பொள்ளாச்சியில் பெண்களை ஏமாற்றி வரவைத்தும், கடத்தியும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளியாக எடுத்து மிரட்டி பணம் பறித்துவந்த கொடூரம் 2019-ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது, சேலம் மாவட்டத்தில் மணிகண்டன் என்ற காமவெறியன் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக காணொளி எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் அம்பலமாகியுள்ளது.
குறிப்பாக, வறுமையில் தவிக்கின்ற, கடன் தொல்லையில் அவதியுறுகின்ற, குடும்பத்தைப் பிரிந்து தனியே வசிக்கின்ற, கணவனை இழந்த பெண்களிடம் கடன் வாங்கி தருவதாகவும் உதவி செய்வதாகவும் நயவஞ்சகமாக பேசி ஏமாற்றி அவர்களை மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான். அப்பெண்களை நிர்வாணமாகக் காணொளி எடுத்து மிரட்டி அவர்களை தன் நண்பர்களின் பாலியல் வெறிக்கு பலியாக்கி வந்ததுடன், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி வந்துள்ளான்.
இக்கொடூரம் அவனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூலமாக தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவனது செல்போனில் பல பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட காணொளிகள், பெண்களை நிர்வாணப்படுத்தி எடுக்கப்பட்ட காணொளிகள், ஆபாசப் புகைப்படங்கள் இருந்ததை அப்பெண் அம்பலப்படுத்தியுள்ளார். மணிகண்டன் அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு தொடர்ந்து மிரட்டி வந்ததையடுத்து, அப்பெண் “நியூஸ் தமிழ் 24×7” செய்தியாளரை தொடர்புகொண்டு தனக்கு நடந்த கொடூரத்தை பேட்டியாக அளித்துள்ளார். அதன் பிறகே, மணிகண்டன் போலீசால் கைது செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை, ஏமாற்றுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
பாதிக்கப்பட்ட பெண், மணிகண்டனின் செல்போனில் பல பெண்களின் 8,000-க்கும் மேற்பட்ட ஆபாச காணொளிகள் இருந்ததாக தெரிவித்திருக்கிறார். அக்காணொளிகள் யாவும் கடந்த மூன்றாண்டுகளாக எடுக்கப்பட்டவை என போலீசு தெரிவித்துள்ளது. இவற்றுடன், மணிகண்டன் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவையெல்லாம், இக்கொடூரத்திற்கு பின்னணியில் ஒரு குற்றக் கும்பல் இருந்துகொண்டு மிகவும் நிறுவனமயமான முறையில் இக்குற்றத்தை அரங்கேறி வந்திருப்பதை அம்பலப்படுத்துகிறது.
ஆனால், சேலம் போலீசு, எந்தவிதமான முறையான விசாரணையும் நடத்துவதற்கு முன்பே, இது ஒரு தனிநபர் தனது தனிப்பட்ட உறவுகளைத் தவறாகப் பயன்படுத்தியதுதானே ஒழிய, நிறுவனமயமான குற்றமல்ல என்றும், இதுவரை ஒரு பெண் மட்டுமே புகாரளித்துள்ளதாகவும் மூடிமறைக்கிறது. பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமையின் போதும் இதே போலத்தான் குற்றத்தை மூடிமறைக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட பெண்களை புகாரளிக்க வரவிடாமல் தடுக்கும் வகையிலும் தமிழ்நாடு போலீசு நடந்துகொண்டது.
ஆனால், போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் துணையில்லாமல் இக்குற்ற கும்பலால் இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு துணிவுடன் இக்குற்றத்தில் ஈடுபட்டிருக்க முடியுமா என்ற கேள்வி இதில் இயல்பாக எழுகிறது.
மறுபுறம், இந்தக் காமவெறியன் மணிகண்டன் த.வெ.க. கட்சியில் உறுப்பினராக இருந்துள்ளான். த.வெ.க. கட்சியில் உறுப்பினராக, பொறுப்பில் உள்ள பலர் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், மணிகண்டன் தனது கட்சியின் உறுப்பினரே இல்லையெனக் கூறி த.வெ.க. தப்பிக்க முயல்கிறது.
படிக்க: சிவகங்கை போலீசு முதல் திருவள்ளூர் குழந்தை வரை: தீவிரமடையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்!
மேலும், கடந்த தி.மு.க. ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வந்ததை பிரச்சாரம் செய்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்துகொண்டு முதலமைச்சராகியுள்ள விஜய், இன்று தமிழ்நாட்டில் பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் மீது அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசக் கூட மறுத்து வருகிறார்.
தி.மு.க. ஆதரவாளர்களோ த.வெ.க. ஆட்சியின் மீது குறை கூறுவதற்காக இச்சம்பவங்களை பயன்படுத்திக் கொள்கின்றனரே தவிர பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராடவில்லை. ஆனால், தற்போதைய த.வெ.க-வின் ஆட்சியிலும் முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. “சிங்கப்பெண் அதிரடிப் படை” போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளின் மூலம் த.வெ.க. அரசு பிரச்சினையை மூடிமறைக்கவே முயல்கிறது.
உண்மையில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு ஆபாச இணையதளங்கள் மூலம் பாலியல்வெறியும், கஞ்சா, மது மூலம் போதைவெறியும் அடிப்படை காரணங்களாக உள்ளன. சமூகத்தில் செல்போன் பயன்பாடு பரவலாக்கப்பட்ட பிறகு, சிறுவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவராலும் எளிமையாக ஆபாச இணையதளங்களை அணுக முடிகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சிகளின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் ஆபாச காட்சிகள் மற்றும் ஆபாச பத்திரிகைகள், ஆபாச விளம்பரங்கள் உள்ளிட்டவைகளும் பாலியல் வெறியை சமூகத்தில் விதைக்கின்றன. மேலும், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் பலர் போதைவெறி தலைக்கேறியவர்களாக உள்ளனர்.
அதன் விளைவுதான் குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை ஈடுபடுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஆபாச இணையதளங்களை தடை செய்வதற்கும், கஞ்சா, மது போதைகளை முற்றிலுமாக ஒழிப்பதற்கும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
ஆகவே, மக்கள் போராட்டங்கள் மூலமே ஆபாச இணையதளங்கள், திரைப்படங்களில் ஆபாச காட்சிகள், ஆபாச பத்திரிகைகளை தடை செய்ய முடியும். தமிழ்நாட்டில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த முடியும். போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க முடியும். அதாவது, சமூகத்தில் புகுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பாலியல்வெறி, போதைவெறியை தடுத்து நிறுத்த முடியும். அப்போதே, தமிழ்நாட்டில் பெண்கள் மீது அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த முடியும். பொள்ளாச்சி, சேலம் பாலியல் வன்கொடுமை கொடூரங்களை ஒழித்துக்கட்ட முடியும்.
![]()
பிரவீன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











