நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி,
நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த ஆதிக்க சாதி வெறி!
நாங்குநேரி பள்ளி மாணவன் மீது சாதியத்தின் பெயரால் நடத்தப்பட்ட தாக்குதல் நம் நினைவை விட்டு அகல்வதற்குள் மீண்டுமொரு சாதிக் கொடுமை நெல்லை மண்ணில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது!
திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி இரவு நடந்த ஆதிக்க சாதியினரின் கொடூரச் செயல் நம் இரத்தத்தை கொதித்தெழச் செய்கிறது.
மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் வசித்து வரும் மனோஜ்குமார், மாரியப்பன் ஆகிய பட்டியலின இளைஞர்கள் தனியார் இணையதளத்திற்கான கேபிள் இழுக்கும் ஒப்பந்த பணிகளில் வேலை செய்பவர்கள்.
வேலை முடிந்து 30-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் அருகிலிருக்கும் தாமிரபரணி நதியில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்த இருவரையும், அங்கு கஞ்சா மற்றும் சாராயம் குடித்துக் கொண்டிருந்த 6 பேர் கொண்ட கும்பல் கையில் வைத்திருந்த வாளைக் காட்டி வழிமறித்து அவர்களிடமிருந்து பைக், செல்போன், வெள்ளி அரைஞாண் கொடி ஆகியவற்றை பறித்தது.
படிக்க: கிருஷ்ணகிரி: சோக்காடி கிராம தலித் மக்கள் மீது ஆதிக்கசாதிவெறித் தாக்குதல்
அதன் பின் அவர்களிடம் எந்த ஊர், என்ன சாதி என்று அந்த கும்பல் விசாரித்தது. ஊரைச் சொல்லியபின், ”நாங்கள் எஸ்.சி சமூகத்தை சார்ந்தவர்கள்” என்று இளைஞர்கள் சொல்ல, இதைக் கேட்டவுடன், ”எஸ்.சி-ன்னா பெரிய மயிரால?” என்று கையிலிருந்த வாளால் தாக்கியிருக்கிறது அந்த கும்பல். இதில் மனோஜ்குமாரின் கண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. முதுகு, கைகள் என பல இடங்களில் இருவரையும் அக்கும்பல் தாக்கியிருக்கிறது. மேலும் சாதிவெறி அடங்காமல் அருகிலிருக்கும் புதருக்குள் அவ்விரு இளைஞர்களையும் இழுத்துச் சென்று, அவர்களை நிர்வாணப்படுத்தி வாளாலும், கம்பாலும் தாக்கியது. பின்னர் அவர்கள் இருவர் மீதும் சிறுநீர் கழித்தது.
ஐந்தறிவு உள்ள நாய் கூட மனிதர்களுக்கு தொந்தரவில்லாமல் ஓரமாகப் போய்தான் சிறுநீர் கழிக்கிறது. சாதிய வெறியும், ஆதிக்க மனோபாவமும் ஊறி மனிதத் தன்மையும், அறிவும் மழுங்கடிக்கச் செய்திருந்தால் மட்டுமே சக மனிதன் என்று பாராமல் அவன் மீதே சிறுநீர் கழிக்க முடியும்.
மேலும் அக்கும்பல் பணம் கேட்டு மிரட்டியது. பணம் தாங்கள் கொண்டு வரவில்லை என அவர்கள் சொல்ல, நண்பர்களுக்கு போன் செய்து குடித்து விட்டு வண்டி ஓட்டியதால் போலீஸ் பிடித்து விட்டது. 15,000 ரூபாய் பைன் கட்ட வேண்டும். 5000 ரூபாய் கொடுத்தால் போலீஸ் விட்டு விடுவதாக சொல்கிறார்கள் என கேட்குமாறு இடுப்பில் வாளை வைத்து மிரட்டியது அக்கும்பல். வேறு வழியின்றி மனோஜ் குமார் நண்பர்களிடம் கேட்க, நண்பர்கள் மனோஜ்குமார் அக்கவுண்டில் 5000 ரூபாய் போட்டிருக்கிறார்கள். அப்பணத்தை எடுக்க அவர்களில் இரண்டு பேரை அக்கும்பல் அனுப்பி வைத்தது.
கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த மேலும் நான்கு பேருக்குள் தகராறு ஏற்பட, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மனோஜ்குமார், மாரியப்பன் இருவரும் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி, ஊருக்குள் சென்று நடந்ததை சொல்லியிருக்கிறார்கள். பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கச் சென்ற இரண்டு பேரை தற்செயலாக போலீஸ் மடக்கி விசாரிக்க, அதன் பின் சம்பவத்திற்கு காரணமான 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படிக்க: பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு | தோழர் மருது | வீடியோ
இந்த கேடுகெட்ட செயல்களை செய்த அந்த ஆறு பேரும் தேவர் சாதியை சேர்ந்தவர்கள். நாங்குநேரி சம்பவத்தில் வீடு புகுந்து வெட்டியது சாதி வெறி கிடையாது, மாணவர்களுக்கு இடையிலான பிரச்சினை தான் என்று வரிந்துகட்டிக் கொண்டு வந்த ஆதிக்க தேவர் சாதி சங்கங்களைச் சார்ந்தவர்கள், இந்த மானங்கெட்ட செயல்களை கண்டிக்க முன்வரவில்லை.
மணிமூர்த்திஸ்வரம் தேவர், கோனார், பட்டியலின மக்கள் என அனைத்து பிரிவு உழைக்கும் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியாக உள்ளது. இதுவரை இவ்வாறான சாதியப் பிரச்சினைகள் வந்ததில்லை என்று பகுதி மக்களும், இரவு 9 மணிக்கெல்லாம் குளிக்கப் போயிருக்கிறோம்; அப்போதெல்லாம் எந்த பிரச்சினையும் வந்தது கிடையாது என பாதிக்கப்பட்ட இளைஞர்களும் அதிர்ச்சியோடு தெரிவிக்கிறார்கள்.
தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதலுக்கு காரணம் என்ன?
இந்தியாவில் பாசிசம் அதிகாரத்தில் இருக்கிறது. வடமாநிலங்களில் மதரீதியாகவும், வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இனரீதியாகவும் மக்களை பிளவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் தமிழ்நாட்டில் சாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தி தன்னுடைய அதிகாரத்தை நிறுவ நினைக்கிறது. இதனால்தான் தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதி சங்கங்கள் கொம்பு சீவி விடப்பட்டு, தொடர்ச்சியாக தலித் மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெறுகின்றன..
நாங்குநேரி சம்பவத்தில் அரசு என்ன செய்தது? பாதிக்கப்பட்ட மாணவனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, குற்றவாளிகளை கைது செய்தது. வேங்கைவயல் பிரச்சினையில் குற்றவாளிகளை தேடிக் கொண்டிருக்கிறது. கீழநத்தம் ராஜாமணி படுகொலையிலும் நிவாரணம், குற்றவாளிகளை கைது செய்வது, இப்போது இந்த பிரச்சினையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை, குற்றவாளிகள் கைது. இதன் மூலம் மட்டும் குற்றங்களை குறைக்க முடியுமா? அடுத்து இதே போன்று இன்னொரு சம்பவம் நடக்காமல் தடுக்கப்படுமா?
பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமானால் அதன் காரணங்களைக் கண்டறிந்து களைய வேண்டும். இது போன்ற பிரச்சினைகளுக்கான காரணம் பார்ப்பனிய சாதிக் கட்டமைப்பு. இதைப் பாதுகாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல், ஆண்ட சாதி – சுயசாதி பெருமை மற்றும் ஆதிக்க சாதி சங்கங்கள் ஆகிய இரண்டையும் தமிழ்நாட்டில் இன்று ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு தான் என்ன?
இது போன்ற குற்றச் செயல்களைத் தூண்டி விடுவதற்கு காரணமாக இருக்கும் ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்ய வேண்டும். அதனை பின்னால் இருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை முறியடிக்க வேண்டும். இதை செய்யாமல் இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது.
இந்த தீர்வை நோக்கி அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது அவசியம்.
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube