இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டிற்குள்ளாக கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை 300% அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கிறது இந்திய அரசாங்க அறிக்கை.
2017 மற்றும் 2018 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கண்டறியப்பட்ட புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட சுமார் 3 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்கிறது அந்த அறிக்கை. இது மிகவும் கவலைக்குரிய செய்தி. இந்த எண்ணிக்கை அதிகரிப்பில் நம் உறவினர்களோ, நண்பர்களோ இருக்கக்கூடும் அல்லது விரைவில் இணையக் கூடும் என்பதே இது குறித்த அரசின் மெத்தனப் போக்கிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. மக்களின் வாழ்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வருவதுதான் புற்றுநோய் அதிகரிப்பிற்கு பிரதான காரணமாகின்றது.
2018-ம் ஆண்டில், மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவ, சுகாதார நிலையங்களில், பரிசோதனை மேற்கொண்ட 6.5 கோடி மக்களில் சுமார் 1,60,000 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாய், மார்பக, கருப்பை வாய் புற்றுநோயாளிகளே இதில் பெரும்பாலானோர் ஆவர். புற்றுநோய் கண்டுபிடிப்புக் கருவிகளின் நவீனமயமாக்கல் இந்த எண்ணிக்கை அதிகரிப்பை வெளிக்கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கிறது.
குடி, புகைப்பழக்கம், ஊட்டச்சத்து பற்றாக்குறையினால்தான் புற்றுநோய் அதிகரித்து வருகிறது என்று இந்திய சுகாதார அமைச்சகமே ஒப்புக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் புற்றுநோயாளிகள் அதிகரித்து வரும் நாடுகளில் இந்தியா ஏறக்குறைய முதலிடத்தைப் பிடித்துவிட்டது எனலாம். இப்போது இருக்கும் தரவுகளின் படி, மக்கள் தொகைப் பெருக்கத்தின் அடிப்படையில், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், புற்றுநோய் விகிதம் குறைவாக இருப்பது போலத் தோற்றம் அளிக்கிறது.
படிக்க:
♦ களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ !
♦ இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ?
ஆனால் எதார்த்தத்தில் புற்றுநோய் மருத்துவர்கள் பற்றாக்குறையும், அரசின் புள்ளிவிவரங்களில் குறைபாடுகளும் நிலவுவதால், புற்றுநோய் பாதிப்புக்குள்ளான பல இலட்சம் மக்களின் எண்ணிக்கை கணக்கில் காட்டாமலேயே விடப்படுகிறது. இவ்வாறு கணக்கில் காட்டாமல் விடப்பட்டவர்களின் ஒரு பகுதியினர்தான் தற்போது கண்டறியப்பட்டிருக்கின்றனர்.
தலித்துகள், ஏழைகள் அதிகம் வாழும் பகுதிகளில் போதுமான சுகாதார வசதிகளை மேற்கொள்ளாதது, அரசே புகை மற்றும் மதுப் பழக்கத்தை ஊக்குவிப்பது, மருத்துவம் தனியார்மயமாதல் என தொடர்ந்து பெருவாரியான மக்களை நோயின் கொடுமையை நோக்கித் தள்ளுகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.
வரதன்
நன்றி : ஆர்.டி