உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 5

பாகம் – 4

III. இயக்க மறுப்பியல் வகைப்பட்ட, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்தின் பிரதிபலிப்புகள்

தோழர்களே!

இன்று உட்கட்சிப் போராட்டத்தில் காணப்படும் மூன்று திரிபுகளில் முதல் திரிபான தாராளவாதம் என்னும் திரிபை நான் விவாதிக்கப் போவதில்லை. இன்று கட்சிக்குள் தாராளவாதத் திரிபு அவ்வளவு பிரமாதமாகவில்லை என்றோ, அல்லது தாராளவாதத்தை எதிர்த்துச் சண்டையிடுவது முக்கியமானதல்ல என்றோ நான் நினைக்கவில்லை. தாராளவாதப் போக்கைப் பற்றியும் ஸ்தூலமான பிரச்சினைகளில் அதன் பிரதிபலிப்பை பற்றியும் நமது தோழர்கள் நன்கு தெளிந்திருக்கிறார்கள் என்று நான் எண்ணவில்லை என்றபோதிலும் – ஏன் பல தோழர்கள் இன்னும் முழுவதும் தெளிவுபடவில்லை என்று எண்ணியபோதிலும் நான் இன்று அந்த விசயத்தைப்பற்றி பேசப்போவதில்லை.

எனக்கு சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது பிறிதொரு சமயம் பேசுகிறேன். இங்கு, தாராளவாதப் போக்கு கட்சிக்குள் சமீப காலத்தில் கொஞ்சம் வளர்ந்திருக்கிறது என்றும், சில இடங்களில் உட்கட்சிப் போராட்டத்தில் அது பிரதான போக்காக ஆகியிருக்கிறதென்றும், கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டம் போதிய அளவுக்கு வளர்க்கப்படவில்லை என்று மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தக் காரணத்தினால் பல தவறான போக்குகளும் விரும்பத்தகாத வளர்ச்சிகளும் காலாகாலத்தில் திறம்பட திருத்தப்படவில்லை. கட்சிக் கட்டுப்பாடு மெள்ள மெள்ள தளரத் தொடங்கி விட்டது. இது வெகு மோசம்.

இது ஏனெனில், நமது கட்சி சமீபத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அறிவாளிகளையும், புதிய கட்சி அங்கத்தினர்களையும் கட்சிக்குள் எடுத்துக் கொண்டிருக்கிறது; இவர்கள் பூர்ஷ்வா தாராளவாதத்தில் ஊறிப் போனவர்கள்; சித்தாந்த ரீதியிலும், அரசியல், அமைப்பு ரீதியிலும் தொழிலாளி வர்க்கத்தின் உருக்குப் போன்ற கட்டுப்பாட்டில் புடம் போடப்பட்டவர்கள் அல்ல. இவர்கள் அதற்கிடையில் சென்ற காலத்தில் “இடதுசாரி” தவறுகள் செய்தவர்கள். மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்திற்கு நின்றவர்கள்.

இப்பொழுது நேரெதிர் முகமாகத் திரும்பி, வலதுசாரி தாராளவாதத்தை செய்திருக்கிறார்கள். நீண்டகால ஐக்கிய முன்னணி சூழ்நிலையில், கட்சிக்குள் பூர்ஷ்வா வர்க்கம் தனது செல்வாக்கை பிரயோகிப்பதற்கு சந்தர்ப்பம் அதிகரித்திருக்கிறது. கட்சிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் எதிர்ப்புரட்சிக்காரர்கள், கட்சியில் தாராளவாதத்தை வளர்ப்பதற்கு எல்லா முறைகளையும் கையாண்டுள்ளார்கள். கட்சி உணர்வை உறுதிப்படுத்தும் வேலைக்கு நாம் நிகழ்த்தும் போராட்டத்தில் இந்த போக்கு பலமாக எதிர்க்கப்பட வேண்டும்.

உதாரணமாக, சில தோழர்கள் திருப்பிக் குற்றஞ் சாட்டப்படுவர் என்பதற்காக பயந்து கொண்டு மற்ற தோழர்களின் குறைகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுகிறார்கள். ஒருவருடைய தவறை ஒருவர் மறைத்து வைக்கும் பொருட்டு தங்கள் நெருங்கிய நண்பர்களின் குற்றங்களை சுட்டிக் காட்ட மாட்டார்கள்; ஒருவரைப் பற்றி நேருக்கு நேர் பேச மாட்டார்கள்; ஆனால் அவருக்குத் தெரியாமல் பிறரிடம் பொறுப்பில்லாத முறையில் பலதும் பேசுவார்கள். பொறுப்பற்ற முறையில் விமர்சிப்பது, முணுமுணுப்பது, வம்பளப்பது முதலான போக்குகள் கட்சிக்குள் நிறைய இருந்து வருகிறது.

மேலும் சமீப காலத்தில் கட்சிக்குள் இன்னுமொரு மிக மோசமான போக்கு தலை தூக்கியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கோஷ்டியைச் சேர்ந்த நபர்கள், தங்கள் குறைபாடுகளையும், குற்றங்களையும் கட்சிக்கோ அல்லது அவர்களுக்கு மேலுள்ளவர்களிடத்திலோ மற்றவர்கள் புகார் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு விரோதமாக மற்றவர்கள் குற்றச்சாட்டுகள் கொண்டுவந்துவிடுவார்களோ என்று குலை நடுங்கிக்கொண்டிருக்கின்றனர். ஒருபுறத்தில் அவர்களுக்கே தெரிந்திருக்கும் அதே தவறுகளை அவர்களால் செய்யாமலிருக்க முடியவில்லை ; மறுபுறத்தில் அவர்கள் குற்றங்குறைகளைப் பற்றி கட்சிக்கு, அவர்களுக்கு மேலுள்ளவர்களுக்கு மற்ற தோழர்கள் தெரிவிப்பதையோ, கூட்டங்களில் விமர்சனம் செய்வதையோ தடுக்க முயற்சி செய்கின்றனர். அவர்கள் சில தவறான, முறையற்ற காரியங்களைச் செய்திருக்கிறார்கள். பிழைகள் செய்திருக்கிறார்கள்; குற்றங்குறைகளைத் திருத்திக் கொள்ளும் பொருட்டு அவற்றை வெளிப்படுத்துவதற்கு இஷ்டமில்லை! தங்கள் வியாதியை மறைத்துக் கொள்ளுகிறார்கள்; தங்கள் வியாதியை குணப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்; தங்கள் தவறுகளை வெளிப்படுத்துவதின் மூலம்தான் அத்தகைய குற்றங்களைத் திருத்த முடியும் என்ற உண்மையை அவர்கள் உணரவில்லை . அவர்கள் தங்கள் குற்றங்களை பூலோகத்திலுள்ள பொக்கிஷங்களைக் காட்டிலும் அதிக மதிப்புள்ளது போல, மேல் பூச்சுப்பூசி, மூடிமறைக்கப் பார்க்கின்றனர்.

இக்காரணத்தினால் தங்கள் குற்றங்களை மற்றவர்கள் சரியாகப் பார்க்காமல் தடை செய்வது மட்டுமல்ல, அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடவும் முயலுகின்றனர். கட்சிக்கோ அல்லது அவர்களுக்கு மேலுள்ளவர்களுக்கோ தங்கள் தவறுகளைப் பற்றி புகார் செய்யவிடாமல் தடை போடுகின்றனர்; முற்றிலும் முறையான அமைப்பு வழிகள் மூலம் கட்சிக்குள் விமர்சனம் செய்யவும், எடுத்துப் பேசவும் மற்றவர்களுக்குள்ள உரிமையை இவ்வாறு இழக்கச் செய்கின்றனர். “மேலுள்ளவர்களுக்கு நீ புகார் செய்வாயாகில் பின் நீ கவலைப்பட வேண்டி வரும்; சரியான உதை கொடுப்பேன். ஜாக்கிரதை! ஏ! அடி தாங்கி” என்று மற்ற தோழர்களை பயமுறுத்துகிறார்கள். மேலுள்ளவர்களுக்கு இவர்களது குற்றங்களைப் பற்றி புகார் செய்து பேசிய தோழர்களை ஒரேயடியாக வெறுக்கின்றனர். அதை எண்ணி மனம் நோகின்றனர். பழிக்கு பழி வாங்க வேண்டுமென்று சிந்திக்கின்றனர். இவையெல்லாம் கட்சி அங்கத்தினரின் உணர்வை அறவே இழந்து நிற்கும் நிலையின் தீய அறிகுறிகளாகும். கட்சிக்குள் தாங்கள் தீய காரியங்களை செய்யும் பொருட்டு கட்சியின் தலைமைக் கமிட்டிகளுக்கும் சாமானிய கட்சி அங்கத்தினர்களுக்கும் உள்ள இணைப்பைத் துண்டிக்க முயலுகின்றனர். கட்சியிலிருந்து இந்தப்போக்கு கண்டிப்பாக விலக்கப்பட வேண்டும்.

படிக்க :
♦ மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !
♦ வர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம்

மற்ற கட்சி அங்கத்தினர்கள் தவறுகள் செய்தாலும் அல்லது கட்சிக்கு பாதகமான காரியம் ஏதும் செய்தாலும் சரி, கட்சி அங்கத்தினர் அதை காண நேர்ந்தால் கட்சிக்கும் அவர்களுக்கு மேலுள்ளவர்களுக்கும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய அறிக்கை கொடுக்காமலிருப்பது தவறு; அறிக்கை கொடுப்பது முற்றிலும் சரியானது.

கட்சிக்கோ அல்லது மேலுள்ளவர்களுக்கோ மற்றவர்கள் அறிக்கை கொடுப்பதை தடுப்பது என்பது சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் விரோதமானது; கட்சியில் என்றுமே அனுமதிக்கப்படமாட்டாது. இத்தகைய அறிக்கைகள் கிடைத்தால், மேல் கமிட்டிகள், என்ன நடந்தது என்பதை நுட்பமாகத் துருவி ஆராய்ந்து, வழக்கை வெகு கவனமாக விசாரிக்க வேண்டும்; சம்பவத்தைப் பற்றிய ஒருதலைப்பட்சமான தகவலை வைத்துக் கொண்டு அவசரப்பட்டு தீர்ப்பு செய்யாமலிருக்க வேண்டும்.

இன்று கட்சிக்குள் சித்தாந்த ரீதியான போராட்டம் முறையாகத் துவக்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே முடிவு செய்துள்ளோம். அதனால் நாம் தாராளவாதத்தை எதிர்க்க வேண்டும். குறிப்பாக பெரும் தாராளவாதத் தவறுகள் இழைக்கப்பட்ட சில கட்சி உறுப்புகளில், அத்தகைய தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தாராளவாதத்திற்கு எதிராக நாம் ஸ்தூலமான போராட்டம் நடத்த வேண்டும்.

பல வருஷங்களுக்கு முன்பு தாராளவாதத்தைக் கண்டித்து தோழர் மாசேதுங் ஒரு கட்டுரை எழுதினார்; அதில் கட்சிக்குள் காணப்படும் பதினேழுவிதமான தாராளவாதப் பிழைகளை விவரித்துள்ளார். இன்றைக்கும் அவரது கட்டுரை பொருந்தும்; அதை நீங்கள் வெகு கவனமாக படிக்க வேண்டும். அந்தக் கட்டுரையின்படி தாராளவாதத்தை எதிர்த்துப் போராடவும், திருத்திக் கொள்ளவும் முயல வேண்டும். அதே சமயத்தில் கட்சி கட்டுவது பற்றிய வகுப்பிலும் தாராளவாதம் பற்றி பூரண விவாதம் நடத்தப்படும். அதனால்தான் இன்று அந்த விசயத்தை நான் எடுத்துக் கொள்ளவில்லை; நான் பேசப்போவது இரண்டாவது, மூன்றாவது திரிபுகளாகும்; ஏனெனில் இந்த இரண்டு திரிபுகளையும் கட்சிக்குள் யாருமே இதுவரை முறைப்படுத்தி விவாதித்ததில்லை.

(தொடரும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க