டந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி ஷாகின் பாகில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது கபில் குஜ்ஜார் எனும் இந்துத்துவக் கிரிமினல் ”ஜெய் ஸ்ரீராம்” என கத்திக்கொண்டே துப்பாக்கிச்சூடு நடத்தியது நினைவிருக்கலாம். போராட்டக்காரர்களை பயமுறுத்தவே துப்பாக்கியால் சுட்டதாகக் கூறிய கபில் குஜ்ஜார், இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டில் வாழ முடியும் என்றும் வன்மத்துடன் கூறினான்.

துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குஜ்ஜாரைக் கைது செய்த டெல்லி போலீசு, விரைவில் பிணையில் விடுவித்தது. டெல்லியில் சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக புனையப்பட்ட வழக்குகளில், ஆதாரமே இல்லாமல் சிறையில் மாதக்கணக்கில் இருக்கும் உமர் காலித் போன்றவர்களுக்கு பிணை கொடுக்காத நீதிமன்றமும் போலீசும் துப்பாக்கியால் சுட்டு, கொலை மிரட்டல் விடுத்ததோடு, மதரீதியான வன்மத்தைக் கக்கிய கபில் குஜ்ஜாருக்கு உடனடியாக பிணை கிடைத்திருக்கிறது.

படிக்க :
♦ 2020 : ஊடகத்துறையினர் மீது அதிகரித்த கொலைவெறித் தாக்குதல்கள்
♦ கேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்

கபில் குஜ்ஜாருக்கு பிணை வழங்கியதோடு மட்டுமல்லாமல், அவருடைய மதவாத வெறியூட்டும் செயலுக்கு பரிசு தரும் வகையில், பாஜக அவரை தனது கட்சியில் இணைத்துக்கொண்டது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி, இதுகுறித்து கபில் குஜ்ஜார் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.  உடனே தங்களை உத்தமர்களின் கட்சி எனக் காட்டிக்கொள்ள டெல்லி பாஜக, கபில் குஜ்ஜாரை தமது கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக அவசர அவசரமாக அறிவித்தது.

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் வலுப்பெற்று வரும்நிலையில், போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பாஜக-வில் இணைத்துக்கொண்ட நடவடிக்கை, தங்களைப்பற்றிய தப்பெண்ணத்தை மேலும் அதிகரிக்கும் என நினைத்த பாஜக, கபில் குஜ்ஜாரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது.

 “கட்சி என்னை என்ன செய்யச் சொல்கிறதோ அதைச் செய்வேன். எனது போராட்டம் இந்துத்துவாவுக்காக…; அதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். நான் கட்சிக்காக உழைப்பேன். அவர்கள் என்னை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்கிறார்களா இல்லையா என்பது பொருட்டில்லை. என்னுடைய சித்தாந்தம் பாஜகவுடன் ஒத்துப்போகிறது. நாங்கள் இந்துத்துவாவின் ஆதரவாளர்கள்” என டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கபில் கூறியிருக்கிறான்.

ஆகவே கபில் குஜ்ஜார் நேரடியாக கட்சிப் பணி செய்யாவிட்டாலும் சங்க பரிவாரத்தின் ஏதோ ஒரு பிரிவில் மதவாத அரசியலை தொடர எந்த தடையும் இருக்கப் போவதில்லை.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கலவரக்காரர்கள், குற்றவாளிகள், பாலியல் வல்லுறவு குற்றவாளிகள், ரவுடிகளை வரவேற்று உபசரிக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சியாக மட்டுமே இருக்கும். இன்று கலவரம் செய்தால், நாளை பாஜகவில் பதவி நிச்சயம்!

கலைமதி
செய்தி ஆதாரம்: டைம்ஸ் நவ்