ஏலே இங்க வாங்கலே! நீங்க என்ன சாதிலே! தென்மாவட்டங்களின் ஆதிக்க சாதிய குரல்

தேவேந்திர குல வேளாளர்கள் மீது தாக்குதல் நடத்த தேவர் சாதியினருக்குக் காரணம் தேவையில்லை; தலித்துகளை தாக்குவதற்கு ஆதிக்க சாதியினருக்கு எவ்விதக் காரணம் தேவையில்லை. இந்த மாற்றம் தான் ஆதிக்க சாதி சங்கங்களில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்ட நடவடிக்கை

வேங்கை வயல், நாங்குநேரி, நெல்லை என தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதிய படுகொலைகள், தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பார்ப்பனீய சாதியக் கட்டமைப்பை எதிர்த்துப் போராடும் தமிழ்நாட்டில், ” எல்லோரும் சமம்” என்ற ஜனநாயக குரல் வலுவிழந்து வருவதையே இச்சம்பங்கள் காட்டுகின்றன. வட மாநிலங்களைப் போல, “தலித்” என்பதற்காகவே குடிக்கும் நீரில் மலம் கலக்கலாம், முகத்தில் சிறுநீர் கழிக்கலாம், அடிக்கலாம், வெட்டலாம், ஆணவப்படுகொலை செய்யலாம் என்றும், அதை இதர பொது சமூகமும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் என்ற புதிய பாசிச சூழல் உருவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

தற்போது நெல்லையில் நடைபெற்ற சம்பவம் என்ன? ஏன் நடந்தது? முன்பகையா? இல்லை, அப்படி எந்த காரணமும் இல்லை. ஆனாலும் நடந்திருக்கிறது. தனக்கு சம்பந்தமே இல்லாத, முன்பின் அறிமுகமே இல்லாத மனோஜ் மற்றும் மாரியப்பன் மீது ஒரு ஆதிக்க சாதி வெறி கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. நடத்தி முகத்தில் சிறுநீர் கழித்து, அந்த இளைஞர்களை நிர்வாணப்படுத்தித் தாக்கி ’அவமான’ப்படுத்தியிருக்கிறது. ஏன்? ஓர் காரணம் அவர்கள் பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் என்பதே. குடி மற்றும் கஞ்சா போதையிலும், தலித் என்ற காரணத்திற்காக அடிக்கிறார்கள் என்றால், சாதிய வெறிதான் அவர்களது மூளையை ஆக்கிரமித்திருக்கிறது. அந்தளவிற்கு அவர்களிடம் ஆதிக்க சாதிவெறி ஊட்டப்பட்டிருக்கிறது என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

இறந்த பசு மாட்டின் தோலை உரித்தார்கள் என்ற காரணத்திற்காக உன்னாவ் மாவட்டத்தில் மூன்று தலித்துகள் கட்டி வைத்துத் தாக்கப்பட்டதை பார்த்து நாமெல்லாம் அதிர்ந்து போனோம். அங்கு சாதி உணர்வு இந்து மத நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு ஊட்டப்படுகிறது. தமிழ்நாட்டிலோ, குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு ஆதிக்க சாதி சங்கங்களால், ஆண்ட பரம்பரை பெருமை, குருபூஜை போன்றவற்றால் சாதி உணர்வு ஊட்டப்படுகிறது. ஆண்ட பரம்பரை பெருமையோ, குருபூஜையோ தமிழ்நாட்டில் நடைபெற்று வந்தாலும், சாதியக் கொலைகள் அதிகரிப்பதற்கும், புதிய இயல்பாக மாறுவதற்கும் ஒரு அடிப்படை இருக்கிறது என்பதே இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயமாகும். சமீப காலங்களில் சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதுதான் அது.


படிக்க: கிருஷ்ணகிரி: சோக்காடி கிராம தலித் மக்கள் மீது ஆதிக்கசாதிவெறித் தாக்குதல்


தமிழ்நாடு முழுவதும் தேவர்கள், யாதவர்கள், வன்னியர்கள், கொங்கு வேளாளர்கள் என ஆதிக்க சாதி வெறி அமைப்புகளில் ஊடுருவியிருக்கிறது. அதுமட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட சாதி சங்கங்களில் ஊடுருவியிருப்பதோடு, ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்றோரைத் தனது ஜந்தாம் படையாக உருவாக்கி வைத்திருக்கிறது.

பட்டியல் சாதியில் இருந்து வெளியேறி தேவேந்திர குல வேளாளர் என தங்களை பாண்டிய வம்சத்து ஆண்டபரம்பரையாக அடையாளப் படுத்திக் கொள்வதன் மூலம், நாங்களும் நாடாண்ட பாண்டிய வம்சத்து ஆண்ட பரம்பரை என கூறிக் கொள்ளும் கிருஷ்ணசாமியும் ஜான்பாண்டியனும் பாசிஸ்டுகளுக்கு சேவகம் செய்து வருகிறார்கள். இந்து மதத்தைச் சீரமைப்பதே எனது வேலை என்ற கிருஷ்ணசாமியும், திருச்செந்தூர் முருகன் கோயில் தெற்கு வாசல் எங்களுடையது என பேசும் ஜான்பாண்டியனும் தேவேந்திர குல வேளாளர் மக்களை பாசிஸ்டுகளிடம் அடகு வைப்பவர்கள்.

சாதி என்றோ சாதி ஆணவப்படுகொலை என்றோ சொல்லக்கூடாது தமிழ் குடிகள், குடிபெருமைக் கொலை என புதிய பரிமாணத்தில் சாதியை உயர்த்தி பிடிக்கும் சீமான் போன்றவர்கள் இந்த சாதிய தாக்குதல்களை பங்காளிச் சண்டையாக பார்க்கின்றனர். ”அட! தமிழ் சாதிகளை தமிழ் தேசியம் என்ற பெயரில் ஒன்றிணைக்க போவதாக பேசுகிறாயே பதில் சொல்” என்றால், ”இது 50 ஆண்டுக்கால திராவிட கட்சிகள் மக்களை சாதி ஓட்டு வங்கிகளாக மாற்றி வைத்திருப்பதன் விளைவு” என தனது திராவிட வெறுப்பைக் கக்குவார்.

சீமான் சொல்வதும் ஒரு வகையில் சரிதான். எனினும், ஓட்டுக்காக திராவிட கட்சிகள் சாதி சங்கங்களை ஊக்குவிப்பதும் சாதி தலைவர்களின் குருபூசை நிகழ்வுகளை அரசே தலைமையேற்று நடத்துவதும், அதில் எத்தனை கலவரங்கள் நடந்தாலும் வருடாவருடம் 144 தடை உத்தரவு போட்டு நடத்தி கொடுப்பதும் என சாதிய உணர்வை வளர்த்து வந்துள்ளது. தற்போதுகூட, திராவிட மாடல், சமூக நீதி அரசின் யோக்கியதையும் இதுவாகத்தான் இருக்கிறது.

ஆனால், சீமான் பேசுவதானது, சாதிக்கு எதிராக அல்ல, திராவிட வெறுப்பு பேசி, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு ஒத்தூதுவது ஆகும். குறிப்பாக, ஒரே நேரத்தில் இம்மானுவேல் சேகரனாருக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கும் எந்த பிரச்சினையும் இன்றி மாலை போடக்கூடிய ஒரே தலைவர் நான் தான் என கூறிக் கொள்ளும் அரசியல் நேர்மையற்ற, குடிப்பெருமை என்று சாதியை வைத்து பிழைப்பு நடத்துகிற அற்ப நபர்தான் சீமான்.


படிக்க: சோத்துக்கு வழியில்ல.. இதுல ஆண்ட சாதி பெருமை | தோழர் அமிர்தா


”சாதிதான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என்றார் அம்பேத்கர். கள்ளர் சாதியை சேர்ந்த சாதிவெறிக் கயவர்கள் சக மனிதனை சாதியை முன்னிட்டு தாக்கினாலும், நிர்வாணப்படுத்தினாலும், கொள்ளையடித்தாலும், முகத்தில் சிறுநீர் கழித்தாலும் அவர்களை கண்டிக்க மாட்டோம் என சுயசாதி பற்றில் வாழும் அற்ப மனிதர்களும் இச்சம்பவத்தில் குற்றவாளிகள் தான். அந்த சாதி வெறிபிடித்த கயவர்களின் சமூக அடித்தளம் இவர்கள்.

இப்பயெல்லாம யாருங்க சாதிபாக்குறாங்க என கூறிக்கொண்டு, சாதியை ஆழ்மனதில் மறைத்து வைத்து கொண்டு ஜனநாயகம் பேசும் தற்குறிகளுக்கு இந்த சம்பவங்கள் நடப்பதே தெரிவதில்லை.

தேவேந்திர குல வேளாளர்கள் மீது தாக்குதல் நடத்த தேவர் சாதியினருக்குக் காரணம் தேவையில்லை; தலித்துகளை தாக்குவதற்கு ஆதிக்க சாதியினருக்கு எவ்விதக் காரணம் தேவையில்லை. இந்த மாற்றம் தான் ஆதிக்க சாதி சங்கங்களில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்ட நடவடிக்கை. இதுபோல் சாதிய கட்டுமானங்கள் அனைத்திலும் இந்துத்துவ சக்திகள் ஊடுருவி வளர்ந்து விட்டது. சாதி வெறிக் கலவரங்களால் தமிழ்நாடு மணிப்பூராகலாம். தமிழ்நாட்டில் நிலவும் இந்த நிலைதான், மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடைபெறுவதற்கு முன்னதான சமூக பக்குவ நிலை. இதை ஒரு எச்சரிக்கையாக தமிழ்நாடு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆதிக்க சாதி சங்கங்களையும், அதில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மதவெறிக் கும்பலையும் தடை செய்யாமல், வருங்காலத்தில் சாதிய வன்முறைகளைத் தடுக்க முடியாது. ஆதிக்கசாதிச் சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் தடை செய்யப் போராடுவோம்!


பு.மா.இ.மு,
தமிழ்நாடு.
94448 36642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க