சீனப் புரட்சி வெற்றிகரமாக நடைபெற்று மக்கள் சீனக் குடியரசு அமைக்கப்பட்டு எழுபத்தியோரு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. கட்சி, கம்யூனிசம் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று நேரடியாக மறுக்கக் கூடியவர்களும், மறைமுகமாக காய் நகர்த்துபவர்களும் மலிந்துகிடக்கும் சமூகச் சூழலில், உலகம் முழுவதும் நடைபெற்ற புரட்சிகள் பின்னடைவுக்குள்ளானதன் அடிப்படையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்துவதற்கு ஒரு கட்சி எவ்வளவு அவசியமோ, அந்த அளவிற்கு அந்தக் கட்சியும் மக்களுக்கு கடப்பாடு உடையதாக இருக்க வேண்டும். அவ்வப்போது தமது தவறுகளைப் பரிசீலித்து, சுயவிம்ர்சனத்தோடு பகிரங்கமாக அம்பலப்படுத்திக் கொண்டு தம்மை சீர் செய்து கொண்டிருக்கையில்தான் அந்தக் கட்சி மக்களோடு ஐக்கியப்பட்டு இருக்க முடியும்; புரட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும். அப்படி ஒரு கட்சி தன்னை தகவமைத்துக் கொள்வதற்கான போராட்டத்தை தன்னுள்ளே தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அதனை தோழர் மாவோ தொடர்ந்து செய்துவந்தார். கலாச்சாரப் புரட்சியின் காலகட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பதினோறாவது காங்கிரஸ் கூட்டத்தின் நிறைவு விழாவில் தோழர் மாவோ ஆற்றிய உரையும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், இத்தருணத்தில் புரட்சிகரச் செயல்பாட்டாளர்களுக்கு அவசியம் படிக்க வேண்டியவையாக இருக்கின்றன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், பல கோடி மக்களின் உறுதிமிக்க போராட்டத்தால் சாத்தியமாக்கப்பட்ட சீனப் புரட்சியின் அனுபவங்களை நெஞ்சில் ஏந்துவோம். புதிய ஜனநாயக அரசைக் கட்டமைக்கக் களமிறங்குவோம் !
வினவு
எட்டாவது மத்தியக் குழுவின் பதினொன்றாவது பிளீனக் கூட்டத்தின் நிறைவு விழாவில் ஆற்றிய உரை
(ஆகஸ்டு 12, 1966)
பாகம் – 1
(ஆதாரம்: “மா சே துங் சிந்தனைகள் நீடூழி வாழ்க” என்னும் செங்காவலர் வெளியீடு)
ஒன்பதாவது மாநாட்டுக்காக நாம் சில வேலைகளைச் செய்ய வேண்டும் என நான் கருதுகின்றேன். ஒன்பதாவது மாநாட்டை எப்போது நடத்த வேண்டும் என்று முடிவெடுக்க நாம் ஆயத்தமாக வேண்டும். அடுத்த இரண்டு வருடங்கள் கழிந்தால் எட்டாவது காங்கிரசின் இரண்டாவது அமர்வு முடிந்து பத்தாண்டுகள் ஓடியிருக்கும். பல வருடங்கள் ஓடிவிட்டன. ஒன்பதாவது காங்கிரஸ் நடத்தியே தீரவேண்டும், அடுத்த வருடத்தில் தகுந்த நேரத்தில் நடத்த வேண்டும். அதற்காக நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும். அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்யும் பொறுப்பை அரசியல் தலைமைக்குழுவுக்கும் அதன் நிலைக்குழுவுக்கும் கொடுத்துவிட வேண்டும் என நான் முன்மொழியலாமா?
இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானவையா தவறானவையா என்பதை எதிர்காலம் காட்டும்1. ஆனாலும், நாம் எடுத்துள்ள முடிவுகளை மக்கள் வரவேற்பதாகவே தெரிகின்றது. உதாரணமாக மத்தியக்குழு எடுத்த முக்கியமான முடிவுகளில் ஒன்று மாபெரும் கலாச்சாரப் புரட்சியைப் பற்றியது. மாணவர்கள் புரட்சிகர ஆசிரியர்களின் பரந்துவிரிந்த திரள் நம்மை ஆதரிக்கின்றது, கடந்த காலத்தின் கொள்கைகளை எதிர்க்கின்றது. கடந்தகாலக் கொள்கைகளை எதிர்ப்பதென்ற அவர்கள் நிலையை ஒட்டித்தான் நாம் முடிவுகளை எடுத்தோம். ஆனால் இந்த முடிவுகளை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது முற்றிலும் பல்வேறு மட்டங்களிலும் உள்ள தலைவர்களின் நடவடிக்கையைப் பொறுத்ததே இன்று இங்கே இருக்கின்ற தலைவர்களும் இல்லாத தலைவர்களும்கூட இதில் அடங்குவார்கள்.
மக்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற கேள்வியையேகூட உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள். பொதுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது ஒன்று. பொதுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது மற்றொன்று. நமது தீர்மானங்களில் எழுதப்பட்ட அனைத்தையும் நமது கட்சிக் குழுக்களும் நமது தோழர்கள் அனைவரும் அப்படியே நடைமுறைப்படுத்துவார்கள் என்று எப்போதும் முடிவு செய்ய வேண்டாம். அவற்றை நடைமுறைப்படுத்த விரும்பாத சிலர் எப்போதும் இருக்கின்றார்கள். கடந்த காலத்தைவிட இப்போது நிலைமை நன்றாகவே இருக்கின்றது. ஏனெனில் கடந்தகாலத்தில் நாம் இப்படி வெளிப்படையாக முடிவுகளை எடுத்ததில்லை. இன்னும் சொன்னால் இந்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அமைப்புரீதியான உத்தரவாதமும் இப்போது உண்டு. நமது அமைப்பில் இப்போது சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரசியல் தலைமைக்குழுவின் முழுமையான மற்றும் மாற்று உறுப்பினர் தகுதியிலும், தலைமைச் செயலகத்திலும், நிலைக்குழுவின் உறுப்பினர் தகுதியிலும் செய்யப்பட்டுள்ள சீரமைப்புக்கள், மத்தியக் குழுவின் முடிவுகளையும் அறிக்கையையும் நடைமுறைப்படுத்துவதை உத்தரவாதம் செய்துள்ளன.
தவறு செய்த தோழர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அவர்கள் தமது தவறுகளை திருத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்ற முடிவுக்கு நீங்கள் முதலில் வந்துவிட்டு அதன்பின் அவர்கள் தமது தவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்க மறுக்கும்போக்கு கூடாது. ‘தவறுகளை முதலில் தண்டிப்போம். ஏனெனில் அவை மீண்டும் நடக்கக் கூடாது; நோயாளியைக் காப்பாற்ற வேண்டும், எனவே அவரைக் குணப்படுத்துவோம்’, ‘முதலில் கவனிப்போம், பின் உதவி செய்வோம்’, ‘ஒற்றுமை – விமர்சனம் – ஒற்றுமை’ – இதுதான் நமது கொள்கை. கட்சிக்கு வெளியே நாம் ஒரு கட்சியை வைத்துள்ளோமா? வைத்திருப்பதாகத்தான் நான் நினைக்கின்றேன், கட்சிக்குள் கோஷ்டிகள் இருப்பதாகவும் நான் கருதுகின்றேன். க்வோமின்டாங்கை நாம் விமர்சிக்கின்றோம், ஆனால் க்வோமின்டாங் இவ்வாறு கூறுகின்றது: “கட்சிக்கு வெளியே இன்னொரு கட்சி கூடாது, கட்சிக்குள்ளே கோஷ்டிகள் கூடாது”. சிலரோ இப்படிக் கூறுகின்றார்கள்: “கட்சிக்கு வெளியே இன்னொரு கட்சி கூடாது என்பது சர்வாதிகாரம்; கோஷ்டிகள் இல்லாமல் இருப்பதோ முட்டாள்தனம்”. இது நமக்கும் பொருந்தும். நமது கட்சிக்குள் கோஷ்டிகள் இல்லை என்று நீங்கள் கூறலாம், ஆனால் இருக்கின்றன.
உதாரணமாக மக்கள் இயக்கங்களைக் குறித்த அணுகுமுறையைப் பொறுத்தவரை இரண்டு கோஷ்டிகள் உள்ளன. எந்த கோஷ்டி பெரும்பான்மை, எது சிறுபான்மை என்பதுதான் கேள்வியே. நாம் இந்தக் கூட்டத்தை இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு நடத்தியிருப்போமெனில் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். எனவே இப்போது இந்தக் கூட்டம் நடந்தது நல்ல விசயமே. இது பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்புகள்
1. சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழுவின் பதினொன்றாவது பிளீனத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – பதினாறு அம்சங்கள்:
(1) இப்போது மலர்ந்துள்ள இந்த மகத்தான பாட்டாளிவர்க்கக் கலாச்சாரப் புரட்சியானது மக்களது ஆன்மாவைத் தொட்டுள்ள ஒரு மகத்தான புரட்சியாகும் – நமது தேசத்தின் சோசலிசப் புரட்சியில் ஒரு புதிய கட்டத்தை இப்புரட்சி கொண்டு வந்துள்ளது, அது மேலும் ஆழமான பரந்து விரிந்த கட்டமாகும். கட்சியின் எட்டாவது மத்தியக்குழுவின் பத்தாவது பிளீனக் கூட்டத்தில் தோழர் மாசேதுங் கூறினார்: ஓர் அரசியல் சக்தியை வீழ்த்த வேண்டுமாயின், எல்லாவற்றிற்கும் முதலாக பொதுக்கருத்தை உருவாக்க வேண்டியது எப்போதும் அவசியம், தத்துவார்த்த தளத்தில் வேலை செய்ய வேண்டியதும் அவசியம்.
இது புரட்சிகர வர்க்கத்துக்கு மட்டுமல்ல, எதிர்ப்புரட்சி வர்க்கத்துக்கும் பொருந்தும். தோழர் மாசேதுங்கின் இந்தக் கோட்பாடு நடைமுறையில் முற்றிலும் சரியானதே என்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. முதலாளிவர்க்கம் தூக்கியெறியப்பட்டு விட்டது, ஆனால் அது இப்போதும் மீண்டு வந்துவிட எல்லா முயற்சிகளையும் செய்கின்றது – அது சுரண்டல் வர்க்கத்தின் பழைய சித்தாந்தங்களையும் கலாச்சார பழக்க வழக்கங்களையும் பயன்படுத்தி சாமான்ய மக்களை சிதைக்கவும், அவர்களது சிந்தனையை வசப்படுத்தவும் முயல்கின்றது. பாட்டாளிவர்க்கம் இதற்கு நேரெதிரான வேலைகளைச் செய்ய வேண்டும். தத்துவார்த்த தளத்தில் முதலாளி வர்க்கத்துடன் நேருக்கு நேராக மோதி ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள வேண்டும், ஒட்டுமொத்த சமூகத்தின் சித்தாந்தப் பார்வையை மாற்றும் வண்ணம் பாட்டாளிவர்க்கத்தின் புதிய சித்தாந்தங்களையும் கலாச்சாரப் பழக்கவழக்கங்களையும் பயன்படுத்த வேண்டும். இன்றைய நிலையில் நமது லட்சியம் என்பது அதிகாரத்தில் இருந்து கொண்டு முதலாளித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள நபர்களுக்கு எதிராகப் போராடுவது, அவர்களை ஒழிப்பது; பிற்போக்கு முதலாளித்துவ அறிவுசார ‘அதிகாரங்களையும் முதலாளித்துவம் உள்ளிட்ட அனைத்து சுரண்டல் வர்க்கங்களின் தத்துவங்களையும் விமர்சித்து அவற்றை வீழ்த்துவது சோசலிசப் பொருளாதாரத் தளத்துக்குப் பொருந்தி வராத கல்வி, கலை இலக்கியம் போன்றவை உள்ளிட்ட மேற்கட்டுமானத்தின் அங்கங்களை சீர்படுத்துவது, இவ்வாறு செய்வதன்மூலம் சோசலிச அமைப்பை வலுப்படுத்தி வளர்ச்சிப்பெற வழிசெய்வது.
(2) இம்மாபெரும் கலாச்சாரப் புரட்சியின் முக்கிய சக்தியாக இருப்பது தொழிலாளி, விவசாயி, படைவீரர்கள், புரட்சிகர அறிவுஜீவிகள், புரட்சிகர ஊழியர்கள் உள்ளிட்ட மக்கள் திரளே. இதற்கு முன் நாம் பார்த்திராத மிகப்பெரும் புரட்சிகர இளைஞர்கூட்டம் இப்போது துணிச்சல் பெற்று முன்வந்துள்ளது. இவர்கள் செயல்பாட்டில் தீவிரம் உள்ளவர்கள், மதிநுட்பம் வாய்ந்தவர்கள். கொட்டை எழுத்துச் சுவரொட்டிகள், மாபெரும் விவாதங்கள் மூலம் இவர்கள் விசயங்களை வெளிப்படையாக விவாதிக்கின்றார்கள், முற்றிலும் விமர்சித்து அம்பலமாக்குகின்றார்கள், வெளிப்படையாகவும் மறைந்தும் இருக்கின்ற முதலாளி வர்க்கத்தின்மீது தீவிரமான தாக்குதலைத் தொடுக்கின்றார்கள். இத்தகைய ஒரு மகத்தான புரட்சி இயக்கத்தில் அவர்களிடையே கூடவோ குறையவோ சில குறைபாடுகள் இருப்பது தவிர்க்க இயலாத ஒன்று. ஆனாலும் அவர்களது தலையாய புரட்சிகர உணர்வானது தொடக்கத்திலிருந்தே சரியாகவே இருக்கின்றது. மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சியின் மைய நீரோட்டமாக இருப்பது இதுவே. மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி தொடர்ந்து முன்னேறிச் செல்லவேண்டிய முக்கிய திசையும் இதுதான்.
கலாச்சாரப் புரட்சியும் ஒரு புரட்சிதான் என்பதால் அது எதிர்ப்பை எதிர்கொள்ளும் என்பது தவிர்க்க இயலாதது. எதிர்ப்பவர்கள் யார்? முக்கியமாக கட்சிக்குள் ஊடுருவி அதிகாரத்தையும் கைப்பற்றி முதலாளித்துவப் பாதையில் செல்பவர்கள்தான் அவர்கள். சமூகப் பழக்கங்களின் பழைய சக்திகளிடமிருந்தும் எதிர்ப்பு வருகின்றது. இன்றைய நிலைமையில் இந்த எதிர்ப்பு மிக உறுதியாகவும் வலுவாகவும் உள்ளது. ஆனாலும் என்ன, மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி தடை செய்ய முடியாத ஒரு பொதுவான இயக்கமாகும். மக்கள் முழுமையாக கிளர்ந்தெழும்போது இந்த எதிர்ப்புகளெல்லாம் விரைந்து தூளாகும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
எதிர்ப்பு மிக வலுவாக உள்ளதால் போராட்டத்தில் தோல்விகளும், மீண்டும் மீண்டும் தோல்விகளும்கூட நேரிடும். இதில் கெடுதல் ஒன்றுமில்லை. இது பாட்டாளி வர்க்கத்தையும் பிற உழைக்கும் மக்களையும், குறிப்பாக புதிய தலைமுறையை மேலும் உறுதியாக்கும்; அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும், அனுபவங்களைத் தரும்; புரட்சிகரப் பாதை என்பது சிரமமற்ற நேர்பாதை அல்ல, அது வளைந்து செல்லும் பாதை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவும்.
(3) கட்சித் தலைமை மக்கள் திரளை எழுச்சி பெறச் செய்யும் வேலையை துணிச்சலுடன் செய்வதைப் பொறுத்துத்தான் இம்மாபெரும் கலாச்சாரப் புரட்சியின் விளைவு என்ன என்பது தீர்மானிக்கப்படும். கட்சி அமைப்புகளின் பல்வேறு மட்டங்களும் கலாச்சாரப் புரட்சிக்குத் தந்துள்ள தலைமைப் பாத்திரத்தைப் பொறுத்தவரை இப்போது நான்கு வெவ்வேறான சூழ்நிலைகள் நிலவுகின்றன:
(அ) கட்சி அமைப்புகளின் பொறுப்பிலுள்ளவர்கள் இயக்கத்தின் முன்னணிப் படையாக இருக்கின்றார்கள். மக்களைக் கிளர்ந்தெழச் செய்யும் வேலையைத் துணிவுடன் செய்கின்றார்கள். துணிச்சலுக்கே அவர்கள் இப்போது முதலிடம் கொடுக்கின்றார்கள், அவர்கள் அச்சமில்லாத கம்யூனிஸ்ட் போராளிகள், தலைவர் மாவோவின் மாணவர்கள். கொட்டை எழுத்துச் சுவரொட்டிகளையும் மாபெரும் விவாதங்களையும் அவர்கள் ஆதரிக்கின்றார்கள். பேய்கள், பூதங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்துமாறும், பொறுப்பிலுள்ளவர்களின் குறைகள், தவறுகளை விமர்சிக்குமாறும் மக்களை உற்சாகப்படுத்துகின்றார்கள். பாட்டாளிவர்க்க அரசியலை முன்னிறுத்தியதும் மாசேதுங் சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றதும்தான் இத்தகைய சரியான தலைமை உருவாவதற்குக் காரணம்.
(ஆ) பல கிளைகளின் பொறுப்பாளர்கள் இந்த மகத்தான போராட்டத்தில் தலைமைப் பாத்திரத்தின் பொறுப்பை மிகவும் மோசமாகவே புரிந்து கொள்வார்கள்; அவர்களது தலைமையோ கடமையுணர்வு, திறமை ஆகியவற்றுக்கு வெகுதொலைவில் உள்ளது. அவர்கள் தங்களது தகுதியின்மையை உணர்ந்துள்ளார்கள். தாங்கள் பலவீனமான நிலையில் இருப்பதைத் தெரிந்துள்ளார்கள், அச்சத்துக்கே அவர்கள் முதலிடம் கொடுக்கின்றார்கள், காலத்துக்கு ஒவ்வாத வழிகள், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றார்கள், பழைய நடைமுறைகளிலிருந்து உடைத்துக் கொண்டு வரவும் முன்னேறவும் அவர்களுக்கு ஆர்வமில்லை. புதிய மாற்றங்களையோ மக்களின் புரட்சிகர உணர்வையோ இவர்கள் உணர்ந்தாரில்லை, விளைவாக இவர்களது தலைமை யதார்த்த நிலைமைக்கு வெகுதூரம் பின்னால் உள்ளது, மக்களிடமிருந்து வெகுதூரம் பின்தங்கியுள்ளது.
(இ) சில கிளைகளின் பொறுப்பாளர்கள் கடந்த காலத்தில் பலவகையிலும் தவறு செய்தவர்கள், இவர்கள் அஞ்சி நடுங்குகின்றார்கள், மக்கள் தங்களை அடையாளம் கண்டு அம்பலப்படுத்துவார்கள் என அஞ்சுகின்றார்கள். உண்மை என்னவெனில் இவர்கள் நேர்மையான வகையில் சுயவிமர்சனத்தில் ஈடுபட்டால், மக்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டால், கட்சியும் மக்களும் அவர்களது தவறுகளை மன்னிப்பார்கள். ஆனால் இந்தப் பொறுப்பாளர்களோ இவை எதையும் செய்யமாட்டார்கள், மாறாக தொடர்ந்து தவறு செய்வார்கள், மக்கள் இயக்கத்துக்கு தடைகளாக மாறுவார்கள்.
(ஈ) கட்சிக்குள் ஊடுருவி முதலாளித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள நபர்களால் சில கட்சிக் கிளைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த நபர்கள் மக்கள் தங்களை அம்பலப்படுத்தி விடுவார்கள் என பயங்கரமாகப் பயப்படுகின்றவர்கள், இதனால் மக்கள் இயக்கத்தை அடக்குவதற்கான அனைத்துக் காரணங்களையும் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள். தாக்குதலுக்கான இலக்குகளை மாற்றுவது, கறுப்பை வெள்ளையாக்குவது போன்ற தந்திரங்களில் இறங்கி இயக்கத்தை படுகுழியில் தள்ள முயல்கின்றார்கள்.
தாங்கள் முற்றாகத் தனிமைப்படுத்தப்படுவதை உணரும் போதும் முன்னைப்போல எதிர்ப்புரட்சி வேலைகளில் ஈடுபட முடியாமல் போகும்போதும் தங்கள் சதிவேலைகளை மேலும் தீவிரப்படுத்துவார்கள், மக்களை முதுகில் குத்துவார்கள், வதந்திகளைப் பரப்புவார்கள், புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும் உள்ள வேறுபாட்டை இயன்ற வகைகளிலெல்லாம் இருட்டடிப்பு செய்வார்கள் இவை அனைத்தும் புரட்சியாளர்களைத் தாக்குவதற்காகவே. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள கட்சிக் குழுக்களை மத்தியக்குழு வற்புறுத்துவது என்ன?
சரியான தலைமைப் பொறுப்புக்கான பாத்திரத்தை வகிப்பதை விடாமுயற்சியுடன் தொடர்வது, துணிச்சலுக்கே முதலிடம் கொடுப்பது, துணிச்சலுடன் மக்களை கிளர்ச்சியுறச் செய்வது, பலவீனமும் திறமையின்மையும் நிலவும் இடங்களில் அவற்றை மாற்றுவது, தவறு செய்த தோழர்கள், ஆனால் தவறுகளைத் திருத்திக்கொண்டு மனஅழுத்தங்களிலிருந்து விடுபட நினைக்கும் தோழர்களை ஊக்கப்படுத்துவது, அதிகாரத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருந்துகொண்டு முதலாளித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களை பதவி நீக்கம் செய்வது, இதன்மூலம் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்கள் இத்தகைய தலைமைப் பொறுப்புகளை மீண்டும் கைப்பற்ற வழிசெய்வது – இவற்றைத்தான் செவ்வனே செய்ய வேண்டும்.
(தொடரும்)