காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிக வாசகர்களைக் கொண்ட “கிரேட்டர் காஷ்மீர்”’ நாளிதழுக்கு அளிக்கப்பட்டு வந்த காஷ்மீர் அரசின் விளம்பரங்கள் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. காஷ்மீர் போராட்டங்களின் வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறு நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே மத்திய அரசின் விளம்பரங்கள் மற்றும் காட்சிப்பூர்வ விளம்பர இயக்குநரகம் கடந்த 2008-ம் ஆண்டிலேயே இந்த நாளிதழை கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது. மேலும் “காஷ்மீர் ரீடர்” என்ற நாளிதழுக்கும் காஷ்மீர் அரசின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்ட 2016-ம் ஆண்டு காலகட்டத்தில் 3 மாதங்களுக்கு அப்போதைய பிடிபி, பாஜக கூட்டு அரசாங்கத்தால் இந்த நாளிதழ் தடை செய்யப்பட்டது.

ஏன் இந்த நடவடிக்கை? அதுவும் இப்போது ஏன் இந்த நடவடிக்கை ? விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதாக எவ்வித அலுவலகரீதியான அதிகாரப்பூர்வ ஆணைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதற்கான காரணம் தொடர்பாக மாநில அரசு அதிகாரிகளிடம் கேட்கப்பட்டபோது, “மேலிருந்து வந்த வழிகாட்டுதல்” என இந்திய அரசாங்கத்தைக் குறிப்பிடுகின்றனர். ஆளுநர் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் மாநிலம், மைய அரசாலேயே ஆளப்படுகிறது.

கடந்த அக்டோபர் 18, 2017 அன்று மெஹ்பூபா முஃப்தியின் அரசாங்கத்திற்கு இந்திய உள்துறை அமைச்சகம் எழுதிய ஒரு கடிதத்தை ஆளுநர் நிர்வாகம் காலங்கடந்து தற்போது அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், அந்த கடிதத்தின் உள்ளடக்கத்தைத் தாம் கண்டதாகக் கூறியிருக்கிறது. அக்கடிதத்தில் உள்துறை அமைச்சகம் சில நாளிதழ்களைக் குறிப்பிட்டு, அவை “தீவிரவாதிகளையும் தேச விரோத சக்திகளையும் உயர்த்திப் பிடிக்கும் விதமான” தீவிரமான உள்ளடக்கங்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவை இந்தியா மற்றும் ஜம்மு காஷ்மீரின் அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த வகையான பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் அளிப்பதன் மூலம் ஆதரவளித்து வருவதிலிருந்து விலகிக் கொள்ளுமாறு மாநில அரசாங்கத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

“தீவிரவாதிகளையும், தேச விரோத சக்திகளையும் உயர்த்திப்பிடித்தல்” என்பதற்கான விளக்கத்தை அளிப்பதிலோ அல்லது ஒரு நாளிதழிடம் ஏன் அதற்கு விளம்பரங்கள் கொடுக்கப்படமாட்டது என்பது குறித்து விளக்கம் அளிப்பதிலோ சர்வாதிகார ஆட்சிக்கான அடையாளங்களைக் கொண்டுள்ள ஒரு அரசாங்கம் ஆர்வம் காட்டப் போவதில்லை. இருப்பினும் உள்துறை அமைச்சகத்தின் கடிதம் வந்து ஒரு ஆண்டிற்குப் பின்னர் மாநில அரசாங்கம் ஏன் இம்முடிவை இந்நேரத்தில் எடுத்திருக்கிறது என்பதை, விளம்பர இருட்டடிப்பு செய்யப்பட்ட நாளைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் விளக்குகின்றன.

படிக்க:
♦ மீடியாவை மிரட்டும் மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்
♦ காஷ்மீர் : கொல்லப்பட்டவர்களை இழிவுபடுத்துவது இயல்பானது என்கிறது இராணுவம்

நாற்பது சி.ஆர்.பி.எஃப் படையினரைப் பலி கொண்ட பிப்ரவரி 14, புல்வாமா தாக்குதல் குறித்த மத்திய அரசின் கடுமையான பேச்சைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கை போர் பயம் ஆட்கொண்டது. மாநில அரசாங்கம், விளம்பரங்களை நிறுத்துவதாக தெரிவித்த அதே நாளில், சுமார் 10,000 துணை இராணுவப் படையினர், காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு கொண்டு வரப்பட்டனர். உணவுத் துறைக்கு உணவுகளை உடனடியாக விநியோகிக்குமாறும், மருத்துவமனைகளுக்கு உடனடியாக போதுமான அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை வைத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது. மருத்துவர்களுக்கு விடுமுறையும் ரத்து செய்யப்பட்டது.

நெருங்கிவரும் தேர்தலுக்காகத்தான் கூடுதல் படையணிகள் குவிக்கப்பட்டுள்ளன என்ற நிர்வாகத்தின் விளக்கத்தை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையில் அரசு தேர்தலுக்கான தயாரிப்புக்காகத்தான் இந்த அதீத முனைப்புடன் செயல்படுகிறது எனில், முகநூல் பக்கத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் ’லைக்’-களையும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெருவாரியான இணைய வாசகர்களைக் கொண்டுள்ள “கிரேட்டர் காஷ்மீர்” பத்திரிகைக்கு விளம்பரங்களை ஏன் நிறுத்த வேண்டும். தேர்தல் நோக்கத்தை இது எவ்வகையில் நிறைவேற்றும்? அதுவும் இவ்விளம்பரங்களில் பெரும்பாலானவை தேர்தலுக்கு நேரடியாக சம்பந்தப்பட்டவை எனும் போது குறிப்பாக இது எவ்வகையில் அந்நோக்கத்தை நிறைவேற்றும்? பரந்துபட்ட அளவில் விநியோகமாகும் ஒரு பத்திரிகையில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கிடைக்கப்பெறாமல் செய்வது எந்த நோக்கத்தை நிறைவேற்றக் கூடும்?

ஊடகங்களை மண்டியிடுவதை நோக்கித் தள்ளுவது

கடந்த பிப்ரவரி 28 அன்று ஜமாத்-இ-இஸ்லாமி என்ற சமூக – மதவாத அமைப்பு தடை செய்யபட்டத்தைத் தொடர்ந்து அவ்வமைப்பின் செயற்பாட்டாளர்கள் 400 பேரை கைது செய்ததன் பின்னணியிலும் இந்த விளம்பர ரத்து நடவடிக்கையைப் பார்க்க வேண்டும். அச்சுறுத்தும் நிலைமைகள் மேலெழும் போது, காஷ்மீர் ஊடகங்கள் சத்தமின்றி முடக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் பொருட்டு ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் தந்திரமாகவும் இது இருக்கலாம். காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே மிகப்பெரிய ஒரு ஊடகத்தையும் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் திரள் போராட்டங்களின் போது ஏற்கெனவே தண்டிக்கப்பட்ட “காஷ்மீர் ரீடர்” நாளிதழையும் தனக்கு கீழ்படிந்து இருக்கச் செய்வதற்கு விளம்பரங்களை நிறுத்துவதைத் தவிர சிறந்த வழி வேறு ஏதேனும் இருக்க முடியுமா?

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் பொறியமைவாக விளம்பரங்களை பயன்படுத்துவது காஷ்மீரில் இப்போது புதிதாக நடக்கவில்லை. இதற்கு முன்னால் காங்கிரசு கட்சி மத்தியில் ஆட்சியிலிருக்கும்போது, விளம்பரங்கள் மற்றும் காட்சிப்பூர்வ விளம்பர இயக்குநரகத்தின் மூலம் ”க்ரேட்டர் காஷ்மீர்” நாளிதழுக்கு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஊடகங்களை மண்டியிடச் செய்ய வேறு வழிமுறைகளும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. 2002-ம் ஆண்டுக்கும் 2008-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட – ஒப்பீட்டளவில் அமைதியான காலகட்டமாகக் கருதப்பட்ட – ஆண்டுகளில், “கிரேட்டர் காஷ்மீர்” நாளிதழின் மீது பத்துக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. இப்பத்திரிகையின் மீதான பெரும்பாலான வழக்குகளை நீதிமன்றங்கள் ரத்து செய்து விட்டன. காஷ்மீரில், முதல் தகவல் அறிக்கை என்பது ஊடக மட்டறுத்தலின் மறைமுக வடிவமாகும். உதாரணத்திற்கு, முசாஃபராபாத்தில் உள்ள ஒரு வெளிநாட்டு செய்தி நிறுவனத்தின் செய்தி அறிக்கையை அப்படியே வெளியிட்டதற்காக போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் அதில் ஒன்று. இந்தியாவில் மையங்களைக் கொண்டுள்ள அந்த வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு ஒரு நோட்டீசு கூட அனுப்பவில்லை.

படிக்க:
♦ ஸ்காட்லாந்தில் சில பாகிஸ்தானிய நண்பர்கள் | கௌதமி சுப்ரமணியம்
♦ ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை

விளம்பரங்களின் மூலம் போடப்படும் இந்த வாய்ப்பூட்டு, பெரும் கடினமான சூழலையும் எதிர்கொண்டு காஷ்மீரில் வளர்ந்த ஒரு உறுதியான நிறுவனத்தை சீர்குலைப்பதற்காகவா? கொந்தளிப்பான 1990-களின் தொடக்கக் காலகட்டத்தில் “கிரேட்டர் காஷ்மீர்” நாளிதழ், முதலில் ஒரு வார இதழாகத் தொடங்கப்பட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதல் ஆங்கில நாளிதழாக வெளிவந்து நூற்றுக்கணக்கான பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கொடுக்கும் ஒரு ஊடக நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

“கிரேட்டர் காஷ்மீர்” நாளிதழின் நிதி ஆதாரங்களில் மத்திய அரசு தாக்குதல் தொடுத்திருப்பது, காஷ்மீரின் ஒவ்வொரு நிறுவனத்தையும் “தேச விரோதமானதாகக்” கருதும் மத்திய அரசின் கொள்கையோடு தொடர்புடையதாகும்.  இச்செய்தித்தாளுக்கு இந்தியாவின் அரசியலில் அடைக்கலம் புகுந்துள்ள பல எதிர்ப்பாளர்கள் உள்ளனர். ஒரு வலதுசாரிக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கத்தில் ஒரு முன்னாள் இந்திய இராணுவ ஜெனரல், “கிரேட்டர் காஷ்மீர்” நாளிதழுக்கு இயல்பிலேயே வகுப்புவாத நோக்கம் இருப்பதாகப் பேசினார்.

முசுலீம்கள் அடித்துக் கொல்லப்படுவதைக் கண்டு மவுனமாக இருப்பதற்காகவும், பெரும்பான்மைவாத அரசியலை ஆதரிப்பதற்காகவும் விமர்சிக்கப்படும் ஒரு அரசாங்கம், பெரிய செய்தித்தாள் ஒன்றிற்கு விளம்பரங்களை நிறுத்துவது குறித்து ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால் இது காங்கிரஸ், பிடிபி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றிற்கு பாடங்களை வழங்கியுள்ளது. அவர்கள் ஊடகங்களைக் கையாண்ட விதமே பரவாயில்லை என்ற கருத்து, பாஜக மாதிரியான ஒரு கட்சி, பத்திரிகைகளை ஆக்ரோஷமாக ஒடுக்குவதன் மூலம் மட்டும்தான் ஏற்பட முடியும்.


கட்டுரையாளர்: ஹிலால் மிர்
தமிழாக்கம் : நந்தன்
நன்றி : ஸ்க்ரோல் இணையதளம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க