உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 7

பாகம் – 6

இயந்திரகதியான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்தின் வடிவங்கள் :

நான்காவதாக, கட்சிக்குள் உள்ள போராட்ட முறைகளும், கட்சிக்கு வெளியே உள்ள போராட்ட முறைகளும் கலக்கப்படுகின்றன. சில தோழர்கள் உட்கட்சிப் போராட்ட முறைகளை இயக்க மறுப்பியல் ரீதியான கட்சியல்லாத பொதுமக்கள் அமைப்புகளில் கையாளுகின்றனர்; கட்சியில் சேராத ஊழியர்கள் பொதுமக்களுடன் போராட்டம் நடத்தும் பொழுது உட்கட்சி போராட்ட முறைகளை உபயோகப்படுத்துகின்றனர். இதற்கு நேர்மாறாக சில தோழர்கள் கட்சிக்கு வெளியில் உபயோகப்படுத்தும் போராட்ட முறைகளை விரோதியிடத்திலும் அந்நிய நபர்களிடத்திலும் உபயோகப்படுத்தும் போராட்ட முறைகளை கட்சிக்குள் இருக்கும் தோழர்கள் சம்பந்தமாக போராட்டம் நிகழ்த்தும்போது உபயோகிக்கின்றனர்.

விரோதியையும் அந்நிய நபர்களையும் எதிர்ப்பதற்கு கைக்கொள்ளும் நடவடிக்கைகளை கட்சிக்குள் இருக்கும் தோழர்களை நடத்துவதில் உபயோகப்படுத்துகின்றனர். எல்லாவித ஆத்திரமூட்டல், பகை, சதி அனைத்தையும் அனுஷ்டிக்கின்றனர். கண்காணித்தல், கைது செய்தல், விசாரணை நடத்துவது, சிறைப்படுத்துவது முதலான சகலவித நிர்வாக நடவடிக்கைகளையும் உட்கட்சிப் போராட்டத்தில் அவர்கள் பிரயோகிக்கின்றனர். உதாரணமாக, துரோகிகளை வேட்டையாடுவதென்னும் “இடதுசாரி”த் தவறை இழைத்த தோழர்கள் அத்தவறு செய்வதற்குக் காரணம், கட்சிக்குள் நடக்கும் போராட்டத்திற்கும் கட்சிக்கு வெளியே நடக்கும் போராட்டத்திற்கும் இடையில் தெளிவான வரையறுப்பு வைத்துக் கொள்ளாததுதான். கட்சிக்குள் நிகழ்த்தும் சித்தாந்தப் போராட்டத்தையும் துரோகிகளை வேட்டையாடும் இயக்கத்தையும் போட்டுக் குழப்புகின்றனர். பெரும்பாலும் இவர்கள் கட்சிக்குள் பதுங்கிக் கொண்டிருக்கும் ஒற்றர்களாக இருக்கின்றனர். ஆனால் ஒளிந்து கொண்டிருக்கும் இந்த ஒற்றர்களை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு விசயங்களை ஆதாரமாகக் கொண்டு நிற்க வேண்டும்; அவர்களை தோலுரித்துக் காட்டி, கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; தவறு செய்த கட்சி அங்கத்தினர்கள் கற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நடத்தும் போராட்டத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது; இவையிரண்டுக்கும் இடையில் தெளிவான வரையறுப்பு செய்யப்பட வேண்டும். கட்சிக்குள் நடத்தும் போராட்டமும், கட்சிக்கு வெளியே நடத்தும் போராட்டமும், ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டவைதான், ஆனாலும் அவற்றின் போராட்ட முறையும் வடிவமும் வேறுபட்டதாகத்தானிருக்க வேண்டும்.

இன்னும் சில தோழர்கள் இருக்கின்றனர் (உண்மையில் இவர்களை இதற்கு மேலும் தோழர்கள் என்று அழைக்க முடியாது). இவர்கள் உட்கட்சிப் போராட்டம் நடத்துவதற்கும், கட்சியை பயமுறுத்துவதற்கும், கட்சிக்கு வெளியிலுள்ள சக்திகளை உபயோகப்படுத்தவும், பகிரங்கமாகவே அச்சக்திகளைச் சார்ந்து நிற்கவும் செய்கின்றனர். உதாரணமாக, அவர்களுடைய அரைகுறை சாதனைகளையும், துருப்புக்களையும், துப்பாக்கிகளையும், பொதுமக்கள் மத்தியில் கொண்டுள்ள செல்வாக்கையும் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த சில பகுதிகளுடன் தங்களுக்குள்ள உறவையும் வைத்துக் கொண்டு சிலர் கட்சியையும், மேல் கமிட்டிகளையும் எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர்.

மேல் கமிட்டிகளையும், கட்சியையும் தங்கள் கோரிக்கைகளையும் அபிப்பிராயங்களையும் ஒப்புக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கின்றனர்; கட்சியின்பால் சுயேச்சை மனோபாவம் காட்டுகின்றனர்; கட்சியிலிருந்து விடுபட்டுள்ள தங்கள் சுயேச்சை நிலையை பிரகடனப்படுத்துகின்றனர்; அல்லது கட்சிக்கு வெளியிலுள்ள பத்திரிக்கைகள் சஞ்சிகைகள் பல்வேறு மகாநாடுகள், முதலியனவற்றை பூர்ஷ்வாவுக்கும் விரோதிக்கும் சொந்தமானவற்றைக்கூட, மேல் கமிட்டியின் மீதும் சில தோழர்கள், ஊழியர்கள் மீதும் போராட்டம் நடத்துவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். இது தவறு என்று சொல்லத் தேவையில்லை; இன்னொரு கோஷ்டி நபர்கள் கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களை பலவந்தப்படுத்தி அடக்கி ஒடுக்கி ஆதிக்கஞ் செலுத்தவும், கட்சிக்கு வெளியிலுள்ள நபர்களை பயமுறுத்தி, தண்டவரி வசூலிப்பதும் எவ்வளவு கடுமையான தவறோ அதேபோல் இதுவும் கடுமையான தவறாகும். இந்தப் பேர்வழிகள் கட்சிக்கு எதிராக கட்சிக்கு சம்பந்தப்படாத கண்ணோட்டத்துடன் போராடுகின்றனர். ஆதலின் அவர்கள் பெயரளவில் கம்யூனிஸ்டுகளாக இருந்து வந்தபோதிலும், கட்சிக் கண்ணோட்டத்தில் அறவே வேறுபட்டு போய்விட்டனர்; கட்சியின் விரோதிகள் ஆகிவிட்டனர்.

ஐந்தாவதாக, நமது கட்சியில் பல பிரச்சினைகள் கூட்டங்களில் அல்லது கூட்டங்கள் மூலம் முடிவாகின்றன. இது நல்லது. ஆனால் பல அமைப்புகளில், தயாரிப்பின்றி, முன் பரிசீலனையோ ஆராய்ச்சியோ ஏதுமின்றி பல கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு பலவேறுபாடான அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. கூட்டத்தில் அடிக்கடி சச்சரவுகளும் நிகழுகின்றன. எல்லாக் கூட்டங்களிலும், ஒவ்வொரு முறையும் முன்னணிப் பங்கு வகிப்பவர்களினாலேயே முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதினால், அத்தகைய கூட்டங்களில் செய்யப்படும் முடிவுகள் கட்சியை கட்டுப்படுத்தும் தீர்மானங்களுக்கு சமமாவதினால், பெரும்பாலும் பல தவறுகள் நேர்கின்றன. சில கூட்டங்களில் வாக்குவாதம் இறுதியாக போதனாசிரியர், கட்சி கிளையின் காரியதரிசி அல்லது வேறு ஏதாவது பொறுப்புள்ள, தோழரின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனித்திருக்கிறேன்; ஆனால் பொறுப்பு வாய்ந்த தோழருக்கே அவ்விசயத்தில் ஒன்றுமே நிச்சயமில்லை; அந்த பிரச்சினை பற்றி அவரே முற்றிலும் குழம்பிப் போயிருப்பார். அந்த பிரச்சினையின் அவசர அவசியமான காரணத்தினால் எப்படியும் அவர் ஒரு முடிவு எடுத்தாக வேண்டியிருக்கிறது! இல்லையெனில் இனி மேற்கொண்டு அவர் பொறுப்பு வகிக்கும் தோழராக இருக்க முடியாது. இந்த பொறுப்புள்ள தோழர் ஒரு முடிவு எடுக்க வேண்டியிருந்தது; சில விசயங்களில் மிகவும் தத்தளிக்க வேண்டியிருந்தது. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டிற்று. அவர் அவசரத்தில் முடிவு எடுத்தார்; அவர் முடிவு கட்டுப்படுத்தும் தீர்மானத்திற்கு சமானம்.

இந்த முடிவுப்படி விசயங்கள் தீர்மானிக்கப்பட்டன; ஆனால் பல தவறுகள் நிச்சயம் நேரும் என்று சொல்லத் தேவையில்லை. சில தோழர்கள் ஒரு பிரச்சினையைப் பற்றி முடிவு எடுப்பதற்கு தெரியவில்லையென்றால், தங்களுக்குத் தெரியாது என்றும், பிரச்சினையைப் பற்றி ஆலோசிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அல்லது பிரச்சினையை மேல் கமிட்டியின் ஆலோசனைக்கு அனுப்புவதற்கும் அவகாசம் வேண்டும் என்றும் சொல்லத் தயாராயில்லை. ஆயினும் வறட்டு கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கும்; தங்கள் பதவிகளைக் காத்துக் கொள்ளவும், ஏற்கனவே  தங்களுக்கே எல்லாம் தெரிந்தது போல இவர்கள் பாசாங்கு செய்கின்றனர். போகிற போக்கில் ஒரு முடிவு செய்கிறார்கள்; பெரும்பாலும் அது தவறாக இருக்கிறது; இம்மாதிரி விசயங்களும் திருத்தப்பட வேண்டும்.

சகல பிரச்சினைகளையும் அணுகும் பொழுது எல்லா தோழருக்கும், கீழ்க்கண்ட மனோபாவம் இருத்தல் வேண்டும். ‘உனக்கு ஒருவிசயம் தெரிந்தால், எனக்குத் தெரியும் என்று சொல்; உனக்குத் தெரியவில்லையென்றால் தெரியாது என்று சொல்; “அதைவிட்டு ” உண்மையிலேயே தெரியாத விசயத்தை தெரிந்ததாகச் சொல்லிக் கொள்ளுதல் கூடாது. கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை இஷ்டப்படி தீர்க்க முடியாது. எல்லா கூட்டங்களும் முடிவுகளுக்கு வரவேண்டும். ஆனால் முடிவு  செய்ய முடியாத விசயங்கள் அல்லது இன்னும் சந்தேகமாயிருக்கும் பிரச்சினைகள், அல்லது இனியும் தெளிவுபடுத்தப்படாத விசயங்கள் பற்றி அலட்சியமாக முடிவு எடுக்கப்படக் கூடாது. ஒருவருக்கு நன்றாகத் தெரிந்த விசயங்களைப் பற்றியே முடிவு எடுக்கப்படவேண்டும். ஒருவருக்குத் தெரியாத விசயத்தை மேலும் ஆலோசிப்பதற்கு என்று தள்ளி வைத்துக் கொள்ளலாம்; அல்லது மேல் கமிட்டியின் ஆலோசனைக்கு அனுப்பப்படலாம். ஒரு கூட்டத்தில் உருவாகும் முடிவு, அவசியம் அந்தக் கூட்டத்திற்கு ஆஜரான மிகவும் பொறுப்பு வாய்ந்த தோழரால்தான் செய்யப்பட வேண்டுமென்று இல்லை; அறிக்கை வாசிப்பவர், விவாதத்திற்கு பின்னர் முடிவுகளை வகுக்கலாம்; இந்தத் தோழர் செய்யும் முடிவு கட்டுப்படுத்தும் தீர்மானத்திற்கு சமானமாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை; கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு இந்தத் தோழர் வந்த முடிவுக்கு மாறாக இருக்க முடியும்; இதுதான் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்)யிலும் காணப்படும் வேலை முறை.

மேலே குறிப்பிட்டவை , இயக்க மறுப்பியல் வகைப்பட்ட, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்தின் முக்கியமான சிலபிரதிபலிப்புகளாகும்.

மேலே நான் கூறியுள்ளவை சில, படு மோசமான பிரதிபலிப்புகளில் ஒரு சில உதாரணங்களே. அதனால் கடந்தகால உட்கட்சிப் போராட்டமும், நிகழ்கால உட்கட்சிப் போராட்டமும் எங்கும் இதே மாதிரியிருக்கிறது என்று அர்த்தமில்லை. ஆனால் அத்தகைய உட்கட்சி போராட்ட வடிவங்கள் எதார்த்தத்தில் இருந்து வருகின்றன; சில காலகட்டங்களில் கட்சியில் மேலோங்கி பிரதான உட்கட்சி போராட்ட வடிவமாகவும் ஆயிற்று.

இந்த தவறான, பொருத்தமற்ற உட்கட்சி போராட்ட வடிவங்கள் கட்சிக்குள் எத்தகைய விளைவுகளை உண்டாக்கியுள்ளன? அவை கீழ்க்காணும் மோசமான விளைவுகளை உண்டாக்கியுள்ளன.

முதலாவதாக, அவை கட்சிக்குள் “குடும்பத் தலைவன் தோரணை” ஆதிக்கத்திற்கு ஊக்கமளிக்கிறது. இத்தகைய உட்கட்சிப் போராட்டங்களினால், தனிப்பட்ட தலைவர்களும், தலைமை கமிட்டிகளும், கட்சி அங்கத்தினர்கள் பேசுவதற்கும், விமர்சனம் செய்வதற்கும்கூட அஞ்சும்படியான அளவிற்கு அவர்களை அடக்கி வருகின்றனர். இவ்வாறு கட்சிக்குள் ஒரு தனிநபர் அல்லது ஒரு சில நபர்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளும் தோரணையை வளர்க்கிறது.

இரண்டாவதாக, இதற்கு நேர்மாறாக, கட்சிக்குள் அதீத ஜனநாயகவாதப்போக்கும், தாராளவாதமும் வளர்வதற்கு, உதவியுள்ளன. சாதாரண காலத்தில் பல கட்சி அங்கத்தினர்கள் மனம் விட்டு பேசவோ, அல்லது விமர்சிக்கவோ மாட்டார்கள்; மேலெழுந்தவாரியாக கட்சியில் சமாதானமும், ஐக்கியமும் நிலவும். ஆனால் முரண்பாடுகளை மறைக்கமுடியாத நிலைமை வரும்பொழுது நிலைமை நெருக்கடியாகும் பொழுது, குற்றங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது இவர்கள் கடுமையான விமர்சனம் செய்யவும் போராடவும் இறங்கி விடுவார்கள்; இது கட்சிக்குள் பகை, பிளவு அமைப்பு சீர்குலைவு முதலியவற்றிற்குக் கொண்டு விடுகிறது; இவற்றை குணப்படுத்துவதென்பது துர்பலம்; கட்சிக்குள் இது “குடும்பத் தலைவன் தோரணையின்” மறுபக்கமாகும்.

மூன்றாவதாக, ஜனநாயக மத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி வாழ்க்கையை முறைப்படி அமைப்பதை அவை தடுத்து விட்டன. இதன் விளைவாக கட்சிக்குள் ஜனநாயக வாழ்க்கை ஒழுங்கற்றும், அசாதாரணமாகவும், அறவே இல்லாமலும் இருந்து வருகிறது.

படிக்க :
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !
♦ கம்யூனிஸ்ட் கட்சியில் தவறை மறைப்பது நோயை மறைப்பதற்குச் சமம் ! | லியூ ஷோசி

நான்காவதாக, அவை கட்சி அங்கத்தினர்களின் ஊக்கம், முன்கை எடுக்கும் குணம், ஆக்கல் சக்தி வளர்வதைத் தடுத்து, கட்சியின்பாலும், அவர்கள் வேலையின்பாலும் காட்டும் பொறுப்புணர்ச்சியைக் குறைத்துள்ளது ; இதனால் சில தோழர்கள் உற்சாகத்துடன் பொறுப்புகளை மேற்கொள்ளவோ, அல்லது சுதந்திரமான கரங்களுடன் வேலை செய்யவோ, சிருஷ்டிக்கவோ துணிவதில்லை. இது தோழர்கள் நிலைமைகளையும், பிரச்சினைகளையும் கவனமாக ஆலோசிக்கவோ, ஆராயவோ கவலைப்பட்டுக் கொள்ளாத நிலைமையில் கொண்டுவிட்டிருக்கிறது; தங்கள் வேலையை சிரத்தையின்றி அலட்சியமாக செய்து வரும், மற்றவர்கள் கூறும் வார்த்தைகளை வெறுமனே எதிரொலிக்கும் வேலை முறையை வளர்ப்பதில் கொண்டு விட்டிருக்கிறது.

ஐந்தாவதாக, அவை கட்சிக்குள் குறுங்குழுவாதத்தையும் கோட்பாடற்ற கோஷ்டிச் சண்டைகளையும் வளர்ப்பதற்கு உதவியுள்ளது . கட்சிக்குள் விமர்சனத்தையும், போராட்டத்தையும் கண்டு அஞ்சும் மனப்பாங்கை உண்டாக்கியுள்ளது; சில தோழர்களிடத்தில் “தானுண்டு தன்வேலையுண்டு” என்ற வைதீக மனப்போக்கையும் “எந்த அளவுக்கு குறைந்த வேலையோ அந்த அளவுக்கு விசேஷம்”  என்ற மனப்பான்மையையும் வளர்க்கிறது.

ஆறாவதாக, அவை ட்ராட்ஸ்கீய ஒற்றர்களுக்கும், எதிர்புரட்சிக்காரர்களுக்கும் கட்சியை சீர்குலைப்பதற்கு அரிய வாய்ப்பை அளித்திருக்கிறது; நமது கட்சியைத் தாக்குவதற்கு எதிர்ப்புரட்சிக்கு அதிக சாக்குகளைக் கொடுத்திருக்கிறது. ட்ராட்ஸ்கீய ஒற்றர்கள் கட்சியை சீர் குலைப்பது, தாக்குண்டு கட்சி மீது அதிருப்திப்பட்ட நபர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்வது முதலான நடவடிக்கைகளை நடத்திக்கொண்டு செல்வதற்கு கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளையும், முறை நழுவிய எந்தவிதமான உட்கட்சிப் போராட்டத்தையும் குறிப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை, பிரச்சாரம் செய்வதற்கும் ஆத்திரமூட்டுதலுக்கும், கட்சிக்கு வெளியிலுள்ள அனுதாபிகளையும் கட்சிக்குள் உள்ள உறுதியற்ற நபர்களையும், பகை வளர்க்கும் கொள்கையை நிறைவேற்றுமாறும், கட்சிக்குள் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் சீர்குலைக்குமாறும் கவர்வதற்கும் பயன்படுத்திக்கொள்கிறது.

இந்த மேலே கூறியுள்ள தீய விளைவுகள் கட்சிக்குள் நேர்ந்துள்ளன; சில இன்னும் அகற்றப்படவில்லை.

இத்தகைய இயந்திரரீதியான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்ட வடிவங்கள் நீண்ட காலத்திற்கு கட்சி வாழ்க்கையில் அசாதாரண நிலையை சிருஷ்டித்துள்ளது. கட்சிக்குப் பெருஞ் சேதமும் விளைவித்துள்ளது. நமது கட்சியின் தலைமை தாங்கும் மேல் கமிட்டிகளில் இது திருத்தப்பட்டிருந்த போதிலும், கட்சி முழுவதையும் எடுத்துக் கொண்டால் இன்று அது பிரதான போராட்ட வடிவமாக இல்லாதிருந்த போதிலும், நடுத்தர, கீழ்த்தர மட்டங்களிலுள்ள சில அமைப்புகளிலும், சில தனிப்பட்ட அமைப்புகளிலும் இந்த போராட்ட வடிவங்கள் இன்னமும் திருத்தப்படவில்லை. பல்வேறு அளவில் பரந்து இருந்து வருகிறது. இதன் விளைவாக இந்த அமைப்புகளில் வாழ்க்கை அசாதாரணமாக இருக்கிறது. அதனால் இந்த திரிபு விசயத்தில் கவனம் செலுத்தும்படி அறைகூவ வேண்டும். அப்பொழுதுதான் நமது அமைப்பிலிருந்து இவற்றை அறவே அகற்றலாம்; நமது தோழர்கள் திரும்பவும் அதே தவறுகளை செய்யாதிருப்பார்கள்; சரியாகவும், ஒரே நிதானமாகவும் கட்சிக்குள் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி, கட்சியை முன்னுக்குக் கொண்டு செல்லுவார்கள்.

(தொடரும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க