அமெரிக்காவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள டிரம்ப்-மஸ்க் தலைமையிலான பாசிச கும்பல் “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” (America First) என்ற பாசிச கொள்கையை முன்வைத்து, உலக நாடுகளின் மீது போர் மற்றும் பொருளாதாரத் தடைகளை திணித்து வருகிறது. இதன் மூலம், சரிந்துவரும் அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கத்தை மீட்பதற்கு முயற்சிக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, கியூபா நாட்டின் மீது மனிதாபிமானமற்ற பொருளாதாரப் போரைத் தொடுத்துள்ளது. எரிபொருள் விநியோகத்தைத் தடுத்து நிறுத்தியும், பொருளாதாரத் தடைகளை விதித்தும் அந்நாட்டில் பொது சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தி வருகிறது.
நெருக்கடியின்
உச்சத்தில் கியூபா
அமெரிக்காவிலிருந்து சுமார் 145 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடுதான் கியூபா. இந்நாடு தனது மின்சார உற்பத்தி, வாகனப் போக்குவரத்து, வீட்டுப் பயன்பாடு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான எரிபொருளில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக இறக்குமதியையே சார்ந்துள்ளது. இதில் பெரும்பகுதி வெனிசுலா, மெக்சிகோ ஆகிய இரு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள எரிபொருள் தேவை கியூபாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சூரிய ஒளி மின்சாரம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஜனவரி 3-ஆம் தேதி வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிறகு, வெனிசுலாவிலிருந்து கியூபாவிற்கான எரிபொருள் விநியோகம் பாசிச அமெரிக்க அரசால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
மேலும், கியூபாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் இறக்குமதி வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனவரி 29 அன்று அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்குக் கியூபா அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று கூறி டிரம்ப் இந்த அடாவடித்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதனால், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கியூபாவிற்கான எரிபொருள் விநியோகம் முடக்கப்பட்டது. இதன் விளைவாக, கியூபாவில் இதுவரை இல்லாத அளவிற்கு எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தைத் தொட்டுள்ளது.
மேலும், நாட்டின் 80 சதவிகித மின் உற்பத்தியானது, வெப்ப மின் நிலையங்கள் (Thermal Power Plants) மற்றும் டீசல், எரிஎண்ணெய் இயந்திரங்களையே சார்ந்துள்ளதால், மின்சாரத் தட்டுப்பாடும் தீவிரமாகியுள்ளது. ஒரு நாளைக்கு 20 முதல் 22 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதால் கியூப மக்கள் மின்சாரமின்றி இருளிலேயே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எரிபொருள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டால் மருத்துவச் சேவைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் அவசரச் சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், 32,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கான 11,000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் உட்பட, ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர் மின்வெட்டு மற்றும் மின் அழுத்த மாறுபாட்டால் இன்குபேட்டர்கள் (Incubators) சேதமடைகின்றன; இதனால், பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் வெண்டிலேட்டர்களைக் (Ventilators) கைகளாலேயே இயக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மருந்து உற்பத்தியும் ஆம்புலன்ஸ் சேவைகளும் பெருமளவில் முடங்கியுள்ளன.
அதேபோல, கியூபாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு பெரும் பொது சுகாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. நாட்டின் தலைநகரான ஹவானாவில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வாகனங்களில் 40 சதவிகிதம் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் நகரின் பொது இடங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதுடன், அவை கொசுக்கள் மற்றும் ஈக்களின் இனப்பெருக்க மையங்களாக மாறியுள்ளன. கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தத் தேவையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், லட்சக்கணக்கான மக்கள் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஏறக்குறைய 10 இலட்சம் மக்கள் குடிநீர் மற்றும் உணவுப் பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர். கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தினால் உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பொதுப் போக்குவரத்து முடங்கியுள்ளதோடு, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் விறகையும் நிலக்கரியையும் பயன்படுத்திச் சமைக்க வேண்டிய நூற்றாண்டுகளுக்கு முந்தைய அவல நிலைக்குக் கியூப மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் முற்றுகையுடன், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கியூபாவிற்கு எதிராக 240-க்கும் மேற்பட்ட புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. குறிப்பாக மே 1-ஆம் தேதி, கியூபா நாட்டுடன் எரிசக்தி, சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படும் அல்லது தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் சொத்துகளை முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் விளைவாக, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கியூபா உடனான தங்கள் வர்த்தக உறவை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. இவையும் கியூபாவின் பொருளாதாரத்தை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளன.
இவ்வாறு, கியூபாவிற்குப் பல வழிகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தி அந்நாட்டைத் தங்களுக்கு அடிபணிய வைக்கும் நோக்கத்திலேயே டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் செயல்பட்டு வருகிறது. அதாவது, ஈரான் நாட்டின் மீது நேரடிப் போரைத் தொடுத்திருக்கும் அமெரிக்கா, கியூபாவின் மீது எரிபொருள் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் மூலம் ஒரு மறைமுகப் பொருளாதாரப் போரைத் தொடுத்துள்ளது.
மேலும், கியூபாவை பணிய வைப்பதற்காக 100 மில்லியன் டாலர் ‘மனிதாபிமான’ நிதியுதவி அளிப்பதாகப் பேரம் பேசுவது; விமானங்கள் மூலம் கியூபாவை உளவு பார்ப்பது; கியூபாவிற்குச் செல்லும் எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்களை அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மூலம் தடுப்பது; கியூபாவின் முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மீது கொலைக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவது; கியூபாவில் உள்ள சீன, ரஷ்ய இராணுவத் தளங்களால் அமெரிக்காவிற்கு ஆபத்து என்று பீதியூட்டுவது என கியூபாவை அடிபணிய வைப்பதற்கான சதித்திட்டங்களை அரங்கேற்றி வருகிறது.
இவ்வாறு, கியூப அரசை ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதும், கியூபாவில் அமெரிக்க மேலாதிக்க நோக்கத்திற்கு உகந்த ஆட்சியை அமைப்பதுமே பாசிச டிரம்பின் இலக்காக உள்ளது.
மேற்கு அரைக்கோளத்தில்
மேலாதிக்கத்தை நிறுவத்துடிக்கும் அமெரிக்கா
கியூபாவில் நிலவி வந்த அமெரிக்காவின் கைக்கூலி ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சி, 1959-ஆம் ஆண்டில் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான ஆயுதக் குழுவினரால் தூக்கியெறியப்பட்டது. அன்றிலிருந்து கியூபாவில் தனக்குச் சாதகமான ஆட்சியை அமைக்க அமெரிக்கா முயன்று வருகிறது. அதற்காக கடந்த 64 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து கியூப அரசிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பல்வேறு புதிய பொருளாதாரத் தடைகளை விதித்து, கியூப ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் அப்போதைய டிரம்ப் அரசு ஈடுபட்டது.
கனடா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளை உள்ளடக்கிய உலகின் மேற்கு அரைக்கோளப் பிராந்தியத்தில் (Western Hemisphere) மன்றோ கோட்பாட்டின் (Monroe Doctrine) அடிப்படையில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே கியூபாவை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை டிரம்ப் அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம், மேற்கு அரைக்கோளத்தில் ரஷ்ய, சீன ஏகாதிபத்திய நாடுகளின் செல்வாக்கை தடுத்து நிறுத்துவது, அப்பிராந்தியத்தில் புதிய செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கி அருமண் தனிமங்களையும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் வளங்களையும் மஸ்க் தலைமையிலான அமெரிக்க கார்ப்பரேட் கும்பல் சூறையாடுவதற்கு வழியேற்படுத்திக் கொடுப்பதே டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பலின் செயல்திட்டமாகும்.
மேலும், வெனிசுலா அதிபர் கடத்தல், கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது, தென் அமெரிக்க நாடுகளில் வலதுசாரி சக்திகள் ஆட்சியைக் கைப்பற்ற உதவுவது, அமெரிக்கா தலைமையில் தென் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைத்து உச்சி மாநாடுகளை நடத்துவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற பாசிச டிரம்பின் நோக்கத்தையே காட்டுகின்றன.
பூகோள ரீதியாக, கியூபா மேற்கு அரைக்கோளப் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. மெக்சிகோ வளைகுடாவையும், அட்லாண்டிக் மற்றும் கரீபியன் கடல்வழிப் பாதைகளையும் இணைக்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு அருகில் கியூபா அமைந்துள்ளது. இது வட மற்றும் தென் அமெரிக்காவிற்கு இடையிலான போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமாகக் கருதப்படுகிறது. மிக முக்கியமாக, மெக்சிகோ வளைகுடாவிலிருந்து பனாமா கால்வாய்க்குச் செல்லும் மிகக் குறுகிய பாதையான “யுகடான் கால்வாய்” (Yucatan Channel) கியூபாவிற்கு மிக அருகில் உள்ளது. இது அமெரிக்க வர்த்தகம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.
முக்கியமாக, கியூபாவும் அதன் மக்களும் நீண்ட காலமாகவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உறுதியாக எதிர்த்து வருகின்றனர். பாசிச டிரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன், ‘சட்டவிரோதக் குடியேறிகள்’ என்ற பெயரில் வெளிநாட்டினரைக் கைது செய்து, போர்க்கைதிகளைப் போல அமெரிக்காவிலிருந்து வெளியேற்றினார். அப்போது, நம் நாட்டு பிரதமர் மோடி போன்று வாய்மூடி அமெரிக்காவிடம் மண்டியிட்டுக் கிடக்காமல், கியூப அரசு தன் நாட்டு மக்களைத் தனி விமானங்கள் மூலம் தாயகத்திற்கு அழைத்து வந்தது. இவ்வாறு பரப்பளவில் சின்னஞ்சிறிய நாடாக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுடன் கியூபா உறுதியாகப் போராடி வருவது டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பலுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலில், கியூபா மற்றும் வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்களை குடியரசுக் கட்சிக்கான பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சதித்திட்டமும் இதில் அடங்கியுள்ளது. அந்த அடிப்படையில்தான், “இந்த ஆண்டு இறுதிக்குள் கியூபாவை அடிபணிய வைப்போம்” என்று குடியரசுக் கட்சியினர் வெளிப்படையாக அறிவித்துச் செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கியூபாவிற்கு எதிரான இந்நடவடிக்கைகளின் மூலம், அமெரிக்காவின் புளோரிடா மற்றும் மியாமி பகுதிகளில் வாழ்ந்து வரும் கியூப-அமெரிக்கர்களின் (கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்த பிறகு, அந்நாட்டிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்த முதலாளிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர்) ஆதரவைத் டிரம்ப் தன்வசப்படுத்தியுள்ளார். டிரம்ப் 2024 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கும் இவர்களின் வாக்குகள் முக்கியப் பங்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் போராட்டங்கள் மூலம்
அமெரிக்காவை அடிபணிய வைப்போம்!
இத்தகைய முற்றுகைப் போரைக் கியூபா எதிர்கொண்டு வருவதை உலக நாடுகள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றன. ரஷ்ய, சீன ஏகாதிபத்தியங்களோ பெயரளவிலான உதவிகளுடன் தங்களை வரம்பிட்டுக் கொண்டுள்ளன. மேற்கு அரைக்கோளப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் அமெரிக்காவின் பொருளாதார மிரட்டலுக்குப் பணிந்து கியூபாவிற்கு உதவ மறுக்கின்றன. அமெரிக்க அடிமையான இந்திய மோடி அரசு அமெரிக்காவின் அடாவடித்தனத்திற்கு எதிராக பெயரளவிற்குக் கூடத் தன் கண்டனத்தைப் பதிவு செய்யவில்லை.
அதேசமயம், பெல்ஜியம், ஸ்பெயின், பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கியூபாவிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவதுடன் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கியூப மக்களும் அமெரிக்காவிற்கு அடிபணிய மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். குறிப்பாக, மார்ச் 21-ஆம் தேதி பல நாடுகளைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்களும் தன்னார்வலர்களும் உணவு, மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை மீறிக் கியூபாவிற்குச் சென்றுள்ளனர்.
இப்போராட்டங்கள் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் உலக மக்களுக்குப் பெரும் நம்பிக்கையூட்டுகின்றன. மக்கள் போராட்டங்கள் மூலமே கியூபா மீதான பொருளாதாரப் போரைத் தடுத்து, போர்வெறி பிடித்த அமெரிக்காவை அடிபணிய வைக்க முடியும் என்பதை உறுதி செய்கின்றன.
ஆகவே, “போர்வெறி பிடித்த அமெரிக்காவே, கியூபா மீதான மனிதாபிமானமற்ற பொருளாதாரப் போரை நிறுத்து!”, “உலக நாடுகளே, எரிபொருள், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கியூபாவிற்கு உடனே கொண்டு சேருங்கள்!” ஆகிய முழக்கங்களை முன்வைத்து, உலகெங்கும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்களே கியூபா மீதான டிரம்ப் – மஸ்க் பாசிச கும்பலின் மனிதாபிமானமற்ற பொருளாதாரப் போரை முடிவுக்குக் கொண்டுவரும்.
![]()
சிவராமன்
(புதிய ஜனநாயகம் – ஜூன் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











