டந்த வாரம் டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியர்கள் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், “பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வு தன்மையுடையதாக மாற்ற வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் இந்தி மொழியைப் பரப்ப முடியாது. ஒன்றிய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அமித்ஷா பேசி இருப்பது இந்திய இறையான்மையை குழிதோண்டி புதைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வேலையில் பா.ஜ.க தொடர்ந்து செய்கிறது. இந்தி பேசும் மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமித்ஷா நினைக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
படிக்க :
இந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !
சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !
கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்தி மொழி திணிப்பை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையும் சிதைக்கும் முயற்சி என்று கூறியுள்ளார்.  இதேபோல் கர்நாடகா எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடகா எம்.பி ஜெய்ராம் ரமேஷ், தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமராவ் போன்ற அரசியல் கட்சி தலைவர்களும் இந்தி மொழி திணிப்பிற்கான அமித்ஷாவின் பேச்சுக்கு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்தி மொழி குறித்து அமித்ஷாவின் பேச்சு பற்றிய பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் தான் என்று கூறியுள்ளார். இதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ், “இந்தி கற்றுக்கொள்வதில் பிரச்சினை இல்லை. அதை யார் சொல்கிறார்கள் என்பதும், `ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே மதம்’ என்ற அவர்களின் சித்தாந்தம் தான் இங்கு பிரச்சினை. அதனால்தான் அதை எதிர்க்கிறேன். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மொழியும் இங்கு தனித்துவமானது அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தாய் மொழி வாழும். அதிகமான மக்கள் இந்தி பேசுவதால் இந்தியா முழுவதும் அதை பேசவேண்டியக் கட்டாயமில்லை. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளது. எனவே எந்த மொழி தேவைப்படுகிறதோ அதைக் கற்றுக் கொள்வோம். நான் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை அணிய வேண்டும், எந்த மதத்தை சார்ந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
000
hindi-amit-shah-sliderமத்தியில் ஆட்சி செய்யும்போதும் இந்தியை முதலில் நேரடியாக திணித்த காங்கிரஸ் கட்சி, தமிழக மக்களின் கடுமையான எதிர்பின் காரணமாக மறைமுகமாக இந்தியின் ஆதிக்கத்தை திணித்து கொண்டு வந்தது. ஆனால், 2014–ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாசிச பா.ஜ.க சமஸ்கிருதம், இந்தி மொழிகளை காங்கிரஸ் கட்சியைவிட நேரடியாகவும் தீவிரமாகவும் திணித்து வருகிறது. அந்த வகையில் புதிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாயம், மத்திய அரசின் திட்டத்தின் பெயரை இந்தி மொழியில் மட்டும் வைப்பது, மத்திய அரசு போட்டி தேர்வுகளை இந்தி மொழியில் நடத்துவது போன்ற பல்வேறு வழிகளில் இந்தியின் ஆதிக்கத்தை இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் மீது திணிப்பதை செயல்படுத்தி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் போன்ற காவி பாசிஸ்டுகள் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியை இந்தியாவின் மொழியாக மாற்ற வேண்டும் என்று நேரடியாக பேசுவது மட்டும்மல்ல; அதை நிகழ்ச்சி நிரலுக்கும் கொண்டு வந்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு இந்தி மொழியை இந்தியாவின் மொழியாக மாற்ற வேண்டும் என்று அமித்ஷா கூறினார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி இருந்த போதிலும் காவி பரிவாரங்கள் தனது இந்தி மொழி செயலூக்கத்தை வேகப்படுத்தியே வருகின்றனர்.
பெட்ரோல், டீசல், மருந்து பொருள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வை மறைப்பதற்காகவும், மக்களை அந்த பிரச்சினையில் இருந்து திசைதிருப்புவதற்காகவும்தான் அமித்ஷா தற்போது இந்தி மொழியை பற்றி பேசுகிறார் என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அமித்ஷா இவ்வாறு பேசியது விலைவாசி உயர்வில் இருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்புவது என்பது ஒரு அம்சமாக இருந்தாலும் அதுவே முழுகாரணமும் அல்ல.
படிக்க :
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் ஃபேஸ்புக் !
குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
2024-க்குள் இந்தியாவை, இந்து – இந்தி – இந்தியா என்ற இல்லக்கை கொண்ட இந்துராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்பதுதான் இந்துத்துவ பாசிஸ்டுகளின் நோக்கம். அதற்காக முஸ்லீம்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிகளாக மாற்றுவது, தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழித்து ஒற்றை மொழி, பண்பாடு, கலாச்சாரமாக மாற்றுவதும்தான் இவர்களின் நோக்கம். அதற்காகதான் சிறுபான்மையினர், தலித்துக்களை ஒடுக்குவது, இந்தி மொழியை கட்டாயமாக்கி பிற தேசிய இன மொழிகளை அழிப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறது.
000
உலகில் இதுவரை பல ஆயிரம் மொழிகள் தோன்றி இருக்கிறது. அழிந்தும் இருக்கிறது. இந்தியாவில் கடந்த காலங்களில் பாலி மொழி போன்ற பல மொழிகள் தலைசிறந்து விளங்கி இருக்கிறது. தற்போது அந்த மொழிகள் எல்லாம் அழிந்து வழக்கொழிந்து போய்விட்டன.
ஒரு இனத்தையும் அவர்களின் பண்பாடு கலாச்சாரத்தையும் அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும். ஒரு மொழியை அழித்தால் அந்த தேசிய இனத்தை அழித்து விடலாம் என்பது வரலாறு மட்டுமல்ல உண்மையும் கூட. அந்த கேடு கெட்ட செயலை செய்வதற்குதான் இந்தி மொழி திணிப்பை கையிலெயெடுத்திருக்கிறது காவிக் கும்பல்.
இந்தியாவில் பார்ப்பனிய பண்பாடு, கலாச்சாரத்தை உள்ளடக்கிய இந்துராஷ்டிரத்தை நிறுவ அனைத்து வழிகளிலும் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவி பாசிஸ்டுகளின் நோக்கத்தை முறியடிக்காவிட்டால் பல்வேறு மொழிகளும், தேசிய இனங்களும் அழிந்துபோகும்.
வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க