செப்டம்பர் 21, 1995 அன்று, சரியாக கால் நூற்றாண்டுக்கு முன்னர், உலகம் முழுவதும் உள்ள பிள்ளையார் சிலைகள் தங்கள் பக்தர்கள் வழங்கிய பாலைக் குடிக்கத் தொடங்கின.

நேபாளத்தில், மன்னர் பிரேந்திரா பிள்ளையார் பால் குடித்ததைப் பார்த்த அனுபவத்தால் சிலிர்த்தார். இந்தியாவில், விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) தலைவர்களும் மக்களும் தங்கள் ஆசிரமங்களிலும் கோயில்களிலும் சிவசக்தி (தெய்வீக ஆற்றல்) வருகையை விதந்தோதினர். பல இடங்களில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அலுவலகங்களில் குறைந்த வருகையே பதிவானது. சந்தைகள் மூடப்பட்டன. பஞ்சாபில் வீரர்கள் இராணுவப் பயிற்சியை நிறுத்தியதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டது. டெல்லி மற்றும் மும்பை பங்குச் சந்தைகள் மூடப்பட்டன. திடீரென பால் பற்றாக்குறை ஏற்பட்டது, இதன் காரணமாக பல இடங்களில் உள்ள சிலைகள் பால் பவுடரிலிருந்து தயாரிக்கப்பட்ட பாலை குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வெகுமக்களிடையே ஒருவித மயக்கம் இருந்தது.

இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் அடுத்த நாள் தலைப்புச் செய்திகள் இவ்வாறு இருந்தன: “பால் அதிசயம்” இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்தது (பிபிசி); இந்து உலகம் 24 மணி நேர அதிசயத்தால் பிரிக்கப்பட்டுள்ளது (இண்டிபென்டன்ட் இங்கிலாந்து);  கற்றலுக்கான கடவுள் பால் குடிக்கிறாரா? (நியூயார்க் டைம்ஸ்); இந்தியாவின் கடவுளர்கள் தங்கள் விசுவாசிகளை சிறு அதிசயத்தைக் கொண்டு கறக்கின்றன (கார்டியன்);  இந்து கடவுளின் மர்ம தாகத்தை மேரிலாண்ட் கண்டது (வாஷிங்டன் போஸ்ட்); உலகளாவிய இந்துக்களை ஒரு அதிசயம் வியக்கச் செய்கிறது; சிலைகள் பால் குடிப்பதை கடவுளின் செயல் என்று பலர் நம்புகிறார்கள் (லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்); சிவசக்தி இந்தியாவை திகைக்க வைக்கிறது (தி ஏசியன் ஏஜ்); சிலைகள் பால் குடிப்பது தூய அறிவியல் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்).

இந்தியாவின் மிகச்சிறந்த அதிசய செய்தி தனது தடத்தைப் பதித்தது.

படிக்க:
♦ பிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் !
♦ இந்து முன்னணி பிள்ளையார்களுடன் நேருக்கு நேர் !

நம்பிக்கை vs  பொறுப்பு

25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் (செப். 21, 1995), நகர்ப்புற இந்தியா முழுவதிலும் உள்ள நடுத்தர வர்க்க குடியிருப்புகளில் உள்ள குடும்பங்கள் அதிகாலையில் இருந்து அருகிலுள்ள பிள்ளையார் கோயில்களுக்கு விரைந்து செல்லத் தொடங்கின. மறுநாள் டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய ஒரு ஆய்வில், மும்பை மக்கள்தொகையில் 55%, டெல்லியின் மக்கள் தொகையில் 63% மற்றும் கல்கத்தாவின் 67% மக்கள் (கொல்கத்தா கணக்கு அதிகாரப்பூர்வமானதல்ல) பால் குடிக்கும் அதிசயத்தை நம்புவதாகக் கூறினர். காலை நடைப்பயிற்சி செல்பவர்களும் பாலகங்களிலிருந்து திரும்பி வருபவர்களும் இந்த செய்தியை வீட்டிற்கு கொண்டு வந்தனர். பிள்ளையார் சிலைகளுக்கு பாலுடன் உணவளித்தவர்கள் நிறைவுபெற்ற உணர்வுடன் திரும்பி வந்தனர். ‘நீங்கள் கரண்டியை கடவுளின் வாய்க்கு நகர்த்தி மெதுவாக சாய்த்து விடுங்கள். பால் மெதுவாக மறைந்துவிடும்’ என்றார்கள். பக்தருக்கு இது உண்மையின் தருணம். கடவுள் இருக்கிறார், உங்களுக்கு முன்னால் இருக்கிறார். இது தெய்வீக ஆனந்தத்தை அனுபவிக்கவும் முயற்சிக்கவும் மற்றவர்களைத் தூண்டியது. சடங்கு செய்ய வயதானவர்களும் நோயுற்றவர்களும் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனாலும், கொண்டாடும் மனநிலை இல்லை. மாய உணர்வூட்டும் மனநிலையே இருந்தது. படபடப்பு மற்றும் அமைதியின்மையின் உணர்வு இருந்தது. இந்த அசாதாரண நிகழ்வு ஒரு பெரிய தெய்வீக தலையீட்டின் அடையாளம் என்று விசுவாசிகள் நம்பினர். ஆனால், அது எவ்வளவு காலம் நீடிக்கும்? வி.எச்.பி தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் ஊடக அலுவலகங்களுக்கு தொலைநகல்களை அனுப்பினார்; அது இந்து மதத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை அறிவித்ததாகக் கூறியது. சிலை வழிபாட்டை இழிவுபடுத்துபவர்களை சிவசக்தி அடிபணிய வைக்கும் என்று கோயில் பண்டிதர்கள் எச்சரித்தனர். தர்மத்தை மறு ஒழுங்குபடுத்த புதிய அவதாரத்தின் வருகையின் தொடக்கத்தைக் குறிக்கும் என்று சிலர் கணித்தனர். பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிரபலமான ‘சாமியார்’ சிவசக்தி மிகவும் சக்திவாய்ந்ததாக மாறக்கூடும் என்று எச்சரித்தார். நாள் முன்னேற, உணர்ச்சிவசப்பட்ட விசுவாசிகள் கூட்டு பிரார்த்தனை பாராயணங்களை நடத்தி, வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

பால் குடித்த பிள்ளையார்கள்

இருப்பினும், மாலை நெருங்க நெருங்க சூழல் மாறத் தொடங்கியது. அறிவியலாளர்களிடமும் பகுத்தறிவாளர்களிடமும் இந்த அதிசயத்திற்கு விளக்கங்கள் இருந்தன. இதை முதலில் மதிப்பிட்டது கணித ஆய்வு நிறுவனத்தின் டி.ஜெயராமன். இந்த நிகழ்வு பரப்பிழுவிசை (Surface tension) மற்றும் நுண்துளை விளைவு (Capillary Action) நடவடிக்கையால் நிகழ்ந்தது என அவர் காட்டினார். சிபான் கோட்பாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்சிகள் மூலம் விளக்க அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு கவுன்சிலின் அறிவியலாளர்கள் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களால் அழைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் மத்திய தொழில்நுட்ப அமைச்சர் ஒரு மூத்த அறிவியலாளரை இந்த நிகழ்வை ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். சிலை மீது வைக்கப்படும் பால் எவ்வாறு பீடத்தில் சேகரிக்கப்பட்டு, பள்ளத்தில் பாய்கிறது என்பதை இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் சனல் எடமருகு சிலைகளை நெருக்கமாகக்  காண்பித்தார்; மற்றொரு அறிவியலாளர் கூறுகையில், ஒரிசா கல்லால் செய்யப்பட்டதை விட மகாபலிபுரம் கல்லால் செய்யப்பட்ட சிலைகள் பாலை எளிதில் ஏற்றுக்கொண்டன என்றார். இந்தியா டுடே உளவியலாளர் உதயன் படேலை மேற்கோள் காட்டி: “பால் காணாமல் போன அந்த கணத்தில் மனம் செயல்படுவதை நிறுத்தியது” என்றது.

இருப்பினும், சிலை பாலை இழுத்துக்கொள்வதைப் பக்தர்கள் பார்க்கவில்லை; அது மாலைகள் மற்றும் பூக்களுக்கு அடியில் மறைந்திருந்தது.

பால் அதிசயத்திற்கு மற்றொரு விதை பொருள் இருந்தது. சமகால ஊடகங்கள் முக்கியமான சூழ்நிலையைக் கையாண்ட முன்மாதிரியான முறையை இது எடுத்துக்காட்டுகிறது. சமநிலை உணர்வு மற்றும் மிகவும் சமூக பொறுப்பு இருந்தது. ஜீ நியூஸ் கூட இந்த நிகழ்வின் பின்னால் உள்ள அறிவியலை வலியுறுத்தியது. இன்று போலல்லாமல், துறைசார் அறிவியலாளர்கள் கல்வி சுதந்திரத்தை அனுபவித்தனர், மேலும் ஊடகங்கள் கட்டுப்பாடும் காரணமும் நல்லொழுக்கங்கள் என்று நம்பின. ஊடக உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமலாக்க இயக்குநரக சோதனைகள் மற்றும் பிரதமர் அலுவலகத்தால் நிர்பந்திக்கப்படுவதில் இருந்து விடுபட்டனர். அலுவல்பூர்வ விவரிப்பு இல்லாததால் சமகால ஊடகங்கள் அதிசயத்தின் மாறுபட்ட பரிமாணங்களை முன்வைக்க உதவின.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

இதற்கிடையில், இந்துத்துவ திட்டம் அதன் சொந்த அணிகளில் இருந்து சவால்களை எதிர்கொண்டது. புகழ்பெற்ற மும்பை கணபதி கோயிலில் 20 ஆண்டுகளாக அர்ச்சகராக உள்ள உமேஷ் பட் என்பவரை இந்தியா டுடே மேற்கோளிட்டுள்ளது: “இது என் கோயிலின் சிலையுடன் நடக்கவில்லை. ஆனால் மக்கள் வந்தபோது, ​​என்னால் கோயிலைப் பூட்ட முடியவில்லை.”

மத்திய மும்பையின் சித்திவிநாயகக் கோயிலின் அறங்காவலர் மோகன்தாஸ் மல்யா கூறினார்: “மதியம் 12.30 மணிக்குப் பிறகு தெய்வம் பால் எடுக்க மறுத்துவிட்டது.” மும்பையிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள தில்வாடாவில் உள்ள பிரபலமான கணபதி கோயிலில் உள்ள சிலை இன்னும் குறைவாகவே ஒத்துழைத்தது.

இதற்காக, வி.எச்.பியின் சாமியார்களின் ஒரு விளக்கம் இருந்தது: தெய்வங்கள் உள்ளூர் நாஸ்திக்குகள் (நாத்திகர்கள்; இந்த விஷயத்தில், அவிசுவாசிகள்) மீது கோபத்தை வெளிப்படுத்தினர்.

டெல்லி பங்குச் சந்தையில் ஒரு பிள்ளையார் படம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் வாடிக்கையாளர்கள் வழங்கும் பாலை குடிக்க மறுத்துவிட்டது. பகதூர் ஷா ஜாபர் மார்க்கில் இருந்த பீரே லால் பவனுக்குப் பின்னால் அமைந்த சன்னதியில் உள்ள பிள்ளையார் சிலை பழம் மற்றும் கரும்புச் சாற்றை பால் போல எளிதில் குடித்தது. ஒரு வாரம் கழித்து, செப்டம்பர் 27 அன்று, தி ஸ்டேட்ஸ்மேன் சிங்கப்பூரில் உள்ள கன்னி மேரியின் சிலையும் பாலை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது. செப்டம்பர் 28 ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸில் மும்பையில் இருந்து வந்த ஒரு செய்தியில், காந்தி சிலைக்கு உள்ளூர்வாசிகள் மது கொடுத்தபோது, அது உடனடியாக அருந்தியதாகக் கூறியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.  உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தொழிலாளர்கள் அம்பேத்கர் மற்றும் புத்தரின் சிலைகளுக்கு பால் கொடுக்கத் தொடங்கிய நேரத்தில், எதிர் கதைகளும் செயல்பாட்டில் இருந்தன என்பது தெளிவாகத் தெரிந்தது. இவ்வாறு ஒரு வாரத்திற்குள், ஒரு தெய்வீக அதிசயமாகத் தொடங்கியது நகைச்சுவையாக முடிந்தது.

சங்க பரிவார் உள்ளே புகுதல்

அப்போது, சிபிஐ வழக்குகளில் சிக்கியிருந்த ‘சாமியார்’ சந்திரசாமி, பால் அதிசயம் குறித்து உரிமை கோர முயன்றார். தனது டெல்லி ஆசிரமத்திலிருந்து, அவர் UNI-டம்   “இது தெய்வீக அற்புதங்களின் ஆரம்பம் மட்டுமே.” என்றார். ஆனால் சிலர் அவரை தீவிரமாக எடுத்துக் கொண்டனர். “எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல்” வார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மினா சுவாமிநாதன், ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் மட்டுமே அத்தகைய நடவடிக்கையை துல்லியமாக மேற்கொள்ளும் திறன் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஜான்டேவலன் பூங்காவில் உள்ள ஒரு கோயில் இந்த அதிசயத்தின் மையமாக இருந்தது என்று அப்போதைய நரசிம்மராவ் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சீதாராம் கேசரி உளவு அறிக்கைகளை மேற்கோள் காட்டினார்.  மக்களவைத் தேர்தலில் தவறான வதந்திகளை பரப்புவதன் மூலம் வாக்குகளைப் பெறுவதற்கான பாஜக-வின் சூழ்ச்சி இது என அவர் கூறினார்.

“இந்து மதம் இன்று” இதழ் விவரித்துள்ளபடியான இந்துத்துவ பார்வையின் படி, டெல்லியைச் சேர்ந்த ஒருவரின் கனவில் விநாயகருக்கு தாகம் எடுத்தது. அவர் ஜாண்டேவலன் கோயிலின் பூசாரியை எழுப்பியதைத் தொடர்ந்து அதிசயம் நடந்தது. அருகிலுள்ள பிர்லா மந்திர் பூசாரி, நள்ளிரவில் கோயில் மணிகள் ஒலிப்பது கேட்டதும் அண்டை வீட்டாரிடம் தெரிவித்தார்.

இப்போது பிரபலமான பரிவார் வலைபின்னல்கள் செயல்பாடுகளைக் கையில் எடுத்துக் கொள்ளத் தொடங்கின. தொலைபேசி அழைப்புகள் உலகின் குறுக்கும் நெடுக்குமாகப் போகத் தொடங்கின. அக்டோபர் 1-ம் தேதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு என்.ஆர்.ஐ, அந்த நாளில் மட்டும் இந்தியாவிலிருந்து தொடர்ச்சியாக ஆறு அழைப்புகளைப் பெற்றதாகக் கூறியது.

அனுமன் கண்களில் வடிந்த கண்ணீர்

அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள கோயில்கள்தான் பால் குடிக்கும் அதிசயத்தை முதன் முதலில் அனுபவித்தது என்றால் அது அப்படி இருக்கும்? பல இந்தியர்கள் தங்கள் என்.ஆர்.ஐ நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து இதை முதலில் கேள்விப்பட்டதாகக் கூறினர்.  ஏனென்றால், இந்திய நேரப்படி அதிகாலை 3 மணியளவில், அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள அவர்களது உறவினர் மாலை சடங்குகளுக்காக தங்கள் கோயில்களைத் திறக்கவிருந்தனர். அந்த வகையில் என்.ஆர்.ஐ பக்தர்கள் தங்கள் இந்திய சகோதரர்கள் செய்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே பாலூட்டத் தொடங்கினர். ஆர்.எஸ்.எஸ் பரிவார், தங்களுடன் தொடர்புடைய பதிவுசெய்த அமைப்பான ‘பிஜேபியின் வெளிநாட்டு நண்பர்கள்’ என்ற வலையமைப்பைப் பயன்படுத்தியது. ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் ஆசிரமங்கள் பல வி.எச்.பி. உடன் தொடர்புடையவை, வெளிநாடுகளில் ஏராளமான பக்தர்களைக் கொண்டுள்ளன. உலகெங்கிலும் இந்த ‘அற்புதத்தை’ விரைவாக பரப்புவதில் அவை முக்கிய பங்கு வகித்தன.

கெடுவாய்ப்பாக பரிவாரைப் பொறுத்தவரை, பால் குடிக்கும் வித்தை ஒரு தோல்வியாக முடிந்தது. 1980-களின் நடுப்பகுதியில் ராமாயணம் மற்றும் மகாபாரத தொலைக்காட்சி சீரியல்கள், அயோத்தி கிளர்ச்சி மற்றும் ஷா பானோ வழக்கு போன்று, இந்து நம்பிக்கையை பலப்படுத்துவதற்கான ஒரு அடித்தளமாக இது வடிவமைக்கப்பட்டது. இந்த அதிசயம் இந்து ஆன்மாவின் மீது நீடித்த முத்திரையை பதிக்கும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். வி.எச்.பி தலைவர்கள் வி.எச். டால்மியா மற்றும் கிரிராஜ் கிஷோர் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆண்டு சடங்காக இருக்க விரும்பினர். செப்டம்பர் 21-ம் தேதி கோயில்களிலும் வீடுகளிலும் விளக்கு ஏற்றி விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் இருந்தது. இருப்பினும், மற்ற சிலைகளும் பால் குடிப்பதாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, சிவசக்தியின் ஒளிவட்டம் அதன் பிரகாசத்தை இழந்தது.

பாஜக தலைவர்களும் வி.எச்.பி திட்டத்தை சாதாரணமானதாகவே எடுத்துக்கொண்டனர். அவர்கள் அதை ஒரு பயனுள்ள தேர்தல் தளமாக எடுத்துக்கொள்ளவில்லை. நரசிம்மராவ் அரசாங்கத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தூண்டிவிட்டு பாஜக ஏற்கெனவே வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஆனால் 1996 தேர்தலுக்குப் பிறகு பாஜக பெரும்பான்மை குறைந்ததால், மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை திரட்ட வாஜ்பாய் நினைத்தார். இது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை மென்மையாக முன்னெடுக்க வைத்தது. அதனால்தான் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் பால் அதிசயம் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்தனர். முரளி மனோகர் ஜோஷி ஒரு இயற்பியலாளராக, நுண்துளை வினையே காரணம் என்று கூறினார். பால் தாக்கரே இதை ஒரு ‘ஏமாற்று’ என்று அழைத்தார்.

இவ்வகையில் தான் பெரும் இந்துத்துவத் திட்டம் ஒன்றுமில்லாமல் போனது. 1995-க்குப் பிறகு,  ஆகஸ்ட் 2006, ஜனவரி 2008 மற்றும் செப்டம்பர் 2010-ல் என மேலும் மூன்று பால் அற்புதங்கள் பதிவாகியுள்ளன. மார்ச் 2017-ல், அலகாபாத்தில் மீர்கஞ்சில் ஒரு அனுமன் சிலை கண்ணீர் சிந்தியது, அச்சுறுத்தும் முன் அனுமானங்களுக்கு அடிகோலியது. ஆனால் பின்னர் சிலைக்கு பயன்படுத்தப்பட்ட செந்நிற வர்ணத்தில் மெர்குரியல் அமிலம் கலந்திருந்ததால்தான் கண்ணீர் வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டுரையாளர் : பி.ராமன் , அரசியல் ஆய்வாளர்.
தமிழாக்கம் : அனிதா
நன்றி: த வயர்

 

1 மறுமொழி

  1. எப்படி பால் குடிப்பதை மக்கள் முன் செய்ய முடியும் என் பகுத்தறிவாளர்கள் ஒரு Youtube காணொளியில் பதிவிட்டார்கள். இதற்கு ஒரு Magic Feeder Bottle உள்ளது. அதில் இரு அடுக்குகள் உள்ளதாகவும் சாய்க்கும்போது பால் மறைந்து விடுகிறது என செய்தும் காண்பித்தார்கள். அதன் Link இருந்தால் இக்கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டியது தான். ஆனால், அதுவே மூட நம்பிக்கையாகிவிடக் கூடாது என்பதே நமது தாழ்மையான கருத்து.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க