சொமாட்டோ-வின் வாடிக்கையாளர் ஒருவர், தமிழ் பேசும் வாடிக்கையாளர் சேவை அதிகாரி இல்லையா எனக் கேட்டதற்கு, இந்தி தான் நமது தேசிய மொழி என்று ஒரு சொமாட்டோ ஊழியர் பேசியதையொட்டி, சொமாட்டோவிற்கு எதிராக சமூக வலைத் தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதற்கான விளக்கத்தை தமிழில் தருகிறேன் என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதியதை “கூகுள் டிரான்ஸ்லேட்” பயன்படுத்தி மொழி ‘பெயர்த்து’ மன்னிப்பு கேட்டது அந்நிறுவனம். சிறிது நேரத்திலேயே சகிப்புத் தன்மை நமக்குக் குறைவாக இருப்பதாக பாடம் எடுத்தார் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.
பங்குச் சந்தையில் சொமாட்டோவின் பங்கு மதிப்பும் சரிந்தது. இது பிற தனியார் நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம். ஆனால், ஒன்றிய மோடி அரசு, தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்துத் துறைகளிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியை திணித்து வருகிறது.
அரசு பொதுத்துறை வங்கிகளான எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சலான் எழுதப்பட்டிருப்பது துவங்கி, ரயில்வே நிலையத்தில் தமிழ் தெரியாத அலுவலர்கள் அமர்ந்து கொண்டு ஆங்கிலம் தெரியாத சாதாரண மக்களை வதைப்பது வரை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
படிக்க :
இந்தித் திணிப்பு : பிரிவினைவாதி மோடி !
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் ஃபேஸ்புக் !
கர்நாடக மாநிலத்தில் சமீப காலகட்டத்தில் இதனால் நிகழ்ந்த சில நிகழ்வுகளை நியூஸ்மினிட் இணையதளம் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. கீழே விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்துமே தமிழகத்திலும் எங்கோ ஒரு மூலையில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள்தான்.
000
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், பாண்டவபுரா எனும் இடத்தில் மளிகைக் கடை நடத்துபவர் 68 வயதான மாதப்பா. இவர் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடை திறக்க முடியாததால், செலவுகள் அதிகரித்து தன் கையில் வைத்திருந்த சேமிப்பு தொகையையும் இழந்துவிட்டார். எனவே, தனது வாழ்நாள் சேமிப்பில் எஞ்சியிருக்கும், தன் வைப்புத் தொகையை, திரும்பிப்பெற தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு கடந்த அக்டோபர் 2020-ல் சென்றார். ஆனால், கடந்த காலங்களில் அவருக்கு வழக்கமாக பணம் எடுத்து தர உதவிய அதிகாரி ஆறு மாதத்திற்கு முன்பே வேறு இடத்திற்கு பணி மாற்றப்பட்டுவிட்டார்.
எனவே, இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசும் மற்றொரு அதிகாரியிடம் பேசும் படி, மாதப்பா-விடம் கூறியுள்ளனர் வங்கி ஊழியர்கள். ஆனால், அந்த அதிகாரிக்கு கன்னடம் தெரியாது. வங்கியில் குறைவான ஊழியர்களே இருக்கிறார்கள் என்பதால் மாதப்பாவிற்கு உதவி செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. அடுத்த நாள் மீண்டும் வங்கிக்கு மாதப்பா சென்றபோது அதே நிலைதான் இருந்தது. நான்கு முயற்சிக்கு பிறகு மைசூரில் இருந்த தனது மருமகனை உதவுமாறு கேட்டார் மாதப்பா.
குறிப்பாக கர்நாடக கிராமங்களில் இதுபோன்ற மொழிப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. சிக்கபள்ளாப்பூர் அருகே வசிக்கும் எம்.ஆர்.லோகேஷ் தனது மொபைல் எண்ணை தனது வங்கி கணக்கில் இணைக்க கன்னடத்தில் கடிதம் எழுதி வங்கியில் கொடுத்துள்ளார். ஆனால், வங்கியில் உள்ள அதிகாரி இந்தியில், “இது என்னவென்று எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார். தனக்கு கன்னடம் தெரியாததால் வங்கி மேலாளரை அனுக சொன்னார். அவரை மூன்று முறை வங்கிக்குச் சென்று எனது கோரிக்கையைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது என்கிறார் லோகேஷ்.
000
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) என்பது நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓர் அரசு நிறுவனமாகும். 2014-ம் ஆண்டிற்கு பிறகு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வேலைக்கு சேருபவர்களுக்கான ஆரம்ப தேர்வுகளை நடத்தியது. 2019-ம் ஆண்டில் கிராமப்புற மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாளர்களுக்கான ஆரம்பத் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று IBPS அறிவித்தது.
ஆட்சேர்ப்புக் கொள்கை மாற்றப்பட்டதன் காரணமாக உள்ளூர் பணியாளர்கள் 90% பேர் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். மேலும், இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கிறார்கள்; அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி மட்டுமே தெரிந்த வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். வங்கியில் பணம் போடுவதற்கும் எடுப்பதற்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வாடிக்கையாளர்களை இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்டு பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 30-ம் தேதிதான் 13 பிராந்திய மொழிகளில் வங்கிப் பணியாளர் தேர்வுகள் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் நேரடியாக மக்களுடன் தொடர்பு கொள்ளும் அரசு, தனியார் ஊழியர்கள் அனைவரும் அந்தந்த மாநிலத்தின் மொழியை பேசவும் புரிந்து கொள்ளவும் அறிந்தவர்களாக இருப்பது கட்டாயம் என்பதை உறுதிபடுத்தப்பட வேண்டும். இதனை தமிழ்நாடு அரசும் முன்னெடுக்க வேண்டும்.
மொழி வெறுப்பு இருக்கக் கூடாது என்பது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு முக்கியத்துவத்தோடு இந்தித் திணிப்பையும் நாம் எதிர்க்க வேண்டும். ஆதிக்கம் எந்த வகையிலும் அனுமதிக்கப்படக் கூடாது. மொழி திணிப்பை எதிர்க்கத் தவறுவது என்பது நம்மை ஆதிக்கத்திடம் சரணடையச் செய்வதாகும். இந்தித் திணிப்பிற்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் துவங்கப்பட வேண்டும்.

சந்துரு
செய்தி ஆதாரம் : நியூஸ் மினிட்