கிருஷ்ணகிரி: சோக்காடி கிராம தலித் மக்கள் மீது ஆதிக்கசாதிவெறித் தாக்குதல்

ஆதிக்கசாதி வெறி அமைப்புகள்  சமூக நீதி, பெரியாரைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டு பொதுத்தளத்தில் அங்கீகாரம் பெற்றுக் கொள்கின்றன. இவர்களுக்கு சாதிவெறியைத் தாண்டி சமூகநீதியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணை அருகில் உள்ள சோக்காடி கிராமத்தில் 150 தலித் குடும்பங்களும், 500 ஆதிக்க சாதியினர் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இதில் நாயுடு சாதியினரும், பெரும்பான்மையாக கொங்கு வேளாளர்களும் வசித்து வருகின்றனர். தலித் இளைஞர்கள் பலரும் பட்டப்படிப்பு வரை படித்து நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வேலைகளுக்கு செல்கின்றனர்.

பல ஆண்டுகளாக தலித் மக்கள் இப்பகுதியில் ஆதிக்கசாதியினரால் சாதி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். 1987-ஆம் ஆண்டில் அரசுப் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்த தலித் இளைஞர் இப்பகுதி ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்ட சம்பவத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு எட்டு ஆண்டுகளாக வழக்கு நடந்தது.

1995-ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட கோவில் விழாவில் தலித் மக்களை ஆதிக்கசாதியினர் தாக்கினர்.

2020-ஆம் ஆண்டில் மேற்கண்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தலித் இளைஞர்கள் கேள்வி எழுப்பியிருந்ததற்கு ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அம்பேத்கர் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இதைக் கேள்வி எழுப்பியதற்காக ஊராட்சி தலைவர் கெடிலா ராமலிங்கம் தலைமையில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதில் 30-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். அது குறித்தும் தலித் மக்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.

மேலும் அப்பகுதியில் பொது இடத்தில் உள்ள கோயிலிலும் தலித் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது குறித்த பிரச்சினை காரணமாக ஆதிக்க சாதியினர் கோயிலைப் பூட்டி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


படிக்க: நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகள்!


நீருபூத்த நெருப்பாக இப்பிரச்சினைகள் இருந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தலித் மக்கள் குடியிருப்புக்கு அருகிலேயே ஆதிக்க சாதியினர் அப்பகுதி அதிமுக நிர்வாகி எஸ்.சி.ராஜன் தலைமையில் கோவில் கட்டும் பணியைத் துவக்கினர். எஸ்.சி.ராஜன் கொங்கு வேளாளர் சாதியைச் சார்ந்தவர்.

கோவில் பணிகளின் போது கற்கள் செதுக்குதல், வடிவமைத்தல் பணிகளின் காரணமாக தூசுகள் தலித் மக்கள் வீடுகளுக்குள் செல்லும் நிலை இருந்துள்ளது. உணவிலும், நீரிலும், வீடுகள் முழுவதும் தூசு படிந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இதைத் தடுப்பதற்கு கோவில் வேலை நடக்கும் பகுதியைச் சுற்றி வலை அமைக்க வேண்டும் என வேலை செய்யும் பணியாளர்களிடம் தலித் மக்கள் தொடர்ந்து கூறி வந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 29 ம் தேதி மாலை 4 மணி அளவில் தலித் பகுதி இளைஞர்கள் கோவில் பணி செய்து வருபவர்களிடம் மேற்கண்ட விசயத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அதிமுக நிர்வாகி எஸ்.சி.ராஜன் தலித் இளைஞர்களை சாதி ரீதியாக கடுமையான வார்த்தைகளில் பேசியுள்ளார். அப்போது பைக்கில் உட்கார்ந்திருந்த தலித் இளைஞரைப் பார்த்து “என் முன்னால் வண்டியில் உட்கார்ந்து கொண்டே கேள்வி கேட்கிறாயா” என்று அந்த இளைஞரையும், வேறு சில இளைஞர்களையும் தாக்க முற்பட்டுள்ளார். சாதிரீதியான மோதலுக்கு தூண்டுதலாக அவரின் நடவடிக்கை இருந்துள்ளது.

அதன் பிறகு இரு தரப்பிலும் நாளை பேசிக் கொள்ளலாம் என்று திரும்பிச் சென்றுள்ளனர். போலீசுக்கு தகவல் தெரிவித்த அடிப்படையில் அன்று இரவு 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோக்காடியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீசு அப்பகுதியில் இருக்கும் நிலையில், அன்று இரவு எஸ்.சி.ராஜன் மற்றும் அவர் தம்பி சதாசிவம் தலைமையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தலித் மக்கள் பகுதியில் புகுந்து வீடுகளையும், கடைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். அன்று இரவு ஊர்க்கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் இந்தத் தாக்குதலை சதித்தனமாக நடத்தியுள்ளனர். கூட்டத்தில் இருந்த தலித் மக்கள் மீதும் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தலித் மக்கள் 5 பேர் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் டில்லி பாபு தலைமையில் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். அதன் பிறகு பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்கள் 6 பேரை போலீசு கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், மாவட்ட போலீசுத்துறை கண்காணிப்பாளருக்கும் சோக்காடி பகுதி தலித் மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் புகார் அளித்துள்ளனர்.


படிக்க: தமிழ்நாட்டில் தொடரும் சாதியத் தீண்டாமை கொடுமைகள்: நாளைய தலைமுறையை நாமே பலி கொடுக்கப் போகிறோமா? 


தலித் மாணவ, மாணவிகள் ஆதிக்க சாதியினரின் தெருக்கள் வழியேதான் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பள்ளி செல்வதற்கு அச்சப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

எஸ்.சி.ராஜன் உள்ளிட்ட தாக்குதல் நடத்திய ஆதிக்கசாதி கும்பல் தலைமறைவாகியுள்ளது. இதில் 13 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

எஸ்.சி.ராஜன் தனது அரசியல் ஆதாயத்துக்காக சாதிவெறியைத் தூண்டிவிட்டு குளிர்காய்கிறார், தொடர்ச்சியாக இதுபோன்று தூண்டிவிடுகிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இன்னொரு பக்கம் எஸ்.சி.ராஜனின் சகோதரி மகன் சாந்த மூர்த்தி என்பவர் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியில் (இது E.R. ஈஸ்வரன் தலைமையில் இயங்கும் ஆதிக்கசாதிவெறி கட்சி) இருப்பதாகவும், இவர் வாட்ஸப் குரூப் மூலம் வெளியில் இருந்து கொங்கு வேளாளர் சாதியைச் சார்ந்த இளைஞர்களை தாக்குதல் நடத்துவதற்காக ஒன்று திரட்டி அப்பகுதிக்கு வரவழைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட ஆதிக்க சாதி வெறிக் கட்சிகளுக்கும் அந்த சாதியில் உள்ள உழைக்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.  கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளை பாதுகாப்பதற்காக, மக்களைச் சுரண்டி கொள்ளையடிப்பதற்காக  உருவாக்கப்பட்டதுதான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட ஆதிக்கசாதி வெறி அமைப்புகள். இவைகள்தான் அந்தச் சாதி இளைஞர்களை பல்வேறு வழிகளில் ஒருங்கிணைத்து தலித் மக்கள் மீதான வெறுப்பை ஊட்டி சாதிவெறியை வளர்த்து வருகின்றன.

இத்தகைய ஆதிக்கசாதி வெறி அமைப்புகள்  சமூக நீதி, பெரியாரைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டு பொதுத்தளத்தில் அங்கீகாரம் பெற்றுக் கொள்கின்றன. இவர்களுக்கு சாதிவெறியைத் தாண்டி சமூகநீதியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கும்பலை நாம் அங்கீகரிப்பது என்பது சாதிவெறியை அங்கீகரிப்பதே ஆகும். இவர்களை ஜனநாயக சக்திகள் புறக்கணிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பல இடங்களிலும் தலித் மக்கள் மீது ஆதிக்க சாதிவெறித் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஆதிக்க சாதிவெறிச் சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் ஆழமாக ஊடுருவி வருவதும், அவற்றை தனக்கான வளமான அடித்தளமாக மாற்றி மேலும் சாதி – மதவெறியை தூண்டுவதையும்  இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட எஸ்.சி.ராஜன் உள்ளிட்ட ஆதிக்கசாதிவெறிக் கும்பலை உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். பிணை வழங்கக் கூடாது.

அதேசமயம் தங்களின் சுயலாபத்திற்காக மக்களிடம் சாதிவெறியைத் தூண்டிவிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட ஆதிக்க சாதிவெறிக் கட்சிகள் அனைத்தையும் தடை செய்து அவர்களை உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.


தமிழன்பன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க