம் சம்பந்தமான இந்த கோட்பாடுகளை ஸ்தாபனம் பற்றி இரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த கட்சிகள் கொண்டிருந்த வலதுசாரி சந்தர்ப்பவாதக் கொள்கையை எதிர்த்து நிகழ்த்திய போராட்டத்தில் லெனின் வகுத்தார். கட்சியை கட்டுவதற்கு லெனின் வகுத்த கொள்கையின் பிரதான உள்ளடக்கம் இந்த கோட்பாடுகளே.

ஸ்தாபனம் சம்பந்தமாக இடதுசாரி’ சந்தர்ப்பவாதத்தைக் காட்டிலும், பிரதானமாக வலதுசாரியை எதிர்த்து நிகழ்த்திய போராட்டத்தில்தான் லெனின் கட்சியைக் கட்டினார். அக்டோபர் புரட்சிக்கு முன்பு நிலவிய தீர்மானமான நிலைமை இதுவே. அந்த சமயத்தில் ஸ்தாபனம் சம்பந்தமான இடதுசாரி’ சந்தர்ப்பவாதம் ஒன்று இன்னும் உருவெடுக்கவில்லை அல்லது முறைப்படுத்தப்பட்ட பூர்த்தியான சந்தர்ப்பவாதமாக வளர்ந்துவிடவில்லை. அதனால்தான் கட்சியை கட்டுவது பற்றி லெனின் வகுத்த கொள்கை வலதுசாரி சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து, அதாவது கண்டிப்பான ஸ்தாபனத்தையும் கட்டுப்பாட்டையும் கைவிடுவது, கட்சிக்குள் கோட்பாடற்ற சமாதானம், உட்கட்சிப் போராட்டத்தை மறுப்பது, சுயவிமர்சனத்திற்கு அஞ்சுவது, கட்சிக்குள் தலைதூக்கும் லிபரலிசம், கன்சிலியேஷனிசம், தொழிற்சங்கங்களின் சுதந்திரம் பற்றி தத்துவம் முதலியவைகளை கண்டனம் செய்யும் தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. லெனின் கட்சியைக் கட்டிய காலத்தில் நிலவிய யதார்த்த நிலைமையிலிருந்து எழுந்தது இந்தத் தர்க்கம்.

ஆனால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்ட யதார்த்த நிலைமையை நாம் கவனிப்போமானால், அக்டோபர் புரட்சிக்கு முன்பு லெனின் எதிர்ப்பட்ட நிலைமையிலிருந்து இந்த நிலைமை முற்றிலும் மாறுபட்டிருந்தது என்பது நமக்குத் தெரியவரும்.

முதலாவதாக சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, அக்டோபர் புரட்சிக்குப் பிறகு அதாவது ரஷ்ய போல்ஷ்விக்குகள் வெற்றி கண்டு, நமக்கு ஜீவனுள்ள உதாரணத்தை உருவாக்கி வைத்தபிறகு கட்டப்பட்டது. அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே நமது கட்சி லெனின் கோட்பாடுகளின் அடிப்படையிலும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டும் கட்டப்பட்டது.

இரண்டாவதாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிதமான நாளிலிருந்து இன்றுவரை ஐரோப்பிய சமூக ஜனநாயக் கட்சிகளின் இரண்டாவது அகிலத்தினால், சித்தாந்த ரீதியாகவும் சரி, ஸ்தாபன ரீதியாகவும் சரி, தனது செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டதில்லை.

மூன்றாவதாக ஐரோப்பாவைப் போன்று சீனாவில் தொழிலாளி வர்க்கம் சமாதானமான சட்டசபை போராட்டங்களில் பங்கெடுத்து கொள்வதற்கு அனுமதிக்கப்படும் ‘சமாதானமான முதலாளித்துவ வளர்ச்சிக்கால கட்டத்தை கண்டதேயில்லை. அன்றியும் ஐரோப்பாவிலிருப்பது போன்று சீனாவில் தொழிலாளர்களுக்குள் சலுகை பெற்ற பகுதியொன்றும் உருவாகவில்லை.

நன்காவதாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர்கள் எண்ணிக்கை சில சோம்பேறிகளை* உள்ளிட்டு பெரும்பகுதி குட்டி பூர்ஷ்வா நபர்களையும் விவசாயிகளையும் கொண்டிருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ‘இடதுசாரி’ வலதுசாரி சந்தர்ப்பவாதத்திற்கு சமூக அடிப்படை இதில்தான் அடங்கியிருக்கிறது.

நிலைமையின் இந்நான்கு அம்சங்களின் விளைவாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதில் ஆரம்பத்திலிருந்தே நாம் லெனின் கோட்பாடுகளையும் லெனின் காட்டிய வழியையும் தன்மனப்போக்கில் பின்பற்றி வந்திருக்கிறோம். நமது கட்சி அங்கத்தினர்களில் பெரும்பாலானோர் போல்ஷ்விக் கட்சியின் ஸ்தாபன கோட்பாடுகளை மனப்பாடமாக ஒப்பிக்க முடியும். மேலும் சமூக ஜனநாயகவாதத்தின் பரம்பரையும் சம்பிரதாய முறைகளும் நமது கட்சியில் இருந்ததில்லை. ஆதலின் நமக்கு பல நேரான பாதைகளில் நடக்க முடிந்திருக்கிறது. கட்சி தோன்றிய காலத்திலிருந்தே நாம் சுய விமர்சனம், சித்தாந்தப் போராட்டம் முதலியனவற்றை நடத்தி வந்திருக்கின்றோம்.

ஜனநாயக மத்தியத்துவ முறையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பான ஸ்தாபனம், கட்டுப்பாடு முதலியவற்றை நிலைநாட்டியிருக்கிறோம். கட்சிக்குள் கோஷ்டிகள் அமைவதை நாம் அனுமதித்ததில்லை. லிபரலிஸம், எக்னாமிஸம், தொழிற்சங்கங்களின் சுதந்திரம் முதலியனவற்றை நாம் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறோம். ஆகவே ஸ்தாபனம் பற்றி முறைப்படுத்தப்பட்ட வலதுசாரி தத்துவம் கட்சிக்குள் என்றுமே பகிரங்கமாக பிரச்சாரம் செய்யப்பட்டதில்லை. சுயவிமர்சனம், உள்கட்சிப்போராட்டம், கண்டிப்பான ஸ்தாபனம், கட்டுப்பாடு, தொழிலாளி வர்க்கக்கட்சி ஆகியவை தேவையில்லையென்றும். தொழிற்சங்கங்கள் பூரண சுதந்திரம் கொண்டதாக இருக்க வேண்டுமென்ற கருத்துக்கள் கட்சிக்குள் பகிரங்கமாக வளர்வதற்கு சந்தர்ப்பமே இருந்ததில்லை.

படிக்க :
♦ 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா ?
♦ டானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் !

இன்னும் கூட நமது கட்சியில் சித்தாந்தரீதியான போராட்டம் போதிய அளவிற்கில்லை. ஆயினும் இது கட்சிக்குள் உள்கட்சிப் போராட்டத்திற்கு எதிர்ப்பாக, முறையான தத்துவம் இருந்து வந்ததினால் அல்ல; அதற்குக் காரணம் தத்துவப் பயிற்சிக் குறைவினால் கோட்பாடுள்ள பிரச்சனைகளில் வேறுபாடுகளை காண்பதற்கு இயலாதவர்களாயிருக்கிறோம். அல்லது தனிப்பட்ட பொறுப்புள்ள தோழர்கள் சுயவிமர்சனத்தை ஒடுக்குவதற்கு விசேஷ முறைகளைக் கையாண்டனர்.

நமது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிதம் செய்த காலத்திலிருந்த விசேச நிலைமையும், சுற்றுச்சார்பும் கட்சியின் வளர்ச்சியை இரண்டு விதத்தில் பாதித்தது. ஒன்று சாதகமானது, லெனினிஸ்டு முறைப்படி அமைந்த ஒரு கட்சியை ஆரம்பத்திலிருந்தே கட்டுவதற்கு உதவிற்று; புத்திப் பூர்வமாக நாம் லெனின் வகுத்து வைத்துவிட்டுப் போன கோட்பாடுகளிலிருந்து இம்மியளவும் பிறழாது நடந்து கொண்டோம் ஆரம்பத்திலிருந்தே நமது கட்சி கண்டிப்பான சுயவிமர்சனமும், உட்கட்சிப் போராட்டமும் நடத்தி வந்திருக்கிறது. நமது கட்சியின் துரிதமான முன்னேற்றத்திற்கு இது காரணமாயிருந்தது; கட்சியை முன்னோக்கிச் செல்ல முடுக்கிவிடும் இயல் சக்தியாகவும் பயன்பட்டது.

ஆனால் கட்சி மற்றொரு விதத்தில் எப்படி பாதிக்கப்பட்டது என்றால், அடிக்கடி நமது தோழர்கள் மற்றொரு கோடிக்குச் செல்லவும் தூண்டிற்று- மற்றொரு விதமான தவறு- அதாவது உட்கட்சிப் போராட்டத்தை மிதமிஞ்சிய அளவிற்கு கொண்டு செல்லும் தவறு. எந்தவிதமான வரம்புமின்றி அதி தீவிரமாக போராடுகின்ற தவறு செய்வதில் கொண்டுவிட்டது; இது மற்றொரு திரிபில் கொண்டு சேர்த்தது. அதாவது இடதுசாரி’ திரிபில்.

லெனினுடைய கோட்பாடுகளைப் பற்றி பல தோழர்களுக்கு யாந்திரீகமான தவறான போதகம் இருந்து வந்தது; அக்கோட்பாடுகளை வெறும் வறட்டு தத்துவ மாக்கிவிட்டார்கள்; சிறந்த முறையில் மத்தியப்படுத்தப்பட்ட கட்சி ஸ்தாபனம் உள்கட்சி ஜனநாயகத்தை மறுப்பதாகவும், உள் கட்சி போராட்டத்தின் அவசியத்தினால் கட்சிக்குள் சமாதானம் நிலவ முடியாது என்றும். தொழிலாளி வர்க்க பொதுஜன ஸ்தாபனங்களில் கட்சியின் அரசியல் தலைமை தொழிலாளிவர்க்கத்தின் மிக உயர்ந்த ரூபத்திலுள்ள வர்க்க ஸ்தாபனம் – தொழிற்சங்கங்கள் இன்னும் இதர உழைப்பாளிகள், பாட்டாளிகள் ஸ்தாபனங்கள் ஆகியவைகளின் சுதந்திரத்தை மறுக்கிறது என்றும் ஒன்றுபட்ட உருக்கு போன்ற கட்டுப்பாடு என்பது கட்சி அங்கத்தினர்களின் தனிப்பட்ட குணச்சிறப்பு, முன்கை எடுக்கும் தன்மை, ஆக்கத் திறன் முதலியவற்றை அடியோடு அடித்து விடுகிறது என்றும் கருதுகின்றனர்.

லெனினுடைய கோட்பாடுகளை பல தோழர்கள் ஜீவனில்லாதவைகளாக உருப் போட்டனர். உட்கட்சிப்போராட்டம் அவசியம்தான் என்றும் லிபரலிசம் கன்சிலியேஷனிசம் பிரயோஜனமில்லை என்றும் கருதி வந்தபோதிலும், அவர்கள் இந்த கோட்பாடுகளை யாந்திரீகமாகவும், வறட்டு தத்துவரீதியிலும் கையாண்டார்கள். காலம், சூழ்நிலை சம்பந்தப்பட்ட பிரச்சனை இவையொன்றையும் பொருட்படுத்தாமலே உள்கட்சிப் போராட்டம் விட்டுக்கொடுக்காமல் நடத்தப்பட வேண்டுமென்றும் அந்தப் போராட்டம் எவ்வளவுக்கு எவ்வளவு உக்கிரமாக நடைபெறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேலானது என்றும் இத்தோழர்கள் எண்ணினார்கள். உட்கட்சிப் போராட்டம், விமர்சனம் இவற்றின் ரூபம் எவ்வளவு கடுமையாகவும் வன்மையாகவும் இருக்கிறதோ அவ்வளவுக்கு அது சிறப்பானது என்று அவர்கள் எண்ணினார்கள். கட்சித் தோழர்களுக்குள் வாக்குவாதம் எவ்வளவுக்கு வலுக்கிறதோ அவ்வளவுக்கு அது உயாவானது என்று அவர்களுக்குத் தோன்றிற்று. இவ்வாறு இருக்காவிடில், லிபரலிச, கன்சிலியேஷனிஸத் தவறுகள் இழைக்கப்படுவதாக அவர்கள் எண்ணினார்கள்.

தங்களிடத்தில் லிபரலிஸ, கன்சிலியேஷனிஸத் தவறுகள் இல்லை என்றும், தாங்கள் நாற்றுக்கு நூறு போல்ஷிவிக்குகள் என்றும் நிரூபிப்பதற்காக கட்சிக்குள் அவர்கள் கோட்பாடற்ற போராட்டங்களை, இடம், காலம் ஒன்றும் பாராமல் நடத்திக் கொண்டிருந்தனர். இவ்வாறு உள் கட்சிப் போராட்டத்தில் எந்தவிதமான கொள்கையும் இல்லாத ரௌடிகளாக, கோட்பாடிற்கு மதிப்புக் கொடுக்காத போராட்ட நிபுணர்களாக’ சண்டை போடுவதே பழக்கமாகிப் போன கலகத்தில் கைதேர்ந்த பேர்வழிகளாக’ இவர்கள் ஆனார்கள். இவர்கள் போராட்டத்திற்கு வேண்டி போராட்டம் நடத்தினர். தொழிலாளி வர்க்க அணியில் இது அவமானகரமானது. இது அவர்கள் நூற்றுக்கு நூறு போல்ஷிவிக்குகள்’ என்பதை நிரூபிக்கவில்லை என்று சொல்லத் தேவையில்லை. அதற்கு நேர்மாறாக அவர்கள் போல்ஷ்விசத்தை இழிவுபடுத்தியுள்ளனர் என்றும், போல்ஷிவிக்குகளின் பெயரையும் தோற்றத்தையும் கட்சிக்குள் சந்தர்ப்பவாதத்தை அனுஷ்டிக்க பயன்படுத்திக் கொண்டனர் என்பதையே அது நிரூபிக்கிறது.

* (பிற்போக்கு அரசாங்கம் அல்லது நிலச்சுவான்தார், தரகு முதலாளி வர்க்கங்களின் ஆதிக்கத்தினாலும், சுரண்டலினாலும் வேலையோ, வாழ்க்கை நடத்துவதற்கு பிரதானமாக ஒழுங்கீனமான வழிகளைக் கடைபிடிக்கும் தொழிலாளி, விவசாயி அல்லது பொதுமக்கள் இங்கு சோம்பேறி என்று குறிப்பிடப்படுகின்றனர்)

(தொடரும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க