எச்சரிக்கையுடன் எவர் கவனத்தையும் ஈர்க்காதபடி அச்சு ஊடகத்தில் ஓர் ஓரத்திலும் காட்சி ஊடகத்தில் சட்டென்று மறையும் வகையிலும் இந்தியாவில் பெய்த ஆலங்கட்டி மழை குறித்தான செய்திகள் கடந்த மாதத்தில் பதிவாகின. ஆனால், வழக்கத்திற்கு மாறாக பெய்த இந்த ஆலங்கட்டி மழையினால் விவசாயிகள், மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இந்தியா முழுவதும் மார்ச் 16 முதல் 30 வரை தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் பல இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.
அருணாச்சல பிரதேசத்தின் பந்தர்தேவா பகுதியில் மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையால் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்திலுள்ள மச்சபூர் கிராமத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் அப்பகுதியின் மாந்தோப்பு மற்றும் சோயாபீன் பயிர்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன.
தமிழ்நாட்டில் மதுரை, சேலம், தென்காசி, கோயம்புத்தூர், ஓசூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் சுமார் 850 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நாசமாகியுள்ளன. குறிப்பாக மதுரையில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் ஆலங்கட்டி மழையாலும், பலத்த காற்றாலும் நிலத்தில் சாய்ந்தன. ஓசூருக்கு அருகில் உள்ள தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் மற்றும் பூச்செடி நாற்றுகள் ஆலங்கட்டி மழையினால் நசுங்கி அழிந்தன.
கோவை மாவட்டம் அன்னூர், சரவணம்பட்டி, சூலூர் ஆகிய பகுதிகளில் பயிர்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, அன்னூர் வட்டத்தில் மட்டும் சுமார் 15,000 ஏக்கர் விளைநிலங்கள் இம்மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. பயிரிட்டிருந்த வாழை மரங்கள், பாக்கு மரங்கள் நாசமடைந்துள்ளன. இரண்டு நாட்களில் வெட்ட காத்திருந்த வாழைத்தார்கள் ஆலங்கட்டியால் முற்றிலும் நாசமடைந்திருப்பதாகவும் தங்கள் வாழ்நாளில் இவ்வாறான பாதிப்பை சந்தித்ததில்லை எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இவையில்லாமல், கோடைக்கால விளைச்சலை எதிர்நோக்கியிருந்த தர்பூசணி, தென்னை மற்றும் தக்காளி பயிர்களும் நாசமாகியிருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆலங்கட்டி மழையால் மிகக் கடுமையான பாதிப்புகளை கோவை மாவட்டம் சந்தித்துள்ளது.
பொதுவாக வட இந்தியாவில்தான், குறிப்பாக மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநில விவசாயிகள்தான் ஆலங்கட்டி மழையால் பயிர் நாசத்தையும் அதன் விளைவாக வருமான இழப்பு, கடன் சுமை போன்ற நெருக்கடிகளையும் சந்தித்து வந்தனர். இந்த நெருக்கடியை தற்போது தமிழ்நாடு விவசாயிகளும் சந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
அதேபோல், நிலத்தில் விழுந்த ஆலங்கட்டிகள் அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரத்திற்குள் உருகிவிடும். ஆனால், தமிழ்நாட்டில் கோவை போன்ற பகுதிகளில் பெய்த ஆலங்கட்டிகள் 38 மணி நேரத்திற்கும் மேலாக உருகாமல் நிலத்திலேயே கிடந்தது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குதான் காலநிலை மாற்றம் (Climate Change) என்ற அபாயம் முக்கியத்துவம் பெறுகிறது.
இலாபவெறிப்பிடித்த ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பின் கட்டற்ற இயற்கைவளச் சுரண்டல் காரணமாக புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றம் என்பது இயல்பான வானிலை நிகழ்வுகளை அசாதாரணமானதாகவும், இயல்புக்கு மாறான பேரிடர்களாகவும் மாற்றி வருகிறது. நூற்றாண்டுகளுக்கு ஓரிரு முறை நிகழ்ந்துவந்த பேரிடர்கள் இனி அடிக்கடி நிகழும் என்ற “புதிய இயல்பு நிலை” உருவாகியிருக்கிறது.
ஆலங்கட்டி மழையும்
காலநிலை மாற்றமும்
வெப்பச் சலனம் காரணமாக மேகங்களுக்குள் வீசும் பலமான மேலேற்ற காற்று (Updrafts), நீர்த்துளிகளை வளிமண்டலத்தின் 0 டிகிரிக்கு (உறை நிலை) குறைவான குளிர் நிலவும் பகுதிகளுக்குத் தூக்கிச் செல்கிறது. இவ்வாறு தொடர்ச்சியாக காற்று நீர்த்துளிகளை தூக்கிச் செல்லும்போது ஒரு கட்டத்தில் அவை உறைந்து அளவில் பெரிதாகி, எடை காரணமாக கீழே விழுகின்றன. இதைத்தான் ஆலங்கட்டி மழை என்கிறோம். ஆனால், காலநிலை மாற்றம் இந்த ஆலங்கட்டி மழையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
பூமியின் வளிமண்டலத்தில் மிக உயரத்தில் “ஜெட் காற்றோட்டம்” (Jet Streams) என்ற ஒரு வேகமான காற்று வீசும். ஒரு ரயில் பாதை போல நேராகச் செல்லக்கூடிய இக்காற்றோட்டம் காலநிலை மாற்றத்தால் வழக்கமான பாதையிலிருந்து விலகி “அலை அலையாக” (Wavy or U-shaped) மாறுகின்றன. இதனால், “மேலைநாட்டு இடையூறுகள்” (Western Disturbances – மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து கிளம்பிவரும் ஒரு வகையான ஈரப்பதமான காற்று) தெற்கு நோக்கித் தள்ளப்பட்டு, தமிழ்நாடு போன்ற தாழ்ந்த அட்சரேகை பகுதிகளிலும் கடுமையான ஆலங்கட்டி மழையை உருவாக்குகிறது.

அதேபோல், வழக்கமாக இந்த மேலைநாட்டு இடையூறுகள் வளைந்த சுழற்சி வடிவத்தைக் கொண்டிருக்கும். ஆனால் இம்முறை, ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரை சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு நேர்க்கோட்டு காற்றழுத்த மண்டலமாக (Linear Trough) உருவெடுத்தது. ஒரு சிறிய வாளியில் தண்ணீர் ஊற்றுவதற்கும், ஒரு நீண்ட குழாய் (Pipe) வழியாகத் தண்ணீர் பாய்ச்சுவதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா? அதுபோலத்தான் இந்த நேர்க்கோடு அமைப்பு, குறுகிய நேரத்தில் அதிக மழையைக் கொட்டச் செய்துள்ளது.
மேலும், வழக்கமாக இந்த மேலைநாட்டு இடையூறுகள் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர் காலத்தில்தான் தீவிரமாக இருக்கும். மார்ச் மாத இறுதியில் இவை படிப்படியாக வலுவிழந்துவிடும். ஆனால், “சூப்பர் எல் நினோ” (Super El Nino – பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் அதீத வெப்பம்) காரணமாக, கோடை காலம் தொடங்கும் ஏப்ரல் மாதத்திலும் இவை நீடிக்கின்றன.
அதேபோல், ஆலங்கட்டிகள் 38 மணி நேரத்திற்கும் மேலாக உருகாமல் இருந்தது வளிமண்டலத்தில் நிலவும் “அதிதீவிரக் குளிர்” நிலையை (Super – cooled stage) உணர்த்துகிறது.
மேலும், வெப்பமயமாதல் காரணமாக வளிமண்டலத்தின் 0 டிகிரி செல்சியஸ் உயர எல்லை (Freezing Level) தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, மேலேற்றக் காற்றிலும் மாற்றம் ஏற்படுகிறது. இது ஆலங்கட்டிகள் அளவில் பெரியதாக உருவாவதற்கு வித்திடும். இவ்வாறு உருவாகும் ஆலங்கட்டிகள் நிலத்தை வந்தடையும் போது அளவில் பெரியதாகவும் அதிக அழிவை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். இதனால் வீடுகளின் கூரைகள் உடைவது, பயிர்கள் நாசமடைவது, கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் கூட காயங்கள் ஏற்படுவது போன்ற அபாயம் உள்ளது.
முன்பெல்லாம் ஆலங்கட்டி மழை என்பது அரிதான, அழகான நிகழ்வு. இனி அது பயிர்களையும் வீடுகளையும் சேதப்படுத்தும் ஒரு இயற்கைப் பேரிடராக மாறப்போகிறது. ஆலங்கட்டிகள் சிறிய கட்டிகளாக விழுந்த காலம் போய், இனி பெரிய பாறைகளாக விழும் அபாயம் காத்திருக்கிறது.
சூழலியல் நெருக்கடியை தீவிரப்படுத்தும்
பாசிச மோடி அரசு
காலநிலை மாற்றம் என்பது வெறுமனே பூமியின் வெப்பம் அதிகரிப்பது மட்டுமல்ல; அது இயற்கையின் சுழற்சியையே தலைகீழாக மாற்றுகிறது என்பதை இந்த சமீபத்திய ஆலங்கட்டி மழை உணர்த்துகிறது.
ஆனால், இவ்வாறான காலநிலை மாற்ற பேரிடர்களால் அதிகம் பாதிப்படைவது விளிம்புநிலை மக்களே ஆவர். அதிலும் விவசாயிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. தற்போது பெய்த ஆலங்கட்டி மழையினால் கூட அதிகளவு பாதிப்பை சந்தித்தது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளே ஆவர்.
காரணம், பெருமளவு இந்திய விவசாயம் இன்னும் சிறு நிலப்பரப்பில் துண்டுத் துண்டான அளவிலேயே நடைபெறுகிறது; பருவத்தை எதிர்பார்த்தே விதைக்கப்படுகின்றன; கடன் வாங்கியே விவசாயம் நடைபெறுகிறது. சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்குத் தேவையான காப்பீடு, மானியம் அரசால் வழங்கப்படுவதில்லை. பேரிடர்கள் ஏற்படும்போது நாசமடைந்த பயிர்களுக்கான உரிய இழப்பீடுகளை விவசாயிகள் பெறுவது என்பது முடியாத காரியம். அற்பத் தொகையை நிவாரணம் என்ற பெயரில் கொடுத்துவிட்டு கைகழுவி விடுவதையே அரசுகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
இந்நிலையில், அந்த அற்பத் தொகையை கொடுப்பதிலிருந்தும் அரசு விலகிக்கொண்டு மக்களை தனியார்-கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனங்களிடமும் அதிகார வர்க்கத்திடமும் தாரைவார்ப்பதற்காக “பேரிடர் மேலாண்மை (திருத்த) சட்டம் 2025”-ஐ மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. இச்சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது சட்டப்பூர்வ உரிமை என்பது பறிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சட்டத்தின்படி, தேசிய மற்றும் மாநில அளவில் “பேரிடர் தரவுத்தளம்” உருவாக்கப்பட்டு, இதில் மக்களின் சொத்து விவரங்கள், இடர் மதிப்பீடு ஆகிய தரவுகள் சேகரிக்கப்படும். இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகள் தனியார்-கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படும். இதன் மூலம், பேரிடர் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் அதிக “பிரீமியம்” வசூலிக்கும் வேலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபடும்.
அதாவது, அரசு வழங்கும் நேரடி நிவாரணத்தைக் குறைத்துவிட்டு, தேசிய பேரிடர் காப்பீட்டு நிதி மூலம் மக்களைத் காப்பீட்டு நிறுவனங்களை நோக்கித் தள்ளுவதே பாசிச மோடி அரசின் சதித்திட்டம். மக்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ உரிமையான நிவாரணம், இப்போது மக்கள் முன்கூட்டியே பிரீமியம் கட்டிப் பெறும் காப்பீட்டு ஒப்பந்தமாக மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகளாலும் ஏழைகளாலும் அதிக பிரீமியம் கட்ட முடியாது. பேரிடர் வந்தால், ‘இது கடவுளின் செயல்’ என்று கூறி காப்பீட்டு நிறுவனங்கள் நட்ட ஈட்டைத் தட்டிக் கழிக்கும். இது மக்களை மேலும் வறுமையில் தள்ளும்.
இயற்கைப் பேரிடர்கள் புதிய இயல்பு நிலையாகியுள்ள சூழலில் மோடி அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியது ஏழை எளிய மக்கள், சிறு குறு, நடுத்தர விவசாயிகள் மீது தொடுக்கப்படும் பாசிச தாக்குதலே ஆகும்.
அதேபோல், நவம்பர் 2025-இல் “இந்தியத் தர நிர்ணய அமைப்பு” (BIS) நிலநடுக்க மண்டல வகைப்பாட்டில் கொண்டுவந்த புதிய தரநிலைகளை பாசிச மோடி அரசு கடந்த மார்ச் மாதத்தில் திடீரென ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய 1983 தரநிலையே தொடரும் என அறிவித்துள்ளது.
2025 நவம்பரில் பி.ஐ.எஸ். வெளியிட்ட புதிய தரநிலையின்படி, இந்திய நிலநடுக்க வரைபடத்தில் “மண்டலம் 6” (Zone 6) என்ற மிக ஆபத்தான புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இமயமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகள் அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டன. இதனால், இப்பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்கள் நிலநடுக்கத்தின் போது சிதையாமல் இருக்கும் வகையில் வலிமையான கட்டுமானப் பொருட்கள் மூலம் கட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
இப்புதிய விதிகளால் கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் தனியார்-கார்ப்பரேட் கட்டுமான நிறுவனங்களும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் இப்புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபம் குறைவதை பொறுத்துக்கொள்ள முடியாத மோடி கும்பல் உடனடியாக இவ்விதிகளை இரத்துச் செய்திருக்கிறது. டெல்லி போன்ற நகரங்களில் ஏற்கெனவே 80 சதவிகித கட்டடங்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பு விதிகளையே பின்பற்றப்படாத நிலையில், புதிய மேம்படுத்தப்பட்ட விதிகளைத் திரும்பப் பெறுவது மக்களின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
ஒருபுறம், வன (பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2023, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023, அந்தமான் நிக்கோபார் மெகா திட்டம் என பல்வேறு சட்டத்திட்டங்கள் மூலம் இந்தியாவின் இயற்கை வளங்களைக் கார்ப்பரேட் வேட்டைக்கு பாசிச மோடி அரசு திறந்துவிடுகிறது. மறுபுறம், இத்தகைய தீவிரமான இயற்கைவள சூறையாடல் காரணமாக உருவாகியிருக்கும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு பதிலாக அவர்களை மேலும் சுரண்டிக்கொழுப்பதற்கு கார்ப்பரேட்டுகளுக்கு பாதை அமைத்துக் கொடுக்கிறது. சூழலியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகிறது. இலாபவெறி பிடித்த ஏகாதிபத்திய முதலாளித்துவமும் பாசிச அரசும் ஒன்றிணைந்து உழைக்கும் மக்கள் மீது தொடுத்துள்ள போராகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் போரில் நமது நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் அடுத்த தலைமுறையையும் இயற்கையையும் காக்க வேண்டிய கடமை நமது கைகளில் உள்ளது.
![]()
கவின்
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











