லகம் முழுவதும் 2020-ல் குறைந்தது 50 ஊடகத்துறையினர் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் ஒழுங்கமைந்த குற்றங்கள் (organized crime), ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு குறித்து ஆய்வு செய்யும் போது கொலை செய்யப்பட்டதாக ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி வரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters Without Borders) நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் களச்செய்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சற்றேக் குறைந்திருப்பதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில்  53 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.

மேலும், 2020 ஆம் ஆண்டில் போர் நடக்காத இடங்களில் 68 விழுக்காட்டினர் கொல்லப்பட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது.  2016 லிருந்து 10 ல் நான்கு பேர் மட்டுமே போர் நடக்காத சூழலில் கொலை செய்யப்பட்டதிலிருந்து இந்த போக்கு புதியதாக இருக்கிறது.  2019 ம் ஆண்டின் 63 விழுக்காட்டை ஒப்பிடும் போது, 2020 ல் 84 விழுக்காடு ஊடகவியலாளர்கள் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர்.

படிக்க:
மெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் !
♦ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !

தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தியாளர் ஜூலியோ வால்டிவியா

மெக்ஸிகோ வழக்கம் போல ஊடகத்துறையினருக்கு கொலைகளமாக இருக்கிறது. அங்கு, குறைந்தது 8 ஊடகத்துறையினராவது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைந்த குற்றங்கள் அதிகமாக நடக்கும் அங்கு ஒருப்பகுதியில், 2020,  செப்டம்பர் மாதத்தில், செய்தியாளர் ஜூலியோ வால்டிவியாவின் (Julio Valdivia) தலையற்ற உடல்  கண்டெடுக்கப்பட்டது.  .

“போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்த துணியும் ஊடகவியலாளர்கள் காட்டுமிராண்டித்தனமான கொலைகளின் இலக்குகளாகத் தொடர்கின்றனர்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

ஈராக்கில் 6 ஊடகத்துறையினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், இஸ்லாமிய அரசு (Islamic State) மற்றும் பிற ஆயுதக்குழுக்கள் பற்றிய முன்னணி நிபுணரான ஹிஷாம் அல்-ஹாஷிமி (Hisham al-Hashimi) அவரது பாக்தாத் வீட்டிற்கு வெளியே ஜூலை மாதம்  சுட்டுக் கொல்லப்பட்டார்.

புலனாய்வு ஊடகவியலாளா்கள் கொலை செய்யப்படும் போக்கு அதிகரித்துள்ளது என்று எல்லைகளற்ற செய்தியாளர்கள் குழு கூறுகிறது. இதில் 4 நபர்கள் ஒழுங்கமைந்த குற்றக்குழுக்களை ஆய்வு செய்து கொண்டிருந்தவர்கள்.  10 நபர்கள் ஊழல் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து ஆய்வு செய்தவர்கள். 3 நபர்கள் சட்டவிரோத சுரங்க மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்தவர்கள்.50

உள்நாட்டு போராட்டங்களும் கூட ஊடகத்துறையினருக்கு ஆபத்தானதாக இருந்தது என்பதை ஆய்வு காட்டுகிறது. போராட்டங்களைப் பதிவு செய்யும் போது, நான்கு பேர் ஈராக்கிலும், இரண்டு பேர் நைஜீரியாவிலும், கொலம்பியாவில் ஒருவரும் என ஏழு ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்டனர் என்று எல்லைகளற்ற செய்தியாளர்கள் குழு  கூறியிருக்கிறது.

படிக்க:
காஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது !
♦ காஷ்மீரின் ஊடகங்களை ஒடுக்கும் மோடி அரசு !

அமெரிக்க கருப்பின ஜார்ஜ் ஃபிலாய்ட் நிறவெறி படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டங்களின் போதும், ஃப்ரான்ஸின் சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போதும், அவற்றை பதிவு செய்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது.

சீன நீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜாங் ஜான்.

கொரோணா நோய்த்தொற்று குறித்து செய்திகள் வெளியிட்ட  ஊடகத்துறையினரை பல்வேறு அரசாங்கங்கள் முடக்கியிருக்கின்றன.  வூஹான் கொரோணா நோய்த்தொற்று குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளார் ஜாங் ஜானுக்கு சீன நீதிமன்றம் ஒன்று 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோணா நோய்த்தொற்றுக் குறித்து செய்தி வெளியிட்ட குறைந்தது 57 ஊடகத்துறையினர் மீது கைது நடவடிக்கை,  முதல் தகவலறிக்கை, தாக்குதல்கள், வீட்டின் மீது தாக்குதல்கள் நடைபெற்றிருப்பதாக ரைட்ஸ் அண்ட் ரிஸ்க்ஸ் அனாலிசிஸ் குரூப் (RRAG) கூறியிருக்கிறது. குறிப்பாக, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ”சிறைக்குப் பின்னால் : இந்தியா 2010-2020, ஊடகத்துறையினர் கைது மற்றும் தடுப்புக்காவல்” என்று தலைப்பில் சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது.

உலகின் பல்வேறு அரசாங்கங்கள் தங்களது மக்கள் விரோத போக்குகளை அம்பலப்படுத்தும் செய்தியாளர்கள் மீது எப்படியெல்லாம் குறி வைத்து அடக்குமுறைகளை ஏவுகிறார்கள் என்பதை சமீபத்தில் அல் ஜசீரா செய்தியாளர்களின் கைப்பேசிகளை சவுதி மற்றும் யூ.ஏ.இ அரசுகள் உளவு பார்த்ததை சிட்டிசன் ஆய்வகம் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசும் தன் பங்கிற்கு 121 செயற்பாட்டாளார்களை உளவு பார்த்தது.

ஒழுங்கமைந்த குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் அரசாங்கங்கள் கூட தம்முடைய மக்கள் விரோத செயல்கள் பொதுமக்களிடம் அம்பலப்படுவது கண்டு அச்சப்படுகின்றனர். நேர்மையான ஊடகத்துறையினரை கொலை செய்தோ, சிறைப்படுத்தியோ, தாக்கியோ அச்சுறுத்துவதன் மூலம் உண்மையை மக்களிடமிருந்து தற்காலிகமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.


சுரேஷ்
நன்றி :  அல்ஜசீரா, திவயர், நியூஇண்டியன்எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க