தோழர் சென் யுன், சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களில் ஒருவர். சீனப் பொதுவுடைமைக் கட்சியின் மையக் குழுவின் சார்பில் கட்சியின் அமைப்பு விவகாரத் துறை இயக்குனராக 1937-லிருந்து ஏழாண்டு காலம் செயல்பட்டார். தோழர்களை போல்ஷ்விக் முறையில் பயிற்றுவிப்பதிலும், புடம் போட்டு வளர்ப்பதிலும் அனைத்து நடைமுறை சார்ந்த பிரச்சினைகளையும் எதிர்கொண்டு எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் அமைப்புத் துறையில் ஊழியர்களை தலைவர்களாக உயர்த்துவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுத்து வழிகாட்டினார்.

அவரது அனுபவங்களை உட்கிரகித்து பொதுவுடைமைக் கட்சியை புரட்சிப் பணிக்கு ஏற்ப புடம்போட்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தருணம் இது.

  • வினவு

0-0-0

ஊழியர்கள் தமக்குத் தாமே கண்டிப்பாக இருந்தாக வேண்டும் || பாகம் – 1

(அக்டோபர் 7, 1942)

யேனானில் இராணுவ ஊழியர்களின் கூட்டத்தில் ஆற்றிய உரையின் மறுகட்டமைப்பு. இது மட்டுமின்றி, தோழர் சென் யுன் எழுதிய எண்ணற்ற பிற கையெழுத்துப் படிகளை வைத்து, சென் யுன்-னின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைத் தொகுத்த நூலாசிரியர் குழுவினர் இந்த விசயாதாரத்தைக் கூட்டிணைவாக்கியுள்ளனர்.

ம்மைப் பொருத்தவரை கட்சியானது தனது ஊழியர் கொள்கையைப் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டுமென்று ஊழியர்கள் இப்போது கட்சியை வலியுறுத்துகின்றனர். ஆனால், கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, தாம் இருக்க வேண்டுமென்ற தமது கடமையைப் பற்றி அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.

உண்மை என்னவென்றால், கட்சியின் இந்த எதிர்பார்ப்புகள் பற்றி ஊழியர்கள் அக்கறை கொள்ள வேண்டும்; அவை தம்மிடம் இருக்க வேண்டுமென்று அவர்கள் தமக்குத் தாமே கண்டிப்பாகக் கோரவேண்டும். ஆனால், இப்போது யேனானில் உள்ள சில ஊழியர்கள், கட்சியின் ஊழியர் கொள்கை பற்றி பேசும்போதெல்லாம் கட்சி தங்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும், தம்மை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும், தம்மைப் பேணி வளர்க்க வேண்டுமென்று நினைக்கின்றனர். அவர்கள் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய நான்கு எதிர்பார்ப்புகள் (கட்சிக்கு விசுவாசமாக இருத்தல், மக்களுடன் நெருங்கிய பிணைப்புகளைக் கொண்டிருத்தல், சுயேட்சையாக வேலை செய்யும் ஆற்றல் கொண்டிருத்தல் மற்றும் கட்சிக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ளுதல்) பற்றி அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. அவற்றை இரண்டாந்தர முக்கியத்துவம் உடையவையாக அவர்கள் கருதுகின்றனர்; அல்லது அவற்றை அடியோடு அவர்கள் மறந்து விடுகின்றனர். இது தவறானது என்பது சொல்லாமலே விளங்கும்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !

1938-ம் ஆண்டில், ஜப்பானிய எதிர்ப்பு இராணுவ மற்றும் அரசியல் கல்லூரி, இன்னும் பிற கட்சி நிறுவனங்களின் மாணவர்களுடன் விவாதித்த போது, கட்சியின் ஊழியர் கொள்கை பற்றி மட்டும் தான் நான் பேசினேன்; ஊழியர்கள் தமது அறவொழுக்கத் தரங்களை உயர்த்திக் கொள்வதன் அவசியத்தைப் பற்றி நான் பேசாமலேயே இருந்துவிட்டேன். எனது அப்போதைய விவாதம் பிரச்சினையின் ஒரு பக்கத்தைப் பற்றியதாக இருந்தது. இப்பொழுது பிரச்சினையின் இன்னொரு பக்கத்தைப் பற்றிப் பார்ப்போம்.

  1. அறிவுத்துறை பின்னணியுடைய புதிய ஊழியர்கள்

கூர்மையான அறிவும் வேலைக்கான உற்சாகமும்தான் இந்தப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களின் பலமாகும். கட்டுப்பாட்டின் மீதான வெறுப்பு இவர்களுடைய தனிப்பண்பாகும்; இது குட்டி முதலாளிகளின் தனிச்சிறப்பான குணாதிசயம் ஆகும். இந்தப் பலவீனத்தை வெற்றி கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர்; கட்சி அமைப்பு அளிக்கக்கூடிய கல்வியின் உதவியோடு, அவர்களால் அந்தப் பலவீனத்தைக் கடக்க முடியும்.

இந்தப் பின்னணி கொண்ட புதிய ஊழியர்கள் பலர், தமக்கு ஒதுக்கப்பட்ட வேலையை, தமக்குப் பொருத்தமானதாகக் கருதுவதில்லை. தொழில்நுட்பம், பொருளாதார வேலைகள், இன்னும் பிற துறைகளில் அமர்த்தப்பட்டுள்ள இவர்கள், தமது வேலையில் மன நிறைவு இல்லாதவர்களாக உள்ளனர். கட்சி அவர்களுக்குத் தவறான வேலைகளைக் கொடுத்துவிட்டதா? அல்லது அவர்களுடைய சிந்தனையில் ஏதாவது கோளாறா? நான் பார்த்தவரையில் அவர்களுடைய சிந்தனையில்தான் பிரச்சினை உள்ளதென்று நினைக்கிறேன்.

அ. ஒரு புரட்சியாளர் என்பதைப் பற்றிய அவர்களுடைய கருத்தாக்கம், யதார்த்தமாகத் தேவைப்படும் புரட்சியாளருடன் பொருந்தி வரவில்லை

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இயக்கங்களில் தாம் பெற்ற அனுபவத்திலிருந்து புரட்சியாளர் பற்றிய அவர்களது கருத்தாக்கம் பின்வருமாறு உள்ளது. ஒரு அரசியல்வாதிதான் புரட்சியாளர்; கூட்டங்களில் தங்குதடையின்றி மடைதிறந்த வெள்ளம் போலப் பேசுபவர் புரட்சியாளர்; ஆர்ப்பாட்டங்கள், கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்தான், புரட்சிக்காக கிளர்ச்சி வேலைகளில் பங்கேற்பவர்தான் புரட்சியாளர்; – இப்படித்தான் அவர்கள் கருதுகின்றனர்.

இப்போதைய யதார்த்த நிலையில், நமக்குத் தேவைப்படும் பரட்சியாளர் வேறுமாதிரியானவர். இராணுவ மற்றும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி என்பதை அறிந்தவர்தான் இப்போது நமக்குத் தேவை; உணவு மற்றும் உடை பற்றிய நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி என்பதை அறிந்தவர்தான் இப்போது நமக்குத் தேவை. ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்வதும், பேரணிகளில் பங்கேற்பதும், கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், புரட்சிக்கான கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அவசியமான நடவடிக்கைகள்தான். இருந்தபோதிலும், அவை எந்த விதத்திலும் போதுமானவை அல்ல. வேறு சொற்களில் கூறுவதானால், அவை முதன்மையான நடவடிக்கைகளே அல்ல; ஏனென்றால், புரட்சியினுடைய அடிப்படையான பிரச்சினைகளை இவற்றால் தீர்க்க முடியாது.

கட்சி, அரசாங்கம், படை, மக்கள்திரள் அமைப்புகள் என்றவாறான வேலைகளில் தேர்ச்சியுடையவர்களே நமக்கு உண்மையிலேயே தேவைப்படுகிறார்கள். இந்த வேலைகள் பல துறைகளுக்கானவையாகப் பிரிக்கப்படுகின்றன; இவை அனைத்துமே ஏனோ தானோவென்று ஒதுக்கப்பட முடியாதவை. எடுத்துக்காட்டாக, உணவு மற்றும் உடைக்கு ஏற்பாடு செய்வது பெரு முக்கியத்துவம் வாய்ந்தது; அது நிறைவேற்ற கடினமானதொரு கடமையாக உள்ளது. ஒரு புரட்சியாளர் தங்குதடையின்றி, மடைதிறந்த வெள்ளம் போல பேசுபவராக இருப்பது மட்டும் போதாது; தொழில், விவசாயம், இராணுவ விவகாரங்கள், கலாச்சாரம், கல்வி, வணிகம் என்று எந்தத் துறையை அல்லது எந்தப் பிரிவை எடுத்துக் கொண்டாலும், அதில் துறை சார்ந்த தேர்ச்சிமிக்க நிபுணத்துவம் உள்ளவராக அவர் விளங்க வேண்டும். புரட்சியாளர்கள் இந்தச் செயற்களங்கள் அனைத்திலும் ஆற்றல் உள்ளர்களாக இருக்க வேண்டும்; அவ்வாறு இல்லாமல் போனால், புரட்சியில் அவர்கள் தோல்வி அடைவர்; அவர்களின் இருப்பே ஆபத்துக்குள்ளாகிவிடும்.

கற்பனைக் கருத்தாக்கமான புரட்சியாளர், நடைமுறையில் யதார்த்தமாகத் தேவைப்படும் புரட்சியாளருடன் பொருந்தக்கூடியவராக இல்லை. விடுதலைப் பிரதேசங்களுக்கும் விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கும், பழைய கருத்தாக்கங்களுக்கும் புதிய யதார்த்தங்களும் இடையிலான வேறுபாடுகளே இதற்குக் காரணம்.

ஆ. தொழில்நுட்ப, பொருளாதார, நிர்வாக வேலைகளைக் காட்டிலும் அரசியல் வேலையையே அறிவாளிப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் தெரிவு செய்கின்றனர்.

எல்லா தொழில்நுட்ப, பொருளாதார, நிர்வாக வேலைகளும் தமக்கே உரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. எல்லா அரசியல் வேலைகளும் தொழில்நுட்ப, பொருளாதார, நிர்வாக வேலைகளுடன் பின்னிப் பிணைந்தவையாக உள்ளன. இராணுவ நிர்வாக அமைப்பை எடுத்துக்கொண்டால், அதில் அரசியல் பிரிவு மட்டும் இல்லாமல் அதில் படையதிகாரிகள் பிரிவும் படைவீரர்களை அணிவகுத்து வழிநடத்தும் பிரிவும் இதுபோலவே இருக்கின்றன. பொதுமக்களிடையேயான வேலையிலும் இதே நிலைமைதான் இருக்கிறது. இது கட்சியின் வடமேற்கு பிரிவினுடைய தலைமைக் குழுவிலும், ஷான்க்ஸி – காங்சு – நிங்ஸியா எல்லைப் பிரதேச அரசாங்கத்திலும் பல்வேறு பணித்துறைகள் உள்ளன. வேறெந்த பணிகளுடனும் தொடர்பற்ற முழுமையான அரசியல் வேலை என்று எதுவுமே இல்லை.

ஊழியர்கள் தமது வேலைகளை மாற்றிக் கொள்ள முடியுமா? எடுத்துக்காட்டாக, கலை-இலக்கியப் பிரிவில் வேலை செய்ய எண்ணற்ற ஊழியர்கள் விரும்புகின்றனர்; ஆனால், இந்தத் துறைக்கு இவ்வளவு பேர் தேவைப்பட மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். கலை-இலக்கிய வேலை பயனுள்ளதுதான்; ஆனால், அது மட்டும் போதாது. விரும்பும் ஒவ்வொருவரையும் அதில் ஈடுபடுத்தவும் முடியாது. இது மட்டுமின்றி, புரட்சிகர கலை-இலக்கிய வேலையில் ஈடுபட்டுள்ளவர்களும் கூட, தொழில்நுட்ப, பொருளாதார, நிர்வாக வேலைகளைப் புரிந்து கொண்டாக வேண்டும். எழுத்தாளர்களும் நாட்டுப்புறங்களுக்குச் சென்றாக வேண்டும். ஏனென்றால், இத்தகைய அனுபவம் இல்லாமல், ஆற்றலுள்ள எழுத்தாளர்களாக முடியும் என்று அவர்கள் நம்பிக்கைக் கொள்ள முடியாது.

நிர்வாக வேலைகளில் மூழ்கிவிடும் அபாயமிருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். இப்போது நிர்வாக வேலைகள் அவசியமாயிருப்பதையும், நிர்வாக வேலையும் புரட்சிகரமான வேலைதான் என்பதையும், மார்க்சிய – லெனினிய வழிகாட்டலின்கீழ் மேற்கொள்ளப்பட்டால், இது செக்குமாட்டுத்தனத்துக்கு இட்டுச் செல்லாது என்பதையும் இவர்கள் புரிந்து கொள்வது இல்லை.

அடிமட்டத்திலான நடைமுறை வேலையின் வாயிலாக, கட்சியின் புதிய உறுப்பினர்களும் ஊழியர்களும் புடம் போடப்பட வேண்டும். மையக் குழுவினுடைய அமைப்பு விவகாரத் துறையினால், நாற்றுக்கணக்கான அறிவாளிப் பிரிவினரான ஊழியர்கள், மக்களிடையில் நடைமுறை வேலை செய்வதற்காக ஷான்க்ஸி-கான்சு-நிங்ஸியா பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டது இற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. அங்கு கடினமான வேலையை மேற்கொண்ட அவர்கள், சித்தாந்தரீதியில் பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளனர். எல்லைப் பிரதேசத்தில் வேலை செய்யும் அவர்கள், இன்னல்கள் – இடர்ப்பாடுகளுக்குத் தாக்குப் பிடிப்பதில், மூத்த ஊழியர்களுக்கு சளையாதவர்களாக உள்ளனர்; மூத்த ஊழியர்களுடன் இணைந்து அவர்கள் சிறப்பாக வேலை செய்கின்றனர்; பரந்துபட்ட மக்களுடன் நெருக்கமான பிணைப்புகளைக் கொண்டிருக்கும் அவர்கள், மக்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளனர். எனவே, புதிய ஊழியர்கள் புடமிடப்படுவது கீழ்மட்டங்களிலான நடைமுறை வேலையிலிருந்துதான் தொடங்கப் பட வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக உணர்கிறோம்.

இ. திறமையானவர்களுக்கு மிகச் சாதாரணமான வேலைகளே தரப்படுகின்றன என்று சில அறிவாளிப் பிரிவினரான ஊழியர்கள் புகார் செய்கின்றனர்.

முதலில் ”திறமையானவர்களை”ப் பற்றி பரிசீலிப்போம். பொருளாதாரரீதியிலும் கல்விரீதியிலும் சீனா பின்தங்கியுள்ளது. இந்தக் காரணத்தால், அறிவாளிப் பிரிவினர் பெரும் பயனளிப்பவர்களாக உள்ளனர். எனவே, நடுத்தரப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நமக்கு மதிப்பு மிக்க செல்வங்களாவர். ஆனால், ஒப்பீட்டு ரீதியில் அவர்கள் சாதாரண மக்களை விட திறமையானவர்களாக இருக்கிறார்களே ஒழிய, புரட்சியாளர்கள் என்ற முறையில் அவர்கள் திறமை மிக்கவர்களாக இருப்பதில்லை. புரட்சிகர அணிகளில் சேர்ந்து வேலை செய்வதற்கு, நடுத்தரப் பள்ளி அல்லது கல்லூரி கல்வி கற்றவர்களாக இருப்பது போதுமானதாக இருக்காதா? சிலருக்கு இது பொருந்தலாம்; ஆனால், பிறருக்கு, இன்னும் பெரும்பாலானோரைப் பொருத்தவரை இது போதுமானதல்ல. ஏனெனில், புரட்சிகர வேலைக்குத் தேவைப்படுவது புத்தக அறிவு மட்டுமல்ல; மாறாக, இதற்குச் சமுதாயம் பற்றிய அறிவும் புரட்சிகர நடைமுறை வேலையினால் ஈட்டப்பட்ட அனுபவமும் தேவைப்படுகிறது.

ஆய்வுப் பணியாளர்கள் சிலர், இந்த உண்மையை இப்போது புரிந்து கொண்டுள்ளனர்; இந்த உண்மையை தாம் ஏற்கெனவே அறிந்து கொள்ளாததற்காக அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். விவசாயப் புரட்சிக் காலத்தின்போது புரட்சியில் சேர்ந்த மூத்த ஊழியர்களை விட அறிவாளிப் பிரிவினரான புதிய ஊழியர்கள் சாதகமான நிலையைப் பெற்றுள்ளனர் என்பது உண்மைதான்; ஆனால், அறிவாளிப் பிரிவினரான புதிய ஊழியர்கள் மேலதிகமான புத்தக அறிவைப் பெற்றுள்ள போதிலும், அவர்கள் பெற்றுள்ள நடைமுறை அனுபவம் குறைவானதே.

அறிவுத்துறை பின்னணி கொண்ட புதிய ஊழியர்கள், விவசாயப் பின்னணி கொண்ட மூத்த ஊழியர்களை கொஞ்சம் மட்டமானவர்களாகப் பார்க்கின்றனர்; தம்மைப்போல கற்றவர்களாக இல்லாமல், கல்வியறிவற்றவர்களாகவும் குறுகிய மனப்பாங்கு உடையவர்களாகவும் இருப்பதாக அவர்களைப் பார்க்கின்றனர். ”விவசாயப் பின்னணி கொண்ட ஊழியர்கள் சுயநலத்தின் காரணமாக, நிலம் பெறுவதற்காக புரட்சியில் சேர்ந்தனர்; ஆனால், நாங்களோ இயல்பாகவே புரட்சி செய்தற்காகவே வந்தவர்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த போலி தற்பெருமைப் போக்கு முற்றிலும் தவறானதென்பதே உண்மையாகும். விவசாயப் பின்னணியிலிருந்து வந்த மூத்த ஊழியர்களைக் காட்டிலும் மேலாக இவர்கள் கல்வி கற்றிருந்த போதிலும், இவர்களைக் காட்டிலும் மூத்த ஊழியர்கள் மேலதிகமான புரட்சிகர நடைமுறை அனுபவத்தைக் கொண்டுள்ளனர். மூத்த ஊழியர்கள்பால் ஆணவத்துடன் இருப்பதைக் காட்டிலும், அவர்களிடமிருந்து அறிவாளிப் பிரிவிலிருந்து வந்த ஊழியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !
♦ டானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் !

”பரந்த மனப்பாங்கு” மற்றும் ”குறுகிய மனப்பாங்கு” என்பவற்றைப் பொருத்தவரையில், முற்றிலும் வேறானதொரு கருத்து என்னிடம் உள்ளது. விவசாயிகள் சிறு விடயங்களில் குறுகிய மனப்பாங்கு உடையவர்களாகவும், ஆனால் பெரிய பிரச்சினைகளில் பரந்த மனப்பாங்கு உடையவர்களாகவும் உள்ளனர் என்றே நான் நினைக்கிறேன். புரட்சிக்கான வாழ்வா – சாவா என்ற போராட்டத்தில், விடாப் பிடியாக நிற்க வேண்டிய தருணங்களில் அறிவாளிப் பிரிவினரிலிருந்து வந்தவர்களைக் காட்டிலும், விவசாயப் பிரிவினரைச் சேர்ந்த தோழர்கள் எப்போதும் மேலதிக நெஞ்சுரம் உள்ளவர்களாகவும் தமது இன்னுயிரை இழக்கத் தயாரானவர்களாகவும் உள்ளனர்.

அறிவாளிகளில் யாருமே நல்லவர்கள் இல்லை என்று நான் கூறவில்லை; தொழிலாளர்களுடனும் விவசாயிகளுடனும் இரண்டறக் கலவாத அறிவாளிகள் சிறு விடயங்களில் பரந்த மனப்பாங்கு உடையவர்களாகவும் பெரிய பிரச்சினைகளில் குறுகிய மனப்பாங்கு உடையவர்களாகவுமே உள்ளனர் என்பதையே நான் கூறுகிறேன். பழைமைவாதப் பிடிப்பும் தனியுடைமை உணர்வும் கொண்டிருப்பதுதான் விவசாயத் தோழர்களின் பலவீனமாகும். அவர்களுடைய பலம் பற்றுறுதிமிக்க புரட்சிகர உணர்வாற்றல்தான்; இந்தப் பற்றுறுதி ஆக மிகமுக்கியமான விடயமாகும். நமது விவசாயத் தோழர்கள் பற்றிய சரியான புரிதல் நமக்கு இருக்க வேண்டும்; நாணயத்தின் இரு பக்கங்களையும் நாம் நோக்க வேண்டும். அறிவாளிப் பிரிவினர் தொழிலாளர் – விவசாயிகளுடன் ஒன்றிவிட வேண்டும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். புரட்சியானது பரந்துபட்ட தொழிலாளர் – விவசாயிகளையே முதன்மையாகச் சார்ந்திருக்கிறது என்பது தற்செயலான ஒரு விசயமல்ல; ஏனெனில், அவர்கள் வலுவான புரட்சிகர உணர்வாற்றல் மிக்கவர்களாக இருப்பவர்கள் என்பதுதான்.

சர்வசாதாரண கடமைகள் தரப்படுவது பற்றி இப்போது கவனிப்போம். ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி சரியான மதிப்பீட்டைக் கொண்டிருக்க வேண்டும்; சிறுசிறு வேலைகளைச் செய்வது பற்றி கவலைப்படக் கூடாது. ஏனெனில், மகத்தான சாதனைகள் சிறுசிறு வேலைகளிலிருந்துதான் தொடங்குகின்றன.

ஈ. தங்களுக்கு எதிர்காலம் இல்லையென்று அறிவாளிப் பிரிவினரான சில ஊழியர்கள் புகார் கூறுகின்றனர்.

பொதுவுடைமையாளர்கள் தமது லட்சியத்தின்பால் அர்ப்பணிப்பு உணர்வும் மீமிகு பேரார்வமும் கொண்டவர்கள்; ஒளிமிக்க எதிர்காலத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, புரட்சியின் எதிர்காலத்துடன் தமது சொந்தத் தலைவிதியை அவர்கள் பிணைக்கின்றனர். மொத்தத்தில், புரட்சிக்கு எதிர்காலமில்லாவிட்டால், அவர்களுக்கும் எதிர்காலம் இருக்க முடியாது. பரந்துபட்ட மக்கள் இல்லாமல் வீரர்கள் மட்டும் எப்படியிருக்க முடியும்? முடியாது. பலரும், தாம் உயர்நிலையில் இருக்க வேண்டும் என்றும் அனைவரின் கவனமும் தம் மீது நிலைக்க வேண்டும் என்றும் ஆரவாரிக்கின்றனர். ஏனென்றால், தமது பெயர்கள் வரலாற்று ஏடுகளில் இடம்பெற வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், இத்தகையவர்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றனர்; பல்லாயிரக்கணக்கானவர்களின் பெயர்களை வரலாற்று ஏடுகளில் பதிய முடியுமா? ஊழியர்களின் பேரவாவினை நான் ஊக்கமிழக்கச் செய்கிறேனா? அப்படியெல்லாம் இல்லை. எந்தவொரு தொழிலும் தனக்கே உரிய தனிச்சிறப்பானவர்களை – முன்னுதாரணமானவர்களைக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்டவர்களுள் ஒருவராவதற்கான ஒரே வழி, ஒருவர் தமது வேலையை நேசிப்பதிலும் அதில் சிறந்தவராவதும்தான்.

(தொடரும்)

நூல் : ஊழியர்கள் தலைவர்கள்
ஆசிரியர் : சென் யுன்
பக்கம் : 48
விலை : ரூ. 40
கிடைக்குமிடம் : கீழைக்காற்று
தொடர்புக்கு : 7395937703