23.06.2026

ஓசூர் மக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்!
விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரும் மக்கள்!

பத்திரிக்கை செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தெருவில் நடந்து சென்றவர்கள் மற்றும் டூவீலர்களில் சென்றவர்களை வெறிநாய் துரத்தி துரத்தி கடித்ததில் பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி முல்லை நகர், ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு, ரயில்வே ஸ்டேஷன், ஆர்சி சர்ச் பகுதி மற்றும் ரிங் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் இந்த நாய்கள் நடந்து செல்வோர் மற்றும் டூவீலர்களில் செல்பவர்களை துரத்திச் சென்று கடித்து குதறுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை ஓசூர் நகரில் சாலையில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்றவர்களையும் டூவீலர்களில் சென்றவர்களையும் துரத்தி துரத்தி கடித்து குதறியது. இதில் 12 பேர் காயமடைந்தனர். வெறிநாய் கடித்ததில் 8 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் ஓசூர் பகுதியில் வெறிநாய்க்கடி பாதிப்பு அதிகமாக இருந்தது. ஓசூர் அருகிலுள்ள குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எட்வின் பிரியன் என்கிற இளைஞர், வெறிநாய் கடித்து, ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை 10, 2025 அன்று உயிரிழந்தார்.

மேலும், தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 2.63 லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி ஜூன் 22 அன்றைய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

தொடர் தெருநாய் கடியால் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படுவது, உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்பான செய்திகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், அது குறித்து கடந்த நவம்பர் 7 ஆம் தேதி மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

பள்ளி, மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு அவற்றை மீண்டும் பொது இடங்களில் விடக் கூடாது. அவற்றுக்கென பிரத்யேக காப்பகங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேற்கண்ட உத்தரவை மாநில அரசு செயல்படுத்தியுள்ளதா என்பதை ஆராய உயர்நீதிமன்றம் அண்மையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

ஆனால், நீதிமன்றங்களின் உத்தரவுகள் எல்லாம் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன. வெறிநாய்க்கடி பாதிப்பு அதிகமாக இருக்கும்போது மட்டும் சில நடவடிக்கைகள் எடுப்பதுடன் அரசின் செயல்பாடுகள் நின்று விடுகின்றன. வெறிநாய்களால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருப்பதைத்தான் மேற்கண்ட சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், வெறிநாய்க்கடியை ஒழிக்கவும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் “9 அம்ச செயல்திட்டம்”, “மாநில அளவிலான விரிவான கொள்கை” ஆகியவற்றின் அடிப்படையிலான செயல்பாடுகளின் நிலை குறித்து தற்போதைய த.வெ.க. அரசு விளக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், வெறிநாய்க்கடியை ஒழிக்கவும் விரைவான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகங்களும் தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து, இப்பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் அனைத்து அம்சங்களிலும் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க