1985 சென்னை துப்பாக்கிச்சூடு | வழக்குரைஞர் லிங்கன் நேர்காணல்

மெரினாவை அழகுபடுத்தும் திட்டத்தை எதிர்க்கும் மக்களை ஒடுக்கவே அங்கு காவல் நிலையம் அமைத்திருக்கிறார்கள் என்பது பின்னர்தான் புரியவருகிறது. மீனவ நண்பனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடைபெற்ற இந்த கோரசம்பவம் மீனவர்கள் மத்தியில் ஒரு ஆறாவடுவாக இன்றுவரை நீடிக்கிறது.

1970-களின் இறுதியில், உலக வங்கி நகர கட்டமைப்புகளுக்காக நிதி அளிக்கத் தொடங்கியிருந்தது. உலக வங்கி தேர்ந்தெடுத்திருந்த நகரங்களின் பட்டியலில் சென்னையும் இடம்பெற்றிருந்தது. 1973-ம் ஆண்டு, உலக வங்கியின் ஒரு குழு, சென்னை, கல்கத்தா முதலான இந்திய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பெரும் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக சென்னை இருக்கும் எனத் தேர்வு செய்திருந்தது.

முதல் மெட்ராஸ் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (Madras Urban Development Project – I) என்ற பெயரில் உலக வங்கியின் நிதியுதவி சென்னையை வந்தடையத் தொடங்கியது. 1977-ம் ஆண்டு, 62 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்தது உலக வங்கி. இரண்டாவது மெட்ராஸ் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் 1980 முதல் 1988 வரை, உலக வங்கியால் தமிழ்நாடு அரசுக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்கப்பட்டன. சென்னையின் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இந்த நிதியைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டன.

இந்தக் காலகட்டத்தில் சென்னை முழுவதும் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் காலிசெய்யப்பட்டு, நகரத்துக்கு வெளியே குடி வைக்கப்பட்டனர். 1985-ம் ஆண்டு, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தை எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. அரசின் மொழியில், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது என்பதற்கு, பாரம்பர்ய மீனவர்களைக் கடற்கரையைவிட்டு அப்புறப்படுவது என்று பொருள்.

நன்றி: விகடன்

***

எம்.ஜி.ஆர் அரசாங்கம் எவ்வாறு மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் எனும் பெயரில் மீனவர்களை அப்புறப்படுத்த முயன்றது என்பது குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்தும் வழக்குரைஞர் லிங்கன் அவர்கள் விரிவாக அளித்த நேர்காணலை வினவு செய்திப்பிரிவின் சார்பாக தொகுத்து வெளியிடுகிறோம். (வழக்குரைஞர் லிங்கன் அவர்கள் புயலைக் கிளப்பும் ஒக்கிப்புயல் விவாதங்கள்!, மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும் முதலான மீனவர் பிரச்சினைகள் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்)

மெரினா கடற்கரையை அழகு படுத்துவதாக 1985-ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர் அரசு முடிவு செய்தது. அண்ணா சதுக்கம் முதல் கலங்கரைவிளக்கம் வரையுள்ள பகுதிகளில் கட்டுமரங்களை நிறுத்தவோ வலைகளை காய வைக்கவோ அனுமதிக்கப் போவதில்லை என்று முடிவு செய்தது.

1985-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மீனவர்கள் கட்டுமரங்கள் மற்றும் படகுகளை கடற்கரையில் நிறுத்தக்கூடாது, வலைகளை உலரவைக்கக்கூடாது என்று அரசாங்கம் திடீரென்று அறிவிக்கின்றது. இந்த முடிவின் அடிப்படையில் 1985-ஆம் ஆண்டு நவம்பர் 3-அன்று கட்டுமரங்களை, வலைகளை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பது குறித்து ஒரு  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அப்போதைய தலைமை செயலாளர் டி.வி.அந்தோணி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கட்டுமரங்களையும் வலைகளையும் எப்படி அப்புறப்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டது.

மறுநாள் காலை நவம்பர் 4-ஆம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில்  சீரணி அரங்குக்கும் கலங்கரை விளக்கத்திற்கும் இடையே உள்ள கட்டுமரங்களை அப்புறப்படுத்தினர். சீரணி, ஓளவையார் சிலை, ஐஸ் ஹவுஸ் ஆகிய பகுதிகளில் மாட்டாங்குப்பம், நடுக்குப்பம்,  அயோத்தியா குப்பம்  முதலிய பகுதிகளைச் சேர்ந்த கட்டுமரங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அங்கு இருந்த படகுகளை அப்புறப்படுத்த 10,000 போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். போலீசு மூலம் 150 லாரிகளின் உதவியோடு கட்டுமரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

அன்று மாலை 4 மணிக்கு அயோத்தியா குப்பத்தில் மீனவர்கள் கூட்டம் நடத்தி போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். அதற்கு மறுநாள், அதாவது நவம்பர் 5-ஆம் தேதியன்று காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமான சென்னை எழிலகத்தில் மீனவர்கள் கட்டுமரத்தை திருப்பி தர வேண்டியும், மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டியும் கொட்டும் மழையில் உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம்  நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் மீனவர் சார்பாக மண்டல் குழுவில் தலைவர் சி.சுப்ரமணியம் ரிட் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பினர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, அவ்வழக்கை நீதிபதி  மோகனுக்கு ஒதுக்கினார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டபின்பு வழக்கை நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டது.


படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்?


நவம்பர் 6-ஆம் தேதி அன்று சென்னை தலைமை செயலக அலுவலகத்தில் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக மீனவர்கள் சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனையெடுத்து, காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அன்னம்மாள் என்ற பெண்மணி உயிரிழக்கிறார். அந்த உண்ணாவிரத போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி கலந்துகொள்கிறார். படகுகளைத் திருப்பித்தரவில்லை என்றால் நவம்பர் 8-அன்று எதிர்க்கட்சிகளோடு கூட்டம் நடத்தி போராட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

நவம்பர் 7-ஆம் தேதி அயோத்தியாகுப்பத்தில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் அருகில் வந்துக்கொண்டிருந்த போது காவல்துறை தடுக்கிறது. தடுப்பை மீறி வழக்கு விசாரணை நடத்த தாமதம் செய்யும் உயர்நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கு மதியம் 12 மணிவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதற்கான காரணமாக விசாரிக்க வேண்டிய தலைமை நீதிபதி விடுமுறை மற்றும் அரசு எதிர் மனுத்தாக்கல் செய்ததுள்ளது ஆகியவை முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டம் கோட்டையை நோக்கி திரும்பியபோது மீனவர் கோதண்டராமன் மண்ணணெய் ஊற்றி தீக்குளித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நவம்பர் 9-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

சுமார் நான்கு மணி நேரம் கொட்டும் மழையில் கட்டுமரத்தை திருப்பி தரக்கோரியும்,கோதாண்டராமன் மறைவுக்காகவும்  மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தை அகில இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் சுப்ரமணியம் தலைமையேற்று நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு இடையில், மீனவர் சார்பாக நவம்பர் 13-ஆம் தேதியன்று  பிரதமரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு அகில இந்திய மீனவர் சங்கத்தின் பொது செயலாளர் காளப்பன் தந்தியின் மூலம் ரிட் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பினர். அந்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


படிக்க: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக! மக்கள் அதிகாரம்


நவம்பர் 5-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நவம்பர் 14-அன்று நீதிபதிகள் டி.என் தங்கவேலு மற்றும் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மீனவர் சார்பாக வழக்கறிஞர் பி.ஆர்.செல்வராஜ் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.காந்தியும், அரசு தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியும் ஆஜராகினர்; ஆனால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையில் இரண்டு வாரம் அமைதியாக இருந்த சூழலில்  டிசம்பர் 4-ஆவது தேதி புதன்கிழமை நடுக்குப்பம், மெரினா காவல்நிலையம், காமராஜர் சாலை, குடிசை மாற்று வாரியம் ஆகிய இடங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. போலீசார் 17 ரவுண்டு சுட்டனர். அதில் சேகர், அயோத்திக்குப்பத்தை சேர்ந்த துலுக்காணம், சேகர், மனோகர், நொச்சிக்குப்பத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை என ஐந்து மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்; 19 பேர் காயமடைந்தனர். மீனவர்கள் மீது 8 வழக்குகள் பதியப்பட்டு 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்த அதே நாளில்தான் உச்சநீதிமன்றத்தில் சின்னப்ப ரெட்டி-பாலகிருஷ்ண ஏராடி-காலித் அடங்கிய அமர்வு கட்டுமரங்களை மீனவர்களிடம் ஓப்படைப்பதற்கும், முன்பு போல் மீன் பிடிக்க அனுமதிப்பதற்கும் இடைக்கால உத்தரவை வழங்கியது.

டிசம்பர் 5-ஆம் தேதி அன்று வழங்கப்பட்ட மற்றொரு தீர்ப்பில் மீனவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட கட்டுமரங்கள், வல்லங்கள், வலைகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற துணைபதிவளாரின் மேற்பார்வையில் அது நடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாவட்ட ஆட்சியர், உயர்நீதிமன்ற துணைபதிவளார் முன்னிலையில் மீனவர்களிடம் அவர்களுடைய வலைகள், வல்லங்கள், கட்டுமரங்கள் ஒப்படைக்கப்பட்டன.

டிசம்பர் 6 அன்று துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆரம்பாக்கம், எண்ணூர், பழவேற்காடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் மக்கள் கறுப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். டிசம்பர் 7 அன்று துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலை மாட்டுவண்டியில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

டிசம்பர் 9-ஆம் தேதி அன்று தஞ்சை, நாகை மாவட்டங்களில் துப்பாக்கி சூட்டை கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அதே நாளில்  திருவல்லிக்கேணியில் தோழமை கட்சிகளுடன் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. டிசம்பர் 10 அன்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை நீட்டித்தது.

கலங்கரைவிளக்கம் பகுதிக்கு பாதுகாப்பு வழங்கவேண்டி புறக்காவல் நிலையம் (outpost) அமைக்கத்தான் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக அங்கு காவல் நிலையமே (police station) அமைக்கப்படுகிறது. துணை ஆணையராக இருந்த தேவாரம் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஆணையராக நியமிக்கப்படுகிறார். மெரினாவை அழகுபடுத்தும் திட்டத்தை எதிர்க்கும் மக்களை ஒடுக்கவே அங்கு காவல் நிலையம் அமைத்திருக்கிறார்கள் என்பது பின்னர்தான் புரியவருகிறது. துப்பாக்கி சூடு மீனவர்களை கடலில் இருந்து அந்நியப்படுத்தியது.

– வழக்குரைஞர் லிங்கன்

***

மீனவ நண்பனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடைபெற்ற இந்த கோரசம்பவம் மீனவர்கள் மத்தியில் ஒரு ஆறாவடுவாக இன்றுவரை நீடிக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க