ண்ணூர், சென்னை பெருநகருக்கு 20 கிலோமீட்டர் (12 மைல்) தூரத்தில், கொசஸ்தலையாறு, வங்காள விரிகுடா, சிற்றோடை சூழ அமைந்திருக்கிறது.
சென்னையை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்து, தண்ணீரையும் வழங்குவதால் எண்ணூர் சிற்றோடை மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. கடல் நீரில் இருந்து உள்ளூர் நீர்நிலைகளை இந்த சிற்றோடை பிரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், நல்ல நீரில், உப்பு நீர் புகாமல் இருக்க தடுப்பாகவும் செயல்படுகிறது.

எண்ணூர் கடல் அருகே காணப்படும் அனல்மின் நிலைய கோபுரங்கள். “முன்னொரு காலத்தில் ஏராளமான மீன்களைப் பிடிப்போம். வஞ்சரம், வவ்வால், தூண்டில், பாறை, காரை போன்ற பல வகையான மீன்கள் பிடிப்போம். ஆனால் அந்த நிலைமை இப்பொழுது இல்லை” என்கிறார் நெட்டுக்குப்பம் மீனவ நலவாரியத்தைச் சேர்ந்த ராஜி .

இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடத்தில்தான் கடந்த 20 ஆண்டுகளாக, வடசென்னை அனல்மின் நிலையம், இ.ஐ.டி பாரி (EID parry), கோரமண்டல் சிமெண்ட் மற்றும் கோத்தாரி உரக் கம்பெனி போன்ற தொழிற்சாலைகள் வேகமாக முளைத்தன. மேற்கூறிய தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகளால் எண்ணூர் சிற்றோடை பெரிதும் நஞ்சாகியுள்ளது.

நிலக்கரி ஆலையிலிருந்து வெளியேறும் வெப்பமான, மாசுபட்ட நீரைப் போலவே, அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பலும் சிற்றோடையில் கொட்டப்படுகிறது. இந்த தொழிற்சாலைகள், சிற்றோடையை சாம்பல் கொட்டும் குப்பைத் தொட்டியாக மாற்றிவிட்டதால், சுற்றுச்சூழலும் மீனவர்களின் வாழ்க்கையும் பெரிதும் பாதுப்பிற்குள்ளாகியுள்ளன.

சாம்பலை சட்டவிரோதமாக கொட்டுவதை அனல்மின் நிலையம் நிறுத்தாவிட்டால், மின் நிலையத்தை மூட வேண்டும் என இரண்டாண்டுகளுக்கு முன்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எண்ணூர் சிற்றோடையும், கடலும் சந்திக்கும் இடத்தில்தான் நிலக்கரி ஆலையிலிருந்து சாம்பல் கொட்டப்படுகிறது. மேலும், இங்கு கொட்டப்படும் சுடுநீரால் மீன்களின் இனப்பெருக்கத்திற்கும், சுவாசிப்பதற்கும் தேவையான வெப்பநிலை மாற்றம் அடைகிறது.

தொழிற்சாலைகளால் பறிக்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்ப்பதில்லை. கடலுக்கு மிக அருகிலேயே வாழ்ந்தாலும் தங்களால் மீன் பிடி தொழிலை செய்ய முடிவதில்லை என்றும் தங்களது குடும்பத்தை பராமரிக்க முடிவதில்லை” என்றும் மீனவர்கள் கூறுகிறார்கள்.

ஆலையில் இருந்து வெளியாகும் கழிவுநீர், சுற்றுச்சூழலை பாதிப்பது மட்டுமல்லாமல், எண்ணூர் மக்களின் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.

“ஆண்கள் மீன் பிடித்து கரைக்கு திரும்புகையில் நாங்கள் வலையைப் பிரித்து மீன்களை வகைப் பிரிப்போம். பின்னர் கூட்டாக சேர்ந்து மீன்களை சுத்தம் செய்வோம். ஆனால், இன்று மீன்பிடி தொழில் இல்லை; எங்களுக்கு வேறு எந்த வேலையும் கிடைக்கவில்லை. முன்னெல்லாம், கடற்கரையிலேயே வலையை விரித்து மீன் பிடிப்போம். ஆனால் இப்பொழுது அப்படியில்லை” என்கிறார் வெண்ணிலா.

மீன்பிடி தொழிலை சார்ந்திருக்கும் சின்னராஜா (வயது 55), தனது குடும்பத்தின் பசியை போக்க முடியவில்லை என வருத்தப்படுகிறார். அவர், “நீங்களே பாருங்கள் அந்த ஆலையில் இருந்து அமோனியா வெளியாகி, நீரில் கலக்கிறது. இந்த நச்சுப்பட்ட நீரில் எப்படி மீன்கள் வளரும். அதையும் மீறி வளர்கின்ற மீன்களின் சுவையும் இந்த அமோனியாவால் மாறிபோய்விட்டது. இப்படி நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. நாங்கள் எங்கள் வாழ்வதாரத்தையே இழந்துவிட்டோம்” என்கிறார்.

“எங்கள் பகுதியில் முதல்முதலில் வந்த தொழிற்சாலையால் எங்கள் ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. ஆனால் தற்போது வேலை இல்லை. எங்கள் நெட்டுக்குப்பம் பகுதியில் 100 இளைஞர்களுக்கு மேல் படித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் வேலையில்லை” என்கிறார் ராஜி.

மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆலைகளில் இருந்து தீப்பொறி கலவை, காற்றோடு காற்றாக கலக்கிறது. “யாராலும் இங்கு வசிக்க முடியாது. இந்த நச்சு கலந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு பல் பிரச்சினை உள்ளது. மேலும், இந்த தண்ணீருக்குள் கால்களை வைத்து சிறிது நேரம் நின்றாலே, கால்கள் உப்பிவிடும். இப்படியிருக்கையில், மீன்கள் எப்படி வாழும்?” என்கிறார் ராஜி.

சிவப்புப் புழுக்களை சட்டவிரோதமாக வேட்டையாடுவதும் ஒருவகையில் மீன்கள் வளருவதற்கு தடையாக உள்ளது. மீன்களுக்கு உணவாக இருக்கும் சிவப்புப் புழுக்கள், தினசரி 500 கிலோகிராம் வேட்டையாடப்பட்டு, இறால் வளர்ப்புப் பண்ணைக்காக மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது என்கிறார் ராஜி. “இது குறித்து நாங்கள் வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். ஆனால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் கொண்டு, இதை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்” என்கிறார் அவர்.

இப்பகுதியில் நில அரிப்பு பிரச்சினையால், மீனவர்களின் வீடுகள் இடிந்து விழுகின்ற சூழல் உள்ளது. “சுனாமியாலும், சமீபத்தில் வந்த சூறாவளியாலும் நாங்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளானோம். கடற்கரையைச் சுற்றியிருப்பதால், எப்போது என்ன ஆகும் என்ற பயம் இருந்துக் கொண்டே இருக்கிறது” என்கிறார் வெண்ணிலா.

படிக்க:
சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு
♦ பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு !

“கார்ப்பரேட் சமூக கடமை என்ற பெயரில் மீனவர்களுக்கு பாத்திரங்கள், ஐஸ் பெட்டி, டீசல் படகுகளுக்கு இன்ஜின் முதலியவற்றைக் கொடுக்கிறார்கள். ஆனால் அவை எதும் மீனவர்களுக்கு வந்து சேருவதில்லை” என்கிறார் மகாலட்சுமி.

ராஜி, “அந்த நிதியும் மீன்வளத்துறையிடம் இருந்து வருவதுதான், ஆனால் எங்கள் கைகளுக்கு அந்த தொகை சேருவதில்லை.” என்கிறார்.

தனது சிறு வயதை நினைவுக்கூறும் மகாலட்சுமி, “முன்னெல்லாம், 20-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக சென்று மீன்பிடித்து வந்து, கைநிறைய மீன்களை கொடுப்பார்கள். இங்கு பக்கத்தில் வயதான பாட்டி ஒருவர் கடை வைத்திருப்பார். அவரிடம் நாங்கள் மீன்களை கொடுத்துவிட்டு, கொட்டாங்குச்சி அல்வாவும், வேகவைத்த மரவள்ளிக்கிழங்கும் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இப்பொழுது நாங்கள், 200 – 300 ரூபாய் கொடுத்து மீன் வாங்குகிறோம். நிலைமை பெரிதும் மாறிவிட்டது” என்கிறார் அவர்.

நிலக்கரி சாம்பலில் ஆர்செனிக், போரான், காட்மியம் போன்ற கன உலோகங்கள் உள்ளன. அவை மீன்களுக்குள் செல்வதால், இனப்பெருக்கம் செய்யும் திறன் மீன்களுக்கு குன்றிவிடுகிறது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆற்றின் வாயிலிலிருந்து சாம்பலை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தூர்வாரும் இயந்திரம் வாங்கப்பட்டது. “தூர்வாருவதற்கு பத்து ஆட்கள் நியமிக்கப்பட்டனர். எங்களை சமாளிக்கும் பொருட்டு அந்த இயந்திரத்தை ஒருமுறை மட்டுமே இயக்கினார்கள். மறுநாளில் இருந்து அவர்கள் அங்கே எந்த வேலையையும் செய்யாமல் சிலைப் போல் அமர்ந்திருப்பார்கள்” என்கிறார் ராஜி.

சிமெண்ட் தொழிற்சாலைக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தார், பெயர் சொல்ல விரும்பாத 60 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர். அவர், “தொழிற்சாலைக்கு அடியில் இருக்கும் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாததாகிவிட்டது. அங்கு அவர்கள் தண்ணீர் குழாயையும், உள்ளூர் மக்களுக்காக சிறிய கிளீனிக் ஒன்றையும் கட்டியுள்ளனர். அந்த கிளீனிக்குக்கு சிகிச்சைக்காக வரும் உள்ளூர் மக்களிடமிருந்து பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுவார்கள். நாங்கள் அந்த மருத்துவரை பத்து ரூபாய் டாக்டர் என்றுதான் அழைப்போம்” என்கிறார்.

“ஆலையில் இருந்து வெளியாகும் அமோனியாவால், என் கணவர் கடுமையான மூச்சு திணறலாலும், என் பேரக்குழந்தை தோல் பிரச்சினையாலும் மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் இருவரும் இப்பொழுது என்னுடன் இல்லை” என்கிறார் கண்ணில் பெருகும் கண்ணீரைத் துடைத்தபடியே.

“நாங்கள், ராயபுரம் சந்தையில் இருந்து மீன்களை வாங்கி வந்து அதன் விலையில் இருந்து மூன்று மடங்கு விலையை கூட்டி விற்கிறோம். எங்களது அவல நிலையை பாருங்கள். நாங்கள் மீனவர்கள் ஆனால் எங்களால் தினசரி மீன்கள் சாப்பிட முடிவதில்லை. அதேபோல், 15 வருடங்களுக்கு முன்பு நாங்கள் பார்த்த மீன்கள் தற்போது இல்லை. சில மீன் வகைகளை நாங்கள் மறந்தேவிட்டோம். முன்பு உப்பு தேய்த்த மீன்களே மிக சுவையாக இருக்கும். ஆனால், இப்பொழுது அப்படி இல்லை” என்கிறார் வெண்ணிலா.

நெட்டுக்குப்பம் பகுதி மீனவர்கள் போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்கிறார்கள். “கழிவு நீரை திறந்துவிடுகின்ற இடத்தில் கருப்புக் கொடியை கட்ட திட்டமிட்டுள்ளோம். ஆனால், எங்களுக்கு காவல்துறையினரின் அனுமதி வேண்டும். இதைமட்டும் செய்துவிட்டோமானால், அதிகாரிகள் எங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்கிறார் ராஜி நம்பிக்கையுடன்.


கட்டுரை, படங்கள் : சாரதா பாலசுப்பிரமணியன்
தமிழில் : ஷர்மி
நன்றிஅல்ஜசீரா. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க