ஊழியர்கள் தமக்குத் தாமே கண்டிப்பாக இருந்தாக வேண்டும் || பாகம் – 2

(அக்டோபர் 7, 1942)

பாகம் – 1

2. விவசாயப் புரட்சியில் பங்கேற்ற மூத்த ஊழியர்கள் பற்றி

மூத்த ஊழியர்கள் நமது கட்சியினதும் படையினதும் முதுகெலும்பாவர்; ஏனெனில், அவர்கள் கடினமான போராட்டத்தில் பல்லாண்டுகளாகத் தாக்குப்பிடித்து நீடித்து நின்றுள்ளனர். இருந்தபோதிலும், பின்வரும் விசயங்களுக்கு அவர்கள் தவறாது கவனம் செலுத்த வேண்டும்.

1. மூத்த ஊழியர்கள் தமது நீண்டகால அனுபவத்தை வைத்து காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கக் கூடாது. உங்களுடைய நீண்டகால சேவையைக் காட்டி தம்பட்டமடித்துக் கொள்வது அர்த்தமற்றது. கட்சி ஊழியர்களுக்கு மூன்று தகுதிகள் இருந்தாக வேண்டும் என்பதை மூத்த ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் நேர்மை, திறனாற்றல், அனுபவ மேம்பாடு ஆகியவையே இந்த மூன்று தகுதிகள். அவர்கள் தமது நீண்டகாலச் சேவையை மட்டும் வலியுறுத்தாமல் திறனாற்றலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அரசியல் நேர்மையை திறனாற்றலிலிருந்து பிரித்து விடக்கூடாது. புரட்சிகரக் கடமைகளை நிறைவு செய்ய உங்களால் முடியாவிட்டால், உங்கள் அரசியல் நேர்மை குறைபாடுடையதே. நீண்டகாலச் சேவை எனும் பெருமிதமானது, உங்களுடைய முன்னேற்றத்துக்குத் தடையாவதை நீங்கள் அனுமதிக்காமல் இருந்தால், ஒரு மூத்த புரட்சியாளராக இருப்பது பெருமைக்குரியதே.

2. மூத்த ஊழியர்கள் தமது கல்வி மட்டத்தைத் தவறாமல் உயர்த்திக் கொள்ள வேண்டும். முன்னேற்றத்துக்கான திறவுகோல் இதுவே. எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வது, சில விடயங்களைக் கற்க அடித்தளத்தை வழங்கும். கற்காமலிருப்பது அழிவேற்படுத்திவிடும். புரட்சி யின் தேவைகளை ஈடுகட்டத் தவறுவது என்ற பொருளிலேயே நான் இதைக் கூறுகிறேன். புரட்சி யாருக்காகவும் காத்திருப்பதில்லை . கற்றுக் கொள்வதற்கு நாம் முயற்சிக்காவிட்டால், புரட்சிக்கு மேலும் கூடுதலாக நாம் எப்படி வேலை செய்ய முடியும்?

கல்வியில் பிறரை எட்டிப் பிடிக்கத் தம்மால் இயலாமல் போய்விடும் என்று சில தோழர்கள் கவலைப்படுகின்றனர். பின்னால் வந்தவர்கள் ஏற்கெனவே இருந்தவர்களை விஞ்சிவிடக் கூடும் என்பதற்காக அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. கற்றலில் தாம் வெற்றி பெறமுடியும் என்றும், பல்வேறு துறைகளில் ஆற்றல் உள்ளவர்களாக தாம் மாற முடியும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். கற்பதில் அவர்கள் தீர்மானகரமாக உள்ளவரையில் அவர்களுக்கு உதவ கட்சி தயாராக உள்ளது. கற்பது என்பது ஏதோ ஒரேயடியாக ஒரே நாளில் சாதிக்கக் கூடிய ஒரு செயலல்ல. நீண்டகால கடின முயற்சி அதற்குத் தேவை. பள்ளியில் கற்பதைவிட உங்கள் சொந்த முயற்சியில் கற்பதே, கற்பதற்கு ஆக மிகச் சிறந்த வழியாகும்.

3. புதிய ஊழியர்களுடன் ஐக்கியமாவதற்கான முன்முயற்சியை மூத்த ஊழியர்கள் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். தலைமைப் பொறுப்புகளில் உள்ள பழம்பெரும் புரட்சியாளர்களாக இருப்பதால், இந்த விடயத்தில் இவர்கள்தான் தலையாய பொறுப்பேற்க வேண்டும். இதை மூத்த ஊழியர்களுக்கு நாம் தவறாமல் விளக்க வேண்டும். இதில், அறிவாளிப் பிரிவினரான புதிய ஊழியர்களுக்கும் பொறுப்புள்ளது என்பது உண்மைதான். ஆனால், மூத்த ஊழியர்கள் அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்; அவர்களுடைய குறைகளைச் சுட்டிக்காட்டுவதுடன் மூத்த ஊழியர்கள் நின்றுவிடக் கூடாது; ஆனால், அதற்கும் மேலே சென்று புதிய ஊழியர்களுக்கு உதவ வேண்டும்; தம்முடன் தோளோடு தோளாக நிற்கும் தோழர்களாகவும், எதிர்கால வாரிசுகளாகவும் அவர்களை மூத்த ஊழியர்கள் பார்க்க வேண்டும். இதுவொருபுறமிருக்க, புதிய ஊழியர்கள் தமக்கென சிறந்த தகுதிகளைக் கொண்டுள்ளனர்; எனவே, மூத்த ஊழியர்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் அவர்களுடைய உதவியைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். புதிய ஊழியர்களும் மூத்த ஊழியர்களும் ஒன்றுபட்டு வேலை செய்கிறார்கள் என்றால், அது மூத்த ஊழியர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காட்டுவதாகவே இருக்கும்.

3. தனித் தேர்ச்சிமிக்க ஊழியர்கள் பற்றி

தனித் தேர்ச்சிமிக்க சில ஊழியர்களே நம்மிடம் இருந்தபோதிலும், கட்சிக்கும் படைக்கும் அவர்கள் இன்றியமையாதவர்களாக இருக்கின்றனர். எல்லா புரட்சியாளர்களையும் போலவே தனித்தேர்ச்சிமிக்க புரட்சியாளர்களும் மிகக் கடுமையான சூழ்நிலைகளின் கீழ் வாழ்ந்து – வேலை செய்து எண்ணற்ற இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். அவர்களுடைய அர்ப்பணிப்பு உணர்வை மையக்குழு பாராட்டுகிறது.

அ. அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தேர்ச்சி

தனித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசியலைப் பற்றி எதுவு தெரியாது என்று அனுமானிக்காதீர்கள். வடஷான்க்ஸி தளப்பகுதிக்கு அவர்கள் ஏன் வந்தார்கள் என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இன்னமும் அவர்களுக்கு அரசியல் ரீதியிலான உதவி தேவைப்படுகிறது. புரட்சிகர இலட்சியத்திற்காக அவர்கள் தொழில்நுட்ப வேலைகளைச் செய்கின்றனர்; நாம் அவர்களுடைய தொழில்நுட்பத் தேர்ச்சியைத் தவறாமல் மதிக்க வேண்டும். தனித்தேர்ச்சி ஏதுமற்றவர், தம்மை நிபுணத்துவம் வாய்ந்தவராகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. நிபுணத்துவம் பெற அவர் முயற்சிக்கலாம்; அவ்வாறு முயற்சிப்பாரானால் அவரும் ஒரு நிபுணராக முடியும் என்பதே உண்மை .

ஆ. தனித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு அவசியம்

தொழில்நுட்ப வேலைகளில் ஈடுபடுபவர்கள் மத்தியிலான ஒத்துழைப்பை நாம் ஊக்குவிக்க வேண்டும். புரட்சியின் நன்மைக்காக கல்வி தொடர்பான பிரச்சினைகளை அவர்கள் தமக்குள் சுதந்திரமாக விவாதிக்க வேண்டும்; நடைமுறை வேலையில் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்க வேண்டும். இப்போதுள்ள நிலை என்னவென்றால், அரசியல் ரீதியில் அவர்கள் தமக்குள் நன்றாக ஒத்துழைக்கின்றனர்; ஆனால், தொழில்நுட்ப வேலைகளில் அவ்வளவாக ஒத்துழைப்பதில்லை. பல்வேறு துறைகளுக்கு இடையிலும் தனிநபர்களுக்கு இடையிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. போயும் போயும், அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதைத் தடுப்பது எது? இதற்கு அடிப்படைக் காரணம் அவர்களுடைய சித்தாந்தம் தானேயொழிய அவர்களுடைய பழக்கவழக்கங்கள் அல்ல.

சிலர் புரட்சிகர அணிவரிசையில் சேர்ந்துள்ள போதிலும், பழைய கருத்துக்களையும் நடைமுறைகளையும் இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டுள்ளனர். பழைய சமூகம் தனிநபர்வாத அடிப்படையிலானது; ஆனால், நம்முடையது கூட்டுத்துவ அடிப்படையிலானது. கூட்டுத்துவம் தனித்துவத்தைவிட வல்லமை மிக்கது. இது கேள்விக்கிடமற்றது. இந்த உலகில் சாதிக்கப்பட்ட ஒவ்வொன்றும் அடிப்படையில் கூட்டு முயற்சியின் விளைவே. நம் அனைவரினுடைய கூட்டு முயற்சிகளிலிருந்தே புரட்சியின் வெற்றிகள் ஈட்டப்படும். உண்மையில், விஞ்ஞானப் புதுமைகளிலும் கண்டுபிடிப்புகளிலும் தன் முயற்சியின் அரிய மதிப்பை இது மறுப்பதாகாது. ஆனால், நமது முன்னோர்களின் சாதனைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளாவிட்டால், புதிய கண்டுபிடிப்புகள் எதும் இருக்க முடியாது. யாராவது தமக்குள் அழைக்க மறுத்து வெறுமனே தமது சொந்த குறுகிய நலன்களை முன்தள்ளுவார்களானால் அரிய படைப்புகள் எதும் வெளிவராது. நம்மிடம் பழைய தனிநபர்வாத சிந்தனை இன்னமும் நீடிக்கிறது. தவறாமல் அது சரிசெய்யப்பட வேண்டும்.

நமது சொந்த திறனாற்றல்களின்பால் ஒரு விஞ்ஞானபூர்வமானப் போக்கை நாம் கைக்கொண்டாக வேண்டும். தவறவே தவறாதவர்களாக நம்மையே நாம் கருதக் கூடாது. ஆலோசனைக்காக பிற மருத்துவர்களை அழைப்பதை சில மருத்துவர்கள் விரும்புவதே இல்லை. நோயைக் குணப்படுத்துவதில் தாம் தவறும்பட்சத்தில், வேறு எவரும் நோயைக் குணப்படுத்தக் கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர். சிலர், மற்றவர்களுடைய பலவீனங்களைப் பற்றிப் பேசுவதில் நாட்டம் கொள்கின்றனர். ஆனால், தமது சொந்த பல வீனங்களைப் பற்றி வேறு எவரும் பேசினால், அவர்கள் சீற்றமடைகின்றனர். இவர்கள், தம்மைத் தவறற்றவர்களாகக் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். இதன் காரணம் என்னவென்றால், அவர்கள் தமது புகழிலும் அந்தஸ்திலும் மெய்மறந்து உள்ளனர். ஆனால், பிறரிடமிருந்து அறிவுரை பெறுவதால், ஒருவர் தமது மதிப்பை இழந்து விடுவாரா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

உலகில் எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் ஒன்றும் எளிமையானதாக இருப்பதில்லை. அவற்றில் சிலவற்றை நாம் புரிந்து கொள்ளத் தவறுவதும் அல்லது சிலவற்றைத் தவறாகப் புரிந்து கொள்வதும் தவிர்க்க முடியாததுதான். தவறுகள் இழைக்காமலிருக்க நாம் முயற்சிக்க வேண்டும் என்பதும் உண்மைதான். எனவே, மருத்துவர்களாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எவராக இருந்தாலும் சரி – குறிப்பாக தலைவர்கள், தாம் புரிந்து கொள்ள முடியாத விடயங்கள் அல்லது தெளிவாகத் தெரியாத விடயங்கள் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இருப்பார்களேயானால், அவர்கள் தமது மதிப்பை இழந்துவிட மாட்டார்கள். அப்படி இல்லாமல் போனால்தான், அவர்கள் தமது மதிப்பை நிச்சய மாக இழந்துவிடுவர். விவகாரங்களைக் கையாளுகையில், தலைவர் மாவோ எப்போதுமே மிகுந்த கவனத்துடன் இருக்கிறார். ஒருவர் தவறிழைத்து, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வாரானால், அவர் தமது மதிப்பை இழப்பதில்லை . இதற்கு மாறாக, தவறினைப் பரிசீலித்து, அதிலிருந்து பாடங்களைக் கற்பதற்கு மறுப்பாரானால், அவர் தமது மதிப்பை இழந்தே தீருவார். இன்னும் சொல்லப்போனால், அடிக்கடி பாரதூரமான அளவிலான இழப்புக்கு ஆளாவார்.

சுருக்கமாகச் சொன்னால், நேர்மையானவர்கள் தமது மதிப்பை இழப்பதில்லை. தாம் மதிப்பை இழந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, நேர்மையின்றி ஒருவர் நடப்பாரேயானால், அவர் இழப்பது உறுதி. பிறரிடமிருந்து அறிவுரை கேட்பதால், ஒருவருடைய கௌரவம் குறைந்து விடுவதில்லை. அவருடைய வேலையை நன்றாகச் செய்வதன் மூலமே அவர் புகழை அடைகிறார். ஏதோ எல்லாம் தெரிந்தவராகக் காட்டிக் கொண்டு மேதாவியாக நடிப்பதால், அவர் புகழை அடைய முடியாது. இதனால் அவருக்கு எந்தப் பலனும் கிடைக்காது. தவறுகளைச் செய்யாமலிருக்க முயற்சிப்பது மட்டுமே ஒருவர் புகழடைவற்கான ஒரே வழி. ஒருபோதும் மற்றவர்களை இழப்புக்குள்ளாக்கி ஒருவர் புகழடைய முடியாது.

இ. ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.

இப்போது நமக்கு எண்ணற்ற இடையூறுகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தளப்பிரதேசத்தில் நம்முடைய அறிவியல் சாதனங்கள் மேம்பட்டவையாக இல்லை. இதை வெற்றி கொள்வதற்கான வழியைக் காண்பது நமது புரட்சிகரத் தனித் தேர்ச்சியாளர்களுக்குக் கடினமாகவே உள்ளது. ஆனால், புரட்சியானது அவர்களுக்கு மகத்தான வாய்ப்பை அளிக்கும். புரட்சி வெற்றி பெறுகையில், சிறந்த அறிவியல் சாதனங்கள் தாராளமாகக் கிடைக்கும். அதன் பின்னர், தமது தொழில்நுட்ப அறிவைக் கொண்டு அவர்கள் புதியவற்றை உருவாக்குவர், புதிய கண்டுபிடிப்புகளை அவர்கள் சாதிப்பர். இப்போதைக்கு அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், இடையூறுகளைக் கடந்து அவர்கள் அனுபவத்தைப் பெற வேண்டும். அதற்காக நிறைய நூல்களைப் படிக்கவும், கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடவும் வேண்டும்.

எதிர்காலத்தில் புதிய மணிமணியான தேர்ச்சியாளர்கள் உருவாகும் போது, தாமும் தமது வேலைகளும் இனி மதிக்கப்படமாட்டா என்று அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. புரட்சி நிச்சயம் விரைந்து முன்னேறும். அது அவர்களுக்கு மடைதிறந்த வெள்ளம் போன்று ஏராளமான வாய்ப்புகளை அளிக்கும். அவர்களுடைய திறமைகளைப் பயன்படுத்தவும் அவற்றை மேலும் முன்னேற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைத்த மாத்திரத்தில், பழைய நண்பர்களை பொதுவுடைமைக் கட்சி மறந்துவிடுமா என்ன? அப்படியில்ல பழையவர்களும் புதியவர்களும் என்ற இரு வகையினருமே கட்சிக்குத் தேவைப்படுவர். தனது இலட்சியத்தை அடைவதற்காக, கட்சியானது மக்களை மேலும் மேலும் அணிதிரட்டுவதால், பிரட்சியின் எதிர்காலம் மேலும் மேலும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கும்.

படிக்க :
♦ இந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் !
♦ அறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்

ஊழியர்களைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவது. கொள்கைகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை நிச்சயப்படுத்திக் கொள்வது ஆகியவற்றில் தலைமைப் பதவிகளில் உள்ள தோழர்களுக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது. ஊழியர்களைச் சரியாகப் பயன்படுத்துவது முதல் முக்கியத்துவம் வாய்ந்ததது. நாடகம் நன்கு உருவமைக்கப்பட்டால்தான் சிறந்த காட்சிகள் அரங்கேறும். சிறந்த தலைமையை உத்திரவாதப்படுத்துவதற்கு, தலைமை ஊழியர்கள் பின்வரும் ஆலோசனைகளை மனதில் கொள்ள வேண்டும்.

1. உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் கடுமையாகப் படிக்க வேண்டும். நீங்கள் ஏன் படிக்க வேண்டும்? கோட்பாட்டில் தேர்ச்சி பெறுவதற்காகவும் சரியான சிந்தனை முறையை அடைவதற்காகவும் நீங்கள் படிக்க வேண்டும். இது தொடர்பாக, தலைமைப் பொறுப்புகளில் உள்ள தோழர்கள், குறிப்பாக இராணுவத் துறைகளில் உள்ள தோழர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். வறட்டு வாதத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சி, நூல்களைப் படிக்க அவர்கள் தயக்கம் காட்டக் கூடாது. வறட்டுவாதத்தைத்தான் நாம் எதிர்க்கிறோமே ஒழிய, புத்தகங்களைப் படிப்பதை அல்ல. இப்போது நம்மிடமுள்ள குறைபாடு என்னவென்றால், மார்க்சிய – லெனினியத்தில் நமக்குப் போதுமான அளவு தேர்ச்சி இல்லை என்பதுதான். வறட்டுவாதம், சுய அனுபவவாதம் ஆகிய இரண்டையும் நாம் தவிர்ப்பதற்கு, மார்க்சிய – லெனினியத்தை சளைக்காமல் படிப்பது நமக்கு அவசியம். பொது அறிவும் நமக்குத் தேவைப்படுகிறது என்பது உண்மையே. பொது அறிவு இல்லாமல், மார்க்சிய – லெனினியத்தைப் புரிந்து கொள்வது நமக்கு மிகக் கடினமாக இருக்கும். அதைத் தன்வயமாக்குவதையும் செறிப்பதையும் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நமது தோழர்களில் சிலர், பிறருடைய தவறான கருத்துகளால் மூழ்கடிக்கப்பட்டு, வறட்டுவாத வலையில் சிக்கி விடுகின்றனர். இதற்குக் குறிப்பான காரணம் என்னவென்றால், அவர்களுடைய கோட்பாட்டு அறிவு வரம்புக்குட்பட்டதாகவும், பொதுக் கல்வி மட்டம் குறைவாகவும் இருப்பதுதான். படிப்பதை மேற்கொள்கையில், கற்றுக் கொள்வதில் உள்ள உங்களின் திறனாற்றல் மீதான நம்பிக்கை அவசியமானது. உங்களுடைய அறிவின் போதாமை குறித்து உங்களின் வேதனைமிக்க ஒப்புணர்வு, அறிவை அடைய விடாப்பிடியாக ஊன்றி நிற்பதற்கான உங்களின் தீர்மானகரமான முடிவு ஆகியவையே படிப்பதில் உங்களுடைய முயற்சி இடையறாது நீடிப்பதற்கான திறவுகோல், தேவையான அளவுக்குக் கோட்பாட்டை நீங்கள் கற்றுக் கொள்ளும்போது, சரியான சிந்தனை முறையை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் நீங்கள் கட்சிக்கும் புரட்சிக்கும் பெரும் தொண்டாற்றுபவராக முடியும்.

2. ஒட்டுமொத்த நிலைமையை மனதில் கொண்டு, பொதுநலனை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுடை பொறுப்பில் உள்ள வேலையை மட்டும் நீங்கள் பார்ப்பீர்களேயானால், மொத்த நிலைமைக்கு ஊறுவிளைவிக்கும்படியாக, உங்களுடைய சொந்தத் துறையின் நலன்களை மட்டும் முன்வைக்கக் கூடியவர்களாக மாறிவிடுவீர்கள்.

3. பொருத்தமான பாராட்டுதல்களையும் அவசியமான ஒழுங்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள். தவறு செய்த ஊழியர்களை விமர்சிப்பதைப் பற்றி தலைமை ஊழியர்களில் சிலர் கவலைப்படுவதே இல்லை. இதன் மூலம், எதிர்காலத்தில் மேலும் சிறந்த வேலைகளைச் செய்யக் கற்றுக் கொள்வதிலிருந்து அவர்களைத் தடுத்து விடுகின்றனர். ஊழியர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வது என்பதன் முதன்மையான பொருள், அவர்கள் அரசியல் ரீதியில் முன்னேறுமாறு கவனித்துக் கொள்வதாகும். ஓர் ஊழியரின் தவறுகளை மிகைப்படுத்துவது சரியல்ல. ஆனால், ஓர் ஊழியரை விமர்சிக்காமல், எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடுவதும் சரியல்ல. பாரதூரமான தவறுகளை இழைத்துள்ள ஓர் ஊழியர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படாவிட்டால், அனுபவத்திலிருந்து எந்த படிப்பினையையும் அவர் பெறமாட்டார். பிற தோழர்களும் எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். நன்றாகச் செயல்பட்டுள்ள ஒருவர் பாராட்டப்படாமல் போனால், பெருமளவு முன்னேற்றம் அடைய அவருக்கு ஊக்கம் ஏதும் இராது. மேலும், இதிலிருந்து எவரும் எதையும் கற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, அவரவர்க்குரிய பாராட்டுகளும் ஒழுங்கு நடவடிக்கைகளும் வழங்கப்படுவதில் நாம் நம்பிக்கை வைக்கிறோம்.

உ. இராணுவ ஊழியர்களின் கவனத்துக்கு

புரட்சி அணிகளில் உள்ள பிற தோழர்கள் அல்லது மக்களுடனான தமது உறவுகளில், இராணுவ ஊழியர்கள் வெளிப்படையாக ஒளிவுமறைவின்றியும் இருக்க வேண்டும். அவர்கள் ஒருபோதும் கடுமையாகவும் ஆணவத்துடனும் நடந்து கொள்ளக்கூடாது. அவர்கள் எப்போதாவது கடுமையாகவும் ஆணவத்துடனும் நடந்து முடியும் என்பது சாத்தியமா? உண்மையில் இதற்குச் சாத்தியம் உள்ளது. ஏனெனில், அவர்களுடைய கைகளில் துப்பாக்கிகள் உள்ளன. இத்துடன், தமது தொண்டின் சாதனை பற்றி அவர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். இது, இராணுவத்தின் விரும்பத்தகாத பண்புக் கூறுகளில் ஒன்றாகும். இராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவில் தவறு ஏதாவது நடந்தால், இரு தரப்பினரும், அடுத்த தரப்பைவிட தமது தரப்பையே கூடுதல் விமர்சனப்பூர்வமாகப் பரிசீலிக்க வேண்டும். நமது கட்சியின் வடமேற்கு பிரிவினுடைய தலைமைக் குழு, இந்த முறையில்தான் உறவுகளை மிகச் சரியாகக் கையாள்கிறது. இதுவே மிகச் சிறந்த ஒன்றாகும். இன்னும் சொல்வதானால், பிற தரப்பைப் பற்றிய விமர்சனமே இல்லாமல், தமது தரப்பைப் பற்றிய சுயவிமர்சனம் மட்டுமே மேற்கொள்ளப்படுவது மேலும் சிறப்பாக இருக்கும். இராணும் முக்கியமானதுதான். ஆனால், உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் மக்களின் ஆதரவு இல்லாமல் போனால், இராணுவத்துக்கு செல்வாக்கு ஏதும் இராது. இந்த ஆதரவு இல்லாவிட் டால், இராணுவம் ஒரேயொரு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாது.

(முற்றும்)

நூல் : ஊழியர்கள் தலைவர்கள்
ஆசிரியர் : சென் யுன்
பக்கம் : 48
விலை : ரூ. 40
கிடைக்குமிடம் : கீழைக்காற்று
தொடர்புக்கு : 7395937703

1 மறுமொழி

  1. நடைமுறையில் எப்படி இருக்க வேண்டும் என்பதனை இந்த கட்டுரை சுட்டி காட்டியது பயனுள்ளதாக இருக்கும்.

    But தலைப்பு செட் ஆன மாறி தெரியல

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க