உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 6

பாகம் – 5

இயந்திரகதியான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்தின் வடிவங்கள் என்ன? அவை பின்வருமாறு:

முதலாவதாக, ஸ்தல கட்சி அமைப்புகளிலும் இராணுவத்திலுள்ள கட்சி அமைப்புகளிலும் “போராட்டக் கூட்டங்கள்” என்று சொல்லப்படும் கூட்டங்கள் ஒழுங்காக நடந்தேறுகின்றன. அரசாங்க அமைப்புகள், பொதுஜன அமைப்புகள் போன்ற கட்சி சார்பற்ற அமைப்புகளிலும் “போராட்டக் கூட்டங்கள்” ஒழுங்காக நடத்தப்படுகின்றன. முன்கூட்டியே அந்த போராட்டக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. செய்த வேலையை சீர்தூக்கிப் பார்க்கும் பிரதான நோக்கத்துடன் அவை நடத்தப்படுவதில்லை. சில தனிப்பட்ட நபர்களைத் தாக்கும் நோக்கத்துடன் அவை நடத்தப்படுகின்றன.

“விவாதத்திற்குரிய விசயத்தை”க் குறித்து போராட்டத்தை நிகழ்த்துவதற்கு பதிலாக, போராட்டம் “ஆளுக்கு விரோதமாக”த் திருப்பப்படுகிறது; வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இந்த போராட்டம் பிரதானமாக சில தவறான சித்தாந்தத்தையோ, கோட்பாட்டையோ எதிர்த்து நடத்தப்படவில்லை. குறிப்பிட்ட தனி நபரை எதிர்த்து நடத்தப்படுகிறது.. “ஒரு சாங்கை எதிர்த்தோ அல்லது லீயை எதிர்த்தோ நடத்தப்படும் போராட்டம்” என்று சொல்லப்படும் போராட்டம் தவறு செய்த குறிப்பிட்ட ஒரு தோழரைத் தாக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.

சாராம்சத்தில் “போராட்டக் கூட்டம்” ஒரு குறிப்பிட்ட தோழருக்கு எதிரான விசாரணைக் கூட்டம். இது பிரச்சினைகளை சித்தாந்த பூர்வமாக தீர்க்கும் இலட்சியத்தை பிரதானமாகக் கொண்டிருக்கவில்லை; சில பிரச்சினைகளை அமைப்புபூர்வமாகத் தீர்ப்பதை இலட்சியமாகக் கொண்டிருக்கிறது; தொந்தரவு கொடுப்பவர்களை, மாறுபட்ட அபிப்பிராயங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்களை (அம்மாதிரியான அபிப்பிராயங்கள் அவசியம் தவறாகத்தானிருக்க வேண்டுமென்றில்லை) விரட்டி ஒடுக்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. மேலும், ஒவ்வொரு “போராட்டக் கூட்டத்திலும்”, தவறாமல் எந்தத் தனிநபர்கள் மீது போராட்டம் நடத்தப்பட்டதோ அவர்களில் பெருவாரியானவர் பற்றி அமைப்பு ரீதியான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இத்தகைய போராட்ட முறைகள் தவறானவை என்று சொல்லாமலே விளங்கும். அது ஏன் சரியானதில்லை?

முதலாவதாக, “போராட்டக் கூட்டம்” என்ற பதமே தவறானது. அதற்கு அர்த்தமேயில்லை ; “போராட்டக் கூட்டங்கள்” என்று சொல்லப்படுபவை இருப்பதினால், “போராட்டமில்லாத கூட்டங்களும்” இருக்கின்றனவா? சில கூட்டங்கள் குறிப்பாக போராட்டம் நடத்துவதற்காக இருக்கின்றனவென்றும் போராட்டம் நடத்தப்படாத வேறு கூட்டங்கள் இருக்கின்றன என்றும் நாம் கருதுவோமானால் அது சித்தாந்த ரீதியாக பெருங்குழப்பத்தை விளைவிக்கும். பல தோழர்கள் போராட்டத்தின் பரிபூரண தன்மையையும், அனைத்தையும் அணைத்து நிற்கும் குணத்தையும் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் இது இங்கு நிரூபிக்கிறது. இயக்க மறுப்பியல் முறையில் கல்வியையும், போராட்டத்தையும் பிரித்துப் பார்க்கின்றனர்.

உட்கட்சிப் போராட்டத்தின் நோக்கம் கட்சியையும் பிழைகள் செய்த தோழர்களையும் போதிப்பதாகும். ஆதலின் கட்சிப் போராட்டம் என்பதுவே கட்சிக்குள் ஒருவிதமான இன்றியமையாத போதனையாகும்; கட்சிக்குள் கல்வி என்பதும் ஒரு உட்கட்சிப் போராட்டமாகும். மற்றதுடன் ஒப்பிடுங்கால், மிக நிதானமான போராட்டமாகும். அதனால் கல்வியும் போராட்டமும் தனித் தனியாக பார்க்கக் கூடியவையன்று; போராட்டம் என்பது ஒருவிதக் கல்வி; கல்வி என்பது ஒருவிதப் போராட்டம்; அவ்விரண்டையும் இயக்க மறுப்பியல் ரீதியாக பிரிப்பது என்பது தவறு.

மேலும் அத்தகைய “போராட்டக் கூட்டங்கள்” கட்சிக்குள் உள்ள குறுங்குழுவாதத்தின் மிக வெளிப்படையான பிரதிபலிப்பாகும். ஊழியர்களையும், தோழர்களையும் தாக்கும் தவறான கொள்கையின் பிரதிபலிப்புமாகும். தவறு செய்த தோழர்களுக்கு உதவி செய்து, போதித்து, பாதுகாப்பதற்கு பதிலாக, எந்த தோழர்களைக் குறித்து போராட்டம் நடத்தப்படுகிறதோ அந்த தோழர்களைத் தாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பிரதானமாக தனிநபரை எதிர்த்துப் போராடும் நோக்கங் கொண்டது. அதே சமயத்தில் சித்தாந்தத் துறையிலுள்ள முரண்பாடுகளும், வேற்றுமைகளும் அலட்சியப்படுத்தப்படுகின்றன.

ஆகவே இத்தகைய “போராட்டக் கூட்டங்கள்” கட்சிக்குள் சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும், அமைப்பு ரீதியிலும், நடைமுறையிலும் ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கு பெரும்பாலும் தவறுகின்றன. அதற்கு நேர்மாறாக, சித்தாந்தம், அரசியல், அமைப்பு சம்பந்தமான விசயங்களிலும், நடைமுறையிலும் உள்ள வேறுபாடுகளை பெரும்பாலும் அதிகரிக்கின்றது; கட்சிக்குள் வேற்றுமையையும் கோட்பாடற்ற தகராறுகளையும் அதிகப் படுத்துகிறது; இத்தகைய “போராட்டக் கூட்டங்களை” கட்சியல்லாத மற்ற அமைப்புகளில் நடத்துவது என்பது இதிலும் தவறானது.

இரண்டாவதாக, இயக்கமறுப்பியல் வகைப்பட்ட, மிதமிஞ்சிய உட்கட்சி போராட்டம் கீழ்க்கண்ட வழிகளிலும் பிரதிபலிக்கின்றது. உட்கட்சிப் போராட்டம் எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது மேலானது என்று சில தோழர்கள் அபிப்பிராயங் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு பிரச்சினை எவ்வளவு கடுமையாகக் கிளப்பப்படுகிறதோ அவ்வளவுக்கு அது சிறப்பானது, எவ்வளவுக்கு அதிகமாக குற்றங்குறை கூறுகிறார்களோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; எவ்வளவு தடபுடலான பதங்களை உபயோகிக்கிறார்களோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; விமர்சனம் எவ்வளவு ஏசுகிறார்களோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; எவ்வளவுக்கு கடுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; எவ்வளவுக்கு முகம் தொங்கவிட்டுக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது; எவ்வளவுக்கு பற்களை கடகடவென்று நெரிக்கின்றோமோ அவ்வளவுக்கு சிறந்தது. இந்தமாதிரி நடந்து கொண்டால், “புரட்சிக்காரர்கள் எவ்வளவு புரட்சிகரமாக இருக்கவேண்டுமோ அவ்வளவுக்கு புரட்சிகரமாக இருப்பதாக” தங்களைப்பற்றி கருதிக் கொள்கின்றனர். உட்கட்சிப் பற்றியோ, நிதானம் பற்றியோ கவலைப்படுவதில்லை; பொருத்தமான எல்லையுடன் நிற்பதில்லை. எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாமல் போராட்டத்தை நடத்துகின்றனர். இது முற்றிலும் தவறானது என்பது வெள்ளிடைமலை.

மூன்றாவதாக, உட்கட்சிப் போராட்டம் சாராம்சத்தில் சித்தாந்தப் போராட்டம் என்பதை இன்னும் சில தோழர்கள் புரிந்து கொள்வதில்லை. சித்தாந்த ஐக்கியத்தை சாதிப்பதின் மூலம்தான் கட்சிக்குள் ஐக்கியத்தை நிலை நாட்டவும், அரசியல் ரீதியிலும், அமைப்பு ரீதியிலும், நடைமுறையிலும் பலப்படுத்தவும் முடியும் என்றும், பிரச்சினைகளை அமைப்பு, நடைமுறை சம்பந்தமான கோணத்திலிருந்து தீர்ப்பதற்கு முன்பு, சித்தாந்தம், கோட்பாடு ஆகிய கோணங்களிலிருந்து தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

ஆயினும் ஒற்றுமையை உருவாக்குவதும், பிரச்சினைகளை சித்தாந்த ரீதியிலும் கோட்பாடுகளின் அடிப்படையிலும் தீர்ப்பதும், மற்றவர்களின் சித்தாந்தத்தை சீர்திருத்துவதும், நெடுநாளாக மற்றவர்கள் கொண்டுள்ள கோட்பாடுகள், கண்ணோட்டம் தவறான அபிப்ராயங்கள் முதலியவற்றை திருத்துவதும் சுலபமான காரியமல்ல. சும்மா சில வார்த்தைகளில் இதைச் செய்துவிட முடியாது; வெறும் “போராட்டக் கூட்டத்தின்” மூலமும் செய்துவிட முடியாது. தான்தோன்றித் தனமான வழிகளினாலோ அல்லது கட்டாய நடவடிக்கைகளினாலோ மட்டும் அதை சாதித்துவிட முடியாது; பொறுமை மிக்க போதனைகளின் மூலமும், கல்வியின் வாயிலாகவும், பல்வேறு விதமான சிக்கல் நிறைந்த போராட்டங்கள் மூலமாகவும், புரட்சியில் நீண்டகால கல்வி, போராட்டம், செயல்முறை மூலமாகவும்தான் இது கைகூடும், உட்கட்சிப் போராட்டத்தின் இந்த சாராம்சத்தை இந்த ஒளியில் சில தோழர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அதற்கு பதிலாக உட்கட்சிப் போராட்டத்தை சிறுமைப்படுத்தவும், யாந்திரீகப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் செய்கின்றனர்.

உட்கட்சிப் போராட்டம் என்றால் இது அமைப்பு அல்லது அமைப்பு சம்பந்தப்பட்ட விசயத்திலுள்ள ஒரு முரண்பாடாகக் கருதுகின்றனர்; அல்லது அதை சண்டையிடுவதாக, ஏசுவதாக, சச்சரவிடுவதாக அல்லது குஸ்திபோடுவதாக எண்ணுகின்றனர். உண்மையான ஒற்றுமைக்காக அவர்கள் முயலுவதில்லை. பிரச்சினைகளை கோட்பாடுகள் சித்தாந்தத்தின் அடிப்படையில் தீர்ப்பதில்லை. கட்சிக்குள் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமான வேறுபாடுகளை அவ்வளவு எளிய இயந்திரகதியான, கொச்சையான வழிகளில் தீர்க்க முடியும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். இது முற்றிலும் தவறானது என்று சொல்லத் தேவையில்லை.

இந்தத் தோழர்கள் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தப்பட்ட வேறுபாடுகளை கட்சிக்குள் நிவர்த்திப்பதின் மூலமாகவும் சில தவறான போக்குகளையும் வளர்ச்சிகளையும் திருத்துவதின் மூலமும் கட்சிக்குள் ஒற்றுமையை உருவாக்குவதோ அல்லது பாதுகாப்பதோ இல்லை. அதற்கு நேர்மாறாக கட்சிக்குள் வெறும் அமைப்பு வழிகளில் மட்டும், அல்லது தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள், தாக்குதல் கொள்கை, கட்சி அங்கத்தினர்கள் சம்பந்தப்பட்ட மட்டில் தண்டனை முறை முதலியன மூலம் ஒற்றுமையை உருவாக்கவும், பாதுகாக்கவும் முயலுகின்றனர். இதன் விளைவாக பல்வேறு தவறான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டங்கள் எழுகின்றன. ஆதலால் கோட்பாடு, சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தோழர்களை ஜாக்கிரதையாகவும் கருணையுடனும் போதிப்பதற்குப்பதிலாக, தோழர்களை சாதாரண அமைப்பு வழிகளை கைக்கொள்வதின் மூலம், எதிரான முறைகள், நிர்வாக நடவடிக்கைகள் முதலியவற்றைக் கடைப்பிடிப்பதின் மூலம் தோழர்களை ஒடுக்கவும், மிரட்டவும் செய்கின்றனர்.

இவர்கள் தோழர்களைப்  பற்றி தாறுமாறான அமைப்பு முடிவுகளுக்கு வருகின்றனர். அமைப்பு ரீதியான தண்டனைகளையும் தோழர்களுக்கு வழங்குகின்றனர். மேலும் சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம் என்னும் பூர்ஷ்வா கண்ணோட்டத்தை வைத்துக் கொண்டு கட்சிக்குள் தோழர்களை நிர்தாட்சண்யமாக தண்டிக்கின்றனர்; அதாவது குற்றம் செய்தவர்கள் எத்தகைய கட்சி அங்கத்தினர்கள், இவர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டோ அல்லது திருத்திக் கொண்டோ இருக்கிறார்களா என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கட்சி அமைப்பு விதிகளில் வரையறுத்துள்ள மிகக் கடுமையான தண்டனையை வழங்குகின்றனர். இந்த வழியில் கட்சிக்குள் தண்டனைமுறை நுழைக்கப்படுகிறது. வேலையை துவக்குவதற்கும், முன்கொண்டு செல்வதற்கும் போராட்டங்கள் நடத்தும் வழியை அவர்கள் அடிக்கடி கையாளுகின்றனர். “போராட்ட இலக்குகளை” (கட்சிக்குள் உள்ள தோழர்களை) வேண்டுமென்றே தேடுகின்றனர். அவர்களை சந்தர்ப்பவாதத்தின் பிரதிநிதிகள் என்று எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர். இந்த ஒரு தோழரையோ அல்லது அந்த ஒரு சில தோழர்களையோ “நாயை பயமுறுத்துவதற்காக வான்கோழியைக் கொன்ற கதை” என்று வழங்கும் சீனப்பழமொழியைப் போன்று மற்ற கட்சி ஊழியர்கள் கடுமையாகப் பாடுபடவும், பணியை பூர்த்தி செய்யும் பொருட்டும் அவர்கள் தியாகம் செய்கின்றனர்; அல்லது தாக்குகின்றனர், போராட்ட இலக்குகளின் குறைபாடுகள் குற்றங்கள் பற்றி அவர்கள் வேண்டுமென்றே தகவல் சேகரித்து, இயக்க மறுப்பியல் வகையிலும், துண்டு துக்காணியாகவும், அவ்வளவு பொருட்படுத்தக் கூடாத வார்த்தைகளையும் செயல்களையும் குறித்துக் கொள்கின்றனர்.

அத்தகைய குறைபாடுகளையும் தவறுகளையும், பொருட்படுத்தத்தகாத அவரது மொழிகளையும், செயல்களையும் தனிமையில் பார்த்து, இவையனைத்தும் அத்தோழரின் முழுத்தன்மையையும் பிரதி நிதித்துவப் படுத்துவதாகக் கருதுகின்றனர். இந்தத் தோழரின் தனிப்பட்ட குறைகளையும், குற்றங்களையும் பெரிதுபடுத்தி, கட்சித் தோழர்களிடையில் இத்தோழரைப் பற்றி மிகவும் மோசமான அபிப்ராயத்தை உண்டாக்கி, இந்தத் தோழரை எதிர்த்துப் போராடுவதில் சந்தர்ப்பவாதமுறையில் வெறுப்பு ஊட்டுகிறார்கள். பிறகு யார் வேண்டுமானாலும் “செத்த புலியை அடிக்கலாம்”. சில தோழர்கள் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்னும் மனோபாவம் வளரத் தொடங்குகிறது. இந்தத் தோழரின் சகல குறைகளையும், பிழைகளையும் அவர்கள் அம்பலப்படுத்துகின்றனர்; இந்தக் குறைகளையும், குற்றங்களையும் தன்னிஷ்டப்படி கோட்பாடு மட்டத்திற்கு உயர்த்துகின்றனர்.

அவர்கள் சில கட்டுக்கதைகளையுங்கூட புனைந்து விடுகின்றனர்; தன் மன சந்தேகத்தையும், முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகளையும் ஆதாரமாகக் கொண்டு அத்தோழர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். அவர் மூளை குழம்பும் வரை விட மாட்டார்கள். இவ்வளவும் செய்துவிட்டு, தாக்கப்பட்ட தோழர் தன் நிலையை எடுத்து வாதிப்பதற்கு அனுமதிப்பதென்றால் அப்பொழுதும் கூட மனம் வருவதில்லை. அவர் வாதிட்டால் தனது குற்றங்களை வேண்டு மென்றே நியாயப் படுத்துவதாகவோ அல்லது பல நிபந்தனைகளுடன் ஒப்புக்கொள்வதாகவோ அவர் மீது குற்றஞ்சாட்டுவார்கள். பிறகு அவர் மீது மேலும் பாணம் எய்துவர். தாக்கப்படும் தோழர் பணிந்து நடக்கும் நிபந்தனையின் பேரில் தனது சொந்த அபிப்ராயத்தை வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. மேல்கமிட்டிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்வதற்கும் அனுமதிப்பதில்லை. அங்கேயே அவர் தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

தாக்கப்படும் தோழர் தனது தவறுகளை பூராவும் ஒப்புக் கொண்டுவிட்டால், சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமான பிரச்சினை தீர்க்கப்பட்டதா என்பதைப் பற்றி கவலைப்பட்டுக் கொள்வதில்லை. ஆகவேதான் கட்சிக்குள் போராட்டத்தில் சில தோழர்கள் அவர்கள் செய்த குற்றங்களைக் காட்டிலும் அதிக குற்றங்களை ஒப்புக்கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. தாக்குதலைத் தவிர்ப்பதற்காக எல்லா குற்றச்சாட்டுகளையுமே  ஒப்புக்கொண்டுவிடுவது மேல் என்று அவர்கள் எண்ணினர். எல்லாப்  பிழைகளையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டபோதிலும், இன்னும் அவர்களுக்கு அது என்னதான் சமாசாரம் என்றே தெரியாது. இத்தகைய போராட்ட முறைகள் உண்மைக்காக நிமிர்ந்து நிற்கும் கம்யூனிஸ்டு உறுதியை  வளர்க்காது என்று இங்கு நிரூபணமாகிறது.

(தொடரும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க