சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை
(1957, மார்ச் 12)
பாகம் – 4

முந்தைய பாகங்கள் >> 1 2 3

ஆறாவதாக ஒருதலைப்பட்சப் போக்குப் பற்றிய பிரச்சினை.

ஒருதலைப்பட்சப் போக்கு என்றால் விசயங்களை ஒரு திக்கில் பார்ப்பது; அதாவது பிரச்சினைகளை நிலையியல் முறையில் அணுகுவது என்று அர்த்தமாகும். நமது வேலையை மதிப்பிடும்போது, ஒவ்வொரு விசயத்திலும் எல்லாம் சாதகமானது அல்லது எல்லாம் பாதகமானது என்று கருதுவது ஒருதலைப்பட்சப் போக்காகும். கம்யூனிஸ்ட் கட்சியிலும் இப்படிச் செய்யும் நபர்கள் குறைவல்ல; கட்சிக்கு வெளியிலும் பலர் இருக்கின்றனர்.

எல்லாவற்றையும் சாதகமானது என்று கருதுவதென்றால், நன்மையை மாத்திரம் பார்த்து, தீமையைப் பார்க்கத் தவறுவது, பாராட்டை மட்டும் ஏற்று, விமர்சனத்தைச் சகிக்கத் தவறுவது ஆகும். ஒவ்வொரு அம்சத்திலும் நமது வேலை சிறந்தது என்று கதைப்பது உண்மைக்குப் பொருந்தியதல்ல. ஒவ்வொன்றும் சிறந்தது என்பது உண்மையல்ல; குறைபாடுகளும் தவறுகளும் இன்னும் இருக்கின்றன. ஆனால் எல்லாம் தீயவை என்பதும் உண்மையல்ல. அதுவும் சான்றுகளுக்கு மாறானது.

இங்கு நாம் விசயங்களை ஸ்தூலமாக ஆராய வேண்டும். எல்லாவற்றையும் நிராகரிப்பதன் அர்த்தம், எவ்வித ஆராய்வும் இல்லாமல், ஒன்றும் நன்றாகச் செய்யப்படவில்லை, மாபெரும் சோசலிச நிர்மாண இலட்சியம், பல பத்துக் கோடி மக்கள் பங்கு பற்றும் இந்த மகத்தான போராட்டம் எல்லாம் ஒரே குழறுபடி, இதில் பாராட்டக் கூடியது ஒன்றுமே இல்லை என்று எண்ணுவதாகும்.

படிக்க :
♦ பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !
♦  ‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !

இத்தகைய கருத்துகள் உடையவர்களுக்கும், சோசலிச அமைப்புமீது பகைமையுடையவர்களுக்கும் இடையில் ஒரு வித்தியாசம் இருந்த போதிலும், இந்தக் கருத்துக்கள் மிகத் தவறானவை, தீங்கு விளைப்பவை. இவை மக்களை ஊக்கம் இழக்க மாத்திரம் செய்யும். எனவே, நமது வேலையை மதிப்பிடும் போது, எல்லாம் சாதகமானவை என்ற கண்ணோட்டத்திலிருந்து மதிப்பீடு செய்வது, எல்லாம் பாதகமானவை என்ற கண்ணோட்டத்திலிருந்து மதிப்பீடு செய்வது இரண்டும் தவறானவை.

பிரச்சினைகளை அணுகும் போது இத்தகைய ஒருதலைப்பட்சப் போக்கை மேற்கொள்ளும் நபர்களை நாம் விமர்சனம் செய்ய வேண்டும். அவர்களை விமர்சனம் செய்யும் போது, நாம் உண்மையில் “கடந்தகாலத் தவறுகளிலிருந்து படிப்பினை பெற்று எதிர்காலத்தில் தவறுகளைத் தவிர்ப்பது, நோயாளியைக் காப்பாற்ற நோய்க்குச் சிகிச்சை அளிப்பது” என்ற கோட்பாட்டின் பிரகாரம் நடந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

சீர்செய் இயக்கம் ஒன்று நடைபெறவிருப்பதால், ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்குமாறு கேட்கப்படவிருப்பதால், ஒருதலைப்பட்சப் போக்கு என்பது தவிர்க்க முடியாதது, எனவே ஒருதலைப்பட்சப் போக்கை இல்லாமற் செய்ய விரும்பும் போது, மக்கள் வாய்திறந்து பேசுவதை நீங்கள் உண்மையில் விரும்பவில்லைபோற் தோன்றுகின்றது என்று சிலர் கூறுகின்றனர். இந்தக் கூற்று சரியா?

இயற்கையில் எல்லாரும் ஒரு தலைப்பட்சப் போக்கை முற்றுமுழுதாகத் தவிர்ப்பது என்பது கஷ்டமானது. மக்கள் எப்பொழுதும் தமது சொந்த அனுபவத்தின் பிரகாரம் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றைக் கையாண்டு தமது கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்; சில சமயங்களில் அவர்கள் தவிர்க்கமுடியாதபடி சிறிது ஒருதலைப்பட்சப் போக்கைக் காட்டுகின்றார்கள். இருந்தும் தமது ஒருதலைப்பட்சப் போக்கைப் படிப்படியாக வெற்றி கொண்டு, ஒப்பீட்டு வகையில் பிரச்சினைகளைப் பன்முகங்களிலிருந்தும் பார்க்குமாறு நாம் அவர்களைக் கேட்கக் கூடாதா?

அப்படிக் கேட்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன். நாளுக்கு நாள் ஆண்டுக்கு ஆண்டு, மென்மேலும் அதிகப்படியான மக்கள் ஒப்பீட்டு வகையில் பிரச்சினைகளைப் பன்முகங்களிலிருந்தும் பார்க்க வேண்டும் என்று கோராவிட்டால், நாம் ஸ்தம்பித்துவிடுவோம்; நாம் ஒருதலைப் பட்சப் போக்கை அங்கீகரித்துச் சீர்செய் இயக்கத்தின் நோக்கம் முழுவதற்கும் முரண்பட்டவர்கள் ஆவோம். ஒருதலைப்பட்சப் போக்கு என்பது இயங்கியலை அத்துமீறுவதாகும்.

நாம் இயங்கியலைப் படிப்படியாகப் பரப்ப விரும்புகின்றோம். விஞ்ஞானரீதியான இயங்கியல் முறையின் உபயோகத்தைப் படிப்படியாகக் கற்றுக் கொள்ளும்படி நாம் எல்லாரையும் கேட்க விரும்புகின்றோம். இன்று பிரசுரமாகும் கட்டுரைகளில் சில மிகப் பகட்டானவை; ஆனால் உள்ளடக்கமோ பிரச்சினை பற்றிய ஆராய்வோ நியாயங் காட்டி விளக்கும் திறனோ சிறிதேனும் இல்லாதவை; அவை நம்பிக்கை ஊட்டுவனவாக இல்லை. அத்தகைய கட்டுரைகள் படிப்படியாகக் குறைய வேண்டும்.

கட்டுரை ஒன்றை எழுதும் போது, ”நான் எவ்வளவு விவேகி” என்று ஒருவர் சர்வசதா சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது; பதிலுக்குத் தமது வாசகர்களைத் தமக்கு முற்றிலும் சமமானவர்கள் என்று கருத வேண்டும். நீங்கள் நீண்ட காலம் புரட்சியில் இருந்திருக்கலாம். இருந்தும் நீங்கள் சொல்வது தவறாக இருந்தால் மக்கள் உங்களை மறுத்துரைப்பார்கள். நீங்கள் எவ்வளவுக்கு வித்துவத் தன்மை காட்டுகிறீர்களோ, அவ்வளவுக்கு அதை விரும்பும் மக்களும் குறைவாக இருப்பர். உங்கள் கட்டுரைகளை வாசிப்பதில் மக்களின் அக்கறையும் குறைந்துகொண்டு போகும். நமது வேலையை நாம் நேர்மையாகச் செய்ய வேண்டும். விசயங்களை ஸ்தூலமாக ஆராய வேண்டும். நம்பிக்கையூட்டும் கட்டுரைகளை எழுதவேண்டும். நடித்துப் பாவனை காட்டி மக்களை மலைக்க வைக்கக் கூடாது.

ஒரு சிறிய வியாசத்தில் ஒருதலைப்பட்சப் போக்கு தவிர்க்க முடியாதது; அதே வேளையில் நீண்ட கட்டுரையில் அதைத் தவிர்க்க முடியும் என்று சிலர் கூறுகின்றனர். ஒரு சிறிய வியாசம் எப்பொழுதும் ஒருதலைப்பட்சப் போக்கு உடையதாக இருக்க வேண்டுமா? நான் குறிப்பிட்டது போல, ஒருதலைப்பட்சப் போக்கைத் தவிர்ப்பது வழக்கத்தில் கடினம். அது ஓரளவு நுழைந்துவிட்டால் அதில் ஏதும் அஞ்சுவதற்கில்லை. முழுமையாகப்  பன்முகங்களிலிருந்தும் பிரச்சினைகளை நோக்க வேண்டும் என்று எல்லாரையும் கோரினால் விமர்சனம் தடைப்பட்டுவிடும். எனினும் ஒப்பீட்டு வகையில் பிரச்சினைகளைப் பன்முகங்களிலிருந்தும் பார்க்க முயல வேண்டும், சிறு வியாசங்கள் உட்பட சிறிய பெரிய கட்டுரைகள் இரண்டிலும் ஒருதலைப்பட்சப் போக்கைத் தவிர்க்கப் பாடுபட வேண்டும் என்று  நாம் எல்லாரையும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

சில நூறு வார்த்தைகள் அல்லது ஆயிரம் முதல் இரண்டாயிரம் வார்த்தைகள் கொண்ட வியாசத்தில் ஒரு விசயத்தை ஆராய்வது சாத்தியமா? என்று சிலர் வாதாடுகின்றனர்.  ஏன் முடியாது? என்று நான் கேட்கிறேன். லூ ஸுன் அப்படிச் செய்யவில்லையா? ஆராய்வு முறையே இயங்கியல் முறை என்பது. ஆராய்வு என்றால் விசயங்களிலுள்ள முரண்பாடுகளை ஆராய்வதாகும். வாழ்வு பற்றிய அன்னியோன்னியமான அறிவில்லாவிட்டால், சம்பந்தப்பட்ட முரண்பாடுகள் பற்றிய உண்மையான விளக்கம் இல்லாவிட்டால், சரியான ஆராய்வு என்பது சாத்தியமாகாது.

லூ ஸுன்னின் பிற்காலக் கட்டுரைகள் மிக ஆழமானவை, சக்தி வாய்ந்தவை. இன்னும் ஒருதலைப்பட்சப் போக்கிலிருந்து விடுதலை பெற்றுள்ளன. காரணம், அப்பொழுது அவர் இயங்கியலைக் கிரகித்துவிட்டார். லெனினுடைய சில கட்டுரைகளையும் சிறு வியாசங்கள் என்று கூறலாம். அவை நையாண்டியும் குத்தலும் நிறைந்தவை. ஆனால் ஒருதலைப்பட்சப் போக்குடையவை அல்ல. ஏறக்குறைய  லூ ஸுன்னின் வியாசங்கள் எல்லாம் எதிரிக்கு எதிராக எழுதப்பட்டவை.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

லெனினின் வியாசங்கள் சில எதிரிக்கும், வேறு சில தோழர்களுக்கும் எதிராக எழுதப்பட்டவை. மக்கள் அணிகளில் காணப்படும் தவறுகளுக்கும் குறைபாடுகளுக்கும் எதிராக லூ ஸுன்னின் கட்டுரைகள் போன்றவற்றை உபயோகிக்க முடியுமா? முடியும் என்று நான் எண்ணுகின்றேன். இயற்கையாகவே எதிரிக்கும் நமக்குமிடையில் நாம் ஒரு வேறுபாடு செய்து கொள்ள வேண்டும். தோழர்கள் மீது ஒரு பகை நிலைப்பாட்டை மேற்கொண்டு எதிரிகளை நடத்துவது போல் அவர்களை நடத்தக் கூடாது.

நாம் மக்களின் இலட்சியத்தைப் பாதுகாத்து, அவர்களுடைய அரசியல் உணர்வை உயர்த்தும் பேரார்வத்துடன் பேச வேண்டும்; நம்முடைய அணுகுமுறையில் எள்ளி நகையாடுதலோ தாக்குதலோ இருக்கக் கூடாது. ஒருவர் எழுதத் துணியாவிட்டால் யாது செய்வது? அவர்களிடம் ஏதும் விசயம் இருந்தாலும், பிறரைப் புண்படுத்தவும், தாம் விமர்சனம் செய்யப்படவும் அஞ்சுவதால், அவர்கள் எழுதத் துணியவில்லை என்று சிலர் கூறுகின்றனர். இத்தகைய கவலைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட முடியும் என்று நான் எண்ணுகின்றேன்.

நமது அரசாங்கம் ஒரு ஜனநாயக மக்கள் அரசாங்கம். மக்களுக்குத் தொண்டு செய்ய எழுதுவதற்கு இசைவான ஒரு சூழ்நிலையை அது அளிக்கின்றது. நூறு மலர்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்” என்ற கொள்கை விஞ்ஞானமும் கலைகளும் செழித்து வளர்வதற்குக் கூடுதலான உத்தரவாதத்தை வழங்குகின்றது. நீங்கள் சொல்வது சரியாக இருந்தால், நீங்கள் விமர்சனத்துக்கு அஞ்சவேண்டியதில்லை. விவாதத்தின் மூலம் உங்களுடைய சரியான கருத்துக்களை நீங்கள் மேலும் விளக்க முடியும்.

நீங்கள் சொல்வது பிழையாக இருந்தால், உங்களுடைய பிழைகளை நீங்கள் திருத்துவதற்கு விமர்சனம் உதவி செய்யும். அதில் ஒன்றும் தீமை இல்லை. நமது சமுதாயத்தில் போராட்ட எழுச்சிமிக்க புரட்சிகர விமர்சனமும் எதிர் விமர்சனமும் முரண்பாடுகளை வெளிப்படுத்தி, தீர்வு காணவும், விஞ்ஞானத்தையும் கலைகளையும் விருத்தி செய்யவும், நமது வேலை முழுவதிலும் வெற்றியை உத்தரவாதம் செய்யவும் உபயோகிக்கப்படும் சிறந்த முறையாகும்.

 (தொடரும்)

1 மறுமொழி

  1. கலாச்சார இயக்கம் கட்சிக்குள்ளும் , வெளியேவும் நடத்த படவேண்டும். ஆனால் அந்த செயல்பாடு இன்றுவரை ஏட்டில் மட்டுமே உள்ளது. அது என்றைக்கு நடைமுறைக்கு வருகிறதோ அன்றே புரட்சிகர இயக்கம் முழுமை பெறும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க