உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான, தோழர் மாவோவின் 131-வது பிறந்தநாள்.
மாபெரும் தலைவர் ஸ்டாலினுக்குப் பிறகு மார்க்சிய-லெனினியப் பதாகையை உயர்த்திப் பிடித்து, அதன் புரட்சிகர உள்ளடக்கத்தை காத்து வளர்த்து, 60-களிலும், 70-களிலும் உலகமெங்கும் புதிய, புரட்சிகர உற்சாகத்தை ஊட்டிய மாபெரும் சித்தாந்தவாதியாக திகழ்ந்தவர்தான் தோழர் மாவோ.
ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் தூக்கியெறிந்த மாபெரும் சீன ஜனநாயகப் புரட்சியின் ஒளி விளக்காகவும், பிற பின்தங்கிய விவசாய நாட்டு புரட்சிகர இயக்கங்களுக்கு புதிய பாதையைக் காட்டிய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தவர்தான் தோழர் மாவோ.
காலனிய, அரைக்காலனிய, நவீன காலனிய அரை நிலப்பிரபுத்துவ விவசாய நாடுகளுடைய புரட்சியின் தன்மை புதிய ஜனநாயகம் என்ற வரையறுப்பை முதன்முதலில் முன்வைத்தவர் மாவோ. பாட்டாளி வர்க்கத் தலைமையிலான விவசாயப் புரட்சியை அச்சாணியாகக் கொண்டதே புதிய ஜனநாயகப் புரட்சி என்று அவர் வரையறுத்து வழிகாட்டினார். இந்நாடுகளில் உள்ள பெருமுதலாளித்துவப் பிரிவினர் தரகு முதலாளிகள் என்று விளக்கமளித்த மாவோ, தேசிய முதலாளிகளுடன் புதிய ஜனநாயகப் புரட்சி கட்டத்தில் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நடைமுறைப்படுத்திக் காட்டினார். இந்த நாடுகளில் விடுதலைக்கான பாதையாக மக்கள் யுத்தப் பாதை எனும் இராணுவ யுத்த தந்திரத்தை வகுத்து வழிகாட்டி, மார்க்சிய-லெனினியத்தை வளப்படுத்தினார்.
“முரண்பாடு பற்றி”, “நடைமுறை பற்றி”, “முரண்பாடுகளைச் சரியாகக் கையாளுவது பற்றி” – ஆகிய கட்டுரைகள் மூலம் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைச் செழுமைப்படுத்தி, சித்தாந்தத் துறையில் மார்க்சிய-லெனினியத்தை உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்தார். மக்கள்திரளைச் சார்ந்திருத்தல், அதிகார வர்க்கப் பாணியையும் மேட்டுக் குடித்தனத்தையும் ஒழித்தல், வர்க்கப் போராட்டத்தை கேந்திரக் கண்ணியாகக் கொள்ளுதல், உற்பத்தியைப் பெருக்குதல், விஞ்ஞானத்தை வளர்த்தல் என்ற கொள்கைகளை பொருளாதாரத் துறையில் செயல்படுத்தி மார்க்சிய-லெனினியத்திற்கு மேலும் உரமூட்டினார்.
சர்வதேச அளவில் எழுந்த குருச்சேவ் பாணி நவீன திரிபுவாதத்தை எதிர்த்து மாபெரும் விவாதம் நடத்தி மார்க்சிய-லெனினியத்தைப் பாதுகாத்து வளர்த்தார்.
எப்போதும், எதற்கும் மக்களைச் சார்ந்திருப்பது என்ற நடைமுறையினால் வெற்றியும், மக்கள் திரளின் ஆதரவையும் தொடர்ந்து பெற்றார். கட்சிக்குள் தோன்றிய வலது, இடது விலகல்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடனிருந்து விட்டுக் கொடுக்காமல் சளையாது போராடி வந்தார்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்வது; அடுத்தடுத்து கலாச்சாரப் புரட்சிகள் என்ற பாதையில்தான் முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சிகளை முறியடித்து, கம்யூனிசத்தை நோக்கி முன்னேற முடியும் என்ற மாசேதுங்கின் கோட்பாட்டையும் நடைமுறையையும் முன்னாள் சோசலிச நாடுகளின் அனுபவங்கள் எதிர்மறையில் நிரூபித்துக் காட்டிவிட்டன. ஏழை நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும், தேசிய விடுதலை யுத்தங்களையும் உற்சாகப்படுத்தி ஐக்கியப்படுத்தி வளர்த்த மாவோவின் மேல்நிலை வல்லரசுகள் பற்றிய ஆய்வுரைகள் இன்று சரியானதென நிரூபித்துக்காட்டியுள்ளன.
எஃகுறுதி, எளிமையான வாழ்வு, கடின உழைப்பு என்பதையே பண்புகளாகக் கொண்ட அம்மாபெரும் தலைவரை, பாலியல் வக்கிரம் பிடித்தவராக இன்று ஏகாதிபத்தியவாதிகள் கீழ்தரமாக அவதூறு செய்து வருகிறார்கள்.
போலிக் கம்யூனிஸ்டுகளோ அவரை, இடது தீவிரவாத தவறிழைத்து, சர்வதேச கம்யூனிச இயக்கத்தைப் பிளவுபடுத்திய குற்றவாளி என சாடி வருகிறார்கள். மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்பதன் மூலம், ஏகாதிபத்தியவாதிகள்- திருத்தல்வாதிகளின் அவதூறுகளையும் புரட்டல்களையும் முறியடிக்க தோழர் மாவோவின் நூறாவது பிறந்தநாளில் சூளுரைப்போம்! பருண்மையான நிலைமைக்கேற்ப மார்க்சியத்தைப் பருண்மையாகப் பிரயோகித்து வெற்றி கண்ட தோழர் மாவோவின் வழியில், இந்திய புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல இந்நாளில் உறுதியேற்போம்!
தோழர் மாவோவின் புகழ் நீடூழி வாழ்க!
மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனை தழைத்தோங்குக!

(டிசம்பர் 26, 1993 தோழர் மாவோவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram