ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை

ஆதிக்க சாதியினர் பகுதியில் வசிக்கும் சிலரின் சுயலாபத்துக்காக இந்த சாதி மறுப்பு திருமண சம்பவம் பெரிதாக்கப்பட்டு சாதி பெருமைக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் இந்த கலவரம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆனத்தூர் கிராமத்தில் வசிக்கும் வன்னியர் சமூகத்தைச் சார்ந்த முருகன் மகள் ஜெயபிரதாவும் மேற்படி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் திருமூர்த்தி என்பவரும் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். ஜெயப்பிரதா பெரியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு (MSC) திருமூர்த்தி அதே கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு (BSc) பயின்று வருகின்றனர்.

இருவரும் காதலிப்பது பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்து மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 07.01.2018 அன்று கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் இருந்து கொண்டு கல்லூரிக்கு சென்று வந்தனர். இத்தகவலை தெரிந்து கொண்டு பெண்ணின் பெற்றோர் ஓசூரில் உறவினரின் வீட்டில் அடைத்து வைத்து விட்டனர். இதனை பெண் ஜெயப்பிரதா திருமூர்த்திக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவித்து இருவரும் அங்கிருந்து திருமூர்த்தியுடன் தப்பித்து சென்றுள்ளனர். உடனடியாக பெண் வீட்டார் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 2002/2019 ல் FIR பதிவு செய்துள்ளனர். அதுநாள் முதல் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தார் தாழ்த்தப்பட்ட பகுதிக்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.

இச்சூழலில் திருமூர்த்தியின் அண்ணன் சூரியமூர்த்தியை ஆதிக்க சாதியினர் பிடித்து மிரட்டி ஒருவார காலத்திற்குள் உனது தம்பி எங்கள் பெண்ணை கொண்டு வந்து விடவில்லை என்றால் விபரீதமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என மிரட்டியதால் அவரும் தலைமறைவாக இருந்து வருகிறார். ஒருவார காலமாக பெண் இருப்பிடம் சம்மந்தமாக எந்தவொரு தகவலும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு கிடைக்கப் பெறாததால் தன் கிராம வாட்சப் குரூப்பில் கடந்த 26.02.2019 அன்று இரவு சுமார் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி, மறுநாள் காலை 27.02.2019 சுமார் 9 மணியளவில் திரௌபதி அம்மன் கோவில் அருகே கூட வேண்டும் என்று திட்டமிட்டு செய்தியை பரப்பினார்.

படிக்க:
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ

மேற்படி செய்தி தாழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆனத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர் அரி என்பவருக்கு தெரியவந்து அவர் முன்னெச்செரிக்கையாக அன்றிரவே வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினருக்கு மேற்படி ஆதிக்க சாதியினரின் செய்தியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி திட்டமிட்டபடி ஆதிக்க சாதி வெறியர்கள் சுமார் 300 நபர்களுக்கு மேல் திரெளபதி அம்மன் கோவில் அருகே மணல் கடத்தல் மாபியா சந்திரசேகரன் மற்றும் பா.ம.க. கட்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் ஒன்றுகூடியுள்ளனர். அவர்களுடன் பக்கத்து கிராமங்களான நத்தம், பலாபட்டு, தொட்டிமேடு பகுதிகளைச் சேர்ந்த ஆதிக்க சாதியினரும் இவர்களுடன் கலந்து அங்கிருந்து கும்பலாக ஆதிக்க சாதி வெறியினார் புறப்பட்டு தாழ்த்தப்பட்ட பகுதியை நோக்கி சென்றனர்.

அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்களை தள்ளிவிட்டு சென்று உள்ளே நுழைந்து முதல் வீடான ஆறுமுகம் மகள் சித்ரா என்பவரின் வீட்டினை சூறையாடி தடுக்க வந்த அவரை அசிங்கமாக பேசி அடித்தும் அவரின் வீட்டின் வெளியில் நின்றிருந்த Tata Ace வாகனத்தையும் ஆட்டோவையும் அடித்து நொறுக்கியும் தொடர்ந்து ஒவ்வொரு வீடாக சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது கடுமையான உழைப்பின் மூலம் வாங்கிய டி.வி., பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இதே போன்று சுமார் 20 வீட்டிற்கும் மேல் வீட்டில் இருந்து பொருட்களை அடித்து நாசம் செய்துள்ளனர். மேற்படி சம்பவம் சுமார் காலை 9.45 மணி முதல் 10.30 மணி வரை நடந்துள்ளது. அச்சமயத்தில் தாழ்த்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் சூளை வேலைக்கும் மற்றும் கூலி வேலைக்கும் அதிகாலையிலேயே சென்றுள்ளனர். அங்கிருந்த ஒரு சில பெண்களும் உயிருக்கு பயந்து கொண்டு அருகிலிருந்த கரும்பு தோட்டத்திற்கு சென்று மறைந்துள்ளனர். நடந்த சம்பவங்களை பாதிக்கப்பட்ட மக்கள் செய்தியாளர்களுக்கு தெரியப்படுத்தியும் சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் செய்து ஆதிக்க சாதி வெறியர்கள் பெயரில் வழக்குப் பதிவு செய்து கண்துடைப்பிற்காக ஒரு சிலர் மட்டுமே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறையினரின் அலட்சிய போக்கால் இதே போன்று சம்பவம் 1986 – 1987 ஆண்டுகளில் நடைபெற்றிருந்தும் இதேபோல சம்பவம் நடைபெறும் என்பதை முன்கூட்டியே கணித்து ஒரு வார காலமாக காவல்துறையினர் பெயரளவிற்கு குறுகிய அளவில் மட்டுமே பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இச்செயல் ஆதிக்க சாதியினருக்கு உறுதுணையாக காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் காவல்துறையைச் சார்ந்தவர்கள் 2 வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தகவலை கொடுத்தும் தாழ்த்தப்பட்ட பகுதி மக்களை பார்த்து, ‘’உங்க வீட்டு பெண்களை இழுத்துட்டு போனா, நீங்க சும்மா விடுவீங்களா’’ என ஆதிக்க சாதியினருக்கு சார்பாக பேசி மிரட்டியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அங்கேயே தங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளை கொளுத்துவதாக கூறி சாலை மறியல் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள்  மற்றும் வருவாய் துறையினர் கண்துடைப்பிற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சென்றார். முதல் தகவல் அறிக்கை 27.02.2019 அன்று பதியப்பட்டுள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஆதிக்க சாதி வெறியினர் தாழ்த்தப்பட்ட பகுதிக்குள் சென்று ஒவ்வோர் வீடாக சென்று சேதப்படுத்தியதுடன் தண்டபாணி மனைவி சத்தியவாணி என்பவர் தன்னுடைய வீட்டினை சீரமைக்க கடனாக பெற்று பீரோவில் வைத்திருந்த ரூபாய் 20,000-த்தை ஆதிக்க சாதி வெறியினர் பிரோவினை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த சிவா என்பவரின் சுமார் 14 வயது மகளான சத்தியா என்பவரை தலையிலும் உடம்பிலும் தாள் கொண்டு தடியாலும் இரும்பு கம்பியாலும் பலமாக தாக்கியும் அறுவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியும் தாக்கியுள்ளனர். அங்கிருந்த சிவந்தனி என்ற சுமார் 4 வயது குழந்தையை கன்னத்தில் அறைந்து பக்கத்திலிருந்த கால்வாயில் எட்டி உதைத்துள்ளனர். அவந்திகா என்ற குழந்தையையும் தாக்கியுள்ளனர்.

இப்போது அங்கிருந்த ஆதிக்க சாதி வெறியர்கள், “உங்களுக்கு போலீஸ்காரன் எவ்வளவு நாள் பாதுகாப்புக்காக உக்காந்துருப்பான். அதுக்கப்புறம் உங்க மொத்த சேரியையும் காலி பண்ணிடுறோம்’’ என மிரட்டியும், ‘’என்னிக்குமே நீங்க எங்களுக்கு அடிமை நாய்ங்கதான். பொண்ணு பையன் ஓடி போனதுக்காக நாங்க அடிக்கல பர நாய்ங்க என்றதாலதான் அடிக்கிறோம். உன் பாட்டன் முப்பாட்டன் போல எங்க கால கழுவி சாப்பிடனும்’’ என சாதி பேசி மிரட்டியுள்ளனர்.

மேலும், அனைத்துக்கும் சந்துரு என்பவன் மணலை திருடிச்செல்வதை வருவாய்த் துறையினருக்கு தொடர்ந்து தகவல்களை கொடுத்து வந்ததினை அறிந்து தாழ்த்தப்பட்டவர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு ஆதிக்க சாதி வெறியர்களிடம் சாதி வெறியைத் தூண்டி முன்னணியில் அனைத்தையும் திட்டமிட்டு செய்ததுடன் சந்துரு என்பவர் காவல்துறையினரின் கையாள் என்பதும் இவர் சொல்வது தான் காவல்நிலையத்தார் கேட்பார்கள் என்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதுடன் அவர்களுக்கு மாதா மாதம் லஞ்சம் கொடுத்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார்.

படிக்க:
பிணத்தையும் விட்டு வைக்காத வன்னிய சாதிவெறி!
விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்!

இத்துடன் பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பகுதி பெண்களும், குழந்தைகளும் அரசு மருத்துவமனை சென்றபோது அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து “வெட்டுபட்டிருக்கா, குத்து பட்டிருக்கா, இல்லையென்றால் கை, கால் உடைஞ்சிருக்கா என கேட்டுக்கொண்டே அப்படின்னாதான் வைத்தியம் பாப்பேன் இல்லை என்றால் பார்க்கமாட்டேன்” என தான்தோன்றித்தனமாக அலட்சியப்படுத்தி மருத்துவம் பார்க்காமல் அன்று முழுவதும் அங்கிருந்துவிட்டு இரவு பாதிக்கப்பட்ட நபர்கள் காயத்துடனேயே வீடு திரும்பியுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட பகுதி மக்களுக்கு ஆதிக்க சாதியினரின் பகுதியில் உள்ள கடைகளிலோ, மருந்தகத்திலோ எந்தப் பொருட்களும் தராமல் சாதிய கண்ணோட்டத்தோடு சமூகப் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.

முடிவுகள்

1. ஆதிக்க சாதியினர் பகுதியில் வசிக்கும் சிலரின் சுயலாபத்துக்காக இந்த சாதி மறுப்பு திருமண சம்பவம் ஊதி பெரிதாக்கப்பட்டு அவர்களின் சுய லாபத்திற்காகவும் சாதி பெருமைக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் இந்த கலவரம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளது.

2. இந்த சம்பவத்தில் திருமணமான மணமக்கள் காரைவிட்டு சென்ற அன்றே காவல்துறைக்கு பெண்ணின் வீட்டாரால் புகார் அளிக்கப்பட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் காவலர்களை இரு பகுதியிலும் பாதுகாப்பிற்கு நிறுத்தினர். அதன் பின்னர் தினமும் ஆதிக்க சாதியினர் பெரிய விளம்பரத்துடன் ஊர் கூட்டம் நடத்தி தாக்குதலுக்காக தேதியும் நேரமும் குறிப்பிட்டு அதை வாட்சப் செய்தியாக கலவரத்திற்கு முன் இரவு (26.02.2019) அனைவருக்கும் செய்தி அனுப்பியுள்ளனர்.

3. அந்த செய்தியை தலித் பகுதி இளைஞர்கள் காவல்துறைக்கும், வருவாய்த் துறைக்கும் அன்றிரவே தகவல் தெரிவித்தும் காவலர்கள் முன்னெச்செரிக்கையுடன் செயல்படாதது மட்டுமல்லாது சம்பவம் பற்றி தகவல் தெரிந்தும் பொறுமையாக வந்து பாதிப்புகளை பற்றி குறைத்து மதிப்பிட்டு அலட்சியத்துடன் அடிபட்டவர்களையும் சேதமடைந்த சொத்துக்களையும் கணக்கிடாமல் விட்டுவிட்டனர்.

4. வருவாய்த் துறையினர் ஏற்கனவே ஆதிக்க சாதி பகுதி வழியாக மட்டுமே தலித் மக்கள் செல்லும் சூழலை அறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான மாற்று பாதையினையும் அந்த மக்களின் குடியிருப்புக்கான தொகுப்பு வீட்டினையும் பிரதான சாலையை ஒட்டி கையகப்படுத்தி அளிக்காமல், ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக பாதையை மறுத்து அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்க உதவியுள்ளனர்.

5. இவ்வாறு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தலித் மக்களை பற்றி அக்கறையில்லாமல் ஆதிக்க மனோபாவத்துடன் செயல்பட்டதால் இந்தப் பிரச்சனைகளுக்கு அவர்கள் முழுவதும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.

6. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இரு பகுதி உழைக்கும் மக்களும் தங்களுடைய வருமான இழப்பு மற்றும் பொதுத் தேர்வு சமயத்தில் பிள்ளைகளின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. ஆகையால், பிள்ளைகள் மிகவும் வேதனையில் உள்ளனர். சிலரின் தூண்டுதலால் நடக்கும் இந்தச் சம்பவங்களை ஆதங்கத்தோடு வெளிப்படுத்துகின்றனர்.

7. அரசியல் கட்சி பிரமுகவர்கள் ஒரு குடும்ப பிரச்சினை, ஒரு பெண்ணின் தனிப்பட்ட பிரச்சினையை தங்களின் சாதி பெருமையால் சுயலாபம் அடையவும் அதை தேர்தலுக்கு ஓட்டாக்கவும் முயற்சிக்கின்றனர்.

பரிந்துரைகள்:

1. அப்பாவி தலித் மக்களின் வாகனங்களையும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தியதற்கு, சேத மதிப்பை கணக்கிட்டு அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், அந்தத் தொகையை தாக்குதல் நடத்தியர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும்.

2. மேலும் சாதி வேற்றுமையை தூண்டி சுய லாபம் அடையும் தீய சக்திகளான மணல் மாபியா சந்திரசேகர், பா.ம.க.வைச் சேர்ந்த கார்த்திகேயன், பா.ஜ.கவைச் சேர்ந்த ராஜா ஆகியோர்களை கைது செய்து அவர்களை தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்கொடுமை சட்டப்பிரிவுகளிலும், தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கவும், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. இந்தத் தாக்குதல் பற்றி முன்கூட்டியே தகவல் தெரிந்தும் அலட்சியமாகவும், பொறுப்பின்றியும் இருந்த ஆதிக்க வெறியர்களின் தாக்குதலுக்கு துணை போன காவல் அதிகாரிகள் யார் என்பதை விசாரித்து கண்டறிந்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. ஆகவே இப்பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அமைதி கூட்டம் கூட்டி சாதி மத பேதங்களால் ஏற்படும் பேரிழப்பையும், மனித உறவின் மாண்பையும் விளக்கி அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் வறுமை மற்றும் வாழ்வாதாரத்தை வளப்படுத்திக்கொள்ளவும் சகோதரத்துடன் பழகவும் அறிவுறுத்த வேண்டும்.


மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
தொடர்புக்கு: 94437 24403

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க