சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை
(1957, மார்ச் 12)
பாகம் – 2

முதல்பாகம் >>

மூன்றாவதாக, அறிவுஜீவிகளைப் புனருருவாக்கும் பிரச்சினை :

மது நாடு கலாச்சாரரீதியில் வளர்ச்சியடையாத ஒரு நாடு. எம்முடைய நாடு போன்ற ஒரு விசாலமான நாட்டுக்கு ஐம்பது லட்சம் அறிவுஜீவிகள் மிகச் சிலரே ஆவர். அறிவுஜீவிகள் இல்லாவிட்டால் நமது வேலைகளை நன்றாகச் செய்ய முடியாது. எனவே அவர்களுடன் ஐக்கியப்படுவதற்கு நாம் நன்றாக உழைக்க வேண்டும். சோசலிசச் சமுதாயம் பிரதானமாகத் தொழிலாளர், விவசாயிகள், அறிவுஜீவிகள் என்ற மூன்று பகுதியினரைக் கொண்ட சமுதாயம்.

அறிவுஜீவிகள் என்போர் மூளை உழைப்பாளர்கள். அவர்களுடைய வேலை மக்களுக்கு, அதாவது தொழிலாளர், விவசாயிகளுக்குச் சேவை செய்வதாகும். பெரும்பான்மையான அறிவுஜீவிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் பழைய சீனாவுக்குச் சேவை செய்தது போல் நவ சீனாவுக்கும், பூர்ஷுவா வர்க்கத்துக்குச் சேவை செய்தது போல் பாட்டாளி வர்க்கத்துக்கும் சேவை செய்ய முடியும்.

அறிவுஜீவிகள் பழைய சீனாவுக்குச் சேவை செய்த காலத்தில் இடதுசாரிகள் எதிர்த்தனர்; மத்திய பகுதியினர் ஊசலாடினர்; வலதுசாரிகள் மட்டும் உறுதியாக நின்றனர். இன்று நவ சீனாவுக்குச் சேவை செய்யும் போது இந்த நிலைமை எதிர்மாறாக உள்ளது. இடதுசாரிகள் உறுதியாக நிற்கின்றனர்; மத்திய பகுதியினர் ஊசலாடுகின்றனர் (புதிய சமுதாயத்தில் இந்த ஊசலாட்டம் பழைய சீனாவில் கண்டதிலும் பார்க்க வேறுபட்டது); வலதுசாரிகள் எதிர்க்கின்றனர். இன்னும் அறிவுஜீவிகள் போதகாசிரியர்கள் ஆவர். நமது பத்திரிகைகள் மக்களுக்குத் தினம் தினம் போதிக்கின்றன. நமது எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், தொழில் நுட்ப ஊழியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் மாணவர்களுக்குப் போதிக்கின்றனர், மக்களுக்குப் போதிக்கின்றனர்.

படிக்க :
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!
♦ சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !

போதனையாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் உள்ள அவர்கள் முதலில் போதிக்கப்பட வேண்டும். சமுதாய அமைப்பில் பெரும் மாற்றம் நிகழும் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இது மேலும் உண்மையாகும். கடந்த சில ஆண்டுகளில் அவர்கள் ஓரளவு மார்க்சியக் கல்வி பெற்றிருக்கின்றார்கள். சிலர் மிகக் கஷ்டப்பட்டுப் படித்துப் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் பெரும்பான்மையினர் தமது பூர்ஷுவா வர்க்க உலகநோக்கை முற்றாக நீக்கி, பாட்டாளி வர்க்க உலகநோக்கைப் பெறுவதற்கு இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டும். சில நபர்கள் ஒருசில மார்க்சிய நூல்களைப் படித்ததும், தம்மைப் பெரும் படிப்பாளிகளாக எண்ணிக் கொள்கின்றனர்.

ஆனால் அவர்கள் வாசித்தது ஆழமாகப் புகுந்து, அவர்களுடைய உள்ளங்களில் பதியவில்லை; அதை எப்படி உபயோகிப்பது என்று அவர்கள் அறியாது இருக்கின்றனர். அவர்களுடைய வர்க்க உணர்வுகளும் பழைய உணர்வுகளாகவே இருக்கின்றன. வேறு சிலர் மிகத் தற்பெருமை பிடித்து, சில சொற்றொடர்களைப் படித்துவிட்டு, தம்மைப் பயங்கரமானவர்களாகக் கருதி, பெரும் இறுமாப்பு அடைகின்றனர். ஆனால் புயல் ஒன்று அடிக்கும் போதெல்லாம் அவர்கள் தொழிலாளர்கள் பெரும்பான்மையான விவசாயிகள் ஆகியோரின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் உறுதியாக நிற்கும் அதே வேளையில் அவர்கள் ஈடாடுகின்றனர். தொழிலாளர்களும் விவசாயிகளும் நேர்மையாக இருக்கும் அதேவேளையில் அவர்கள் தெளிவின்றி நிற்கின்றனர். எனவே பிறருக்குப் போதனை அளிப்பவர்கள் இனிமேல் போதனை பெறத் தேவையில்லை, படிக்கத் தேவையில்லை, அல்லது சோசலிசப் புனருருவாக்கம் என்பது பிறரை – நிலப்பிரபுக்கள், முதலாளிகள், தனி உற்பத்தியாளர்கள் ஆகியோரை – புனருருவாக்குவது அன்றி அறிவுஜீவிகளை அல்ல என்று எண்ணுவது பிழையாகும்.

அறிவுஜீவிகளுக்கும் புனருருவாக்கம் அவசியம். தமது அடிப்படை நிலைப்பாட்டை மாற்றாதவர்கள் மாத்திரமல்ல, எல்லோரும் படித்துத் தம்மைத் தாமே புனருருவாக்கிக் கொள்ள வேண்டும். நான் ‘‘எல்லோரும்” என்று குறிப்பிடுவது இங்குள்ள எங்களையும் உள்ளடக்கியதாகும்.

நிலைமைகள் சர்வசதாவும் மாறிக்கொண்டிருக்கின்றன. நமது சிந்தனையைப் புதிய நிலைமைகளுக்கு இசைவாக்க வேண்டுமானால், நாம் படிக்கவேண்டும். மார்க்சியத்தை ஒப்பீட்டு வகையில் நன்கு கிரகித்து, தமது பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்பவர்கள் கூட படித்துக் கொண்டே இருக்க வேண்டும்; புதியவற்றைக் கிரகித்துக் கொள்ள வேண்டும்; புதிய பிரச்சினைகளை ஆராய வேண்டும். தமது மனங்களிலுள்ள அசுத்தமானவற்றை நீக்கிக் கொண்டாலொழிய, அறிவுஜீவிகள் பிறருக்குப் போதனையளிக்கும் கடமையை மேற்கொள்ள முடியாது.

உண்மையில் போதிக்கும் அதே வேளையில் நாம் படிக்க வேண்டும். ஆசிரியர்களாக இருக்கும் அதே வேளையில் மாணவர்களாக இருக்க வேண்டும். சிறந்த ஆசிரியனாக இருக்க வேண்டுமென்றால் முதலில் சிறந்த மாணவனாக இருக்க வேண்டும். புத்தகங்களிலிருந்து மட்டும் படிக்க முடியாத பல விசயங்கள் இருக்கின்றன. அவற்றை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களிடமிருந்து, தொழிலாளர்களிடமிருந்து, வறிய கீழ் மத்திய விவசாயிகளிடமிருந்து, பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து, தாம் படிப்பிப்பவர்களிடமிருந்து ஒருவர் படிக்க வேண்டும்.

நமது அறிவுஜீவிகளில் பெரும்பான்மையினர் படிக்க விரும்புகின்றனர் என்று நான் கருதுகின்றேன். அவர்கள் சுயமாக விரும்பிப் படிக்கும் அடிப்படையில் அவர்களுக்கு மனப்பூர்வமாகவும் தகுதியான முறையிலும் உதவி அளிப்பது நமது கடமை. அவர்களைப் படிக்கும்படி நாம் நிர்ப்பந்திக்கவோ பலவந்தப்படுத்தவோ கூடாது.

நான்காவதாக, பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுடன் அறிவுஜீவிகள் ஒன்றிணையும் பிரச்சினை.

பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுக்குத் தொண்டு செய்வது அறிவுஜீவிகளின் கடமையாக இருப்பதால், அவர்கள் முதன் முதலாகத் தொழிலாளர் விவசாயிகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அவர்களுடைய வாழ்வு, வேலை, கருத்துகளுக்குப் பரிச்சயப்பட வேண்டும். பொதுமக்கள் மத்தியில் செல்லுமாறு, தொழிற்சாலைகளுக்கும் கிராமங்களுக்கும் செல்லுமாறு நாம் அறிவுஜீவிகளுக்கு ஊக்கமளிக்கிறோம். உங்களுடைய வாழ்வு பூராவும் நீங்கள் ஒரு தொழிலாளியை அல்லது ஒரு விவசாயியைச் சந்திக்காமல் இருந்தால் அது நல்லதல்ல. நமது அரசாங்க இயக்குனர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞான ஆராய்ச்சி ஊழியர்கள் எல்லாரும் கிடைக்கும் சந்தர்ப்பம் ஒவ்வொன்றையும் பயன்படுத்தி, தொழிலாளர் விவசாயிகளுடன் நெருங்கிப் பழக வேண்டும்.

சிலருக்குச் சுற்றிப் பார்வையிட மாத்திரம் தொழிற்சாலைகளுக்கு அல்லது கிராமங்களுக்குச் செல்ல முடியும். இதை “குதிரையில் இருந்தவாறே மலர்களைப் பார்ப்பது” என்று சொல்லலாம். ஒன்றும் செய்யாமல் இருப்பதிலும் பார்க்க இது சிறந்தது. வேறு சிலர் அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து, பரிசீலனைகள் நடத்தி, நண்பர்களைத் தேடிக்கொள்ள முடியும். இதை “குதிரையிலிருந்து இறங்கி மலர்களைப் பார்ப்பது” என்று சொல்லலாம். இன்னும் சிலர் ஒரு நீண்ட காலம், அதாவது, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அல்லது அதற்குக் கூடிய காலம் அங்கு தங்கி வாழ முடியும். இதை “குடியேறுவது” என்று கூறலாம்.

படிக்க:
♦ தொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் !
♦ நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !

அறிவுஜீவிகள் சிலர், உதாரணமாகத் தொழிற்சாலைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்களும் நாட்டுப் புறத்திலுள்ள விவசாய நுட்ப ஊழியர்களும் கிராமியக் கல்லூரி ஆசிரியர்களும் தொழிலாளர் விவசாயிகள் மத்தியிலேயே வாழ்கின்றனர். அவர்கள் தமது வேலையை நன்றாகச் செய்து தொழிலாளர் விவசாயிகளுடன் தம்மை இணைக்க வேண்டும். தொழிலாளர் விவசாயிகளுடன் நெருக்கமாக இணைவதை உண்மையில் ஒரு பழக்கமாக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை நாம் சிருஷ்டிக்க வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொன்னால் அப்படிச் செய்யும் பெருந்தொகையான அறிவுஜீவிகள் நம்மிடம் இருக்க வேண்டும். அறிவுஜீவிகள் எல்லாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள். ஏதோ ஒரு காரணத்தால் சிலர் தொழிலாளர் விவசாயிகள் மத்தியில் செல்ல முடியாமல் இருக்கின்றனர். ஆனால் இயன்ற அளவு கூடுதலான அறிவுஜீவிகள் அங்கு செல்வர் என நம்புகின்றோம். அவர்கள் எல்லாரும் ஒரே காலத்தில் செல்லமுடியாது. ஆனால் வெவ்வேறு காலங்களில் குழுக்களாகப் பிரிந்து செல்ல முடியும்.

நாம் யென்ஆனில் இருந்த பழைய நாட்களில் தொழிலாளர் விவசாயிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளப் அறிவுஜீவிகளுக்கு உதவியளிக்கப்பட்டது. அப்போது யென்ஆனில் இருந்த அறிவுஜீவிகளில் பலர் குழம்பிய சிந்தையுடையவர்களாக இருந்ததோடு பலவிதமான விந்தையான நியாயங்களுடன் வெளிப்பட்டார்கள். நாம் ஒரு கருத்தரங்கு கூட்டி, மக்கள் மத்தியில் செல்லும்படி அவர்களுக்கு அறிவுரை கூறினோம். பின்னர் பலர் சென்றனர். விளைவுகளும் மிக நன்றாக இருந்தன.

ஒரு அறிவுஜீவியின் புத்தக அறிவு அனுஷ்டானத்துடன் (நடைமுறையுடன்) இணைக்கப்பட்டால் ஒழிய அது பூரண அறிவு ஆகாது; அல்லது சிறிதும் பூரணமற்றதாக இருக்கும். பிரதானமாகப் புத்தகங்களை வாசிப்பதன் மூலம்தான் அறிவுஜீவிகள் நமது முன்னோரின் அனுபவத்தைப் பெறுகின்றனர். புத்தகங்களை வாசிப்பது உண்மையில் தேவையானது; ஆனால் அதனால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடமாட்டா. அவர்கள் உண்மையான நிலையை ஆராய வேண்டும். அனுஷ்டான அனுபவத்தையும் ஸ்தூலமான மூலப் பொருட்களையும் ஆராய வேண்டும். தொழிலாளர் விவசாயிகளுடன் நட்புறவு கொள்ள வேண்டும்.

தொழிலாளர் விவசாயிகளுடன் நட்புக் கொள்வது லேசான காரியமல்ல. இன்று பலர் தொழிற்சாலைகளுக்கு அல்லது கிராமங்களுக்கு சென்றபோதிலுங்கூட, சிலரில்தான் நல்ல விளைவுகள் காணப்பட்டன; ஏனையோரில் அப்படி அல்ல. இங்குள்ள பிரச்சினை யாதெனில், ஒருவருடைய நிலைப்பாடு அல்லது மனோபாவம், அதாவது ஒருவருடைய உலகநோக்கு ஆகும்.

”நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்” என்று நாம் கூறுகின்றோம். ஒவ்வொரு அறிவுத்துறையிலும் பலவிதமான கருத்துகளும் போக்குகளும் இருக்கலாம். இருந்தும், உலகநோக்கைப் பொறுத்தவரையில் அடிப்படையில் இன்று பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் பூர்ஷுவா வர்க்கக் கண்ணோட்டம் என இரண்டு கருத்துக்கள் மாத்திரமே இருக்கின்றன. அக்கண்ணோட்டம் ஒன்றில் இது அல்லது அதாக, பாட்டாளி வர்க்க உலகநோக்கு அல்லது பூர்ஷுவா வர்க்க உலகநோக்காகவே இருக்கும். கம்யூனிஸ உலக நோக்கென்பது பாட்டாளி வர்க்கத்தின் உலக நோக்கேயன்றி வேறு எந்த வர்க்கத்தினது உலகநோக்கும் அல்ல.

எமது இன்றைய அறிவுஜீவிகளில் பெரும்பாலோர் பழைய சமுதாயத்திலிருந்து, உழைப்பாளி மக்களல்லாதவர்களின் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். தொழிலாளர் விவசாயிகள் குடும்பங்களிலிருந்து வந்தவர்களில் சிலர்கூட இன்னும் பூர்ஷுவா வர்க்கப் அறிவுஜீவிகளாகவே இருக்கின்றனர். காரணம் விடுதலைக்கு முன் அவர்கள் பெற்ற கல்வி பூர்ஷுவா வர்க்கக் கல்வியாயிருப்பதும் அவர்களுடைய உலகநோக்கு அடிப்படையில் பூர்ஷுவா வர்க்க உலகநோக்காயிருப்பதுமாகும். அவர்கள் பழைய உலக நோக்கை ஒழித்துப் பாட்டாளி வர்க்க உலகநோக்கை ஸ்தாபிக்காவிட்டால் தமது கண்ணோட்டம், நிலைப்பாடு, உணர்வு ஆகியவற்றில் அவர்கள் தொழிலாளர் விவசாயிகளிலிருந்து வேறுபட்டவர்களாக, அவர்களுடன் ஒன்றிணைய முடியாதவர்களாகவே இருப்பார்கள்.

தொழிலாளர் விவசாயிகள் தமது இதயங்களை அவர்களுக்குத் திறந்து காட்ட மாட்டார்கள். அறிவுஜீவிகள் தொழிலாளர் விவசாயிகளுடன் இரண்டறக் கலந்து, அவர்களுடன் நட்புக்கொண்டால்தான், நூல்களிலிருந்து அவர்கள் படித்த மார்க்சியம் உண்மையில் அவர்களுக்குரிய ஒன்றாக மாறமுடியும்.

மார்க்சியத்தை ஒருவர் உண்மையில் கிரகித்துக் கொள்ள வேண்டுமானால், அவர் அதை நூல்களிலிருந்து மாத்திரமல்ல, பிரதானமாக வர்க்கப் போராட்டத்தின் மூலமும், அனுஷ்டான (நடைமுறை) வேலை, பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் படிக்க வேண்டும்.

மார்க்சிய நூல்கள் சிலவற்றைப்  படிப்பதோடு, நமது அறிவுஜீவிகள் பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுடன் கொள்ளும் நெருங்கிய தொடர்புகள் மூலமும், தமது சொந்த அனுஷ்டான வேலை மூலமும் சிறிது விளக்கம் பெறும்போது, நாம் எல்லாரும் ஒரே பாஷையைப் பேசுவது சாத்தியம்; தேசபக்தி என்ற பொதுப் பாஷையையும், சோசலிச அமைப்பு என்ற பொதுப் பாஷையையும் பேசுவது மாத்திரமல்ல, கம்யூனிஸ உலகநோக்கு என்ற பொதுப் பாஷையைக் கூடப் பேசுவது சாத்தியம். இப்படி ஏற்பட்டால், நாம் எல்லாரும் இன்னும் நன்றாக வேலை செய்வது நிச்சயம்.

(தொடரும்)

2 மறுமொழிகள்

  1. சோதனைகள் மேல் இருந்து கீழ் மட்டம் என்று மட்டும் கூறாமல் கீழிருந்து மேல் மட்டத்தை சோதிப்பதாக இருக்கவேண்டும் தலைமையை சோதிக்க வேண்டும் என்று சிலர் பேசுகிறார்கள் அதனைப்பற்றி ஆசான்கள் என கூறி இருக்கிறார்கள் என்ற கட்டுரையை பதிவிட வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க